31.01.2016
ஞாயிறு அன்று நன்பகல் நகரப் பேருந்துக்காக நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள ஒரு கிராமப்
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அருகாமை நகரிலிருந்து 12.45 மணிக்கு வரவேண்டிய
நகரப் பேருந்து உரிய நேரத்தில் வரவில்லை. நான் செல்லுகின்ற அதே ஊருக்கு வரவேண்டிய நண்பர்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சென்று
விட்டீர்களா? என்றார்.
நான்
எந்தப் பேருந்துக்காக காத்திருந்தேனோ அந்தப் பேருந்து - நிலையத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக
வந்ததாகவும் தற்போது அவர் அந்தப் பேருந்தில் உட்கார்ந்திருப்பதாகவும் பேருந்து சற்று
நேரத்தில் புறப்பட்டுவிடும் என்றும் கூறினார்.
ஒரு
பதினைந்து நிமிடத்தில் பேருந்து வந்தது. பேருந்தில் ஏறி எட்டு ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு
பெற்றுக்கொண்டு பயணித்தேன். செல்ல வேண்டிய இடம் 14 கி.மீட்டர் தூரம்தான் என்றாலும்
அரைமணி நெரம் ஆகிவிட்டது. தமிழகத்தின் தொலைதூர கிராமங்களுக்கு – அதாவது குக்கிராமங்களுக்கு
– தமிழக போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணிப்பவர்களுக்குத் தெரியும் ஏன் இவ்வளவு நேரம்
ஆகிறது என்று!
சமீபத்திய
மழை தமிழகத்தை புரட்டிப் போட்டிருந்தாலும் நான் பயணித்த சாலையையொட்டி இருந்த பகுதிகளில்
நெற்பயிர்கள் அரிதாக இருந்ததைக் கண்டு இப்பகுதியில் இயல்பைவிட குறைவான மழைதான் பெய்துள்ளது
என்பதை புரிந்து கொண்டேன். ஆனாலும் மாந்தோப்புகள் பூக்கத் தொடங்கியிருந்தன. தென்னைகள் புத்துயிர் பெற்றிருந்தன.
இவைதான் இப்பகுதியில் முக்கிய விவசாயம் என்பது புரிந்தது. முல்லைக்குத் தேர் கொடுத்த
மண் என்பதால் இங்கு மல்லிக்குக் குறைச்சல் இல்லை. சில இடங்களில் மங்கையரை மகிழ்வித்த
மல்லிகைக் கட்டைகள் பூவிழந்து அடுப்படிக்குத் தயாராகிக் கொண்டிருந்தன.
பொதுவாக
கிராமச் சாலைகளின் இருமருங்கிலும் கிராமத்திற்குள் நுழையும் இடங்களில் நரகல் அப்பியிருக்கும்.
ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லை. மாறாக மிளகாய்ச் செடி நடுவதற்கு செப்பனிடப்பட்ட
புழுதிக் கொல்லையைப் போல சுத்தமாய் காட்சியளித்தன சாலை ஓரங்கள்.
நாங்கள்
இறங்க வேண்டிய கிராமம் வந்தது. பேருந்தில் இருந்து இறங்கியபோது ஒரு சிலரை நிச்சயம் சந்திப்போம்
என கருதி வந்தத் தலைகளைக் கண்டதில் அகமகிழ்ச்சி. நாங்கள் செல்ல வேண்டிய இடம் இன்னும்
ஒரு கி.மீ தூரம் என்பதால் குறுக்குச் சாலையில் பாதங்களில் அம்மண்ணின் பொடி படிய நடந்தோம்.
மண்சாலை
முடிந்து மீண்டும் தார்ச்சாலை. அதில் ஒரு அரை கி.மீ தூரம் நடந்தோம். அழுக்குச் சட்டைக்கு
பழகிப்போன காளை ஒன்று என்முடன் வந்த உஜாலாவாய் வந்தவரை முட்ட முயன்ற போது காளைக்குச்
சொந்தக்காரர் அதன் தாம்புக் கயிரை கெட்டியாய் இழுத்துப் பிடித்ததால் அவர் தப்பித்தார்.
இன்னும்
குளிர் காலம் முடியவில்லை என்றாலும் உச்சி வெயில் உரைக்கத் தொடங்கியது. நாங்கள் செல்லும்
இடம் குறித்த ஏக்கம் எம்மை ஆக்கிரமித்திருந்ததால் உச்சி வெயில்கூட உரைந்து போனது. கதிரவனின்
உரைபனி எம் நெஞ்சை ஈரமாக்கியதால் களைப்பும் அலுப்பும் எம்மை அண்டவில்லை.
கண்
எட்டும் தூரத்தில் ஒரு பேருந்தும் ஒரு சிற்றுந்தும் தொலைதூரம் பயணித்த களைப்பில் சாலையின்
ஓரம் ஓய்வை நாடியிருந்தன. மாலையில் ஒளிக்கதிர்களை வீசுவதற்காக குழல்விளக்குகள் சாலைஓரம்
நின்று கொண்டு கதிரவனின் ஒளிகீற்றுகளை உள்வாங்கிக் கொண்டிருந்தன.
கதிரவனின்
ஒளிக்கற்றைகள் கண்களை கூசச் செய்தாலும் வண்ணத் தோரணங்கள் சாலையின் ஓரமாய் ஒதுங்கி நின்று
லேசான காற்றில் அசைந்தாடி கூசும் கண்களுக்கு நாங்கள் செல்ல வேண்டிய திசையைக் காட்டின.
தார்ச்சாலையிலிருந்து
வலதுபக்கமாக வண்ணத் தோரணங்கள் காட்டிய வழியில் மெல்ல நடந்த போது அங்கே வண்ணமயமாய் அமைக்கப்பட்டிருந்த
சாமியானா நாங்கள் வந்து சேர வேண்டிய இடத்தை உறுதி செய்தது.
மேடையை
ஒட்டி அமைந்திருந்த சாமியானா பந்தலின் நிழலில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கடையை சிலர் மொய்த்துக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தனர். புழுதியைப் புரட்டிப் போடும் இடத்தில் புத்தகங்களைப் புரட்டியது ஓர் அரிய நிகழ்வுதானே!
என்னதான்
உள்ளம் மகிழ்ந்திருந்தாலும் உணவு நேரம் என்றால் உடல் வாடித்தானே போகிறது. மணி பிற்பகல்
இரண்டை நெருங்கிவிட்டதால் நேராகப் பந்திக்குச் சென்றோம். மற்றொரு சாமியானா பந்தலுக்கீழே
வாடகைக்கு எடுத்துவரப்பட்ட நாற்காலி – மடிப்பு மேசை என எளிய திறந்தவெளி டைனிங் எம்மை
ஈர்த்தது. பந்தியில் இலை விரித்தோம். கொஞ்சம் கேசரி, ஒரு போண்டா, தேவையான அளவு பிரிஞ்சி
சோறு, அதற்கு பொருத்தமாக வெங்காய பச்சடியும் சாம்பாரும் என பகல் விருந்து எளிமையாய்,
அதே நேரத்தில் திருப்தியாய் முடிந்தது. ஒவ்வோரு இலையிலும் ஒரு பருக்கைகூட வீணாகவில்லை.
பசிக்குதான் உணவே தவிர பகட்டுக்கு அல்ல என்பதை உணரவைத்த விருந்து.
தொடரும்….