Wednesday, July 31, 2024

கருங்காலி மாலையும் பாசிட்டிவ் எனர்ஜியும்!

கைநெட்டிக் எனர்ஜி, பொட்டன்ஷியல் எனர்ஜி, நியூமேட்டிக் எனர்ஜி, 
தெர்மல் எனர்ஜி, 
ஹைடெல் எனர்ஜி,
எலக்ட்ரிக் எனெர்ஜி, 
கெமிக்கல் எனர்ஜி, 
நியூக்கிளியர் எனர்ஜி 
இப்படி 
சில பல எனர்ஜிகளை 
நானும் படித்திருக்கிறேன்.

ஆனால், இந்த 
நெகட்டிவ் எனர்ஜி, 
பாசிட்டிவ் எனர்ஜி 
எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தானோ? 
பி.இ படிக்கிறவரை 
அப்படிப்பட்ட எனர்ஜியை 
நான் படிக்கவே இல்லையே? 
அதுவும், 
நான் படித்தது 
தமிழ்நாட்டின் தலைசிறந்த பாலிடெக்னிக்கான 
சென்னை சிபிடி 
மற்றும் 
தமிழ்நாட்டின் தலை சிறந்த 
பொறியியல் கல்லூரியான 
திருச்சி ஆர்இசி (இன்று என்ஐடி).

ஒரு வேளை இவை, 
அதான், இந்த 
பாசிட்டிவ் எனர்ஜி, 
நெகட்டிவ் எனர்ஜி
சிலபஸ்ல இல்லையா? 
இல்ல 
எங்க ப்ரொபசர்தான் 
நடத்தாமல் விட்டுட்டாரா? 
அல்லது 
நான்தான் 
சாய்ஸ்ல விட்டுட்டேனா? தெரியலையே?

அட, நான் 
நாற்பதாண்டு காலம் பணிபுரிந்த
எனர்ஜிக்குப் பேர் போன
பெல் கம்பெனியில்கூட
இந்த 
பாசிட்டிவ் எனர்ஜி 
நெகட்டிவ் எனர்ஜி பற்றி கேள்விப்பட்டதே இல்லையே?

எங்க ஊரு 
மட்டவெட்டு காட்டுல 
கருங்காலி மரம் 
நிறையவே உண்டு. 
பெருசா வளராது. 
கொஞ்சம் குட்டையாத்தான் இருக்கும். 
எவ்வளவு வேணாலும் 
வறட்சியைத் தாங்கும். 
ஆனா, நல்லா வைரம் பாய்ஞ்ச மரமா இருக்கும். 
ஏர் கலப்பைக்கு ஏற்ற மரம், 
நல்லா ஒழைக்கும், 
நீண்ட நாள் வரும் 
என்பது மட்டும்தான் 
எனக்குத் தெரியும்; 
எங்க விவசாயிகளுக்கும் தெரியும். 

ஆனா, 
அந்த மரத்தையே 
கொட்டையா உருட்டி 
கழுத்துல போட்டா 
பாசிட்டிவ் எனர்ஜி வருதுங்கிறானே? 
இந்த கண்டுபிடிப்புக்கு 
ஏதாவது 
நோபல் பரிசு கொடுத்தாங்களா? 
நமக்குத் தெரியாமப் போச்சே?

ஏர் உழ டிராக்டர்கள் வந்துவிட்டதால், 
ஏர் கலப்பைக்கு இனி
கருங்காலி தேவைப்படாது என்பதால், 
அவற்றை 
கொட்டையாக்கிக் காசாக்குகிறானோ?

சரி, 
இவன் விக்கிற கருங்காலி மாலைகள், 
கருங்காலி மரத்தில்தான் செய்யப்பட்டது என்பதற்கு 
ஏதாவது சர்வதே தரச்சான்று பெறப்பட்டுள்ளதா? 
கருங்காலி மாலை உற்பத்தி செய்யும் ஆலைகள் 
ஐஎஸ்ஓ  தரச் சான்று பெற்றவையா? 

இவை பற்றி எல்லாம் 
தெரிந்து கொள்வதற்கு
ஒரு கருங்காலி மாலையை கழுத்திலே போட்டுக் கொள்ளணுமோ?

வாழ்க்கையில் 
நீ சந்திக்கும் உன் 
ஏக்கப் பெருமூச்சுக்குக் 
காரணம் என்னவென்று அறிந்து, அதைக் களைவதற்கு 
நீ போராட முற்படாத வரை, 
நாளை "பீய் மாலை"கூட 
உன் கழுத்தை அலங்கரிக்கும்!  என்ன, கொஞ்சம் காய வெச்சு உருட்ட வேண்டி இருக்கும். 

மாய வலையில் 
நீ சிக்கியிருக்கும் வரை, 
மாலைகள் மாறலாம்; 
ஆனால், உன் வாழ்க்கை 
ஒருபோதும் மாறாது!

இதை, உணர்வதுதான்டா 
பாசிட்டிவ் எனர்ஜி. 
இதை நீ 
உணர்ந்து விட்டால், 
நானும் நம்புகிறேன், 
பாசிட்டிவ் எனர்ஜி 
இருக்கு என்று!

ஊரான்

வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த போது நண்பர்களின் கருத்துக்கள் கீழே: 

துரைராஜ்: வருங்கால வாழ்க்கை வளத்திற்காக கனவு காணும் மக்களின் நம்பிக்கையை மூலதனமாக வைத்து நடத்தும் வணிகம்.
இது எனது கருத்து.

ஞானசேகரன்: மூலதனம், மூடநம்பிக்கை😡
இத்தகைய வியாபாரம் பெருகுவது, தன்னம்பிக்கை குறைந்து வருகிறது அல்லது விட்டது என்பதையே காட்டுகிறது.

செல்வம்: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் 😟
பெரும்பாலானவர்கள் ஏமாறுவது பேராசையும் மூடநம்பிக்கையும் ஒன்று சேருவதால்.

சுப்பிரமணி: நல்ல கருத்து, இது ஒரு வகையான ஏமாற்று தந்திரம், மேலும் மூட நம்பிக்கை.  ஹரித்துவரர் (வட நாடு) கடைக்கு சென்றவர்களுக்கு தெரியும். அதாவது கண்ணாடியால் செய்யப்பட்ட பாசி மாலை எடுத்து, இரண்டு பாசிகளை இருட்டில் (வெளிச்சத்தை அனைத்து) உரசி காட்டுவார். வெளிச்சம் வரும். இதனை கழுத்தில் அணிந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றனர். அன்றைய பாசியின் விலை ரூ 500/. அதனை வாங்கி கழுத்தில் அணிந்தேன். எந்தவித மாற்றம் தெரியலை. உடல் ஆரோக்கியம் அடையும் எனபது என்பது ஒரு வகையான ஏமாற்றுதல். அவர்களது சொல் பேச்சில் நாம் அனைவரும் மயங்கி  நம்பி விடுகிறோம். ஒரு வகையான வியாபார தந்திரம். எவரும் புரிந்து கொள்வதில்லை என்பது தான் உண்மை.                   
இவண்: ஆ சு

இரவிக்குமார்: எனக்கும் இந்த கயிறு / தாயத்து மாலைகளில் நாட்டமோ / நம்பிக்கையோ இல்லை. 

பதிவில் மக்களின் மூட நம்பிக்கை / அறியாமையின்பால் கோபமும் ஆவேசமும் கொப்பளிக்கின்றன. 
"பீய் மாலை" கொஞ்சம் ஓவர்.  ஆனால் அதையே கமர்கட் மாலை என்று அமைத்திருந்தால், பொட்டில் அறைந்தார்ப் போல் இருந்திருக்காது. 👏👏

மக்களுக்கு பொதுவாகவே குறுக்கு வழியில் இலக்கை சுலபமாக அடையும் நாட்டம் / அல்லல்களை நீக்கும் எண்ணம்  எப்போதுமே இருக்கிறது.  இந்த மாதிரி மடத்தனங்களை, சந்தைப் படுத்தும் கயவர்கள், இம்மக்களின் அறியாமை மற்றும் பேராசையை தங்கள் சுய லாபத்திற்கு பயன் படுத்திக் கொள்கின்றனர்.

எம்.ஆர்.செல்வராஜ்: 👌மிக முக்கியமான மற்றும் அவசியமான பதிவு. என்று மடியும் இந்த அடிமைத்தன அவலம்?   🤝

Monday, July 29, 2024

ஜோதிடம் உள்ளிட்ட புரோகிதத் தொழிலை ஏன் தடை செய்ய வேண்டும்?

சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்கி அதன் மூலம் இன்றுவரை வயிறு வளர்ப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

ஆகப் பெரும்பான்மையான மக்கள் நம்பி வாழும் வேளாண்மையை, ஈனத்தொழில் என்று ஒதுக்கி வைத்துவிட்டு, வேதம் ஓதுவதை மட்டுமே தங்களுக்கானத் தொழிலாகத் தீர்மானித்துக் கொண்டனர் பார்ப்பனர்கள். வேதம் ஓதுவதால் மட்டுமே பெரிய அளவில் வருவாய் கிடைக்காது என்பதனால், புரோகிதம் மற்றும் ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை தமதாக்கிக் கொண்டனர்.
 
"தட்சணை, தானம் என்ற வகையில் அவர்களுக்குப் பொருள் குவிந்ததால், பொழுது போக்குவதில் நாட்டம் செலுத்துதல், களியாட்டங்களைக் காணுதல், சொகுசு படுக்கைகளில் உறங்குதல், கேவலமான கதைகளைச் சொல்லி அடுத்தவர்களோடு உரையாடுதல், அதன் மூலம் தங்களை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்ளுதல், இதையே ஆதாரமாகக் கொண்டு அடுத்தவர் மீது அதிகாரம் செலுத்துதல், ஆதாயத்திற்காக மந்திரத் தந்திரங்களில் ஈடுபடுதல், கைரேகை-சகுனம் பார்த்தல், மச்சங்களுக்கான பலன் சொல்லுதல், பில்லி-சூனியம் வைத்தல், பேய்-பிசாசு ஓட்டுதல், பாம்புக்கடி விஷ முறிவு மந்திரம் ஓதுதல், ஆயுள் ஜாதகம் கணித்தல், அதிர்ஷ்டக் குறி சொல்லுதல், இடி-மின்னல் வருவதை முன்னுரைத்தல், சந்திர-சூரிய கிரகணம் வருவதை கணித்தல், பெருமழை-பஞ்சம் வருவதை உரைத்தல், முகூர்த்தம்-முதலிரவு நாள் குறித்தல்கர்ப்பம் தரிக்க மந்திரம் ஓதுதல், கடன் பெற-செலவு செய்ய-உடன்படிக்கை மேற்கொள்ள நல்ல நாள்-நேரம் குறித்தல், தெய்வவாக்கு சொல்லுதல், நேர்த்திக்கடன் செய்தல், வீடு-மனை-நிலம் தேர்வு செய்தல், பூமி பூஜை-வேள்வி செய்தல், விலங்குகளைப் பலியிடும் சடங்கைச் செய்தல், பிரச்சனைகள் அதிகரிக்கும் பொழுது மனித உயிர்ப் பலியை செய்ய வைத்தல் உள்ளிட்ட இழிந்த கலைகளை தமதாக்கிக் கொண்டு, துட்டு, கோதுமை-அரிசி-ஆடு-பசு, காளைகளை தானமாகப் பெற்றுக் கொண்டு, தங்களது ஜீவனத்திற்காக மேற்கண்ட கீழான வழிகளையே பார்ப்பனர்கள் மேற்கொண்டனர்" என்பதை  அம்பேத்கர் பட்டியலிடுகிறார். (தொகுப்பு நூல்: தொகுதி-7).

இன்றைய நவீன காலத்திலும், ஒரு சில கலைகளை, அவர்கள் கைக்கொள்ளவில்லை என்றாலும், புரோகிதம்-ஜோதிடம் உள்ளிட்ட பெரும்பாலானவற்றை  மேற்கொள்வதன் மூலமாகத்தான் தங்களது ஜீவனத்தை பார்ப்பனர்கள் நடத்தி வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். உழைக்காமலேயே காசு கொட்டும் கலையாக இவை இருப்பதால், பார்ப்பனர் அல்லாத மற்ற சிலரும் இன்று இத்தகைய ஈனத் தொழில்களில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது.
 
