Sunday, May 25, 2014

உயிரோடு விளையாடும் ‘ரயில் நீர்’!



நண்பரின் மகளுக்கு திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள்தான் ஆகி இருக்கும். அவரது மனைவி - மகள் மற்றும் மருமகன் ஆகிய நான்கு பேரும் அரியலூரிலிந்து திருச்சிக்கு பாசஞ்சர் இரயிலில் பயணம் செய்கின்றனர். அது கோடை காலம். எடுத்து வந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அடுத்த இரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது அவரது மருமகன் இரண்டு காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி குடிநீர்க் குழாயைத் தேடுகிறார்.

அவர்கள் பயணம் செய்தது எஞ்சினை ஒட்டி இருந்த இரண்டாவது பெட்டி. எனவே நடைமேடையில் பின்னோக்கி சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி குடிநீர்க் குழையை அடைந்த போது அங்கே ஏற்கனவே நான்கு - ஐந்து பேர் முண்டியடித்துக்கொண்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததால் கடைசியாக இவர் தண்ணீர் பாட்டில்களை நிரப்பிக் கொண்டு திரும்புவதற்குள் வண்டி மெதுவாக நகரத் தொடங்கிவிட்டது.

அருகிலுள்ள பெட்டியிலேயே இவர் ஏறி இருக்கலாம். பாசஞ்சர் இரயிலில் அப்படி ஏறினால் தான் பயணம் செய்த பெட்டிக்குச் செல்ல முடியாது. தண்ணீர் பிடிக்கப் போனவரைக் காணவில்லையே என உடன் வந்தவர்களும் தவித்துப் போவார்கள் என்பதால் இரண்டு கைகளிலும் பாட்டில்களை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி வருகிறார். அப்படி ஓடி வரும் போது நடைமேடையைத்தாண்டி இவர் பயணித்த பெட்டி நகர்ந்து விட்டது. நடைமேடையின் முடிவில் இருந்த சாய்வான பகுதியை கவனிக்காமல், ஓடி வந்த வேகத்தில் இடறி விழுந்ததில் இரயில் தண்டவாளங்களுக்கிடையில் சிக்கி அவ்விடத்திலேயே மாண்டு போகிறார்.

இச்சம்பத்தை நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர் சொன்னது மட்டும்தான் எனக்குத் தெரியும் ஆனால் அவர் சொன்ன நிகழ்ச்சி என் கண் முன்னால் நடந்தது போல பத்து ஆண்டுகள் கழித்தும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தாகம் தீர்ப்பதற்காக ஐந்து மாத கர்ப்பினி மனைவியை நிரந்தரமாய் தவிக்கவிட்டுவிட்டு ஒரு உயிர் பலியாகிப் போனது.

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதா என்று இன்றும் நாம் எண்ணுவதில்லையா? அப்படிகூட அவர் நினைத்திருக்கலாம். காசு கொடுத்து வாங்க நினைத்தாலும் சிறிய இரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதில்லையே! இன்று வேண்டுமானால் “ரயில் நீர்” பாட்டில்களில் கிடைக்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லையே.

நான் ஒவ்வொரு முறை தொடர் வண்டியில் பயணிக்கும் போதெல்லாம் இச்சம்பவம் என் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து தொடர் வண்டி நிலையம் நோக்கி நடந்தேன். ஒரு இருபது நிமிட நேரம்தான் நடந்திருப்பேன். காலை நேரம் என்றாலும் கோடை காலம் என்பதால் இருபது நிமிட பயணத்திலேயே நா வறண்டு விட்டது. இந்தத் தொடர் வண்டி நிலைய நடைமேடையில் உள்ள குழாயில் எப்பொழுதுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். இந்த நல்ல தண்ணீர் கிடைப்பதுகூட இரயில்வே நிர்வாகத்தின் முயற்சியினால் அல்ல; அருகிலுள்ள நடுவண் அரசின் குடியிருப்பு நிர்வாகத்தின் தயவினால்தான். குடியிருப்பு நிர்வாகத்திற்கு நன்றி கூறி குழாயைத் திறந்து வயிறு முட்ட குடித்தேன். பாட்டில் எதுவும் கைவசம் இல்லாததால் வீட்டிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரமுடியவில்லை; தொடர் வண்டி நிலையத்திலும் தண்ணிர் பிடிக்க முடியவில்லை.

படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய ஸ்லீப்பர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு எஸ்-5 பெட்டியில் ஏறினேன். உட்கார இடம் கிடைத்த மகிழ்ச்சியை தொடர் வண்டிக்குள் இருந்த நாற்றம்  பறித்துக் கொண்டது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து  கேரள மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் மிக நீண்ட தூர தொடர் வண்டி அது. இந்த வண்டியில் எப்பொழுதுமே இந்த நாற்றம் இருக்கும். வண்டியை சுத்தம் செய்யாமல் நாட்கணக்கில் இயக்கினால் நாறாமலா இருக்கும்?

சுமார் ஒன்றரை மணி நேர பயணம். காலை நேர தண்ணீர் தாகத்தை அடக்கிக் கொண்டேன். திருமண மண்டபத்திற்கு சென்ற உடனே காலை உணவு. தண்ணீர் தாகத்தையும் தீர்க்க முடிந்தது. இரயிலிலேயே தண்ணீர் பாட்டில் வாங்கி இருக்கலாமே என கேள்வி எழுவது இயல்புதான். ஒன்றரை மணி நேரத்திற்கு 15 ரூபாயை செலவழிக்க வேண்டுமா என்கிற எண்ணம்தான்.

திருமணம் முடிந்து 11 மணிக்குத் திரும்பும் போதும் இரயில் பயணம்தான். பகல் நேரப் பயணம், தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என மண்டப டைனிங் ஹாலில் தேடினேன். பாட்டில்கள் தீர்ந்துவிட்டன என்றனர். வெறுங்கையோடு திரும்பினேன். 11.30 மணிக்கு தொடர் வண்டி வந்தது. அதே ஸ்லீப்பர் முறையில் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி எஸ்-3  பெட்டியில் ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். நண்பகல் ஆனதால் வெப்பம் வாட்டியது. காலையில் சாப்பிட்ட பொங்கலும் கடும் வெப்பமும் இரண்டும் ஒன்று சேர எனது நாக்கு தண்ணிருக்காக ஏங்கியது. சிக்கனம் பார்த்தால் சீக்காகி விடுவொம் என்பதால் 15 ரூபாய் கொடுத்து ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டேன். வீடு போய்ச் சேரும் வரை இந்த ஒரு லிட்டர் தண்ணீரை வைத்தே சமாளிப்பது என முடிவெடுத்து அவ்வப்பொழுது தொண்டையை நனைத்துக் கொண்டு 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு ஐந்து மணி நேர இரயில் பயணத்திற்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீருக்கு 30 ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கு. ஜார்கண்டிலிருந்தும், ஒடிசாவிலிருந்தும் கேரளா மற்றும் தமிழகத்திற்கு நாட்கணக்கில் பயணம் செய்யும் போது எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? பொரியையும் மிக்சரையும் கலந்து நான்கு வாய்ப்பிடி அளவு மென்று தின்று தண்ணீரைக் குடித்து வயிற்றை நிறப்பி காலை சிற்றுண்டியை முடித்துக் கொள்ளும் வட இந்தியர்களே இன்று மிக அதிகமாக தொடர் வண்டிகளில் நீண்ட தூரம் பயணிக்கின்றனர். சொந்த மண்ணில் வாழ வழி இல்லாமல் பிழைப்பு தேடி பிற மாநிலங்களுக்குச் செல்லும் இந்த ஏழை எளிய மக்களால் தண்ணீருக்காக மட்டும் நூற்றுக்கணக்கில் செலவழிக்க முடியுமா? ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் வண்டி நிற்கும் போது இருக்கிற பாட்டில்களை அள்ளிக் கொண்டு குடிநீர்க் குழையை தேடிப்பிடித்து பாட்டில்களை நிரப்பிக் கொண்டு ஓடோடி வந்து மூச்சிறைக்க இவர்கள் வண்டியில் ஏறுவதைப் பார்க்கும் போது நண்பரின் மருமகன் மரணம் என் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

Thursday, May 22, 2014

இந்தியாவே திருமங்கலமாக மாறி வருகிறதோ!



இது வேலூர் தொகுதியில் நடந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் மொத்தம் நான்கு வாக்குகள். பா... சார்பில் கொடுத்தது தலா ரூ.300 வீதம் மொத்தம் ரூ1200. .தி.மு. சார்பில் கொடுத்தது தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ800. இருப்பதோ நாக்கு வாக்குகள். யாருக்கு எத்தனை வாக்கு போடுவது என்பதில் குழப்பம்தான். இருந்தாலும் நடு நிலை’ எடுத்து தாமரைக்கு இரண்டு வாக்கும், இரட்டை இலைக்கு இரண்டு வாக்கும் என வாக்களித்து தர்மத்தை நிலை நாட்டி இருக்கிறார்கள். இவர் ஒன்றும் அன்றாடம் காய்ச்சி அல்ல. பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40000 ஊதியம் பெறும் ஊழியர். 

