குடிக்காத ஆண்கள் எத்தனை பேர்? ஒரு பத்து
சதம் இருப்பார்களா? இருக்காது என்றார் ஒரு நண்பர். அப்படியானால் ஒரு 90% சதம் பேர்
குடிகார்களாக இருப்பார்களா? இந்தக் கேள்விகளுக்கு புள்ளி விவர அடிப்படையில் பதில் தேடுவதைவிட
சாராய விற்பனையின் அளவைக் கணக்கிட்டாலே உண்மை விளங்கிவிடும்.
கடந்த நிதி ஆண்டில் (2011-12) டாஸ்மாக் மூலம் ரூ.18081 கோடி வருவாய் ஈட்டியுள்ளது
தமிழக அரசு. இது கடந்த நிதி ஆண்டைவிட ரூ.3116 கோடி அதிகமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில்
20% வளர்ச்சியைக் கண்டுள்ளது அரசின் சாராய விற்பனை.
‘கள்ளச் சாராயம்’ மற்றும் ‘கடத்தல் சாராயத்தை’
ஒழித்ததன் மூலமாக தமிழக அரசின் ‘நல்ல சாராய’ விற்பனை 2003 ம் ஆண்டிலிருந்து அதிகரித்தே
வருகிறது. கலைஞரும் ஜெயலலிதாவும் கருத்து வேறுபாடு
ஏதுமின்றி வளர்த்து வரக்கூடிய தமிழகத்தின் பிரதானமான ஒரே தொழில் சாராயத் தொழில்தான்.
‘குடி’ உயரக் கோன் உயரும்!
2009-10 ல் ரூ.12498 கோடி, 2010-11 ல் ரூ.14965
கோடி, 2011-12 ல் ரூ18081 கோடி. என சாராயத்தின் மூலம் அரசு வருவாயாக ஈட்டியுள்ளது.
அதாவது வளர்ச்சி விகிதம் முறையே 17.89%, 19.74%, 20% என அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு போக்குவரத்துக் கழகமும் தமிழ்நாடு மின்சார வாரியமும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி
வரும் நிலையில் அரசின் சாராயத் தொழில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக வளர்ச்சி
கண்டு இலாபமீட்டி வருகிறது.
2003-04 ல் ரூ.3639 கோடி வருவாயாக இருந்த
சாராய விற்பனை 2011-12 ல் ரூ18081 கோடியாக அதாவது ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? குடிப்பழக்கத்தை
தடுப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளுக்கிடையிலும் சாராய விற்பனை இந்த
போடு போடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
‘குடி’ உயரக் கோன் உயரும் என ஔவையார் சும்மாவா
சொன்னார்கள்?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தைத்
தாண்டுவதற்கே திண்டாடும் மன்மோகன் - மாண்டேசிங் அலுவாலியா தலைமையிலான பொருளாதாரப் புலிகள்
கருணாநிதி - ஜெயலலிதாவிடம் பாடம் கற்றுக் கொண்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
ஒரே ஆண்டில் 20 சதவீதத்தைத் தாண்டும். யாராவது இதை அவர்களுக்கு எடுத்துச் சொன்னால்
அப்துல்கலாம் கனவு கண்டதைப் போல இந்தியா நாலுகால் பாய்ச்சலில் ஒரே ராத்திரியில் வல்லரசாகிவிடும்.
சாராயம் வாங்க வருவோர் நாளுக்கு நாள் அதிகரித்து
வருவதால் கூட்ட நெரிசலை சமாளிக்க டாஸ்மாக் கடைகளில் ரசீது போடும் எந்திரங்களை அறிமுகப்
படுத்தவிருக்கிறது தமிழக அரசு. முதல் கட்டமாக 2500 கடைகளுக்கு இந்த எந்திரங்கள் வழங்கப்படவிருக்கின்றன.
இதற்காக ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு
(time management) கணக்குகளை முறையாக பராமறிக்கவும், அதிகாரிகள் திடீர் சோதனைக்கு வரும்
போது அவர்களுக்கு உதவியாகவும் இந்த ரசீது போடும் எந்திரங்கள் பயன்படுமாம்.
போராடும் ஊழியர்கள் மயங்கினால் என்ன? ஊத்திக்கொடு!
ஏழைப் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும்
சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஊழியர்கள் மயங்கி விழுகிறார்கள். இவர்கள் மயங்கி விழுந்து மாண்டு போனாலும் சவக்குழிக்கு
செலவு செய்யவும் அரசு தாயாராக இருக்குமேயொழிய சலுகை எதுவும் செய்யாது போல!
கொதிக்கும் தார் தங்கள் கால்களில் ஏற்படுத்தும்
கொப்புளங்களையும் பொருட்படுத்தாமல் நாம் வண்டிகளில் வழுக்கிச் செல்ல வழி ஏற்படுத்தும் சாலைப்பணியாளர்கள் நீதிமன்றப் படிக்கட்டுகளை
தங்களின் ஏனிப்படிகளாக மாற்றியபோதும் மீண்டும் பணியில் சேர்வதற்கான அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் அலட்சியப்படுத்தி வருகிறது.
இரும்பைப் போன்று இருகிப்போன கரும்பை கசக்கிப்
பிழிந்து நமக்கு இனிப்பை வழங்கும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும்
எனப் போராடி வருகிறார்கள். போராடும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் சக்கையாகிப் போனாலும் எந்தச்
சலனமும் இன்றி வேடிக்கை பார்க்கிறது அரசு.
நாம் மின்னொளியில் மிளிர்வதற்காக தங்கள்
மேனியை கரியாக்கிக் கொள்ளும் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் ஏதோ
வேற்று கிரகங்களில் நடப்பதைப் போல வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு. இவர்களின் போராட்டக்
குரல் அரசின் செவிகளில் ஏற மறுக்கிறது. ஆனால் நமக்கு பாடைகட்டும் சாராய சேவகர்களுக்கு
மட்டும் அவர்கள் போராடாமலேயே ஊதிய உயர்வாம். என்ன கொடுமை இது?
தமிழகத்தில் உள்ள 6798 சில்லரை விற்பளைக்
கடைகளில் சாராயம் ஊற்றிக் கொடுக்கும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கும் 28650 சேவகர்களுக்கு
ரூ300 முதல் ரூ 500 வரை ஊதிய உயர்வாம்.
வேலை வாய்ப்பை அள்ளித் தரும் சாராயப் படிப்பு!
7785 சாராயக் கங்காணிகளையும் (supervisors)16826 சாராய விற்பனையாளர்களையும் 4039 சாராய விற்பனை உதவியாளர்களையும் புதிதாக நியமிக்கப் போகிறார்களாம். முதலமைச்சரே இதற்கு
உத்தரவிட்டிருக்கிறார்களாம். இவை எல்லாம் சாராய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் தெறிவித்த விவரங்கள். மக்களுக்கு பாடை கட்டும் தொழில் வளர்ந்து வருகிறது. இதில் வேலை வாய்ப்பும்
அதிகரிக்கிறது. ஆனால் தனியார்மயம் – தாராளமயம் - உலகமயம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகளால் அடிப்படை கட்டுமானம் மற்றும் சேவைப்பிரிவுகள்
நலிந்து வருகின்றன. இத்தொழில்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
சாராயம் தயாரிப்பு அதன் விநியோகம் மற்றும் பராமரிப்பை மேலும்
செம்மைப் படுத்த உதவும் வகையில் B.E (Arrack Technology), DAE (Diploma
in Arrack Engineering), ITI (Arrack man) உள்ளிட்ட தொழில் நுட்பப் படிப்புகளை இந்த
ஆண்டு முதல் அறிமுகப்படுத்த அரசு முயற்சி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போண்டியாகாத
தொழிலுக்கெல்லாம் படிப்புகள் இருக்கும் போது கொடி கட்டிப் பறக்கும் சாராயத் தொழிலுக்கு
மட்டும் படிப்பு இல்லாமல் இருப்பது நியாயமா?
சரக்கடிப்பதை திடீர் என நிறுத்தி விட்டால்?
சரக்கடிப்போர் சரக்கடிப்பதை நிரந்தரமாக நிறுத்திக்
கொண்டால் என்னவாகும்? எனக்கு இப்படி ஒரு ஐயம் திடீர் என எழுந்தது.
அடுத்தவன் கெட்டுப் போனால்தான் சில தொழில்களை
தொடர்ந்து நடத்த முடியும். மேலும் மேலும் மக்கள் கெடுதலுக்கு உள்ளானால்தான் அத்தகையத்
தொழில்களில் மேலும் வளர்ச்சியைக் காண முடியும்.
அலோபதி - ஆயுர்வேதம் - ஹோமியோபதி - சித்தா – யுனானி - நேச்சுரோபதி என வகை வகையான மருத்துவப்
படிப்புகளைப் படித்துவிட்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கோடு ஒருவர்
மருத்துவத்தைப் படித்தவிட்டு கிளினிக் வைத்தால் அவர் லட்சியம் எப்போது நிறைவேறும்?
மக்கள் அன்றாடம் நோய்வாய்ப்பட வேண்டும். மருத்துவரின் வேண்டுதலும் அதுவாகத்தான் இருக்க
வேண்டும். அப்பொழுதுதான் அவரது லட்சியம் நிறைவேறும். எல்லோரும் நலமாக வாழ்கிறார்கள்
என்றால் கிளினிக்குகளை இழுத்து மூடித்தான் ஆகவேண்டும்.
பிஃ.பார்ம் படித்துவிட்டால் வேலை கிடைக்கவில்லை
என்றாலும் கவலை இல்லை. ஒரு மருந்துக் கடை வைத்தாலே போதும் பொழப்பை ஓட்டலாம் என கணக்குப்
போட்டால் மேலே சொன்னதுதான் மருந்துக் கடைகளுக்கும் பொருந்தும்.
சட்டம் படித்தவன் சம்பாதிக்க வேண்டும் என்றால்
நீயும் நானும் அன்றாடம் அடித்துக் கொள்ள வேண்டும்.
அமைதியாக நாம் வாழ முனைந்தால் கருப்பு அங்கிகளை கொக்கிகளில்தான் தொங்க விடவேண்டும்
– தோளில் அல்ல.
பங்க்சர் கடை வைத்தால் எப்படியோ பொழப்பை
நடத்தலாம் என நம்பி பங்க்சர் கடை வைத்துவிட்டு வண்டிகள் எதுவும் பங்க்சர் ஆகாமல் ஓடத்
தொடங்கினால் பங்க்சர் கடையில் ஈதான் ஓட்ட வேண்டும்.
மேற்கண்ட சில தொழில்கள் நேற்று வரை சேவைத்
தொழில்களாகத்தான் கருதப்பட்டன. ஆனால் அவையே இன்று பொருள் ஈட்டும் தொழில்களாக மாற்றப்பட்டுவிட்டன.
அட போய்யா! படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலேன்னா
என்ன? தெரு முனையில ஒரு பெட்டிக் கடை வைச்சாப் போச்சு! அதை வைத்தே சொந்த வீடு கட்டிட மாட்டேன்! என வேலை தேடும் பட்டதாரி இளைஞன் பேசுவதைக் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறோம். புகைப்பவன் புகைப்பதை நிறுத்திக் கொண்டால்;
கஞ்சா – பான்பராக் - ஹான்ஸ் போடுவதை இளைஞர்கள் நிறுத்திக் கொண்டால் பெட்டிக் கடைகள்
ஆயாவின் போண்டாக் கடைகளாகத்தான் மாற வேண்டும். போண்டாவை பொட்டலம் கட்டலாமேயொழிய பில்டிங்
கட்ட முடியாது.
சரக்கடிப்போர் சரக்கடிப்பதை திடீர் என நிரந்தரமாக
நிறுத்திக் கொண்டால் என்னவாகும் என எனக்கு எழுந்த ஐயத்திற்கு இப்போது வருவோம். என்னவாகும்?
தமிழகமே செயலற்றுப் போகும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகளை இழுத்து மூடுவதைத்தவிர
வேறு வழியேதும் உண்டோ?
ஆம் உண்மைதான். குடிப்பதால்தான் எத்தனை நன்மை அரசுக்கு. எல்லோருக்கும் எந்தப்பிரச்ச்னை வந்தாலும் சர்வரோக நிவாரணி அதுதான். அதனுடன் கலந்து கட்டி அடிப்பதற்கு கோக் பெப்சிக்கும் நல்ல வருமானம். கூடவே ஊறுகாய், முறுக்கு போன்ற குடிசைத் தொழில்களும் வாழ்கின்றன. மக்கள் பிரச்சனைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும்தான் பிரச்சனை. ஆனா ஒண்ணுங்க இப்பல்லாம் யாரும் யாரையும் குடிகாரன்னு திட்டவே முடியாது. இனி அரசின் வேலை வாய்ப்புத்திட்டமாகட்டும் வேறு திட்டமாகட்டும் டாஸ்மாகை அடிப்படையாகக் கொண்டுதான் தீட்ட வேண்டும் என்ற நிலைக்கு வந்தாயிற்று. இன்னொரு பதிவு இங்கே
ReplyDeletehttp://arulgreen.blogspot.in/2012/04/blog-post_27.html