வறுமை ஒழிப்பு, கருப்புப் பண ஒழிப்பு, தொழில் வளர்ச்சி,
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று வாய்ச் சவடால் அடித்த மோடிதான் கடந்த ஏழு
ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக உலா வருகிறார். கடந்த ஏழு ஆண்டுகளில் எதைச் சாதித்திருக்கிறார்?
சரக்கு மற்றும் சேவை வரி (GST), பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழில்களை
முடக்கினார். அதனால் தொழில் உற்பத்தி 38.1 சதவீதமாக சரிந்தது. வறுமை 23 சதவீதம் அதிகரித்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. இன்று நாட்டின் மூன்றில்
ஒரு பகுதியினருக்கு உத்தரவாதமான வேலை இல்லை.
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றியதோடு புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகள் மூலம் தமிழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சமூக நீதிக்குக் குழி பறித்தார். பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் சமூகநீதிக் கோட்பாட்டையே கேலிக் கூத்தாக்கினார். தமிழக வேலை வாய்ப்புகளை கொல்லைப்புற வழியாக வடவர்களுக்கு வாரிக் கொடுத்து தமிழக இளைஞர்களை வஞ்சித்து வருகிறார்..
பொங்கலுக்கு விடுமுறை கிடையாது, ஜல்லிக்கட்டுக்குத் தடை, எட்டு வழிச்சாலை, மீத்தேன்- ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
‘தூய்மை இந்தியா’ என்றார். நமது கையில் துடைப்பத்தைக் கொடுத்துவிட்டு ஆலை முதலாளிகளின் மாசு கட்டுப்பாட்டு விதி மீறல்களை அனுமதித்தார். அதனால் உலகின் மாசடைந்த முதல் 30 நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 22 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மெரைன், மல்லாடி உள்ளிட்ட 16 சிவப்பு வகை (red category industries) ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் நச்சுக் கழிவுகளால் இராணிப்பேட்டை உலகின் மாசடைந்த நகரங்களில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, வேலூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் சிவப்பு வகை மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகளால் இனி தூத்துக்குடியில் வாழ முடியாது என்பதை உணர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதி வழியில் போராடிய மக்களைத் தனது எடுபிடி எடப்பாடியைக் கொண்டு படுகொலை செய்தார்.
கரோனா நோய்த் தொற்று காலத்தில் மக்கள் சொல்லொனாத் துயரத்தில் இருந்த போது நம்மை விளக்கு ஏத்தி, கை தட்டி, மணி அடிக்கச் சொல்லிவிட்டு கார்ப்பரேட் நலன் காக்கும் பல்வேறு சட்டங்களைக் கொல்லைப்புற வழியாகக் கொண்டு வந்தார்.
விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம், ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் இந்திய விவசாயிகளை கார்ப்பரோட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக மாற்றும் வேலையை மேற்கொண்டார். இருநூறுக்கும் மேற்பட்டோர் மாண்ட போதும் இச்சட்டங்களைத் திரும்பப் பெற விலியுறுத்தி நிரந்தரக் குடில் அமைத்துக் கொண்டு விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.
வங்கி,
காப்பீடு, ரெயில், விமானம், துறைமுகம், பெல், கெயில், தொலைத் தொடர்பு என அனைத்து அரசு
மற்றும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பதற்கான வேலைகளை முடுக்கி
விட்டுள்ளார். “தொழில் நடத்துவது அரசின் வேலையல்ல, மாறாக சிறந்த
நிர்வாகத்தைக் கொடுப்பதுதான் அரசின் கடமை” என்பதை நேரடியாக அறிவிக்கிறார். ஆலைகள்
உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் இனி தனியார் வசம் இருக்கும். தொழிலாளர்களின்
உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு ஏற்ப கரோனா காலத்தில் பல்வேறு தொழிலாளர் நலச்
சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்துள்ளார். அரசின் கொள்கைகளுக்கு
எதிராகவோ, முதலாளிகளுக்கு எதிராகவோ போராடினால், போராடும் மக்களை ஒடுக்குவதற்கு
மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத்தான் அவர் சிறந்த நிர்வாகம் என்கிறார் போல!
வேளாண்
சட்டங்கள் எந்த அளவுக்கு இந்திய விவசாயிகளுக்குக் கேடானதோ அதைவிட இந்தியத்
தொழிலாளி வர்க்கத்துக்குக் கேடானதுதான் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள். வேளாண்
சட்டங்களின் ஆபத்தைப் புரிந்து கொண்டு விவசாயிகள் உயிரைக் கொடுத்துப் போராடி
வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் குறித்து இந்தியத் தொழிலாளி
வர்க்கம் அமைதி காப்பதன் மூலம் இன்னும் அதைப் புரிந்து கொள்ளவில்லையோ என எண்ணத்
தோன்றுகிறது. தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள் யாருக்கு பயனளிக்கப்
போகிறது?
தொடரும்
பொன்.சேகர்
வழக்குரைஞர்
குறிப்பு:
இராணிப்பேட்டை, BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த
தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.
No comments:
Post a Comment