அரவணைக்க
யாருமின்றி அனாதையாய் விடப்பட்ட சிறுவன் பசியின் கொடுமை தாளாமல் ஒரு வடையைத்
திருடியதற்காக சிறுவனுக்கு சூடு போடுகிறான் கடைக்காரன். இது திரைப்படக் காட்சி
மட்டுமல்ல நிஜமும்கூட. ஒரு வடைக்காக சூடுபோடுவது காட்டுமிராண்டிச் செயல் என ஒரு
புறம் பச்சாதாபம் காட்டுகிற அதே வேளையில், மற்றொருபுறம் அடுத்தவன் பொருளை
திருடுவது குற்றம்தானே என்கிற நியாய உணர்ச்சியையும் நாம் கொண்டிருக்கிறோம்.
ஒருவன், நமது
பொருளை களவாடிவிட்டாலோ அல்லது களவாட முனைந்தாலோ, பொருளின் மதிப்பு மற்றும் அதன்
முக்கியத்துவத்துக்கு ஏற்ப, திருட முனைபவனை திட்டுவது, விரட்டுவது, கட்டி வைத்து
உதைப்பது, பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைப்பது, சில வேளைகளில் அடித்தே கொல்வது
என்கிற அணுகு முறையைத்தான் நாம் கடைபிடிக்கிறோம். வந்தவன் திருடத்தான் வந்தானா
என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், திருடுவதற்குத்தான் வந்துள்ளான் என
சந்தேகப்பட்டாலே போதும். சட்டத்தை நாம் கையில் எடுத்துக் கொள்கிறோம்.
”சட்டத்தை மக்கள்
தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது; குற்றவாளிகளை தண்டிக்கின்ற அதிகாரம்
மக்களுக்குக் கிடையாது; மீறினால் காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!”
என எச்சரிக்கை விடப்பட்டாலும், நமது
சொத்து - பணம் பறிபோகிற சூழலில் எதிரி பலசாலி இல்லை என்றால் சட்டத்தை நாமே கையில்
எடுத்துக் கொள்கிறோம்.
சட்டத்தை நாமே
கையில் எடுத்துக் கொண்டு ஒருவரை தண்டிக்கும் போது அவர் மீது இந்திய தண்டனைச்
சட்டமோ அல்லது வேறு சட்டங்களோ பாய்வதில்லை; கைது நடவடிக்கை இல்லை; வழக்கில்லை;
வாய்தா இல்லை; சாட்சிகள் இல்லை; விசாரணை – குறுக்கு விசாரணை ஏதுமில்லை; தீர்ப்பும்
வாசிக்கப்படுவதில்லை. ஆனால் தண்டனை மட்டும் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. அதன்
பிறகு பிணையும் இல்லை; மேல் முறையீடு – சீராய்வு ஏதுமில்லை. முதல் முறை திருடனாக
இருந்தாலும், தொழில் முறை திருடனாக இருந்தாலும் மக்களின் நடைமுறை இதுதான்.
மேற்கு வங்கத்தில்,
கால்நடைகளை திருட வந்ததாகக் கூறி வங்காள தேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை அடித்தே
கொன்றிருக்கிறார்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட கிராம மக்கள். இது அக்டோபர்
2014 இறுதியல் இந்தியாவின் வட கோடியில் நடந்தது.
இந்தியாவின் தென் கோடியில்
ஒரு முதல்வர் தனது சகாக்களோடு சேர்ந்து கொண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து
சேர்க்கிறார். வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் இவர்கள் அடித்த கொள்ளையை அன்றே பறைசாற்றியது.
உழைத்துச் சேர்ப்பவன் எவனும் இப்படி செலவழிக்கமாட்டான்; அடுத்தவன் சொத்தை அபகரிப்பவனால்
மட்டுமே இப்படி ஆடம்பர பகட்டை வெளிப்படுத்த முடியும் என அன்று நாம் முகம் சுளித்தோம்.
திருமணத்தில் வாரி
இறைக்கப்பட்ட பணம் நம்மிடமிருந்து திருடப்பட்ட
பணம்தான் என்பதை அன்று நாம் உணர்ந்திருந்தால் ஒரு வேளை சட்டத்தை நாம்
கையில் எடுத்திருக்கக்கூடும். என்ன செய்ய? கொள்ளையர்கள் பலம் வாய்ந்தவர்கள்
ஆயிற்றே! அதனால் நீதி மன்றம் சென்றோம்.
கொள்ளடித்த பணத்தை
பாதாளம் வரை பாய்ச்சி, வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்தார்கள்.
ஒவ்வொரு வாய்தாவின் போதும் “அடுத்தது என்ன?” என்கிற ஆவலை உண்டாக்கி வழக்கை ஒரு
நெடுந்தொடராக்கினார்கள். பல்வேறு திருப்பு முனைகளை ஏற்படுத்தி ஒரு வழியாக பதினாறு
ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 2014 இறுதியில் நெடுந்தொடர் முடிவுக்கு வந்தது.
