Sunday, December 30, 2018

பெரியாரைக் கொண்டாடு! இல்லையேல் திண்டாடுவாய்!


இரு பெரும் அபாயங்கள் நம்மைச் சூழ்ந்துள்ளது. ஒன்று காவி பயங்கரவாதம். மற்றொன்று கார்பரேட் பயங்கரவாதம். அப்பாவி அக்லக் படுகொலை, ரோகித் வெமுலா தற்கொலை, நாடெங்கிலும் தொடரும் ஆணவப் படுகொலைகள், பகுத்தறிவாளர்கள் கௌரி லங்கேஷ்-நரேந்திர தபோல்கர்-கோவிந்த் பன்சாரே-எம்.எம்.கல்புர்கி ஆகியோர் படுகொலைகள் என காவி பயங்கரவாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. குறிப்பாக காவிக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இப்படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. ஜனநாயகம் மற்றும் சமத்துவத்துவத்திற்கு எதிரானது காவி பயங்கரவாதம்.

யூனியன் கார்பைடு என்கிற பன்னாட்டுக் கம்பெனி போபாலில் நடத்திய கோரப்படுகொலை ஆயிரக்கணக்கோரின் உயிர்களைக் காவு கொண்டதை நாம் மறந்து விட முடியுமா? பன்னாட்டு மற்றும் கார்பரேட் கம்பெனிகள் கொள்ளை அடிப்பதற்காகவே ஆட்சியாளர்களால் இந்தியாவின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இக்கம்பெனிகளால் ஏற்படும் சூற்றுச்சூழல் கேடுகளால் மக்கள் சொல்லொனாத் துயரங்களுக்கு உள்ளாகின்றனர். எதிர்த்துக் கேள்வி கேட்டால் குருவிகளைச் சுடுவதைப்போல அப்பாவி மக்கள் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்படுகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய அப்பாவிகள் 14 பேரை கொன்றொழித்தனர். மொத்தத்தில் மக்களுக்கு எதிரானது கார்பரேட் பயங்கரவாதம்.

நாம் நிம்மதியாக வாழ வேண்டுமானால் காவிகளையும் கார்பரேட்டுகளையும் துரத்தியாக வேண்டும். அதற்கு நாம் ஓரணியில் சேருவது இன்றைய காலத்தின் கட்டாயம். ஓரணியில் சேர வேண்டுமானால் நம்மிடையே கருத்தொற்றுமை தேவை. கருத்துப் பரிமாற்றமே கருத்தொற்றுமைக்கு வழி வகுக்கும். கருத்துப் பரிமாற்றத்திற்குத் தேவை வாசிப்பும் விவாதமும். இதை குறிக்கோளாகக் கொண்டு இராணிப்பேட்டை 'பெல்' வளாகத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் 13-வது சந்திப்பு 27.12.2018 அன்று தந்தை பெரியாரின் 45-வது நினைவு நாள் நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் பெ.இந்திரன் அறிமுக உரை நிகழ்த்தினார். தோழர் பெ.ஜெயக்கொடி தலைமை ஏற்று மிகச் சிறப்பாக இந்நிகழ்வை ஒழுங்கு படுத்தினார். தோழர்.சுப.நீலகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தோழர் தி.க.சின்னதுரை அவர்கள் பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்தி உரையாற்றினார்.

தோழர் கு.விஜயகுமார் அவர்கள் பெரியார் குறித்து வீரவணக்க உரை நிகழ்த்தினார். சமூக ஏற்றத் தாழ்வுகள், பெண் விடுதலை, இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் மீதான பெரியாரின் பங்களிப்பை அவர் தனது உரையில் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரியாரை நிறுத்துவது மிகமிக ஆபத்தானது; அது காவிபயங்கரவாதிகளுக்கே வலுசேர்க்கும் என்பதை தக்க ஆதாரங்களோடு அவர் விளக்கினார். பெரியாரைக் கொண்டாடவில்லை என்றால் நாம் திண்டாடுவோம் என்பதை உணர்த்துவதாக அமைந்தது அவரது உரை.

