Saturday, April 12, 2014

தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!

1947 க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகள் தனியாகவும் சில ஆண்டுகள் மாநில கட்சிகளோடு கூட்டணி அமைத்தும், பாரதிய ஜனதா கட்சி பிற உதிரிக் கட்சிகளோடு கூட்டணி அமைத்தும், பல வண்ணக் கூட்டணி அமைத்து ஜனதாக் கட்சியும் இந்தியாவை ஆண்டுள்ளன.  இடது சாரிகள் நேரடியாக நடுவண் ஆட்சியல் பங்கு கொள்ளவில்லை என்றாலும் சில சமயம் மறைமுகமாக காங்கிரஸ் ஆட்சிக்கும் மற்றும் நேரடியாக ஜனதா கட்சி ஆட்சிக்கும் ஆதரவளித்துள்ளனர்.
இவை தவிர காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் அவர்களின் செல்வாக்குக்கு ஏற்ப மாநிலங்களில் மாறி மாறி ஆட்சி நடத்தி உள்ளன. புதிதாகத் தோன்றியுள்ள ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் சில காலமே ஆட்சி நடத்தினாலும் தற்போது அக்கட்சியில் சேர்பவர்கள் ஒன்று ஏற்கனவே பிற கட்சிகளில் பதவி வகித்தவர்களாகவோ அல்லது அதிகாரிகளாக ஆட்சி நிர்வாகத்தில் அங்கம் வகித்தவர்களாகவோதான் உள்ளனர். ஆட்சி சுகத்தை ருசிக்காத தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
சுருக்கமாகச் சொன்னால் 16 வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியாவை ஆண்டவர்கள்தான். இவர்கள் மாறி மாறி ஆட்சி நடத்தினாலும் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார்கள் மக்கள். குடிதண்ணீர் கூட கொடுக்க வக்கற்றவர்கள்தான் தாங்கள் வெற்றி பெற்றால் மக்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப் போவதாக கதை அளக்கின்றனர்.
திருப்பூருக்குச் சென்றால் அத்திக்கடவு - அவினாசி என்கிறார்கள். வேலூருக்குச் சென்றால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த்திட்டம் என்கிறார்கள். கரூருக்குச் சென்றால் வெற்றிலை வாரியம் என்கிறார்கள். தெற்கே சென்றால் தென்னை வாரியம் என்கிறார்கள். அங்கே பாலம் - இங்கே பாலம் என்றும், இதோ தொழிற்சாலை அதோ தொழிற்சாலை என்றும் இப்படி ஊர் ஊருக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக வாரி வழங்குகிறார்கள். இந்தக் கூத்தை கடந்த 66 ஆண்டுகளாக நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைவிட ஜனநாயகக் கடமையாற்ற வாக்காளர் என்ற முறையில் நாமும் இந்தக் கூத்தின் கதாபாத்திரமாகவும் ஆகிவிடுகிறோம்.
கல்வி, வேலை வாய்ப்பு, குடி தண்ணீர், சாலை வசதி, மின்சாரம், மருத்துவம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் நாம் தவித்து வருகிறோம். அடிப்படைத் தேவைகளான உணவு - உடை - வசிப்பிடம் கூட இன்றி வாழும் நிலைதானே இன்னமும் இந்தியாவில் நீடிக்கிறது. கிராமங்களிலிருந்து சென்னை திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகாவுக்கும், வட மாநிலங்களிலிருந்து தமிழகம் - கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும், பீகாரிலிருந்து மராட்டியத்திற்கும் என மக்கள் பஞ்சம் பிழைக்க செல்வதைப் போல அலை அலையாய் இந்தியாவெங்கும் படை எடுக்கிறார்களே! ஏன் இந்த நிலை?

சொந்த மண்ணில் மக்கள் உயிர் வாழவே வழியில்லாத போது இந்தியாவை வல்லரசாக்குவோம் எனவும், 8% வளர்ச்சியை எட்டியே தீருவோம் எனவும் உதார்விடுகின்றன வாக்குச் சீட்டு அரசியல் கட்சிகள். நாம் எதைக் கேட்கிறோமோ அதைச் செய்ய வக்கில்லை; ஆனால் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுகளாக வாரி இறைக்க மட்டும் இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள் வெற்றி பெற்றுச் சென்ற பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் ஏன் நிறைவேற்றவில்லை? என்று இவர்களை கேள்வி கேட்க முடியுமா? இல்லை நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள் என்று இவர்கள் மீது குற்ற வழக்காவது தொடர முடியுமா?
தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயகக் கடமை என்பதை மட்டும் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வாக்களிக்காமல் இருந்து விட்டால் நாம் நமது கடமையிலிருந்து தவறி விட்டதாக கருதும் அளவுக்கு கடமை உணர்ச்சியோடு இருக்கிறோம். ஆனால் நமது தேவைகளை பூர்த்தி செய்வதுதான் தங்களது கடமை என வெற்றி பெற்றுச் செல்பவர்கள் எவரும் கருதுவதில்லையே, இது அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையிலிருந்து தவறியதாகாதா என நாம் கேட்பதில்லையே ஏன்?
சரி! நாம் என்னதான் செய்வது? தேர்தலில் வாக்களிப்பதா? கூடாதா? தேர்தலில் வாக்களிப்பதோடு நமது கடமை முடிந்ததா? தேர்தலுக்குப் பிறகு நமக்கு கடமைகள் ஏதும் கிடையாதா?
எதைச் சொன்னால் வெற்றிபெற முடியுமே அதை மட்டுமே வேட்பாளர்கள் வாக்குறுதிகளாத் தருகிறார்கள். ஆனால் நமது தேவைகளோ நமது வாழ் நிலைமைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுபவை. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுச் செல்பவர்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவதா? அல்லது நமக்குத் தேவையானதை நிறைவேற்றக் கோருவதா? இதில் நாம் எதைக் கோருவது?

1 comment: