Thursday, October 3, 2024

கடவுள் என்ன குப்பைக் கூளமா? கண்ட இடத்தில் கொட்டுவதற்கு?

ஆண்டுக்கு ஒரு முறை காந்தி பிறந்த நாளில் கையுறை, முகக் கவசத்தோடு சொகுசுக் கார்களில் வந்திறங்கி, கையில் துடைப்பம் பிடிக்கும் கனவான்கள் நிறைந்த நாடு இது.

ஆனால், அன்றாடம் துடைப்பம் பிடித்து தெருக்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவுப் பணியாளர்களோ, அற்பக் கூலிக்கு
ஒப்பந்தப் பணியாளர்களாய்
மாடாய் உழைக்கிறார்கள்.

அதிகாரம் மட்டுமே செலுத்தும் அதிகாரிகள் நிரந்தர ஊழியர்களாம். ஆனால், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் ஒப்பந்தப் பணியாளர்களாம்.

வார்டு, வட்டங்கள் எல்லாம் ஒப்பந்தம் எடுத்து கொள்ளையடிப்பதாலும், ஆட்களையே நியமிக்காமல் குப்பை அள்ளியதாகக் கணக்கெழுதி 
பை நிறப்புவதாலும்தான் நகரத் தெருக்கள் நாறுகின்றன.

பிரதான சாலைகளும், குறுக்குச் சாலைகளும் என நேர்த்தியாய் அமைந்த அரசின் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அது. அரசின் திட்டம் என்றாலும் முட்டுச் சந்துகளுக்கு இங்கே பஞ்சமில்லை. ஆனாலும், முட்டுச்சந்தாய் இருந்தாலும், மக்கள் பயனுரும் வகையில தண்ணீர் தேவையை ஈடுசெய்ய அங்கு கை பம்புகளை அமைத்தார்கள்.

நல்ல வேளை, நாம் உண்ட பிறகு வெளியேறும் கழிவுகள் கக்கூசில் கரைந்து விடுகின்றன. ஆனால், நாம் உண்பதற்கு முன் கழித்துக் கட்டிய கழிவுகளை எத்தனை நாளைக்குத்தான் நம் டஸ்ட்பின்கள் தாங்கும்? என்ன செய்ய? நாலு நாளைக்கு மேல் வைத்திருந்தால் வீடே நாறிவிடும் என்பதால், நைசாக முட்டுச் சந்துகளிலும், தெருக் குத்துகளிலும் கொட்டி விடுகிறோம்

பசியால் அலையும் தெரு நாய்கள்,
ஏற்கனவே நாறிக் கிடக்கும் இந்தக் குப்பைக் கழிவுகளைக் கிளறிவிட 
எட்டுத்திக்கும் முடை நாற்றம்தான்.
முட்டுச்சந்திற்கு அருகில் இருந்தவர் ஒரு அரசு ஊழியர் என்ற போதும் தெருவாசிகள் அங்கே குப்பை கொட்டுவதையும், அது நாறுவதையும் அவரால்கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இருட்டு வேளையில் கொட்டிச் சென்றால் அவரால்தான் என்ன செய்ய முடியும் பாவம்? 

பொருத்துப் பார்த்தார். குறுக்கு வழியைத் தேடினார். குப்பைகள் கொட்டுமிடத்தில் பிள்ளையாரை நட்டு வைத்தார். அச்சுறுத்தலுக்கும், அடிதடிக்கும், சட்டத்திற்கும் பயப்படாத, கட்டுப்படாத மனிதன் நட்ட கல்லென்றால்தான் சிலையாகி விடுகிறானே? குப்பைகள் கோலோச்சிய இடத்தில் இன்று செல்வ விநாயகன் 
வீற்றிருக்கிறான்

மற்றபடி, அந்த இடத்தில் குப்பைத் தொல்லைதான் தீர்ந்ததே ஒழிய, இன்று அன்றாட பூஜைகள், அவ்வப்பொழுது திருவிழாக்கள், பஜனைகள் என பாட்டுப் போட்டு, தடை செய்யப்பட்ட கூம்புகள் மூலம் நம் காதுகளைத் துளைத்தெடுக்கிறான். இது சுற்றுச்சூழல் கேடு இல்லையா என்று கேட்டால் நம்மை தூர விலக்கி வைக்கிறான்.

இப்படித்தான் முட்டுச் சந்துகளும், தெருக் குத்துகளும் கடவுளர்களின் வசிப்பிடங்களாயின
இங்கெல்லாம் மனிதர்கள் குடியிருக்கக் கூடாதாம். மீறினால் தோஷம் என்றான், பரிகாரம் என்றான். பை நிர்ப்பத்தான் எத்தனை எத்தனைக் கதைகள்?

இப்படி முட்டுச் சந்துகள் மட்டுமல்ல, ஏரிகுளங்கள், நீரோடைகள், காடுகள், மலைகள், சாலைகள், இரயிலடிகள் என எண்ணற்ற அரசு இடங்களை கடவுளின் பெயரால் வளைத்துப் போட்டான். அங்கே போனால் அது நீங்கும், இங்கே வந்தால் இது விலகும் என்று மக்களை ஈர்க்கக் கதைகளைக் கட்டினான்

புழுக்கள் நெளியும் சாக்கடையைக்கூட 'புனிதச் சாக்கடை' என்றால் அதில் படுத்துப் புறளவும் வரிசை கட்டுகிறான். கதைகளுக்குத்தான் எத்தனை எத்தனை மவுசு? அதனால்தானே இராமாயணமும் மகாபாரதமும் கோலோச்சுகின்றன.

எட்டமுடியாத  இடங்களுக்குப் படிக்கட்டுகளைக் கட்டினான், ரோப் கார்களை அமைத்தான். சாலைகள் போட்டுக் கொடுத்தான். எல்லாம் அரசாங்க செலவில்.

அரசு இடத்தில், நாதியற்றவர்கள் குடிசை போட்டால் வெகுண்டெழும் அரசு அதிகாரிகள், கடவுளின் பெயரால்  ஆக்கிரமிக்கப்படும் அரசு இடங்களில் எழும் கட்டடங்களை வேடிக்கை பார்ப்பதோடு, அங்கு மின் இணைப்பும் கொடுத்து ஆராதிக்கிறார்கள்.

துன்ப துயரங்கள் துரத்தத் துரத்த, வழிபாட்டுத் தலங்களைத் தேடி ஓடுகிறான் மனிதன். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் வழிபாட்டுத் தலங்கள் விரவிக் கிடப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும், சுற்றுச்சூழல் கேடுகளும், சீரழிவுகளும் வழமையாகி விட்டன.
குப்பைக்குப் பயந்து கடவுளை குந்த வைத்தாலும், மனித மூளையிலும் அங்கே குப்பைகளே கொட்டப்படுகின்றன.
 
இந்து தமிழ் திசை, 02.10.2024

'வழிபாட்டுத்தலங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறாக இருக்கக் கூடாது. எனவே, சாலைகள், நீர் நிலைகள், இரயில் பாதைகளை ஆக்கிரமித்துக் கட்டுப்பட்டுள்ள வழிபாட்டுத் தளங்களைக் கட்டாயம் அகற்ற வேண்டும்' என்று அண்மையில் அரசுக்குக் கட்டளையிட்டுள்ளது உச்சநீதி மன்றம். கெட்டியாய்ப் பிடிக்க வேண்டியத் தீர்ப்பு. இது சேகர் பாபுக்களின் செவிகளை எட்டுமா தெரியவில்லை? 

கடவுளும் மதமும் தனி மனிதன் சார்ந்தது. அது பொது வெளிக்கு வரக்கூடாது. வீட்டுக்குள்ளேயே எப்படி வேண்டுமானாலும் வழிபடட்டும். அது அவர்களுடைய உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை

அதே வேளையில், கடவுளையும் மதத்தையும் பொது வெளிக்கு இழுத்து வந்தால் அது குறித்துப் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு.

குப்பைகள் சேர்ந்து விட்டால், அங்கு குப்பைகளை அகற்றப் பாருங்கள். கோவில்கள் என்ற பெயரில் வேறு குப்பைகளைக் கொட்ட வேண்டாம்.
கடவுள் என்ன குப்பைக் கூளமா
ண்ட இடத்தில் கொட்டுவதற்கு

ஊரான்

No comments:

Post a Comment