“தமிழகத்தின் அழகிய முகம், அந்த முகம் யார்? அவர் பெரியார். தமிழகத்துக்கு முகவரி தந்த பெரியார்.” என்கிற மிகச் சிறப்பான பாடல் ஒன்றை தோழர் தங்கவேல் பாடினார். இப்பாடல் அனைவரின் வரவேற்பைப் பெற்றது.

இறுதியில் தோழர் ரெ.மேகநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தோழர்.க.பாலசுப்பிரமணியன்.

‘பெல்’ அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தொடர்ந்து முன்னெடுக்கும் இது போன்ற நிகழ்வுகள் மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தொடரட்டும் அவர்களது பணி.

வாழ்த்துகளுடன்
ஊரான்
இந்திரன்

ஜெயக்கொடி

நீலகண்டன்

சின்னதுரை

தங்கவேல்

விஜயகுமார்


மேகநாதன்
தொடர்புடைய பதிவுகள்

மராட்டியம் மறந்தாலும் மகாத்மா புலேவை மறக்காத தமிழகம்!



Sunday, December 9, 2018

பார்ப்பனியம் எனும் அழுக்கு!


"டாக்டர்,  3 மாத்திரையும் 2 ஊசியும் போட்டு 200 ருபாய் வாங்கிட்டாரு…
ரொம்ப மோசம்டா..

அது சரி, 
கனபதி ஹோமம் செஞ்சவனுக்கு எவ்வளவு கொடுத்தே..?

2500 ரூபா குடுத்தேன்..

அவன் என்ன குடுத்தான்..?

கோமியம் குடுத்தான்…"

இது BK @Periyar BK என்பவரது பதிவு. சிந்திக்கத் தூண்டும் இப்பதிவை முகநூலில் நானும் பகிர்ந்தேன். இப்பதிவிற்கு எதிராக தனது புலம்பலைக் கொட்டித் தீர்த்தார் ஒரு பார்ப்பனர். ஒருவர் நமக்கு நண்பராக இருந்தாலும் அவர் தன்னை பார்ப்பனர் எனக் கருதிக்கொள்ளும்வரை அவரை பார்ப்பனர் என விளிப்பதே சரி.   

இதோ அவரது புலம்பல்

“பார்ப்பனர்களுக்கு எதிராக உங்களுக்கு ஏன் கோபம்? அவர்கள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? பார்ப்பனர்கள் ஏற்கனவே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர் என்று சொல்லி உங்களைப் போன்றவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களை யார் கனபதி ஹோமம் செய்யச் சொன்னது? அதற்குப் பணம் கொடுக்கச் சொன்னது? எந்தப் பார்ப்பனரும் அவராக உங்கள் வீட்டிற்கு வருவதுமில்லை; எதையும் கேட்பதுமில்லை. புத்திசாலிகளான நீங்கள் பார்ப்பனர்களை பின்பற்ற வேண்டியதில்லையே! கல்வி-வேலை வாய்ப்பு-பதவி உயர்வு உள்ளிட்ட எல்லாவித அரசுப் பலன்களையும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். நூறு ஆண்டுகளுக்கு இடஒதுக்கீட்டை நீங்கள் பெற்றாலும் உங்களில் ஒருவரும் உயர்ந்தவர்களாக வளரப் போவதுமில்லை; முன்னேறப் போவதுமில்லை. உங்களது மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.”

அவர் ஆங்கிலத்தில் போட்டிருந்த பதிவின் எளிமையான மொழியாக்கம் இதுதான். 2000 ஆண்டுகளாக கல்வி கற்க உரிமை பெற்ற சமூகப் பின்னணி கொண்ட ஒருவர் ஆங்கிலத்தில் எழுதுவதும், தற்போதுதான் கல்வியைச் சுவைக்கும் ஒருவர் தமிழில் எழுதுவதும் சமூக எதார்த்தம்தானே!

 அவரின் பேற்கண்ட புலம்பலுக்கு நான் எழுதிய எனது பதில்

"பார்ப்பனர் (இதுதான் தமிழ்) (பிராமணர்-இது வடமொழி்) என தன்னை ஒருவர் ஏன் அழைத்துக் கொள்ள வேண்டும்? பார்ப்பனர் என்பது சாதியா? இல்லையே. அது வர்மாச்சே. ஒருவர் தன்னை பார்ப்பனர் என கருதிக் கொள்வாரேயானால் அவர் மனு வகுத்த சனாதன தர்மத்தை ஆதரிப்பவர். அதாவது சமூகத்தில் ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு முறையை நியாயப்படுத்துபவர் ஆவார். இதைத்தான் பார்ப்பனியம் என்கிறோம். பார்ப்பனியம் செய்த மிகப் பெருந் தீங்கே இதுதான். சமூகத்தில் நிலவும் தீண்டாமைக்கு இதுதான் அடிப்படைக் காரணம். அதனால்தான் பார்ப்பனியத்தின் மீது எங்களுக்கு கடுங்கோபம்.

கனபதி பூஜை மட்டுமல்ல இதுபோன்ற என்னற்ற சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் தங்களுடைய பிழைப்பிற்காக புகுத்தியவர்கள் பார்ப்பனர்கள். இதை மீறினால் பெருங்கேடு என அப்பாவி மக்களை அன்றாடம் அச்சுறுத்துவது பார்ப்பனியம். இந்தக் கேடுகெட்ட சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மக்கள் விட்டொழிக்க வேண்டும் என புத்தர் காலம் தொடங்கி இன்றுவரை என்னற்ற தலைவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய போராட்டத்தின் ஒரு வடிவம்தான் மேற்கண்ட பதிவு.

இரண்டாயிரம் ஆண்டுகளாக எம்மக்களுக்கு கல்வியை மறுத்தது பார்ப்பனியம். இன்றுதான், எம்மக்கள் (இங்கே எம்மக்கள் என நான் குறிப்பிடுவது பார்ப்பனரல்லாத மக்களைத்தான்) படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னமும்கூட பலர் தற்குறிகளாகத்தான் இருந்து வருகிறார்கள். 2000 ஆண்டுகளை ஒப்பிடும் போது முன்னேறுவதற்கு 100 ஆண்டுகள் என்பது மிகச் சொற்பமே!

உயர்சாதி அடையாளமாக இருக்கும் பூணூலை அறுத்தெறிந்து விட்டு அடித்தட்டு மக்களோடு கரம் கோர்க்க வாருங்கள். அது ஒன்றுதான் உங்கள் மீது படிந்துள்ள பார்ப்னிய அழுக்கைப் போக்க சிறந்த வழி."  

Saturday, December 8, 2018

அம்பேத்கருக்கு நினைவஞ்சலி!


ஒரு ஏழை மகன் ஒரு பணக்காரப் பெண்ணை காதலித்தால் “சோத்துக்கே வழியில்லாதவனுக்கு பணக்காரப் பொண்ணு கேக்குதா?” என ஏளனம் செய்து காதலை முறிப்பது பணக்காரனின் வர்க்க சிந்தனை. இங்கு கொலை வெறி குறைவு. இது உலகம் முழுவதற்கும் பொருந்தும்.

ஆனால் சாதி மாறிக் காதலித்தால், அதிலும் பையன் படிநிலையில் கீழான சாதியாக இருந்தால், அதிலும் குறிப்பாக பையன் தீண்டத்தகாத சாதியாக இருந்தால் கொலையை மட்டுமே கையிலெடுப்பது சனாதன பார்ப்பன இந்து ஆதிக்கச் சாதி மனப்பான்மை.

காதலில் மட்டுமல்ல கோவில் வழிபாட்டு உரிமை, பொதுக்குழாய்-பொதுக்கிணறு-பொதுக்குளம் ஆகியவற்றில் நீர் உரிமை, உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பிரச்சனைகளிலும் தீண்டத்தகாதவர்கள் மீது இந்தக் கொலைவெறித் தாக்குதல் ஈவிரக்கமின்றி தொடுக்கப் படுகிறது. ஆதிகாலச் சமூக அமைப்பு தொடங்கி இன்றைய நவீன சமூகும் வரை பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் தீண்டாமை மட்டும் விட்டகலாது ஒரு பெருநோயாய் இந்தியச் சமூகத்தை பீடித்திருக்கிறது. இப்பெருநோயை ஒழித்துக் கட்ட புத்தர் தொடங்கி மகாத்மா புலே – அம்பேத்கர் - பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் போராடிய போதும் தீண்டாமை இன்னும் அகலவில்லை.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும். சாதி ஒழிய வேண்டுமானால் இந்து மதம் ஒழிய வேண்டும். இந்து மதம் ஒழிய வேண்டுமெனில் இந்திய சமூக அமைப்பையே மாற்றியாக வேண்டும். இத்தகைய சமூக மாற்றத்திற்காகப் போராடும் எவரும் மகாத்மா புலே – அம்பேத்கர் – பெரியார் போன்றவர்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட முடியாது.

அந்த வகையில் தீண்டாமைக்கு எதிராகவும், பார்ப்பன இந்து மதத்திற்கு எதிராகவும் ஓய்வின்றிப் போராடிய அம்பேத்கர் அவர்களை நினைவுகூறும் வகையில் பெல் இராணிப்பேட்டையில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் 07.12.2018 அன்று மாலை அம்பேத்கர் அவர்களுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தோழர் துரை.பாலகிருட்டிணன் தலைமையேற்று கூட்டத்தை நெறிப்படுத்தினார். தோழர் செ.விநோதினி வரவேற்புரை நிகழ்த்த, தோழர்கள் வெ.கோவிந்தசாமி, தோழர்.விமல்குமார், பெல் பிற்பட்டோர் நலச்சங்கத் தலைவர் கருப்பசாமி, பெல் பட்டியலின/பழங்குடியன மக்கள் தொடர்பு அதிகாரி பெ.சிவப்பிரகாசம் (AGM) ஆகியோர் அம்பேத்கர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பெல் அதிகாரி ஜீதேந்திர கன்வீர் (AGM) அவர்கள் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து கருத்துரை வழங்கினார். தோழர் கோ.இளங்கோவன் நன்றி உரை நிகழ்த்தினார். சாதி மதங்களைக் கடந்து பல்வேறு பிரிவு மக்களும் திரளாகக் கலந்து கொண்டது இக்கூட்டத்தின் சிறப்பு.

06.12.2018 அன்று காலை பெல் வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தவிர பெல் நிர்வாகத் தரப்பிலும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவஞ்சலிக் கூட்டக் காட்சிகள்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்

துரை பாலகிருட்டிணன்

வினோதினி

கோவிந்தசாமி


மாலை அணிவித்தல்
ஜிதேந்திர கன்வீர்

கருப்பசாமி

சிவப்பிரகாசம்

விமல்குமார்
பார்வையாளர்கள்
பார்வையாளர்கள்

இளங்கோவண்

பதாகை
 தொடர்புடைய பதிவுகள்:

மராட்டியம் மறந்தாலும் மகாத்மா புலேவை மறக்காத தமிழகம்!பெரியாருக்கு மரணம் இல்லை!





Saturday, December 1, 2018

மராட்டியம் மறந்தாலும் மகாத்மா புலேவை மறக்காத தமிழகம்!


ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (1827-1890)

ஒடுக்கப்படும் மக்களால் மகாத்மா புலே என அன்புடன் அழைக்கப்படும் ஜோதிராவ் புலே அவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்த மாபெரும் சமூக சீர்திருத்தப் பெரியார் ஆவார்.

இவர் சாதிய அமைப்பு ஒழியப் போராடினார்.

தாழ்த்தப்பட்டோரின் விடுதலையைத் துணிவுடன் ஆதரித்தார். ஏழை விவசாயிகளின் வாழ்க்கை ஏற்றமுற பாடுபட்டார். அவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அவருடைய வாழ்க்கை, பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக ஓயாமல் அவர் நடத்திய தீவிரப் போராட்டங்கள் நிரம்பிய வீரகாவியமாகும். பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி அளிப்பதே முக்கியமான முதல் வேலை என்றார் புலே. அதை செயல்படுத்த தன் துணைவிக்கு கல்வி அளிப்பதிலிருந்து தொடங்கினார். அவரும் அவரது துணைவியும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி அளித்தனர். பார்ப்பனியர் அவர்களுக்குப் பல வகைகளில் இன்னல்களை ஏற்படுத்தியும் தளராமல் தம் பணியைத் தொடர்ந்தார்.

