Saturday, May 4, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7


சென்னை முதல் கன்யாகுமரி வரை வாழும் தமிழனின் பொது அடையாளம் தமிழ் மொழி. ஆனாலும் அவனுக்கு சென்னைத் தமிழன், கொங்குத் தமிழன், நெல்லைத் தமிழன் என்கிற வட்டார அடையாளங்களும் உண்டு. சென்னைத் தமிழைக் கேவலமானதாகக் கருதி கிண்டல் செய்யும் கொங்குத் தமிழன் சென்னைக்கு வந்து வாழத் தொடங்கியதும் அவனிடம் சென்னைத் தமிழ் ஒட்டிக் கொள்கிறது. சென்னைக்காரன் நெல்லைக்குச் சென்றால் அவன் நெல்லைத் தமிழனாகி விடுகிறான். இவை எல்லாம் சாதிகளுக்கு அப்பாற்பட்ட அடையாளங்கள். பேசும் மொழி அடையாளம் ஒன்றைத்தவிர வேறு ஒன்றுபட்ட பொது அடையாளம் எதுவும் தமிழனிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அது போல இந்தியனை அடையாளப் படுத்தும் பொது அடையாளம் ஏதும் இருக்கிறதா? நான் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். அப்படி பொது அடையாளம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பொது அடையாளம் எதுவும் இல்லாதது மட்டுமல்ல இந்தியர்கள் சாதி-மத-இன-பிராந்திய-மாநில-மொழி ரீதியாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாய்ந்தாலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனக்கூறிக்கொண்டு பிய்ந்து கிடக்கும் இந்தியனை ஒட்டவைக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்தியனோ, தமிழனோ அவன் வேற்றுமையிலும் ஒன்றுபட்டு நிற்பது இரண்டு விசயங்களில்த்தான். ஒன்று லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களின் சொத்தைச் சூறையாடுவது; இரண்டாவது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது. மற்ற விசயங்களில் இவன் எப்படி எல்லாம் வேறுபடுகிறான் என்பதைப் பார்ப்போம்.

தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தழிழையே அன்றாடம் பேசினாலும் தமிழ் நாட்டுக் கோவில்களில் தமிழில் பூசை செய்வது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைந்து உள்ளே சென்று ஆண்டவனை வழிபடுவது பார்ப்பனர் உள்ளிட்டு பிற சாதிக்காரன் எவனுக்கும் பிடிக்காது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. அப்படி ஒரு அதிசயம் ஏதும் நடந்து விட்டால் ஒரு பறையன் கருவறைக்குள் சென்று பூசை செய்வது பிற்பட்ட சாதிக்காரன் எவனுக்கும் பிடிக்காது. அப்பொழுது இவர்கள் ஒட்டு மொத்தமாக நாத்திகர்களாக மாறினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, ஓ.பி.சி இவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுப்பது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. தங்களைவிட இவர்கள் முன்னேறுவதை பார்ப்பனர்களால் பொருத்துக் கொள்ள முடியாது.

இட ஒதுக்கீடு கிடைக்காத பார்ப்பனரல்லாத பிற உயர் சாதிக்காரனுக்கு ஓ.பி.சி க்காரன் முன்னேறுவதைப் பொருத்துக் கொள்ள முடியாது. எம்.பி.சி க்காரன் முன்னேறுவதை பி.சி க்காரனால் பொருத்தக் கொள்ள முடியாது. எளிமையாகச் சொன்னால் எம்.பி.சி ஒதுக்கீட்டின் மூலம் ஒரு வன்னியன் முன்னேறினால் ஒரு முதலியாருக்குப் பிடிக்காது. பறையர்-பள்ளர்-அருந்ததியர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவதை ஓ.பி.சி – பி.சி – எம்பி.சி க்காரர்களால் பொருத்துக் கொள்ள முடியாது. தனி இட ஒதுக்கீடு மூலம் அருந்ததியர் முன்னேறுவதை பள்ளர் - பறையர்களால் பொருத்துக் கொள்ள முடிவதில்லை.

இஸ்லாமியனுக்கோ, தாழ்த்தப்பட்ட கிருஸ்தவனுக்கோ இட ஒதுக்கீடு கொடுப்பது இந்துக்களுக்குப் பிடிக்காது.

பார்ப்பனப் பெண்ணை பிற சாதிக்காரன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. வெள்ளாளக் கவுண்டனின் பெண்ணை ஒரு முத்தரையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வெள்ளாளக் கவுண்டர்களுக்குப் பிடிக்காது. நாயுடுப் பெண்ணை ஒரு தேவன் காதலித்து திருமணம் செய்து கொள்வது நாயுடுகளுக்குப் பிடிக்காது. வன்னியப் பெண்ணை ஒரு பறையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வன்னியர்களுக்குப் பிடிக்காது. பள்ளர் பெண்ணை ஒரு சக்கிலியன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பள்ளர்களுக்குப் பிடிக்காது.

இப்படி அவரவருக்குப் பிடிக்காத அனைத்திலும் ஒளிந்திருப்பது தீண்டாமையைத் தவிர வேறெதுவுமில்லை. இத்தகைய தீண்டாமை பார்ப்பனர்களிடமிருந்தே தொடங்கி நடைமுறையில் இருப்பதால் இதைப் பார்ப்பனியம் என்று அழைப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.

12 comments:

  1. நல்ல பதிவு தொடரட்டும் உமது எழுத்து...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //அது போல இந்தியனை அடையாளப் படுத்தும் பொது அடையாளம் ஏதும் இருக்கிறதா? நான் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். அப்படி பொது அடையாளம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. //

    brown ass!

    ReplyDelete
  3. //இத்தகைய தீண்டாமை பார்ப்பனர்களிடமிருந்தே தொடங்கி நடைமுறையில் இருப்பதால்//அள்ளி விடுங்க..

    ReplyDelete
    Replies
    1. இதிலே அள்ளி விடுவதற்கு என்ன இருக்கிறது. உணவுத் தீண்டாமை, மொழித் தீண்டாமை, பிறப்பில் தீண்டாமை பார்ப்பதெல்லாம் இன்றுகூட எங்கிருந்து தொடங்குகிறது. புலால் உண்பவனை கீழானவனாக பார்ப்பதில்லையா? அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதில்லையா? கோவில் கருவறையில் தமிழ் வழிபாட்டுக்குரிய மொழி கிடையாது என்று யார் சொல்கிறார்கள்? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடாது என உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடுவது யார்? சூத்திரவாள் எனப் பிறரை இழிவாகக் கருதுவதில்லையா? இவை எல்லாம் தீண்டாமை கிடையாதா?

      நடைமுறை அனுபவத்திலிருந்தே இந்தப் பதிவை எழுதி வருகிறேன். நான் எழுதுவது கற்பனை அல்ல; இட்டுக்கட்டப்பட்டவையும் அல்ல. முதல் தொடரிலிருந்து படியுங்கள். அள்ளி விடுகிறேனா? இல்லை நடைமுறையை எழுதுகிறேனா? என்பது புரியும். அப்படியே புரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதற்கு குறைந்த பட்சம் மனிதர்களை சமமாக பாவிக்கும் ஜனநாயக உணர்வு வேண்டும். அது இல்லை எனில் என்னதான் ஆதாரத்தோடு எழுதினாலும் ஒரு சிலர் இத்தகைய கருத்தக்களை ஏற்க மாட்டார்கள். நீங்கள் எப்படியோ?

      Delete
  4. //பார்ப்பனப் பெண்ணை பிற சாதிக்காரன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. வெள்ளாளக் கவுண்டனின் பெண்ணை ஒரு முத்தரையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வெள்ளாளக் கவுண்டர்களுக்குப் பிடிக்காது. நாயுடுப் பெண்ணை ஒரு தேவன் காதலித்து திருமணம் செய்து கொள்வது நாயுடுகளுக்குப் பிடிக்காது. வன்னியப் பெண்ணை ஒரு பறையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வன்னியர்களுக்குப் பிடிக்காது. பள்ளர் பெண்ணை ஒரு சக்கிலியன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பள்ளர்களுக்குப் பிடிக்காது.//

    நாம் ஏன் இப்படியே பார்க்க வேண்டும். மேல் ஜாதி ஆண்கள் ஏன் தாழ்த்தப்பட்ட பெண்களை மணமுடிப்பது பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.ஆண்களை விடவும் உயர்ஜாதிப் பெண்கள் மட்டுமே காதலுக்காக ஜாதி மதத்தை அதிகம் கடந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. "மேல் ஜாதி ஆண்கள் ஏன் தாழ்த்தப்பட்ட பெண்களை மணமுடிப்பது பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை." மிக சொற்பமான அளவிலேயே நடக்கின்றன. ஆழமாக பரிசீலிக்க வேண்டிய ஒன்று.

      Delete
  5. ஆண்களை விடவும் உயர்ஜாதிப் பெண்கள் மட்டுமே காதலுக்காக ஜாதி மதத்தை அதிகம் கடந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். --இதே கருத்தை நானும் வழிமொழிகிறேன்

    ReplyDelete
    Replies
    1. "மேல் ஜாதி ஆண்கள் ஏன் தாழ்த்தப்பட்ட பெண்களை மணமுடிப்பது பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை." மிக சொற்பமான அளவிலேயே நடக்கின்றன. ஆழமாக பரிசீலிக்க வேண்டிய ஒன்று.

      Delete
  6. சதீஷ் குமார்Thursday, October 31, 2013 at 3:03:00 AM PDT

    //"மேல் ஜாதி ஆண்கள் ஏன் தாழ்த்தப்பட்ட பெண்களை மணமுடிப்பது பற்றி அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை."// //ஆண்களை விடவும் உயர்ஜாதிப் பெண்கள் மட்டுமே காதலுக்காக ஜாதி மதத்தை அதிகம் கடந்து விடுகிறார்கள்// ஆணாதிக்க சமூகத்தில் ...ஆண்கள் மேல்சாதி ..பெண்கள் கீழ்சாதி .. சாதி தீண்டாமையையும் ..ஆணாதிக்கத்தையும்..நேர்கோடிட்டால்..இதற்கான காரணம் புரியும் !

    ReplyDelete
  7. பார்ப்பனர்கள் மூலமாக வந்தது வர்ணாசிரமம் எனப்படும் வர்ணப்பிரிவுகள். ஆனால் இன்று இருக்கும் சாதிய பாகுபாடுகள் அவை வர்ணப் பாகுபாடுகளுகளை கடந்தவை. பார்ப்பணியம் என்பது பார்ப்பண ஆதிக்கத்தையும் வார்ணப் பாகுபாடுகளையும் மடடுமே குறிக்கிறது பிற ஆதிக்க சாதிகளின் மேல் கீழ் பாகுபாடுகளை குறிப்பதில்லை. அதனால் ஆதிக்க சாதி வெறியர்கள் தங்களை குறிப்பிடாதது போலவே நடந்து கொள்கிறார்கள். எனவே பிராமண ஆதிக்கத்தை பார்ப்பணியம் என்றும் பிற ஆதிக்க சாதி வெறியை சாதியம் என்று குறிப்பதே சரியானதாகும்.

    ReplyDelete