பூம்பூம் மாட்டுக்காரன்
பொதுவாக பூம்பூம்
மாட்டுக்காரன் குறி சொல்லும் போது, அவனது மாடுதான் அவன் சொல்வதற்கேற்ப தலையை ஆட்டி ஆமோதிக்கும்.
ஆனால், இவன் போட்டிருக்கும் வேஷம் மட்டும்தான் பூம்பூம் மாட்டுக்காரனைப் போல இருக்கும்.
அதிலும் அந்தத் தாடியும், தலைப் பாகையும் மிகவும் எடுப்பாகவே இருக்கும். இந்த பூம்பூம்
மாட்டுக்காரன் மிகத்தாழ்ந்த மெல்லிய கீச் குரலில்தான் பேசுவான். இவன் பேசுவது இவனுக்கே
கேட்காது. இவன் பேசியது எதுவும் புரியாததால் பூம்பூம் மாடு தலையை ஆட்டலாமா வேண்டாமா
என யோசிப்பதற்குள் இவனே மேலும் கீழுமாக தலையை ஆட்டி ஆமோதித்துக் கொள்வான்.
இப்படியாக இவன்
ஒரு பத்து ஆண்டுகாலம் “நாடு வல்லரசாகும்! நாடு வல்லரசாகும்!” என குறி சொல்லிப் பார்த்தான்.
நாடு வல்லரசு ஆவதற்குப் பதிலாக இவனது மாட்டுக்கு வைக்கோலும், தவிடும், புண்ணாக்கும்
வைத்தவர்கள் மட்டுமே காடுகளையும், கனிம வளங்களையும் கபளீகரம் செய்தார்கள்; ராசாவானார்கள்;
மாறா வலிமை பெற்றார்கள்.
குறி கேட்ட மக்களோ, மேலும் மேலும் துன்ப துயரங்களுக்கு ஆளானார்கள். விலைவாசி உயர்வால் வாடி வதங்கினார்கள்.
வேலை இன்மையால் வாழ்வை இழந்தார்கள். நல்ல காலம் பிறக்காதா என ஏங்கினார்கள்.
குடுகுடுப்பைக்காரன்
உரக்கத்தைக் களைந்து, கதிரவன் கீழ்வானில் தென்பட ஓரிரு மணித்துளிகளே
இருந்த அதிகாலை நேரம் அது. அப்பொழுது “நல்ல
காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!” என்கிற குரல் கேட்டு ஆர்வத்தோடு திரும்பினால், அங்கே எடுப்பான பைஜாமா குர்தாவோடு ஒரு குடுகுடுப்பைக்காரன்
தனது 'டிரிம்மான' தாடியை மென்மையாக வருடியவாறே, தனது காவி சிஷ்யர்களோடு துயருற்ற மக்களை
நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான். “வளர்ச்சி! வளர்ச்சி!” என காவி சிஷ்யர்கள் கோஷங்கள்
எழுப்பிய வண்ணம் வந்தனர்.
இவன் தெற்கே சென்ற
போது மீனவர்கள் துயரம் தாமரை இலையில் பட்ட நீரைப் போல விரைவில் நீங்கும் என்றான். விதர்பா
சென்ற போது விவசாயிகளின் தற்கொலைத் துயரம் விலகி ஓடும் என்றான். வடக்கே சென்ற போது வேலை இன்மை இனி இருக்காது என வசீகரமாய்ச் சொன்னான்.
கிழக்கே சென்ற போது வங்கத்து மக்களின் வாட்டம் இனி இருக்காது என அருள் வாக்கு கொடுத்தான்.
இவற்றை எல்லாம்
கேட்ட மக்களுக்கோ உற்சாகம் பீறிட்டது. இவன் அர்த்த ஜாமத்தில் வருவதற்குப் பதிலாக விடிந்த
பிறகே வந்து குறி சொல்வதால் இவன் சொல்வது கண்டிப்பாக பலிக்கும் என நம்பினர்.
கையை தலையில் வைத்து
திருநங்கைகள் ஆசீர்வாதம் செய்தாலே நல்லது நடக்கும் என நம்பி பத்து ரூபாயை சுளையாக எடுத்துக்
கொடுக்கும் மக்கள் வாழும் பூமியல்லவா நமது பூமி!
கோவில் குருக்கள்
தட்டை நீட்டும் போது, அது பிச்சைக்காரனை நினைவு படுத்தினாலும் அதில் இருக்கும் குங்குமமும்
விபூதியும் வாழ்வைப் பாதுகாக்கும் கவசமென நம்புவதால், அதை இலவசமாகப் பெறுவது இறைவனை
ஏமாற்றுவதாகிவிடும் என்பதால், சட்டைப் பையைத் துழாவி ஒரு ஐம்பது காசையாவது அய்யர் நீட்டும் தட்டில்
போடும் கடமை உணர்வு கொண்டவர்களல்லவா நமது மக்கள்.
“நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது!” என ஒருவன் நம்பிக்கையை ஏற்படுத்தினால், அவனை வெறுங்கையோடவா அனுப்புவார்கள்!
குடுகுடுப்பைக்காரன் வார்த்தைகளை நம்பினார்கள். இருந்ததை எல்லாம் வாரிக் கொடுத்தார்கள்.
வந்ததை எல்லாம் மூட்டை கட்டினான் குடுகுடுப்பைக்காரன். மூட்டைகள் மூன்னூரைத் தாண்டிவிட்டது.
உற்சாகத்தோடு தலைநகர் நோக்கி விரைந்தான். ஏற்கனவே, அங்கே இருந்த பூம்பூம் மாட்டுக்காரன்
இவன் அள்ளி வரும் 'லோடைப்' பார்த்து ஓட்டம் பிடித்தான். கோட்டை கொத்தளம் குடுகுடுப்பைக்காரன் வசமானது.
உள்நாட்டில் கிடைத்த 'லோடைப்' பார்த்து புளகாங்கிதம் அடைந்தான் குடுகுடுப்பைக்காரன். காய்ந்து போன நாட்டிலேயே
இத்தனை 'லோடு' என்றால், அண்டை நாடுகளுக்குச் சென்றால்
இன்னும் அள்ளி வரலாம் என்பதால் தலைநகரில் 'லோடை' இறக்கிய கையோடு, அண்டை நாடுகளுக்கு குறி
சொல்லக் கிளம்பி விட்டான். இனி அவன் குறி சொல்லும் எல்லை அகண்ட பூமியாய் விரியக்கூடும்.
ஒரே வாரத்தில், அவன்
எல்லை விரிந்தது. ஆனால் அவன் வாக்கை நம்பிய மக்களோ ஒரே வாரத்தில் குப்புற விழுந்தார்கள்.
தெற்கே மீனவர்களின் துயரம் மேலும் தீவிரமானது. தெற்கு மட்டுமல்ல, நாட்டின் நாற்திசைகளிலும்
மக்கள் குமுறத் தொடங்கிவிட்டனர். விலை வாசி விர்ரென வான்நோக்கி உயர்ந்தது. வெங்காயத்தைப்
பார்த்து வெலவெலத்துப் போயினர் மக்கள்.
ஜூன் மாதம், தென்மேற்கிலிருந்து வரவேண்டிய வருண பகவான்கூட
குடுகுடுப்பைக்காரனைப் பார்த்து வெலவெலத்துப் போய் எல்நினோ போபியாவால் பீடிக்கப்பட்டு
கடும் காய்ச்சலில் அவதிப்படுகிறானாம். அவன் குணமாகி பருவம் தவறிய பிறகாவது வருவானா
எனத் தெரியாத நிலையில் மக்கள் நாவறண்டு உதடுகள் ஒட்டிய நிலையில் வாயடைத்துப் போயுள்ளனர்.
வாயுபகவானையும் இனி எட்டிப் பிடிக்க முடியாதாம். மாதா மாதம் அவன் வேகத்தை அதிகப்படுத்த
திட்டம் போடப்பட்டுவிட்டதாம்.
தொடர் வண்டி தூரமாகிப் போனது. கையில் இருந்த பணம்கூட சீழ் பிடித்ததால்
வீங்கிப் போனதாம். குடுகுடுப்பைக்காரன் கோட்டைக்குப் போனவுடன் ஒரே வாரத்தில் எல்லாம்
தலைகீழாய் மாறிப்போனதால், இது பற்றி மக்கள் எதுவும் பேசக்கூடாது என்பதால் மக்களின் பாஷைக்கே
பூட்டு போட்டு விட்டானாம் குடுகுடுப்பைக்காரன். இனி அவன் பேசும் பாஷைதான், மக்கள் பாஷையாம்.
நீங்கள் “ஹே! ஹே!” என்றால் அவன் “ஹி! ஹி!” என இளித்துவிட்டு, “பை! பை!”தான் காட்டுவான்.
பூம்பூம்மாட்டுக்காரன்
பத்து ஆண்டுகாலம் பதுங்கிப் பதுங்கிச் செய்ததை, குடுகுடுப்பைக்காரன் பத்து நாட்களிலேயே
செய்ததைப் பார்த்து “ஆகா! தவறு செய்து விட்டோமா? குடுகுடுப்பைக்காரனை விட பூம்பூம்மாட்டுக்காரனே
மேல்!” என எண்ணத் தொடங்கிவிட்டனராம் மக்கள்!
ஊரான்