விதவைகள் மறுமணத்தை புலே ஆதரித்தார். குழந்தை மணத்தை எதிர்த்தார். அனாதைகளுக்கு இல்லம் திறந்தார். சாதி மதம் கடந்த சத்திய சோதக சமாஜம் (உண்மை நாடுவோர் சங்கம்) கண்டார்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பத்தொன்பதாம் நுற்றாண்டில் பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் புலே. இத்தகைய ஒரு மாபெரும் போராளி இறந்து 128 ஆண்டுகள் கிவிட்டது. ஆனாலும் அவர் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறார். தீண்டாமைக்கு எதிராக புலேயும் அவரது மனைவி சாவித்திரியும் நடத்திய போராட்டங்களை அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பனை வழிபடலாம் என்கிற தனது தீர்ப்பில் நீதிபதி சந்திசூட் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும், தீண்டாமைக்கும் காரணமான பார்ப்பன இந்து மதம் இருக்கும் வரை புலேவுக்கும் சாவித்திரிக்கும் மரணமில்லை. அவர்களை நினைவு கூர்வது நமது கடமையுமாகும். இந்தக் கடமையை மிகச் சிறப்பாக செய்துள்ளது பெல் இராணிப்பேட்டையில் செயல்படும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்.

28.11.2018 அன்று மாலை அம்பேத்கர் பெரியார் - வாசகர் வட்டம். சார்பில் புலே அவர்களின் 128 வது நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. தோழர் சிவ.சிலம்பரசன் தலைமை ஏற்று கூட்டத்தை சிறப்பாக ஒருங்கமைத்தார். தோழர் அரசு வரவேற்புரை ஆற்றினார். முன்னிலை வகித்த தோழர் வெ.பூபாலன் அவர்கள் புலே அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். 

சபரிமலைத் தீர்ப்பில் நீதிபதி சந்திசூட் அவர்கள் தீண்டாமைக்கு எதிராக போரடிய புலே அவர்களையும் சாவித்திரி அவர்களையும் மேற்கோள் காட்டியிருப்பதை தோழர் பொன்.சேகர் பதிவு செய்தார். பெல் இராணிப்பேட்டை ஆலையில் செயல்படும் பாப்சு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பாண்டியன் அவர்கள் விழாவில் பங்கேற்று புலே அவர்களின் துணைவியார் சாவித்திரி அவர்களின் மகத்தான செயல்பாடுகளை நினைவு கூர்ந்தார். தோழர் வே.இந்திரன் அவர்கள் புலே அவர்களின் போராட்ட வரலாற்றை தனது சிறப்புரையில் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

புலே அவர்களின் படத்திற்கு தோழர் செங்கதிர் அவர்கள் மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார். இறுதியில் தோழர் கிருபா விக்னேஷ் அவர்கள் நன்றி கூறினார்.

தந்தைப் பெரியார் அவர்களை தமிழகத்தில் நினைவு கூறுவதைப் போல, மகாத்மா புலே அவர்களை மராட்டியத்தில் யாரும் நினைவு கூறுவதில்லையே என்கிற தனது ஆதங்கத்தை ஆந்திராவைச் சேர்ந்த எழத்தாளர் காஞ்சா அய்லய்யா அவர்கள் ஒரு முறை ஆதங்கப்பட்டதாக தனது தலைமை உரையில் சிவ.சிலம்பரசன் சுட்டிக்காட்டினார். மராட்டியர்கள் மறந்தாலும் மகாத்மா புலே அவர்களை தமிழகம் மறக்காது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்தக் கூட்டம் அமைந்தது என்றால் அது மிகை அல்ல.



அரசு

சிலம்பரசன்

செங்கதிர்

மாலை அணிவித்தல்

பூபாலன்





பாண்யடின்

இந்திரன்

கிருபா விக்னேஷ்

பார்வைளர்கள்
தொடர்புடைய பதிவு: