Saturday, 16 May 2026

சனாதனம் அறிவோம்: பகுதி - 1, ஆதியும் அந்தமும் இல்லாத, என்றும் நிலைத்திருக்கும் அது எது?

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "சனாதனத்தை ஒழிப்போம்" என்று பேசியது, இன்று மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. சனாதன ஆதரவாளர்கள் இதனை "இந்து மதத்திற்கு எதிரானது", "கோயில்களை ஒழிப்பதற்கான பேச்சு" என்று திசை திருப்பி, சாமானிய மக்களிடையே உதயநிதிக்கு எதிரான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறார்கள். சாமான்ய மக்களுக்கும்கூட உதயநிதி பேசுவது தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது. சனாதனம் குறித்து அவர்களுக்குச் சொல்லப்படும் விளக்கங்கள்தான் இதற்குக் காரணம்.


சனாதன ஆதரவாளர்களின் மழுப்பலான விளக்கங்கள்

சனாதனம் என்றால் "ஆதியும் அந்தமும் இல்லாதது", "முடிவில்லாதது", "என்றும் நிலைத்திருப்பது" (eternal) என்று விளக்கமளிக்கிறார்கள். சரி, அப்படி நிலைத்திருப்பது, முடிவில்லாதது, அழிவில்லாதது எது என்று கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. குஷ்பு முதல் அனிதா குப்புசாமி வரை பலரும், "பொட்டு வைப்பது, பூச் சூடிக்கொள்வது, கோலம் போடுவது, கோயிலுக்குப் போவது" தான் சனாதனம் என்று பாமரத்தனமான விளக்கங்களை அளிக்கின்றனர்.

உண்மையில், சனாதனத்தை பாதுகாக்கும் கருத்தியல் வட்டாரங்களுக்கு சனாதனம் என்றால் என்னவென்று நன்றாகவே தெரியும். ஆனால், உண்மையைச் சொன்னால் மக்கள் அவர்களை வெறுப்பார்கள் என்பதால், அவர்களும் இந்த மேற்கண்ட மேலோட்டமான விளக்கங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள்.

தர்மம் இன்றி சனாதனம் இல்லை

'சனாதனம்' என்ற சொல்லுக்கு 'என்றும் இருப்பது' என்று பொருள் கொண்டாலும், 'தர்மம்' என்ற சொல்லோடு சேர்த்து 'சனாதன தர்மம்' என்று சொல்லும்போதுதான் அதன் முழுப் பரிமாணமும் விளங்கும். இந்த 'தர்மம்' என்ற சொல் இல்லாமல் சனாதனத்தைப் பற்றிப் பேசவே முடியாது.

'தர்மம்' என்றால் ஒழுக்க நெறி, அறநெறி, கடமை என்று பொருள். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், தனது வாழ்வில் அவன் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகள் என்னவென்று போதிக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளையே இங்கே தர்மம் என்கிறார்கள். 

மனித வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளை வள்ளுவம் 'திருக்குறளில்' போதிக்கிறது.

கிறிஸ்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இயேசுநாதர் 'பைபிளில்' வழங்கியுள்ளார்.

இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அல்லாஹ் 'குர்ஆனில்' வகுத்திருக்கிறார்.

அப்படியானால், இந்துக்களுக்கான அறநெறிகளை எங்கே தேடுவது? 

அவை வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள் என நூற்றுக்கணக்கான ஏடுகளில் சிதறிக்கிடக்கின்றன.

மனுதர்மம்: சனாதனத்தின் செயல் வடிவம்

நூற்றுக்கணக்கான ஏடுகளில் உள்ள நெறிமுறைகளைத் தேடி கடைபிடிப்பது கடினம் என்பதால், அவற்றையெல்லாம் தொகுத்து 'மனுஸ்மிருதி' அல்லது ‘மனுதர்ம சாஸ்திரம்’ அல்லது ‘சனாதன தர்மம்’ என்ற பெயரில் மனு என்பவன் வழங்கினான். இந்த 'மனுதர்ம சாஸ்திரம்' தான் இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறை, தண்டனை முறைகள் மற்றும் பரிகாரங்கள் குறித்துப் பேசுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், மனுதர்ம சாஸ்திரத்தைப் புரிந்துகொண்டால் சனாதனம் என்றால் என்ன என்பது தானாகவே விளங்கிவிடும்.

சனாதனம் என்பது வெறும் பொட்டு வைப்பதோ, பூ வைப்பதோ அல்ல; அது மனு வகுத்த ஒரு சமூகக் கட்டமைப்பு. ஆதி அந்தம் இல்லாத என்றும் நிலைத்திருக்கும் இந்துக்களின் அந்த வாழ்வியல் தர்மம் அதாவது நெறிமுறை என்னவென்று சாதாரண இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

தொடர்வோம்...

சனாதனம் குறித்துச் சாமான்ய மக்களும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில், சனாதன தர்மத்தைப் போதிக்கக்கூடிய மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகமாக எடுத்து, விரிவாக அலசத் திட்டமிட்டுள்ளேன். சனாதனத்தின் உண்மையான முகத்தைத் திரைவிலக்கிக் காட்டும் இத்தொடர் இனி தொடரும்.

சனாதனம் அறிவோம்!

ஊரான்

3 comments:

  1. வணக்கம் அருமையான பகிர்வு விரைவில் பகுதி இரண்டையும் வெளியிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். இது ஒரு நீண்ட நெடிய தொடர். தொடர்ந்து வாசித்து ஆலோசனைகள் தரவும்.

      Delete
  2. சனாதன தர்மம் அதனுடைய முழு பரிமாணத்தோடு விளக்கப்பட வேண்டும். நிறைய பேர் இந்து தர்மத்தையும் சனாதன தர்மத்தின் குழப்பிக் கொண்டு கோயிலுக்கு செல்வதையும் கோலமிடுவதையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆகவே உங்கள் தொடரை மிக ஆவலாக நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.நன்றி

    ReplyDelete