Saturday, March 20, 2021

மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4

யாரெல்லாம் தொழிலாளி?

யார் யார் எல்லாம் தொழிலாளி (worker), யார் யார் எல்லாம் ஊழியர்கள் (employee) என்கிற வரையறையிலேயே குழப்பங்கள் உள்ளன. ஊழியர்கள் மற்றும் தொழிலாளி வரையறைக்குள் பயிற்சியாளர்கள் வரமாட்டார்கள் என்கின்றன சில சட்டத் தொகுப்புகள். யார் தொழிலாளி என்பது பற்றி சில சட்டத் தொகுப்புகள் வாய் திறக்கவில்லை. ஆனால் மாதிரி நிலை ஆணைகளில் பயிற்சியாளர்களும் தொழிலாளர்கள்தான் என்கின்றனர்.


அப்ரண்டிஸ் பயிற்சியாளர்கள் மற்றும் ‘நீம்’ (NEEM) பயிற்சியாளர்கள்தான் எல்லா ஆலைகளிலும் பயிற்சியாளர் என்ற போர்வையில் பெருமளவில் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இனி பயிற்சியாளர்களுக்கு எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் கை கழுவுவதற்கேற்பவே சட்டத்தில் மேற்கண்டவாறு குழப்பமாக வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

‘நீம்’ பயிற்சியாளர்கள் (NEEM-National Employability Enhancem,ent Mission) என்ற பெயரில், திறன் வளர்ப்பு என்ற போர்வையில் 16 வயது முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களின் உழைப்பைச் சுரண்ட அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் சட்டத்தில் ஏற்கனவே திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏஜெண்டுகள் மூலம் அமர்த்தப்படும் இவர்களுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் கிடையாது. இவர்கள் பற்றி புதிய சட்டத் தொகுப்பில் ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படவில்லை.


குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வழிகாட்டும் மனு


அடிமட்ட ஊதியத்தை (floor wages) விட குறைந்த பட்ச ஊதியம் (minimum wage) குறைவாக இருக்கக்கூடாது என்று கூறி அடிமட்ட ஊதியம் ஒன்றை அரசு தீர்மானிக்கும் என்கிறது ஊதியத் தொகுப்புச் சட்டம் (பிரிவு-9). அதன்படி தற்போது மத்திய அரசு தீர்மானித்திருக்கும் அடிமட்ட ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.178. இதை 26 ஆல் பெருக்கி மாதம் ரூ.4628 என நிர்ணயித்திருக்கிறது. மாதத்தில் 30/31 நாட்கள் வருகிறதே! மீதி 4/5 நாட்களுக்குப் பட்டினி கிடப்பதா என்று கேட்காதீர்கள். கேட்டால் இதுவே அதிகம் என்பார் மோடி.

 

குறைந்த பட்ச ஊதியத்தை எப்படி நிர்ணயிப்பது என்பது பற்றி ஊதியத் தொகுப்புச் சட்டத்தின் விதிகளில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது (பிரிவு-3). கணவன், மனைவி, இரு குழந்தைகளளை உள்ளடக்கியதுதான் ஒரு குடும்பம் என்கிறது விதி. உழைத்துச் சம்பாதிக்க முடியாத வயதான தாய்-தந்தை, மாமனார்-மாமியார்  இருந்தால் அவர்களை யார் பராமரிப்பது? அவர்களை கொன்றுவிடச் சொல்கிறாரோ மோடி!


குழந்தைகள் இருவரையும் ஒரு நபராகக் கணக்கில் கொண்டு குடும்பத்தில் மூன்று பெரியவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டுமாம். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் அரை வயிறு போதும் என்கிறார்களோ?


ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2700 கலோரி உணவும், குடும்பத்திற்கு ஆண்டுக்கு 66 மீட்டர் துணியும் தேவையாம். உணவுக்கும் துணிக்கும் ஆகும் செலவில் 10 சதவீதம் வீட்டு வாடகைக்கு ஒதுக்க வேண்டுமாம். 2700 கலோரி அதிகம் என்று சொல்லி அதை 2400 ஆகக் குறைக்க வேண்டும் என்றுவேறு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தற்போதைய தகவல்


கேஸ், மின்சாரத்திற்கு குறைந்த பட்ச ஊதியத்தில் 20 சதவீதம் ஒதுக்க வேண்டுமாம். குழந்தைகள் கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் கல்யாணம்-கருமாதி உள்ளிட்ட எதிர்பாராத செலவுகளுக்குக் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 சதவீதம் ஒதுக்க வேண்டுமாம்.


தற்போதைய நிலவரப்படி குறைந்த பட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.375 என்று கணக்கிட்டால், ஒரு மாதத்திற்கு ரூ.9750 கிடைக்கும். இங்கேயும் 26 ஆல்தான் பெருக்க வேண்டுமாம். 4/5 நாட்கள் வயிறைக் காயப்போடு என்கிறார்கள்.

 

குறைந்த பட்ச ஊதியம் ரூ10000 என்று வைத்துக் கொண்டால் கீழ்கண்டவாறுதான் நீங்கள் செலவு செய்ய வேண்டும்.


உணவு மற்றும் துணி @45%      = ரூ.4500

வீட்டு வாடகை @10%            = ரூ.1000

கேஸ், மின்சாரம் @20%           = ரூ.2000

கல்வி, மருத்துவம் இதர @25%    = ரூ.2500


இந்தத் தொகையை வைத்துக் கொண்டு வாழ முடியுமா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் உங்களை யார் வாழச் சொன்னது என்று அவர்கள் கேட்கிறார்களே!


பொறியியல் பட்டதாரிக்கே இன்று பத்தாயிரம் கிடைப்பதில்லை. ஆனால் மாதம் ரூ.67000 சம்பாதிக்கும் பார்ப்பனர் உள்ளிட்ட முற்பட்ட வகுப்பினரை ஏழை என்று வரையறுக்கிறது உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை.


”ஏவல் புரியும் வேலைக்காரர்களுக்கு தக்கபடி மன்னன் அன்றாடம் சம்பளம் ஏற்படுத்த வேண்டும்” (மனு 7-125). தினக்கூலி (daily wage) முறைக்கு மனுதான் வழிகாட்டுகிறான்.


கீழ்மட்ட வேலையாட்களுக்கு அன்றாடம் ஒரு பணமும், ஆறு மாதத்திற்கு இரண்டு துணியும், மாதத்திற்கு ஒரு துரோண நெல்லும் சம்பளமாக அரசன் தீர்மானிக்க வேண்டும் (மனு 7-126). குறைந்தபட்சக் கூலியைத் தீர்மானிப்பதற்கும் மனுவே வழிகாட்டுகிறான்.


இன்றைய ஆட்சியாளர்களும் மனுவை வழிகாட்டியாகக் கொண்டுதான் குறைந்தபட்சக் கூலியைத் தீர்மானிக்கின்றனர் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்

 

குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.


தொடர்புடையப் பதிவுகள்:


Thursday, March 18, 2021

கொல்லைப்புற வழியாக புகுத்தப்பட்ட நான்கு சட்டத் தொகுப்புகள்! தொடர்-3

தூத்துக்குடி, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் சென்னை பின்னி ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், உரிமைகளுக்கான போராட்டங்களாக மட்டுமன்றி ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டமாகவும் உருவெடுத்த 1910 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில்தான் இழப்பீடுச் சட்டம் (1923), தொழிற்சங்கச் சட்டம் (1926) கொண்டு வரப்பட்டன. நிலை ஆணைகள் சட்டம் 1946 ல் கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு தொழிற் தகராறுச் சட்டம் (1947), தொழிற்சாலைகள் சட்டம் (1948), குறைந்த பட்ச ஊதியச் சட்டம் (1948), சேம நலநிதிச் சட்டம் (1952), போனஸ் சட்டம் (1965), தனியார் செக்யூரிட்டி முறைப்படுத்துதல் சட்டம் (2005) என ஐம்பதுக்கும் மேற்பட்ட மத்தியச் சட்டங்களும், இருநூறுக்கும் மேற்பட்ட மாநிலச் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. பல்வேறுப் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூலமாகவே இத்தகையச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இவை தொழிலாளர்களின் நலன்களை ஓரளவுக்குப் பாதுகாப்பதனால்தான் இந்தச் சட்டங்கள் தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று அழைக்கப்பட்டன.


முதலாளிகள் தொழில் தொடங்கவும், தொடர்ந்து தொழில் நடத்தவும் பழையச் தொழிலாளர் சட்டங்கள் இடையூறாக இருப்பதால் தங்களுக்குச் சாதகமாகத் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என அவர்கள் தொடர்ந்து கூப்பாடு போட்டு வந்த நிலையில், முதலாளிகளுக்குச் சாதகமாகவே மோடி அரசு தற்போது தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. முதலாளிகள் தொழில் தொடங்குவதையும், தொடர்ந்து தொழில் நடத்துவதையும் இந்தச் சட்டத் திருத்தங்கள் எளிமைப்படுத்தி உள்ளன என்கின்றனர் முதலாளிகள். அதனால் இனி அதிக ஆலைகள் தொடங்கப்படும் என்றும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் கூறுகின்றனர். இது உண்மையா?


1990 களில் புதிய தாராளவாதக் கொள்கை அமுல்படுத்தப்பட்ட பிறகு சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், உள்ளிட்ட இடங்களில் நோக்கியா, ஃபோர்டு, நிசான், மோட்டரோலா, சாம்சங், செயிண்ட் கோபெயின், BMW என எண்ணற்ற பன்னாட்டுக் கம்பெனிகள் ஆலைகளைத் தொடங்கி பருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தன. இந்தக் காலகட்டத்தில் பழைய சட்டங்கள்தானே அமுலில் இருந்தன. தொழில் தொடங்குவதற்கு இந்தச் சட்டங்கள் தடையாக இருந்தன என்றால் இத்தனை நிறுவனங்கள் எப்படி தொடங்கப்பட்டிருக்க முடியும்? அவர்கள் எப்படி இன்றுவரை தொடர்ந்து பெருத்த இலாபத்துடன் தொழில் நடத்த முடியும்?


பழைய சட்டங்கள் இருந்த போதே நோக்கிய நிறுவனம் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி பல அயிரம் கோடி லாபத்தை அள்ளிச் சென்றது. ஹண்டாய் நிறுவனமோ சுமார் 2000 நிரந்தர ஊழியர்களுக்குச் சராசரியாக மாதம் ரூ.25000 முதல் ரூ.87000 வரை ஊதியம் கொடுக்கிறது. ஆனால் சுமார் 5000 பயிற்சியாளர்கள் மற்றும் 4000 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சராசரியாக சுமார் ரூ.15000 ஊதியம் கொடுத்து பெருவாரியான தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது. இந்தச் சூழலில் புதிய சட்டங்கள் யாருக்குச் சாதகம் என்பதை சட்டத்திற்குள் சென்று பார்த்தால்தான் தெரியும்.



புதிய சட்டத் தொகுப்புகள்


1. ஊதியச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், போனஸ் சட்டம் மற்றும் சம ஊதியச் சட்டம் ஆகிய நான்கு சட்டங்களின் தொகுப்புதான் ”ஊதியத் தொகுப்பு” (Code on Wages 2020) என்ற பெயரில் வந்துள்ளது.

 

2. தொழிற்சங்கச் சட்டம், நிலை ஆணைகள் சட்டம் மற்றும் தொழிற் தகராறுச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் தொகுப்புதான் ”தொழில் உறவு தொகுப்பு” (Industrial Relations Code) என்ற பெயரில் வந்துள்ளது.


3. இழப்பீடுச் சட்டம், ஈட்டுறுதிச் சட்டம், சேம நலநிதிச் சட்டம், வேலைவாய்ப்புச் சட்டம், மகப்பேறுச் சட்டம், பணிக்கொடைச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது சட்டங்களின் தொகுப்புதான் ”சமூகப் பாதுகாப்புத் தொகுப்பு” (Code on Social Security) என்ற பெயரில் வந்துள்ளது.

 

4. தொழிற்சாலைகள் சட்டம், தோட்டத் தொழிலாளர் சட்டம், சுரங்கச் சட்டம், மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், துறைமுகத் தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட பதின்மூன்று சட்டங்களின் தொகுப்புதான் ”பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு” (Occupational Safety, Health and Working Conditions Code) என்ற பெயரில் வந்துள்ளது.


மேற்கண்ட நான்கு தொகுப்புகளுக்குள் அடங்கிய பழைய சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன.


சட்டத் திருத்தங்கள் மீது மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என 30 முதல் 45 நாட்கள் வரை அவகாசம் தருவதாகக்கூறி, கரோனா நோய்த் தொற்று காலத்தில் மக்கள் இதன் மீதெல்லாம் கவனம் செலுத்தமாட்டார்கள் என்பதைத் தெரிந்தே, அவசர அவசரமாக மேற்கண்டச் சட்டங்களைக் கொண்டு வந்தள்ளது மோடி அரசு. இச்சட்டங்கள் யாவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிட்டுவிட்டனர். அதேபோல இச்சட்டங்களுக்கான விதிமுறைகளையும் உருவாக்கிவிட்டனர். கடைசியாக கடந்த டிசம்பரில் ”தொழில் உறவு” தொகுப்புச் சட்டத்தோடு தொடர்புடைய மாதிரி நிலை ஆணைகளையும் உருவாக்கிவிட்டனர்.


கரோனா காலத்தில்தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் மீது கருத்துக் கூறவோ, எதிர்த்துப் போராடவோ இந்தியத் தொழிலாளி வர்க்கம் குறிப்பாக தொழிற்சங்கங்கள் இன்று வரை தவறி உள்ளன என்பது ஒரு கசப்பான உண்மைதான்.


01.04.2021 முதல் தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகள் அமுலுக்கு வரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னமும் இந்தியத் தொழிலாளி வர்க்கம் விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.


தொடர்புடைய பதிவுகள்:

அரசியல் அமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் உரிமைகள்! தொடர்-2


Wednesday, March 17, 2021

அரசியல் அமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் உரிமைகள்! தொடர்-2

சமத்துவம், சுதந்திரம், சுரண்டலுக்கு எதிரான உரிமை, மதச் சுதந்திரம், கல்வி-பண்பாட்டு உரிமை, பரிகாரம் தேடுவதற்கான ரிட் உரிமைகள் இவை யாவும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளாகும். (பிரிவு: 12-35).

குறிப்பாக பேச்சுரிமை-எழுத்துரிமை, ஆயுதங்கள் இன்றி கூட்டமாகக் கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல-வசிக்க, தான் விரும்பியத் தொழிலைச் செய்ய உள்ள உரிமைகள் யாவும் அடிப்படை சுதந்திர உரிமைகளாகும். (பிரிவு: 19)

அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் ஏதேனும் சட்டம் இயற்றப்படுமானால் அச்சட்டம் செல்லாது (பிரிவு-13)


அதே போல ஒருவரை, ஒரு குற்றத்திற்காக ஒருமுறை மட்டுமே தண்டிக்க வேண்டும், மாறாக இரண்டு முறையோ அல்லது அதற்கு மேலோ ஒரே குற்றத்திற்காகத் தண்டிக்கக் கூடாது. (பிரிவு-20)



சட்டத்தின் முன் சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும்  தர அரசு மறுக்கக் கூடாது (பிரிவு-14);


சாதி, சமயம், இனம், பால், பிறப்பிடம், அல்லது வேறு எந்தக் காரணத்துக்காகவும் எந்தக் குடிமகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக் கூடாது (பிரிவு-15-1);


அரசின் கீழுள்ள எத்தகைய அலுவலகங்களில் நியமிக்கப்படுவதற்கும், பணியாற்றுவதற்கும் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புத் தரப்பட வேண்டும் (பிரிவு-16-1)


இந்தியக் குடிமக்கள் யாவருக்கும் சங்கங்களையும், அமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் (பிரிவு-19-1-C);


மனிதர்களை விற்பதும் வாங்குவதும், வற்புறுத்தி வேலை வாங்குவது, பிச்சை எடுக்கச் செய்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன (பிரிவு-23);


பதினான்கு வயதுக்குக் குறைந்த குழந்தைகளை எந்தத் தொழிற்சாலையிலும், சுரங்கத்திலும் அல்லது வேறு அபாயகரமான வேலைகளிலும் எவரும் அமர்த்தக் கூடாது (பிரிவு-24);


குடிமக்கள் அனைவரும் ஆண் பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும் (பிரிவு-38A),


ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் கிடைப்பதற்கும் (பிரிவு–38C);


தொழிலாளர் நலத்தையும், வேலைத் திறனையும், ஆண், பெண், குழந்தைகள் ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் சக்திக்கும் தகுதியற்ற ஒரு வேலைக்குப் பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தள்ளப்படாமல் தடுப்பதற்கும் (38E);


உரிய வகையில்; அரசு தமது கொள்கைகளை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


தனது பொருளாதாரச் சக்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும் வழிவகைகள் காணப்பட வேண்டும் (பிரிவு – 41);


நியாயமானதும் மனிதத் தன்மையோடும் உள்ள தொழில் நிலையங்களை உருவாக்குவதோடு, மகப்பேறு காலத்துக்குரிய உதவிகளும் செய்யப்படுவதற்கான வழிவகைகள் காணப்பட வேண்டும் (பிரிவு - 42);


தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் அனைவருக்கும் வாழ்வதற்குரிய ஊதியம், தொழிலாற்றுவதற்கேற்ற சுமுகமான சூழ்நிலையில், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டு பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஆகியவை கிடைப்பதற்கும் உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும்… உறுதிப்படுத்தப்பட வேண்டும் (பிரிவு - 43);


தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்கள் ஆகியவற்றின் மேலாண்மைப் பணியில் தொழிலாளர்களும் பங்கு பெறுவதற்கான தக்கச் சட்டத்தை உருவாக்கி அல்லது வேறு எந்த வகையிலாவது அத்தகைய வழிவகை காணத்தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் (பிரிவு - 43A)


என பல்வேறு உரிமைகளை இந்திய அரசமைப்புச் சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.


அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள மேற்கண்ட உரிமைகளை தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள் வழங்குகின்றனவா என்பதை இனி பார்ப்போம்.

 

தொடரும்

 

பொன்.சேகர்

வழக்குரைஞர்

 

குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்:


தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள்: யாருக்குச் சாதகம்? தொடர்-1

 

Tuesday, March 16, 2021

தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள்: யாருக்குச் சாதகம்? தொடர்-1


வறுமை ஒழிப்பு, கருப்புப் பண ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று வாய்ச் சவடால் அடித்த மோடிதான் கடந்த ஏழு ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக உலா வருகிறார். கடந்த ஏழு ஆண்டுகளில் எதைச் சாதித்திருக்கிறார்? சரக்கு மற்றும் சேவை வரி (GST), பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழில்களை முடக்கினார். அதனால் தொழில் உற்பத்தி 38.1 சதவீதமாக சரிந்தது. வறுமை 23 சதவீதம் அதிகரித்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. இன்று நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு உத்தரவாதமான வேலை இல்லை.


கருப்புப் பணத்தை மீட்டுவந்து ஆளுக்கு பதினைந்து இலட்சம் அவரவர் வங்கிக் கணக்கில் சேர்ப்பேன் என்றார். ஆனால் குறைந்த பட்ச இருப்பு (minimum balance) இல்லை எனக் காரணம் காட்டி நம் கணக்கிலிருந்து பல ஆயிரம் கோடிகளை சுருட்டியதுதான் மிச்சம். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.2.41 இலட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார் இந்த ஏழைத்தாயின் மகன்.

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றியதோடு புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகள் மூலம் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சமூக நீதிக்குக் குழி பறித்தார். பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் சமூகநீதிக் கோட்பாட்டையே கேலிக் கூத்தாக்கினார். தமிழக வேலை வாய்ப்புகளை கொல்லைப்புற வழியாக வடவர்களுக்கு வாரிக் கொடுத்து தமிழக இளைஞர்களை வஞ்சித்து வருகிறார்..

பொங்கலுக்கு விடுமுறை கிடையாது, ஜல்லிக்கட்டுக்குத் தடை, எட்டு வழிச்சாலை, மீத்தேன்- ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

‘தூய்மை இந்தியா’ என்றார். நமது கையில் துடைப்பத்தைக் கொடுத்துவிட்டு ஆலை முதலாளிகளின் மாசு கட்டுப்பாட்டு விதி மீறல்களை அனுமதித்தார். அதனால் உலகின் மாசடைந்த முதல் 30 நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 22 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மெரைன், மல்லாடி உள்ளிட்ட 16 சிவப்பு வகை (red category industries) ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் நச்சுக் கழிவுகளால் இராணிப்பேட்டை உலகின் மாசடைந்த நகரங்களில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, வேலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் சிவப்பு வகை மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகளால் இனி தூத்துக்குடியில் வாழ முடியாது என்பதை உணர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதி வழியில் போராடிய மக்களைத் தனது எடுபிடி எடப்பாடியைக் கொண்டு படுகொலை செய்தார்.

கரோனா நோய்த் தொற்று காலத்தில் மக்கள் சொல்லொனாத் துயரத்தில் இருந்த போது நம்மை விளக்கு ஏத்தி, கை தட்டி, மணி அடிக்கச் சொல்லிவிட்டு கார்ப்பரேட் நலன் காக்கும் பல்வேறு சட்டங்களைக் கொல்லைப்புற வழியாகக் கொண்டு வந்தார்.


விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம், ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் இந்திய விவசாயிகளை கார்ப்பரோட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக மாற்றும் வேலையை மேற்கொண்டார். இருநூறுக்கும் மேற்பட்டோர் மாண்ட போதும் இச்சட்டங்களைத் திரும்பப் பெற விலியுறுத்தி நிரந்தரக் குடில் அமைத்துக் கொண்டு விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.


வங்கி, காப்பீடு, ரெயில், விமானம், துறைமுகம், பெல், கெயில், தொலைத் தொடர்பு என அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். “தொழில் நடத்துவது அரசின் வேலையல்ல, மாறாக சிறந்த நிர்வாகத்தைக் கொடுப்பதுதான் அரசின் கடமை” என்பதை நேரடியாக அறிவிக்கிறார். ஆலைகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் இனி தனியார் வசம் இருக்கும். தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு ஏற்ப கரோனா காலத்தில் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்துள்ளார். அரசின் கொள்கைகளுக்கு எதிராகவோ, முதலாளிகளுக்கு எதிராகவோ போராடினால், போராடும் மக்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத்தான் அவர் சிறந்த நிர்வாகம் என்கிறார் போல!


வேளாண் சட்டங்கள் எந்த அளவுக்கு இந்திய விவசாயிகளுக்குக் கேடானதோ அதைவிட இந்தியத் தொழிலாளி வர்க்கத்துக்குக் கேடானதுதான் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள். வேளாண் சட்டங்களின் ஆபத்தைப் புரிந்து கொண்டு விவசாயிகள் உயிரைக் கொடுத்துப் போராடி வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் குறித்து இந்தியத் தொழிலாளி வர்க்கம் அமைதி காப்பதன் மூலம் இன்னும் அதைப் புரிந்து கொள்ளவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள் யாருக்கு பயனளிக்கப் போகிறது?


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை, BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.

Tuesday, March 9, 2021

இராணிப்பேட்டையில் உலக மகளிர் தின விழா!

உலக மகளிர் தின விழா மற்றும் சாவித்திரி பாய் புலே நினைவு தினம் பெல் இராணி்பேட்டை அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சார்பில் 09.03.2021 அன்று மாலை இராணிப்பேட்டையில் சிறப்பாக நடைபெற்றது.

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த பெண்களே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். தோழர் பா.சங்கீதா தலைமையில் தோழர் க.சுதா வரவேற்புரை நிகழ்த்த தோழர் நீ.நந்தினி நெறியாளுகை செய்தார். திராவிட மகளிர் பாசறையின் மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மதிவதனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து எழுச்சி உரையாற்றினார். வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் பெல்.இந்திரன் மற்றும் கௌவரத் தலைவர் வழக்குரைஞர் பொன்.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியல் தோழர் சி.காவியா நன்றி உரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது. 

ஆண்களும் பெண்களும் திரளாகக் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர். சாவித்திரி பாய் புலே படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்சியில் ஆளுமை செய்த பெண்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் முறையாக மேடை ஏறினாலும் தங்களாளும் மேடை ஆளுமையைச் செய்ய முடியும் என்பதை செய்து காட்டியப் இந்தப் பெண்கள் இனி வரும் காலங்களில் பல சாதனைகளைப் படைக்கக் காத்திருக்கின்றனர். சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு வாழ்த்துகள்.

ஊரான்

விழாக் காட்சிகள்


பா.சங்கீதா

க.சுதா

நீ.நந்தினி

சே.மதி வதனி

சி.காவியா