இந்த பணப்பட்டுவாடாவையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகுதான் தமிழகமே திருமங்கலமாக மாறுமா? என மார்ச் 29 ல் நான் எழுதியது நடந்தேறிவிட்டது என்று. 

ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை ! யை வினவில் படித்த போது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே திருமங்கலமாக மாறி வருகிறது என்பது புரிந்தது.

Tuesday, May 20, 2014

மோடி லேகியம் வேலை செய்ய வேண்டுமென்றால் 'இறைவன்' அருள் புரிய வேண்டுமாம்!



வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் செல்லவும், ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர் அமைக்க இருக்கும் அமைச்சரவை சகாக்களும் அதற்கு ஒத்துழைப்புத் தந்தால்தான் அது சாத்தியமாகுமாம்.
  
மக்களவை உறுப்பினர்களில் இளைஞர்கள் குறைவாம். படித்தவர்கள் குறைவாம். குற்றப் பின்னணி உள்ளவர்கள் அதிகமாம். கோடீஸ்வரர்கள் அதிகமாம்.

அதனால்,

சாமானியனின், அடித்தட்டு வர்க்கத்தினரின், அன்றாடம் கஞ்சிக்கு வழியில்லாமல் தெருவோரம் தஞ்சமடைந்திருக்கும் பராரியான ஏழைகளின் பிரச்னைகள் எப்படி முன்னுரிமை பெறும்? தாகத்திற்குக் "கோக்' குடிப்பவர்கள், பசிக்குத் கேப்பைக் கூழ் குடிப்பவர்களின் பிரச்னைகள் பற்றி கவலைப்படமாட்டார்களாம்.

கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் அதிக அளவில் இருக்கும் போது எந்த அளவுக்கு சாமானியர்களுக்குச் சாதகமாகவும், ஆதரவாகவும் அந்த ஆட்சி செயல்படும் என்கிற நியாயமான ஐயப்பாடும், பயமும் ஏற்படுகிறதாம்.

கோடீஸ்வரர்களுக்கும், கிரிமினல் பின்னணி உடையவர்களுக்கும்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொன்னால், அதற்குக் காரணம் ஏமாளி வாக்காளர்கள்தானாம். இப்படிப்பட்வர்களை வேட்பாளர்களாக நிறுத்திய கட்சிகள் கிடையாதாம்? இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, நல்லாட்சி அமையவில்லை என்று ஓலமிடுவதில் அர்த்தம் இல்லையாம்.

அதிக அளவில் இளைஞர்களும், விழிப்புணர்வுடன் வாக்காளர்களும் நல்லாட்சி அமைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், நரேந்திர மோடி என்கிற தனிமனிதன்மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்களாம். இத்தனை கோடீஸ்வரர்களையும், கிரிமினல் பின்னணியாளர்களையும் மீறி மோடி செயல்பட்டாக வேண்டுமாம். அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டுமாம்.

மக்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனைகளுக்கும் மோடி லேகியம் ஒன்றுதான் சர்வரோக நிவாரணி என மக்களிடம் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு இப்போது மக்கள் மீதே பழியைப் போடுவதோடு மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் மோடி லேகியம் வேலை செய்யாது என  பத்தியக் கட்டுப்பாடு வேறு! இதற்குப் பேர்தான் ஊடக நரித்தனம் என்பதோ! தினமணியின் இன்றைய (20.05.2014) தலையங்கம் இதைத்தான் உணர்த்துகிறது. (யார் மீது தவறு?)

Sunday, May 11, 2014

அன்னையர் தினத்தில் சொல்வதற்கு என்ன இருக்கு?

”இன்றையச் சூழலில் கணவனும் காலமாகி, பெற்ற மகனும் கைவிடும் போது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் தான் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதால் ஒரு கட்டத்தில் தனது மூச்சைத் தானே நிறுத்திக் கொள்கிறாள் தாய்.”

அன்னையர் தினத்தில் சொல்வதற்கு இதைத்தவிர வேறென்ன இருக்கு?

தொடர்புடைய பதிவுகள்: