Saturday, April 2, 2011

துன்பக் கடலில் துவளும் இந்தியா!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம். பல அலுவலகங்களில் ஊழியர்கள் பிற்பகல் விடுப்பில் சென்றுவிட்டார்கள். எப்பொழுதும் பரபரப்பாய் காணப்படும் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. போட்டி மும்பையில் நடப்பதால் மகாராட்டிர அரசு விடுமுறை அறிவித்து விட்டது. அரை இறுதியில் பாக்கிஸ்தானை வீழ்த்தியதால் நேற்று மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது இந்தியா. அந்த மகிழ்ச்சித் தொடருமா என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருக்க முதலில் மட்டை விளாசிய இலங்கை அணி 274 ஓட்டங்களைக் குவித்தது. 

ஆட்டத்தைப் பெரிய திரையில் பார்த்துவிட்டு இடைவேளையின் போது வீட்டுக்கு வந்த எனது மகன் "என்ன.. செம அடி அடிச்சிடானுங்க!"  என்றான். ஏதோ இவனே அடிவாங்கி வந்ததைப் போல இருந்தது அவனது ஈனக் குரல். அப்போதைக்கு அதுதான் இந்தியனின் குரலுமாகும்.

பிறகு நான் கடைவீதிப் பக்கம் சென்று வந்தேன். ஒரு சில கடைகளில் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து சிலர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் நின்றவாறே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இந்தியா மட்டை விளாசிக் கொண்டிருந்த நேரம். அனைவரும் ஒருவித சோகத்துடன் காணப்பட்டனர். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. காரணம் அப்பொழுது சேவாக் ஆட்மிழந்த நேரம்.  

இலங்கை அடித்த 'செம அடியிலிருந்து' மீள்வதற்குள் தொடக்கத்திலேயே சேவாக் வீழ்ந்தால் தாங்கவா முடியும்? அதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடினாலும் இந்தியாவை வங்கக் கடலில் மூழ்கடித்தது இலங்கை . பாக்கிஸ்தானை வீழ்த்திய போது உயர் இரத்த அழுத்தத்தில் இருந்த இந்தியன், இலங்கையிடம் வீழ்ந்தபோது குறைந்த இரத்த அழுத்தத்திற்குச் சென்றுவிட்டான். உயர் இரத்த அழுத்தத்தில் உள்ளவனைக் காப்பாற்றி விடலாம். ஆனால் குறைந்த இரத்த அழுத்தத்தில் உள்ளவனை அவ்வளவு எளிதில் காப்பாற்றிவிட முடியாது.

இலங்கையிடம் வீழந்ததால் இந்தியாவே இன்று இழவு வீடாய் காட்சியளிக்கிறது. நாளை விடுமுறை என்பதால் காரியத்தையும் முடித்துவிடலாம். ஒரு நாள் விடுப்பு மிச்சம். விளையாட்டை தனிமனித உணர்வாய் பார் என்ற போது கேட்டானா? விளையாட்டை நாட்டுப் பற்றோடு இணைத்தான். இன்று இடிந்து போய் உட்கார்ந்து விட்டான்.

இலங்கை அதிக ஓட்டங்கள் அடித்த போது, அடி தன்மீது விழுந்ததாக எண்ணினான். வலி தாங்க முடியாமல் அசைவற்று நின்றான். இலங்கை வீரர்களால் இந்திய வீரர்கள் வீழ்த்தப்பட்ட போது, தானே வீழ்ந்ததைப் போல உணர்ந்தான். துவண்டு போனான். துக்கம் தொண்டையை அடைத்தது. சோகம் கவ்வியது. செய்வதறியாது திகைத்து நின்றான். கண்களில் கண்ணீர் முட்டியது. கைகளில் இருந்த கைக்குட்டை ஈரத்தால் உறைந்து போனது. இதுதான் இன்றைய இந்தியனின் நிலை. இவன் வீட்டில் இழவு விழுந்தால்கூட இத்தனை சோகத்திற்கு ஆளாவானா என்பது ஐயமே! 

அன்று, முல்லி வாய்க்காலில் கொத்துக் கொத்தாக தமிழன் கொல்லப்பட்ட போது துக்கம் தொண்டையை அடைக்கவில்லை. சோகம் கவ்வவில்லை. இலங்கையிடம் இந்தியா  வீழ்ந்ததால் வருந்திய இந்தியன், இலங்கை சிங்களக் காடையர்களால் தமிழ்ப் பெண்கள் மொத்தமாகக் கற்பழிக்கப்பட்ட போது வருந்தவில்லை? ஈழத்தில் வீழ்ந்தவன் இலங்கைத் தமிழன், வேற்று நாட்டுக் காரன், அவனுக்காக எப்படி வருந்த முடியும் என எதிர் கேள்வி கேட்டு சமாதானப்படுத்தலாம். 

ஆனால் 'இந்திய' மீனவன் சிங்களக் காடையர்களால் அன்றாடம் கொல்லப் பட்டாலும் அதற்காக ஒரு சொட்டுக் கண்ணீரையாவது சிந்தியிருக்கிறானா? சிந்தமாட்டான். கொல்லப்படுபவன் தமிழனாயிற்றே. தமிழனைத்தான் இந்தியன் என்று "இந்திய - இந்தியன்" ஏற்றுக் கொள்வதில்லையே. 'மதராசி' என்றுதானே அழைக்கிறான். 'மதராசி' கொல்லப்பட்டால் இந்தியனுக்கு எப்படி கண்ணீா் வரும்? தமிழனாய்ப் பிறந்து இந்தியனாய் வாழும் இந்தியத் தமிழனும், இந்த இந்தியனின் பட்டியலில் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இதுதான் இந்திய மீனவன் மீது இந்தியன் கொண்டிருக்கும் 'தேசப்பற்று'.

ஒன்று மட்டும் புரிகிறது. எவன் வீழ்ந்தால் எனக்கென்ன? கிரிக்கெட்டில் மட்டும் இந்தியா விழக்கூடாது என்பதே இந்தியனின் இலட்சியம். இந்த இலட்சியம் பெருமூளையிலிருந்து பிறக்கவில்லை. இது சில ஆண்டுகளாகவே போதை ஊசி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டு சிறுமூளை ஏற்படுத்தியிருக்கும் 'நாட்டுப் பற்றுப்'போதை. போதை தெளிய வேண்டுமானால் பளிச் பளிச்சென பச்சைத் தண்ணீரைக் கொண்டு முகத்தில் அடிப்பது போல "எதையாவது" கொண்டு இரு கன்னத்திலும் மாறி மாறி அறைய வேண்டும்.  இல்லை என்றால் கிரிக்கெட்டின் நாட்டுப்பற்று போதையும் தெளியாது. கிரிக்கெட்டில் இந்தியா வீழும் போது வரும் சோகமும் குறையாது. அது வரை இந்தியா துன்பக் கடலில் துவளுவதை யாரால்தான் தடுக்கமுடியும்?

குறிப்பு: இந்தியனின் உணர்வை வெளிக்கொணரவே இப்பதிவு.

22 comments:

  1. உணர்வு கொப்பளிக்கும் கட்டுரை .கிரிக்கெட் ஆடும் களம் .அதனைப் பற்றி தாங்கள் எழுதியுள்ள இக்கட்டுரை ஒரு மனித உணர்வினை உந்தக்கூடிய அறிவின் சுரங்கம். ஆட்டம் அன்றோடு முடிந்தது ஆனால் ஆழமான கருத்துக்களை மனதில் பதிய வைத்துள்ள உங்கள் திறன் காலம் உள்ளவரை நிற்கும்.

    ReplyDelete
  2. உணர்வு பூர்வமான தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  3. ரொம்பவும் வருந்தத தேவையில்லை நாட்டுப்பற்றை ஒழிக்க, இப்ப் தெருவெங்கும் கரைபுரண்டோடும் தேசபக்தி இன்னும் 5 நாளில் IPL போட்டிகள் தொடங்கும் போது தெளிந்துவிடும் நாட்டுப்பற்று போதை. இவ்வளவுதாங்க அதுக்கு ஆயுள்.

    ReplyDelete
  4. Arumayana Padhivu Nanbare... Cricket enbadhu vilayattu mattume aanal manidhabimanam ovvoru manidhanukkum vendum enbadhai neenga arumayaga padhivu seidhulleergal.

    ReplyDelete
  5. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தமிழ் வினை மற்றும் குணா இருவருக்கும் நன்றி! IPL போட்டிகள் அடுத்த சுற்று போதைக்கல்லவா இழுத்துச் செல்லும்.

    ReplyDelete
  6. நண்பரே.!!!

    மீனவனின் துக்கத்தை கண்டு கண்ணீர் விட்ட என்னோடு பலர் இருக்கின்றனர்.. அதே சமயம் நாங்கள் இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததையும் ஏற்க மறுக்கவில்லை.. விளையாட்டு இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் மாறிவிட்டது..

    தமிழக மீனவனுக்காக அமைப்பு உருவாக்கி ஆங்காங்கே இதை தடுக்க என்ன செய்யலாம் என்னும் விசயங்களும் பகிரப்பட்டு வருகிறது..

    கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் அழுவோம், திட்டுவோம்.. ஆனால் சில நேரங்களில் மறந்துவிட்டு அடுத்த வேலைக்கு கிளம்பிடுவோம்.. இது ஒரு போதை தான்.. இல்லை என்று மறுக்கமுடியாது.. ஆனால் எதுதான் போதையில்லை.. இந்த பதிவுலகம் கூட போதை தான்.. இன்று கிரிக்கெட்.. நாளைக்கே கால்பந்தில் இந்தியா மேலே வந்தால் நாங்க மாறிடுவோம்..

    அன்றாடம் எந்திரனாக இருக்கும் நாங்கள் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட் பார்க்க தொடங்கினோம்.. ஏனெனில் எங்கள் நாடு சிறப்பாக இருக்கும் அடிக்கடி நடக்கும் தொடர் இது தான்.. டென்னிஸ்,கபடி போன்ற போட்டிகளிலும் இந்தியா சாதிக்கின்றனரே என கேக்கலாம்.. ஆனால் அதற்கான ஒளிபரப்பு உரிமையை யாரும் வாங்குவதில்லை.. அப்படியே ஒளிபரப்பினாலும் எங்கள் கேபிள் ஆப்பரேட்டர் தருவதில்லை..

    அப்படி இருக்கையில் எங்கள் பொழுதுபோக்கு, உலகமே ரசிக்கும் ஒரு விளையாட்டில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் வெல்கிறார்கள் என்றால் பெருமையாக இருக்காதா.? சொல்லுங்க..

    ReplyDelete
  7. நண்பர் கூர்மதியான் அவர்களே!
    மீனவனின் துயருக்கு தீர்வு காண விழையும் தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    விளையாட்டு என்பது தனிமனித உடல் நலத்தோடு தொடர்புடையது. இதற்கும் மேலே விளையாட்டுக்கும் நாட்டுப் பற்றுக்கும் முடிச்சுப் போடுவது பொருளற்றது. விளையாட்டை பணம் ஈட்டும் கருவியாக முதலாளிகள் பயன்படுத்துவதும் அதற்கு நாம் இரையாவதும்தான் இங்கே வேதனைக்குரிய ஒன்று.

    நாட்டு மக்களின் துன்ப துயரங்களைப் போக்கும் செயல்பாடுகளுக்காக பெருமைப்படுவதே பெருமைக்குரிய ஒன்று. அதற்கு விளயாட்டு குறிப்பாக கிரிக்கெட் போதையிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்காகவே எனது பதிவு.

    கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி!.

    ReplyDelete
  8. மிக நல்ல பதிவு. 'பச்சைத் தமிழனின்' பாராட்டவேண்டிய பதிவு. தம்பி கூர்மதியனின் பின்னூட்டத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். தமிழர்களுக்கு அக்கரை இல்லாமல் இல்லை. அனைவருமே முத்துக்குமாராக இருக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? தமிழ் மீனவர்கள் ஈழத்தமிழர்கள் இன்னும் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேறு உபாயங்களைத்தான் இனிமேல் எதிர்பார்க்க முடியும்!

    ReplyDelete
  9. சக்திவேல் மற்றும் கூர்மதியான் ஆகியோர் நம் மக்கள் மீது கொண்டுள்ள அக்கரை அனைவருக்கும் வரவேண்டும். அனைவரும் முத்துக்குமாராக மாறவேண்டியதில்லை. ஆனால் அவரின் இலட்சியம் நிறைவேற பாடுபட வேண்டும். அதற்காக முயற்சிப்போம்.

    சக்திவேல் அவர்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  10. இந்த விளையாட்டின் பின்னால் உள்ள பண அனுகூலங்கள், அரசியல் , ஊழல் என எது வெளியே வந்தாலும் இந்த போதை தெளியாத ஒரு புதுவகையாகவே உள்ளது. நேற்று கூட யுவராஜ் மற்றும் தோணி இடையேலான உள்குத்துகள் வெளிப்படையாக தெரிந்தது. நாட்டுக்காக விளையாடும் போது எப்படி இவை தோன்றும் என யாரும் நாட்டுபற்றோடு கேள்வி கேட்பதில்லை

    ReplyDelete
  11. விளையாட்டு என்பது உடல் நலனுக்கானது என்பதையும் தாண்டி அது புகழுக்கானது, வருவாய்க்கானது, தனது திறமையை பறைசாற்றுவதற்கானது என்கிற புதிய பரிணாமங்களை எட்டி விட்டபிறகு விளையாடுபவன் நாட்டுக்காக விளையாடுகிறான் என்பதெல்லாம் நம்மை கேனையனாக்குவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதே எனது கருத்து.

    பாஸ்கர் அவர்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  12. அற்புதமான ஒரு பதிவு. கிரிக்கெட் என்பது நமது நாட்டில் ரசிகர்களுக்கு அது ஒரு மதம், பெரு முதலாளிகளுக்கு ஒரு வியாபாரம், நடிகர் நடிகைகளுக்கு தங்கள் தேசப்பற்றை காட்ட ஒரு வாய்ப்பு, நமது அரசாங்கத்திற்கு அவர்கள் செய்யும் தவறுகளை மறைக்க மக்களுக்கு ஊட்டும் போதை. இதில் தேசப்பற்று எங்கிருந்து வந்தது என்று நமக்கு தெரிய வில்லை. கிரிக்கெட் அமுதமாகவே இருந்தாலும் கூட அது இப்போது அளவைக்கடந்து நஞ்சாக மாறிவிட்டது என்பதை தெளிவாக உணர்த்தும் உங்கள் பதிவு மிகவும் அற்புதம்.... கடைசி பத்தியில் உங்கள் வரிகள் நெஞ்சை பிழிகின்றன...

    ReplyDelete
  13. நண்பரே.. தங்கள் பதிவுக்கு நன்றி.

    //உயர் இரத்த அழுத்தத்தில் உள்ளவனைக் காப்பாற்றி விடலாம். ஆனால் குறைந்த இரத்த அழுத்தத்தில் உள்ளவனை அவ்வளவு எளிதில் காப்பாற்றிவிட முடியாது.//

    சந்தேகம் இல்லை.

    //உலகமே ரசிக்கும் ஒரு விளையாட்டில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் வெல்கிறார்கள் என்றால் பெருமையாக இருக்காதா.? //

    நண்பர் கூர்மதியன்..தவறாக என்ன வேண்டாம். கிரிக்கெட்டை உலகமே ரசிக்கவில்லை. ஒரு சில தேசங்கள்தான் பார்க்கின்றன.

    ReplyDelete
  14. தங்களின் பதிவு சற்று புலம்பல் அதிகம் என்றே படுகிறது. காரணம்
    கிரிக்கெட் எனும் போதையில் உள்ளவனை மீட்டு விட்டால் மட்டும்
    அவன் நாட்டுப் பற்று உள்ளவனாக மாறி விட மாட்டான். ஒட்டு மொத்த
    இந்திய தேசத்தின் சீரழிந்துவிட்ட கலாச்சாரமும், தரங்கெட்ட அரசியல்வாதிகளாளும்
    தான் இனவெறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமுகவிரோதச் செயல்கள்
    அரங்கேறி வருகின்றன.

    ReplyDelete
  15. விளையாட்டு வினையாக்கப்படுகிறது.

    ReplyDelete
  16. ** ”...இதில் தேசப்பற்று எங்கிருந்து வந்தது என்று நமக்கு தெரிய வில்லை. கிரிக்கெட் அமுதமாகவே இருந்தாலும் கூட அது இப்போது அளவைக்கடந்து நஞ்சாக மாறிவிட்டது...”

    sen அவர்களின் கேள்வியும் கிரிக்கெட் பற்றிய பார்வையும் மிகச் சரியானது.


    ** ”கிரிக்கெட்டை உலகமே ரசிக்கவில்லை. ஒரு சில தேசங்கள்தான் பார்க்கின்றன.”

    சரியாகச் சொன்னீர்கள் சிவகுமார் அவர்களே!

    "உலகமே" என்கிற பார்வை கிரிக்கெட் பற்றி மட்டுமல்ல மற்ற பலவற்றிலும் பார்க்க முடியும்.

    ** "கிரிக்கெட் எனும் போதையில் உள்ளவனை மீட்டு விட்டால் மட்டும் அவன் நாட்டுப் பற்று உள்ளவனாக மாறி விட மாட்டான்..." சரிதான் நண்பரே. நான் மறுக்க வில்லை.

    கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல "இனவெறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமுகவிரோதச் செயல்கள்..." ஏன் அரங்கேறி வருகின்றன? அதற்கு முடிவு கட்ட நம்மால் என்ன செய்ய முடியும்? என்பது குறித்து சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும் என்பதற்காகவே எனது பதிவு. கருத்துக்களை வெளியட 'புலம்பலும்' ஒருவித வடிவம்தானே.

    நன்றி நண்பரே.

    ** நன்றி புதிய பாமரன் அவர்களே!

    ReplyDelete
  17. இது சில ஆண்டுகளாகவே போதை ஊசி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டு சிறுமூளை ஏற்படுத்தியிருக்கும் 'நாட்டுப் பற்றுப்'போதை. //

    அதேதான்,.

    தன் ரத்தத்தை தானே சுவைக்கும் நாயிடம் ,அறிவாளி ஒருவர், அட , அது காய்ந்துபோன எலும்பு. நீ சுவைக்கும் ரத்தம் எலும்பிலிருந்து வெளிப்படும் ரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே கசியும் ரத்தம் என்று சொல்ல. வழிப்போக்கரைப் பார்த்து நாய் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சென்றது..

    அதே நிலைதான் கிரிக்கெட்டும் , அதை பார்த்து ரசித்து ஆரவாரம் செய்யும் நாமும்..

    ReplyDelete
  18. சபாஷ் மிகவும் அருமையாக தங்களின் உணர்வுகள் கொட்டி மற்றவர்களையும் தட்டி எழுப்பியுள்ளீர்கள்.
    எழுந்தால் எழநினைத்தாலே சந்தோஷம்தான்..

    ReplyDelete
  19. எண்ணங்கள் 13189034291840215795 மற்றும் அன்புடன் மலிக்கா இருவரின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  20. Nalla karuthukal. Ivarkalai thiruthave mudiyathu.

    ReplyDelete
  21. திருத்த முடியாதது எதுவும் இல்லை. முயற்சிப்போம்.

    நன்றி எழில் அரசு அவர்களே!

    ReplyDelete
  22. நல்ல பதிவு!
    தேசப்பற்று காட்டவேண்டிய இடம் எது?

    அறிவு சார்ந்த படிப்பு எது?

    தொழிலாளர்களுக்கு தெரிந்த உரிமை ( தொடர் வண்டியில் சீட் பிடிப்பது) எது?

    என்று நன்றாக புரிகிறது !!
    நன்றி👍💐

    ReplyDelete