தொடரைப் பார்த்த குழந்தைகள் குமரிகளானார்கள். நெடுந்தொடரின் குமரிகளோ கிழவிகள்
ஆனார்கள். இறுதியில் கதை மாந்தர்கள் கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு
தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
வடக்கே, மக்களே
சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சட்ட முறைமைகள் எதையும் கடைபிடிக்காமல் வழங்கப்படும்
தண்டனையை மனதுக்குள் ஏற்றுக் கொண்டு வெளியில் கள்ள மௌனம் சாதிக்கிறோம். தெற்கே, சொத்து
குவிப்பு வழக்கில் அனைத்து சட்டமுறைமைகளையும் கடைபிடித்து வழங்கப்பட்ட தண்டனைக்கு
எதிராக ஓலமிடுகிறோம்; ஒப்பாரி வைக்கிறோம்; பிறகு குற்றவாளிகளுக்கு தற்காலிக பிணை
கிடைத்ததற்கே அளப்பரி செய்கிறோம்; ஆர்ப்பரிக்கிறோம். ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும்
நாம் காட்டிய நவரசத்தைக் கண்ட சின்னத் திரை கலைஞர்கள் தற்போது தங்கள் தொழிலுக்கு
போட்டியாக ஒரு பெரும் கூட்டம் இருப்பதைக் கண்டு கலங்கிப் போயுள்ளார்களாம்.
மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு திருடனைக் கைது செய்யும் போது காக்கிச் சட்டைக்காரன் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கைவிலங்கோடு திருடனை இழுத்துச் செல்கிறான். வேனுக்குப் பின்னால் திருடன் ஓடிவர, சாலையின் இருமருங்கிலும் வேடிக்கை பார்க்கும் நாம், ‘இவனை எல்லாம் இப்படித்தான் செய்ய வேண்டும்; அப்பத்தான் மத்தவங்களுக்கும் பயம் வரும்!’ என மனதுக்குள் எண்ணுகிறோம். ஆனால் தண்டனை பெற்ற ஒரு திருட்டுக் கூட்டத்தின் தலைவி காரில் அமர்ந்திருக்க, காக்கிச்சட்டைக்காரர்கள் காருக்குப் பின்னால் ஓடிவர, சாலையின் இருமருங்கிலும் கூடி நின்று திருட்டுக் கூட்டத்தின் தலைவியை நாம் மலர் தூவி வரவேற்கிறோம்.
மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு திருடனைக் கைது செய்யும் போது காக்கிச் சட்டைக்காரன் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கைவிலங்கோடு திருடனை இழுத்துச் செல்கிறான். வேனுக்குப் பின்னால் திருடன் ஓடிவர, சாலையின் இருமருங்கிலும் வேடிக்கை பார்க்கும் நாம், ‘இவனை எல்லாம் இப்படித்தான் செய்ய வேண்டும்; அப்பத்தான் மத்தவங்களுக்கும் பயம் வரும்!’ என மனதுக்குள் எண்ணுகிறோம். ஆனால் தண்டனை பெற்ற ஒரு திருட்டுக் கூட்டத்தின் தலைவி காரில் அமர்ந்திருக்க, காக்கிச்சட்டைக்காரர்கள் காருக்குப் பின்னால் ஓடிவர, சாலையின் இருமருங்கிலும் கூடி நின்று திருட்டுக் கூட்டத்தின் தலைவியை நாம் மலர் தூவி வரவேற்கிறோம்.
காவல் துறை மூலம்
வழக்கு பதியப்படும் தொழில் முறை திருடர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்தால்
அவர்களின் புகைப்படங்கள் தொடர் வண்டி நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும்
தொங்கவிடப்பட்டுள்ள காட்சிகளை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நமது
‘பர்சை பாதுகாக்க’ காவல் துறை விடுக்கும் எச்சரிக்கை என இதை நாம் புரிந்து
வைத்துள்ளொம்.
ஆனால் இங்கே, திருடர்கள்
கொள்யைடித்துக் கொண்டு ஓடும் போது சிதறும் சில்லரைகளை பொறுக்கிக்கொண்டு திருடர்களுக்கு
“ஜே!” போடுகிறோமே! திருடர்கள் சிதறவிட்டது நமது வீட்டுப் பணம் என்பது நமக்கு உறைக்காதவரை
பேருந்து நிலையங்களிலும் தொடர்வண்டி நிலையங்களிலும் ஒட்டப்பட வேண்டிய திருடர்களின்
படங்கள் அரசு அலுவலகங்களை அலங்கரிப்பதை யாரால்தான் தடுக்க முடியும்?