Saturday, December 1, 2018

மராட்டியம் மறந்தாலும் மகாத்மா புலேவை மறக்காத தமிழகம்!


ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (1827-1890)

ஒடுக்கப்படும் மக்களால் மகாத்மா புலே என அன்புடன் அழைக்கப்படும் ஜோதிராவ் புலே அவர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்த மாபெரும் சமூக சீர்திருத்தப் பெரியார் ஆவார்.

இவர் சாதிய அமைப்பு ஒழியப் போராடினார்.

தாழ்த்தப்பட்டோரின் விடுதலையைத் துணிவுடன் ஆதரித்தார். ஏழை விவசாயிகளின் வாழ்க்கை ஏற்றமுற பாடுபட்டார். அவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அவருடைய வாழ்க்கை, பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக ஓயாமல் அவர் நடத்திய தீவிரப் போராட்டங்கள் நிரம்பிய வீரகாவியமாகும். பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி அளிப்பதே முக்கியமான முதல் வேலை என்றார் புலே. அதை செயல்படுத்த தன் துணைவிக்கு கல்வி அளிப்பதிலிருந்து தொடங்கினார். அவரும் அவரது துணைவியும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி அளித்தனர். பார்ப்பனியர் அவர்களுக்குப் பல வகைகளில் இன்னல்களை ஏற்படுத்தியும் தளராமல் தம் பணியைத் தொடர்ந்தார்.

விதவைகள் மறுமணத்தை புலே ஆதரித்தார். குழந்தை மணத்தை எதிர்த்தார். அனாதைகளுக்கு இல்லம் திறந்தார். சாதி மதம் கடந்த சத்திய சோதக சமாஜம் (உண்மை நாடுவோர் சங்கம்) கண்டார்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பத்தொன்பதாம் நுற்றாண்டில் பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் புலே. இத்தகைய ஒரு மாபெரும் போராளி இறந்து 128 ஆண்டுகள் கிவிட்டது. ஆனாலும் அவர் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறார். தீண்டாமைக்கு எதிராக புலேயும் அவரது மனைவி சாவித்திரியும் நடத்திய போராட்டங்களை அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பனை வழிபடலாம் என்கிற தனது தீர்ப்பில் நீதிபதி சந்திசூட் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும், தீண்டாமைக்கும் காரணமான பார்ப்பன இந்து மதம் இருக்கும் வரை புலேவுக்கும் சாவித்திரிக்கும் மரணமில்லை. அவர்களை நினைவு கூர்வது நமது கடமையுமாகும். இந்தக் கடமையை மிகச் சிறப்பாக செய்துள்ளது பெல் இராணிப்பேட்டையில் செயல்படும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்.

28.11.2018 அன்று மாலை அம்பேத்கர் பெரியார் - வாசகர் வட்டம். சார்பில் புலே அவர்களின் 128 வது நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. தோழர் சிவ.சிலம்பரசன் தலைமை ஏற்று கூட்டத்தை சிறப்பாக ஒருங்கமைத்தார். தோழர் அரசு வரவேற்புரை ஆற்றினார். முன்னிலை வகித்த தோழர் வெ.பூபாலன் அவர்கள் புலே அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். 

சபரிமலைத் தீர்ப்பில் நீதிபதி சந்திசூட் அவர்கள் தீண்டாமைக்கு எதிராக போரடிய புலே அவர்களையும் சாவித்திரி அவர்களையும் மேற்கோள் காட்டியிருப்பதை தோழர் பொன்.சேகர் பதிவு செய்தார். பெல் இராணிப்பேட்டை ஆலையில் செயல்படும் பாப்சு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பாண்டியன் அவர்கள் விழாவில் பங்கேற்று புலே அவர்களின் துணைவியார் சாவித்திரி அவர்களின் மகத்தான செயல்பாடுகளை நினைவு கூர்ந்தார். தோழர் வே.இந்திரன் அவர்கள் புலே அவர்களின் போராட்ட வரலாற்றை தனது சிறப்புரையில் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

புலே அவர்களின் படத்திற்கு தோழர் செங்கதிர் அவர்கள் மலர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார். இறுதியில் தோழர் கிருபா விக்னேஷ் அவர்கள் நன்றி கூறினார்.

தந்தைப் பெரியார் அவர்களை தமிழகத்தில் நினைவு கூறுவதைப் போல, மகாத்மா புலே அவர்களை மராட்டியத்தில் யாரும் நினைவு கூறுவதில்லையே என்கிற தனது ஆதங்கத்தை ஆந்திராவைச் சேர்ந்த எழத்தாளர் காஞ்சா அய்லய்யா அவர்கள் ஒரு முறை ஆதங்கப்பட்டதாக தனது தலைமை உரையில் சிவ.சிலம்பரசன் சுட்டிக்காட்டினார். மராட்டியர்கள் மறந்தாலும் மகாத்மா புலே அவர்களை தமிழகம் மறக்காது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்தக் கூட்டம் அமைந்தது என்றால் அது மிகை அல்ல.



அரசு

சிலம்பரசன்

செங்கதிர்

மாலை அணிவித்தல்

பூபாலன்





பாண்யடின்

இந்திரன்

கிருபா விக்னேஷ்

பார்வைளர்கள்
தொடர்புடைய பதிவு:

4 comments:

  1. சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும், தீண்டாமைக்கும் காரணமான பார்ப்பன இந்து மதம் இருக்கும் வரை புலேவுக்கும் சாவித்திரிக்கும் மரணமில்லை. அவர்களை நினைவு கூர்வது நமது கடமை

    ReplyDelete
  2. அம்பேத்கர்,பெரியார் வாசகர் வட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் ஊரானின் பணியை உளமார பாராட்டி மகிழ்கின்றோம்.

    ReplyDelete