Friday, April 19, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?....தொடர்-1

இது 'ஊரும்' அல்ல; சேரியும் அல்ல; அதற்கும் கீழே! அருந்ததியரின் குடியிருப்புப் பகுதி. இங்குதான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வருகிறேன். அருகாமையில் பள்ளிக்கூடம், வெளியூர் சென்று வரப் பேருந்து மற்றும் தொடர் வண்டி வசதி, வற்றாத நல்ல நிலத்தடி நீர் என சில அடிப்படையான வசதிகள் இங்கு இருப்பதனால்தான் அருந்ததியர் காலனி என்றாலும் பிற சாதியினரும் அதிக அளவில் குடியிருக்கின்றனர்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இளம் பார்ப்பன புரோகிதர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகைக்கு எதிர் வீட்டில் குடியேறினார். இரண்டாவது குழந்தை ஒரு வயதே நிரம்பிய பெண்குழந்தை. முதல் குழந்தை மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தை. குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவ்விருவரும் எங்கள் தெருவில் உள்ள அனைவரையும் கவர்ந்து விட்டார்கள். தெருவில் உள்ள எல்லோருடைய வீடுகளுக்கும் செல்வார்கள். அருந்ததியர் வீட்டுக் குழந்தைகளே இவர்களின் சக நண்பர்கள்.

எங்கள் வீட்டின் செல்லக் குழ்ந்தையானாள் அப்பெண்குழந்தை. மூன்று வயதுவரை பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் இருப்பாள். மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியது முதல் தற்போது முதல் வகுப்பு வரை பள்ளி செல்லும் நேரம் மற்றும் இரவில் அவர்கள் வீட்டில் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எங்கள் வீட்டில்தான் அதிக நேரம் இருப்பாள். சிறுநீர் - மலம் கழித்தால் சுத்தப்படுத்துவது, குளிக்க வைப்பது, தலை வாரி விடுவது, தேநீர் மற்றும் உணவு கொடுப்பது, கொஞ்சிக் குலாவுவது, விளையாடுவது என சொந்தக் குழந்தையை வளர்க்கும் போது கிடைக்கும் அனுபவத்தில் ஒரு பாதி அனுபவத்தையாவது இக்குழந்தையின் மூலம் பெற்றிருப்போம். இதனால் ஒரு பார்ப்பனக் குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் கருத்தியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை மிக நுணுக்கமாக உணர முடிந்துள்ளது.

ஒரு வயதாய் இருந்த போது சாம்பாரோ – இரசமோ, மோரோ – தயிரோ, அவித்த முட்டையோ – ஆம்லெட்டோ, உருளைக்கிழங்கு வறுவலோ - வறுத்த கோழிக்கறியோ, விராலோ - இறாலோ இவை எல்லாம் நாம் உண்ணும் உணவு என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது இந்தக் குழந்தைக்கு.

திண்பது எதுவானாலும் “எனக்கு” எனக் கேட்பதும், “இந்தா” எனக் கொடுப்பதும்தானே குழந்தைகளின் இயல்பு. நாம் எதையாவது நமது குழந்தைகளுக்குத் திண்ணக் கொடுத்தால் “சாப்பிட்டுவிட்டு அப்புறமா வெளியில போ” என நாம்தானே குழந்தைகளின் பகிர்ந்துண்ணும் பண்பை முளையிலேயே கருக்கி விடுகிறோம்.

பார்ப்பனர்கள் அசைவ உணவை சாப்பிட மாட்டார்கள் என்பதெல்லாம் தெரியாத வயதில் நாங்கள் ருசித்து சாப்பிடும் போது அதைப்பார்க்கும் பார்ப்பனக் குழந்தைக்கு மட்டும் நாக்கில் எச்சில் ஊறாதா என்ன? அப்போது “எனக்கு” எனக் கேட்ட போதும் சைவ உணவைத் தவிர முட்டை உள்ளிட்ட மாமிச உணவு எதையும் நாங்கள் அவளுக்குக் கொடுத்ததில்லை. பகிர்ந்துண்ணும் பண்பைவிட அவர்களின் குடும்ப உணவு முறையில் நாம் குறுக்கிட வேண்டாம் என்பதால்தான் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் மூன்று வயதைத் தொட்டபோது முட்டையும் கோழிக்கறியும் தங்களுக்கான உணவு இல்லை என்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

ஒரு சமயம் நான் கோழிக்கறியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “ஐய்யய்ய.. நீங்க கறி சாப்பிடுறீங்க” என்றாள். “இது கோழிக்கறியில்ல, உருளைக்கிழங்கு, இந்தா சாப்பிடு என நான் கிண்டலுக்குச் சொன்னபோது”, “நாங்க பிராமிண், கறி எல்லாம் சாப்பிட மாட்டோம்” என பதிலுரைத்தது மட்டுமல்ல “அப்ப நீங்க பிராமிண் கிடையாதா?” எனக் கேள்வி வேறு எழுப்பினாள்.

தொடரும்.....

2 comments: