Wednesday, March 17, 2021

அரசியல் அமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் உரிமைகள்! தொடர்-2

சமத்துவம், சுதந்திரம், சுரண்டலுக்கு எதிரான உரிமை, மதச் சுதந்திரம், கல்வி-பண்பாட்டு உரிமை, பரிகாரம் தேடுவதற்கான ரிட் உரிமைகள் இவை யாவும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளாகும். (பிரிவு: 12-35).

குறிப்பாக பேச்சுரிமை-எழுத்துரிமை, ஆயுதங்கள் இன்றி கூட்டமாகக் கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல-வசிக்க, தான் விரும்பியத் தொழிலைச் செய்ய உள்ள உரிமைகள் யாவும் அடிப்படை சுதந்திர உரிமைகளாகும். (பிரிவு: 19)

அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் ஏதேனும் சட்டம் இயற்றப்படுமானால் அச்சட்டம் செல்லாது (பிரிவு-13)


அதே போல ஒருவரை, ஒரு குற்றத்திற்காக ஒருமுறை மட்டுமே தண்டிக்க வேண்டும், மாறாக இரண்டு முறையோ அல்லது அதற்கு மேலோ ஒரே குற்றத்திற்காகத் தண்டிக்கக் கூடாது. (பிரிவு-20)



சட்டத்தின் முன் சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும்  தர அரசு மறுக்கக் கூடாது (பிரிவு-14);


சாதி, சமயம், இனம், பால், பிறப்பிடம், அல்லது வேறு எந்தக் காரணத்துக்காகவும் எந்தக் குடிமகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக் கூடாது (பிரிவு-15-1);


அரசின் கீழுள்ள எத்தகைய அலுவலகங்களில் நியமிக்கப்படுவதற்கும், பணியாற்றுவதற்கும் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புத் தரப்பட வேண்டும் (பிரிவு-16-1)


இந்தியக் குடிமக்கள் யாவருக்கும் சங்கங்களையும், அமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் (பிரிவு-19-1-C);


மனிதர்களை விற்பதும் வாங்குவதும், வற்புறுத்தி வேலை வாங்குவது, பிச்சை எடுக்கச் செய்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன (பிரிவு-23);


பதினான்கு வயதுக்குக் குறைந்த குழந்தைகளை எந்தத் தொழிற்சாலையிலும், சுரங்கத்திலும் அல்லது வேறு அபாயகரமான வேலைகளிலும் எவரும் அமர்த்தக் கூடாது (பிரிவு-24);


குடிமக்கள் அனைவரும் ஆண் பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும் (பிரிவு-38A),


ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் கிடைப்பதற்கும் (பிரிவு–38C);


தொழிலாளர் நலத்தையும், வேலைத் திறனையும், ஆண், பெண், குழந்தைகள் ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் சக்திக்கும் தகுதியற்ற ஒரு வேலைக்குப் பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தள்ளப்படாமல் தடுப்பதற்கும் (38E);


உரிய வகையில்; அரசு தமது கொள்கைகளை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


தனது பொருளாதாரச் சக்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும் வழிவகைகள் காணப்பட வேண்டும் (பிரிவு – 41);


நியாயமானதும் மனிதத் தன்மையோடும் உள்ள தொழில் நிலையங்களை உருவாக்குவதோடு, மகப்பேறு காலத்துக்குரிய உதவிகளும் செய்யப்படுவதற்கான வழிவகைகள் காணப்பட வேண்டும் (பிரிவு - 42);


தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் அனைவருக்கும் வாழ்வதற்குரிய ஊதியம், தொழிலாற்றுவதற்கேற்ற சுமுகமான சூழ்நிலையில், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டு பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஆகியவை கிடைப்பதற்கும் உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும்… உறுதிப்படுத்தப்பட வேண்டும் (பிரிவு - 43);


தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்கள் ஆகியவற்றின் மேலாண்மைப் பணியில் தொழிலாளர்களும் பங்கு பெறுவதற்கான தக்கச் சட்டத்தை உருவாக்கி அல்லது வேறு எந்த வகையிலாவது அத்தகைய வழிவகை காணத்தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் (பிரிவு - 43A)


என பல்வேறு உரிமைகளை இந்திய அரசமைப்புச் சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.


அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள மேற்கண்ட உரிமைகளை தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள் வழங்குகின்றனவா என்பதை இனி பார்ப்போம்.

 

தொடரும்

 

பொன்.சேகர்

வழக்குரைஞர்

 

குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்:


தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள்: யாருக்குச் சாதகம்? தொடர்-1

 

No comments:

Post a Comment