புரோகிதர்கள் கணித்தபடி நடக்கவில்லை என்றால், யாரும் நட்டஈடு கேட்டு எந்த பஞ்சாயத்தையும் கூட்ட முடியாது; நீதிமன்றங்களையும் நாட முடியாது. இதுதான் புரோகிதர்களின் பலமே!
 
"இந்தப் புரோகித முறை மதங்களைக் கடந்து பார்சிக்கள் உள்ளிட்ட பலரிடமும் பரவி உள்ளதையும் நாம் காண முடிகிறது.
 
சமூகத்தில் உயர்ந்தவர்களாக புரோகிதர்கள் தங்களைக் கருதிக் கொள்கின்றனர்.

பிறப்பு-திருமணம் என மகிழ்ச்சிக்கான சடங்குகள், பிறகு தந்தை-இறுதியில் மரணம், தெய்வங்களுக்குப் படையல்,  அதைத் தொடர்ந்து நீண்டகால துக்கம் என வாழ்க்கை நெடுகிலும்,  ஒரு தீய நுண்ணறிவாளனைப் போன்று புரோகிதன், மனிதனை நிழல் போலத் தொடர்வதால், அவன் எங்கும் நீக்கமற 
நிறைந்திருக்கிறான்.

சாஸ்திரங்களை மீறுதல் பயங்கரமான தண்டனைக்குரியதாக மக்களை நம்ப வைத்திருக்கிறான். 99% மக்கள் இதற்குப் பலியாகி உள்ளனர். காண முடியாத சக்திக்கும், திக்கற்ற மனிதனுக்கும் இடையில் ஒரு சாத்தானைப் போல, புல்லுருவியாக, தரகனாக இருந்து கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டுகிறான்.
 
மூடநம்பிக்கைகளுக்கு
ஆதரவாக புரோகிதன் இருப்பதால்மகிச்சிகரமான திருமணமானாலும், துக்ககரமான மரணமானாலும் இரண்டு சம்பவங்களையும் புரோகிதன் சமநோக்கில்தான் பார்க்கிறான்

புரோகிதம் நாகரிகத்திற்கு ஒரு முட்டுக்கட்டை; எனவே, புரோகிதத்தைக் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்க வேண்டிய அதே வேளையில், புரோகிதத் தொழிலை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டி உள்ளது என்பதையும் அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். புரோகிதத்தில் தீமைகளே மலிந்து கிடப்பதால் அதை உடனடியாக ஒழித்துக் கட்ட வேண்டும்; ஒத்தி போடக்கூடாது" என்கிறார்.
 
"ஒரு அலுமினிய டம்ளர் கூட வாங்க முடியாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒரு ஆண் இறந்த பிறகு, இறப்புச் சடங்குகளைச் செய்வதற்கு, ஒரு வெள்ளிக் கிண்ணம் வேண்டும் என்று புரோகிதன் வலியுறுத்துகிறான்; ஒரு மனிதன் செத்த பிறகும் செலவு வைக்கும் இந்த இழிந்த புரோகிதத் தொழிலை துடைத்தெறிய வேண்டும்; அதற்கான வீரமிக்கப் பணியில் அறிவாளிகளும், படித்த இந்துக்களும், முகமதியர்களும், கிருத்தவர்களும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைக்கிறார் அம்பேத்கர்.
(தொகுப்பு நூல்: தொகுதி-36).

என்றோ ஒழித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டிய புரோகிதத் தொழில், மேலும் மேலும் பலமடைந்தே வருகிறது. துன்ப துயரங்கள் நிறைந்த இச்சமூகக் கட்டமைப்புதான் இதற்குக் காரணம் என்றாலும், நாம் அதை உணர்வதற்கே ஜோதிடமும் புரோகிதத் தொழிலும் தடையாக இருப்பதால் இவற்றை தடை செய்வதைத்தவிர‌ வேறுவழி ஏதுமில்லை.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

 whatsapp குழுவில் நண்பர்களின் கருத்துக்கள்:

முருகன்: இவன் இதை தடை செய்வானா மக்கள் புரிந்து கொண்டு அவர்களின் இடது காலால் தட்டிவிட வேண்டும் தினமணி தினதநதி போன்ற தினசரி நாளோடு களிலியே வெளியிட வேண்டிய ஒரு நல்ல கட்டுரை வாழ்த்துக்கள் தோழர். இவன் முருகன்கு.

செல்வம்: இன்று அவாக்களின் ஆட்சி நடைபெறுகிறது, தடை செய்யமுடியாது,😭😭😭

 

Sunday, July 28, 2024

ஆசாரக் கோவையும் ஆரிய ஒழுக்கமும்!

நெருங்கிய நண்பர்கள் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் குழுவில், பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவையிலிருந்து, அன்றாடம் ஒரு பாடலை ஒரு நண்பர் பகிர்வது வழக்கம். ஆசாரக்கோவை ஒரு நீதிநூல் என்பதனால் அந்த நண்பரும் நல்லெண்ணம் கருதியே அவற்றைப் பதிவிட்டு வருகிறார்.
உணவு உண்ணும் முறை குறித்து ஆசாரக்கோவையின் பாடல் 18 ஒரு முறை பகிர்ந்திருந்தார்.

 ஆசாரக்கோவை

அதன் மீது நண்பர் ஒருவர்,
"உண்கலத்தைச் சுற்றி நீர் இறைத்து..." ஏன்? (காரியத்திற்கான காரணம் என்ன?). அப்படி செய்யாவிட்டால் எப்படி அது ஒழுக்கக் கேடாகும்?
 
அப்படி செய்யாவிட்டால் "அரக்கர் வெறுத்து எடுத்துக்  கொண்டு நீங்குவார்." இதன் பொருள் என்ன?
 
புரியவில்லையே... தெரிந்தவர்கள்/புரிந்தவர்கள் விளக்கவும். நன்றி.
என்று வினா எழுப்பி,
 
அரக்கர் என்று கூறப்பட்டிருப்பது எறும்புகளைக் குறிக்கலாம்என்றும் அவர் கருதினார்.
 
அதன் மீதான எனது பதில்,
 
ஆசாரக்கோவை என்பது அந்தணர்களின் ஒழுக்கம் குறித்த ஒரு நூல். அது அனைவருக்குமானது அல்ல; மேலும் ஆசாரம் என்பது தமிழ் சொல் அல்ல. வடமொழியில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை, ஆசாரக்கோவை என்ற பெயரில் தமிழில் கோர்த்து சொல்லியிருக்கிறார்கள்.
 
பாடல் பதினெட்டில் வரும் கலத்தையோ அல்லது இலையையோ சுற்றி நீர் விடுவது என்பது வெறுமனே நீர் விடுவது மட்டுமல்ல, மந்திரம் சொல்லி நீரை விட வேண்டும். அவ்வாறு விட்டால் அரக்கர்கள் அணுக மாட்டார்கள் என்பதே அதன் பொருள்.
 
வீட்டில், சாப்பாடு தட்டாக இருந்தாலும், திருமண விருந்தில், டைனிங் டேபிளில் பேப்பர் விரித்து இலை போட்டாலும், இன்றும்கூட இப்படிச் செய்பவவர்களைக் காண முடியும். பொருள் புரியாமலேயே அதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

வடமொழி ஒழுக்க நெறிமுறைகள் பதினெண்கீழ் கணக்கு நூல்களின் காலகட்டத்திலேயே நிறைவே தமிழில் புகுந்து விட்டன என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சான்று. ஆசாரக் கோவை குறித்து இணையத்தில் ஏராளமான விவரங்கள் கிடைக்கின்றன.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை 100 ஆண்டுகள் அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்பு அச்சில் ஏற்றும் பொழுது, அச்சேற்றிவர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் நமக்கு வழங்கினார்கள்.
 
அதன் பிறகு, காலப்போக்கில், ஒவ்வொரு முறையும் அதன் மீதான விமர்சனங்கள் வரும்போதோ அல்லது தங்களின் தேவைக்கு ஏற்பவோ கருத்துக்களை மாற்றி அமைக்கின்றனர். அதற்கான சமீபத்திய உதாரணம் வள்ளுவரும் திருக்குறளும்.
 
ஒழுக்கம் என்பது இன்றைய உற்பத்தி முறைக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் ஏற்ப இன்றைய சமூக கட்டமைப்புக்குத் தகுந்தவாறு நாம் உருவாக்கிக் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
 
எட்டாம் வகுப்புவரை அறியாப் பருவத்தில், விபூதிப் பட்டையோடு பள்ளிக்குச் சென்ற நான், ஒன்பதாம் வகுப்பிலிருந்து கடவுள் மறுப்பாளனாக மாறிவிட்டேன். அப்பொழுது எனக்கு பெரியாரையும் தெரியாது, பகுத்தறிவு என்பதைக் கேள்பட்டதுமில்லை. நான் நானாகவே, தானாகவே மாறிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளியில் என்னுடன் பயின்ற இன்னொரு மாணவனும் கடவுள் மறுப்பாளன்தான். பழைய எஸ்எஸ்எல்சி இறுதித் தேர்வில் அவன் முதல் மாணவன், நான் இரண்டாம் மாணவன்.
 
அப்பொழுதெல்லாம் நான் கருப்பாக குண்டாக இருப்பேன். பள்ளி வகுப்பறையில்கூட முதல் வரிசையில் இரண்டாவது மாணவனாக அமர வைக்கப்பட்டேன். என்னைச் செல்லமாக கரிபால்டி என்றுகூட நண்பர்கள் அழைப்பதுண்டு.
 
அன்றுமுதல், எனக்கென்று சில ஒழுக்க முறைகளை வகுத்து, அதற்கு ஏற்ப வாழ்ந்து வருகிறேன். நான் பள்ளி இறுதித்தேர்வில் இரண்டாம் மாணவனாக வந்தும், தமிழகத்தின் முன்னிலை முதல் பாலிடெக்னிக்கான சென்னை சென்ட்ரல் பாலிடெக்னிக்கில், நான் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த பொழுது இரண்டாம் ஆண்டில் முதலாவதாகவும், மூன்றாம் ஆண்டில் மூன்றாவதாகவும் வந்தும், கடவுளை வேண்டினால் படிப்பு வரும் என்பதெல்லாம் கட்டுக்கதை என்பதை நிறுவி உள்ளேன்.
 
புகைப்பது, மது அருந்துவது, பொய் சொல்வது, பித்தலாட்டம் செய்வது, பிறரை ஏமாற்றுவது, வட்டிக்கு விடுவது, லஞ்சம் பெறுவது, அலுவலக வேலையாக வெளியூர் செல்லும் பொழுது ஆட்டோவில் செல்லாமலேயே சென்றதாகவும், குறைந்த கட்டணத்தில் விடுதியில் தங்கிவிட்டு அதிக கட்டணத்துக்கு ரசீது பெற்று பொய் கணக்கெழுதுவது, வருமான வரி தாக்கலின்போது சேமிக்காமலேயே சேமித்ததாக கணக்குக் காட்டுவது என்கிற ஒழுங்கீனங்கள் என்னிடம் அறவே கிடையாது.
 
நான் திருச்சி பெல்நிறுவனத்தில் உணவக நிர்வாகக் குழுவில் பணியாற்றிய காலத்தில், உணவகத்தில் உணவக ஊழியர்கள் சிலர் செய்த ரூபாய் நாலரைகோடி ஊழல் வெளிக்கொணர நான் காரணமாய் இருந்ததையும் அங்குள்ள பலரும் அறிவர். 

ஒரு முறை திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற போனஸ் போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்களில் என்னைத் தொடர்பு படுத்தி, நான், “ED ஒழிக என முழக்கமிட்டதாகவும், செக்யூரிட்டி பாதுகாவலர்களைத் தள்ளிவிட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட சில தொழிலாளர்களை உள்ளே அழைத்துச் சென்றதாகவும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பெல் நிறுவனத்தை விட்டே என்னை வெளியேற்றினார்கள்.
 
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் அதே நிறுவனத்தில் 15 ஆண்டுகால பணிக்காலத்தை பறிகொடுத்து, பாதி ஊதியத்தில் மீண்டும் புதிய ஊழியராக பணியில் சேர்ந்தேன். அதனால் எனக்கு ஏற்பட்ட ஊதிய இழுப்பு, பண இழப்பு கோடியைத் தாண்டும். இன்றும்கூட ஓய்வூதியத்தில் அந்த இழப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
ஒரு சிறு இழப்பு என்றாலே செய்கின்ற வேலையை குறைத்துக் கொள்ளும் ஊழியர்கள் மத்தியிலே நான் எப்பொழுதும் போல உற்சாகமாகவே பணியாற்றினேன். ‘நக்சலைட் தீவிரவாதி என்கிற பார்வை நிர்வாகத்திற்கு என் மீது இறந்தபோதிலும், வேலையில் நான் காட்டிய முனைப்பும், தொழில்நுட்ப அறிவில் எனது ஆளுமையையும் மறுக்க முடியாமல் மேற்பார்வையாளராக இருந்த என்னை அதிகாரியாக்கினார்கள். அதிலும் கூட ஓராண்டு மறுத்த பிறகுதான் கொடுத்தார்கள்.
 
எனது திருமணத்தின் போது ஒரு கிராம் நகைகூட நான் வரதட்சணையாக பெற்றது கிடையாது. வேறு எந்தச் சீரையும் கேட்டதும் பெற்றதும் கிடையாது. இன்றும்கூட எனது மகனுக்கு அப்படித்தான் வரன் தேடிக்கொண்டிருக்கிறேன். 
 
ஆசாரக்கோவை போன்ற நீதிநூல்களா எனக்கு வழிகாட்டின? பகுத்தறிவு பேசுகின்ற சிலரிடமும், ஏன் பொதுவுடைமை பேசுகின்ற சிலரிடம்கூட ஒழுக்கக் கேடுகள் மலிந்து கிடக்கும் சூழலில்,  எனக்கான ஒழுக்க நெறிகளை நானே வகுத்துக் கொண்டேன். இவற்றை நான் பாட்டாளி வர்க்கப் ஒழுக்கம் அல்லது பண்பாடு என்று வகைப்படுத்துகிறேன். இத்தகைய வாழ்வியல் முறைக்கு மக்கள் மாறவேண்டும் என்பதே எனது அவா

ஆனாலும், இன்றைய சமூகம் ஒரு சொத்துடமைச் சமூகமாகும். சந்ததிகளின் எதிர்காலம் வளமாக இருக்க வேண்டி, சொத்து சேர்ப்பதற்காகத்தான் பலவகையான ஒழுங்கீனங்களையும் பலரும் செய்கின்றனர். இத்தகைய ஒழுங்கீனங்கள், சொத்துடமைச் சமூகத்தின் ஒரு அவல நிலை.

சொத்துடமைச் சமூகம் ஒழிக்கப்பட்டு, ஒரு பொதுவுடைமைச் சமூகம் மலரும் பொழுது, இன்றைய ஒழுங்கீனங்கள் கண்டிப்பாக காணாமல் போகும். ஆனாலும் புதிய வகையான ஒழுங்கீனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, ஒழுங்கீங்களுக்கு எதிரான ஒரு தொடர் போராட்டம் தவிர்க்க முடியாதது.
 
ஊரான்

whatsapp குழுவில் நண்பர்களினா கருத்துக்கள்:

பாஸ்கரன்: அருமையான கருத்து சேகர் 👏

ராஜசேகரன்தனி மனிதன் ஒழுக்கமே எந்த ஒரு நாட்டையும் உயர்த்தும். சேகர் கொள்கைப் பிடிப்பு மிக்கவர் என நான் நன்கறிவேன். ஒழுக்கம் என்னும் அளவீட்டில் எனக்கு குறைந்த அளவே மதிப்பெண் கிடைக்குமென்றாலும் சேகரைப் போன்றவர்களைப் பார்க்கும் போது ஒரு மரியாதை ஏற்படும்.

LNR

சக்திவேல்: தனிமனித ஒழுக்கம் நூல்கள் படிப்பதால் மட்டும் வருவதல்ல. அது அந்த தனி நபரின் மனசாட்சி மற்றும் நன்னடத்தையால் வருவது . படித்தவர்கள் தான் பெருந் தவறுகளை பயமின்றி செய்பவர்கள் என நிறைய சூழ் நிலைகளில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளேன்.

ஞானசேகரன்: ஆசாரக்கோவை ஒரு பிரிவினருக்கான ஒழுக்கத்தைப் பற்றிய நூல் எனில், அது எப்படி பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாக தமிழறிஞர்களால் ஏற்கப்பட்டது என்று புரியவில்லை...🤔
சேகர்,

நீ கடைபிடிக்கும் ஒழுக்கங்களை யாராவது கற்றுக் கொடுத்தார்களா? அல்லது பிறந்து, வளர்ந்த சூழ்நிலை பயிற்றுவித்ததா?  ஏன் அவற்றை கடைபிடிக்கவேண்டும் என்று தோன்றியது?

இப்படி ஒருவர், தானே உணர்வது, கடைபிடிக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாவது, நல்ல ஒழுக்கம் என்று அறிவது, இப்படி சிலருக்கே, எந்த சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து கல்வி பெற்றாலும் தோன்றுவதைத்தான் இயற்கையான அறிவு அல்லது பிறவி குணம் என்று நம் முன்னோர்கள் கண்டார்களோ?

இயற்கையான அறிவு ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கிறது; ஒரேவிதமான உள்ளீடுகள் இருந்தாலும் ஏற்கும் திறன், சிந்திக்கும் திறன், பகுக்கும் திறன் ஒருவரைப் போல எல்லாருக்கும் ஒருங்கே இருப்பதில்லை.
மிகமிக குறைவான உள்ளீடுகள், வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சிலர் அதிக உள்ளீடுகள், வசதி வாய்ப்புகள் கிடைத்தவர்களை விட சிறந்தவர்களாகவும், அறிவாளர்களாகவும், திறமையானவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.  இவற்றிற்கு காரணம்?

கனகராஜ்: நம் தாய் தந்தையரின் ஒழுக்க உணர்வு, நம்மைச் சுற்றியுள்ள நண்பர்கள், உற்றார் உறவினர்களின் சொற்கள் மற்றும் செயல்கள், நம் ஆசிரியர்களின் போதனை, நம் பாட நூல்கள் மற்றும் பிற நூல்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை நமது அறிவு சிந்தித்து இவை நல்லவைகள் என்று ஏற்றுக் கொண்ட பின்பே அவ்வழியை பின்பற்றுகிறோம். ஆசாரக்கோவை என்ற நூல் ஆசாரத்தை(ஒழுக்கத்தை, நம் அன்றாடம் பின்பற்றும் செயல்களை) விவரிக்கும் நூல். இது ஆசாரிகளுக்கோ, பிராமணர்களுக்கோ ஏற்பட்டது அன்று. அப்படியே அவைகள் இருந்தால் கூட நல்லவைகளை எடுத்துக் கொண்டு பின்பற்றுதல் நல்லதுதானே. ஒருவர் ஒரு நூலை எழுதுகிறார் என்றால் அவருடைய சம காலத்தில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் மற்றும் அவருக்கு சரி என்று படுகிற கருத்தைத்தான் நூலாக படைக்கிறார் என்பது எனது கருத்து. எப்படி இருப்பினும் நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை கைவிடுவோம். "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்"- குறள்.

ஜெயராமகிருஷ்ணன்: ஒவ்வொரு மனிதனும் துணிச்சல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் கண்ணியம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும் அப்படி ஒருவன் இருந்தால் தான் நல்லவைகள் எங்கு இருந்தாலும் யார் சொன்னாலும் அதையே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் மனப்பக்குவமும் உண்டாகும்.

ராமு: அற்புதமான பதிவு.பல நேரங்களில் நினைக்கும் போது மிக சிறிய கிராமங்களில் கூட எதற்காக போலீஸ் ஸ்டேஷன்?மிகச் சிறிய நகரங்களில் கூட நீதிமன்றங்கள் எதற்காக?என்ற எண்ணம் இன்னமும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.அவ்வளவு குற்றங்களா நாட்டில் நடக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.தங்களின் உணவக ஊழல் தடுப்பில் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.நல்ல செயலுக்கு பொய் குற்றச்சாட்டுகளை அபாண்டமாக நிர்வாகமே உண்டாக்கி விடும் போது யாரை குற்றம் சொல்வது என்றே தெரியவில்லை.இது போன்ற பொய்வழக்குகளுக்காகவே  நிர்வாகம் காவல்துறை நீதித்துறை என்று இருக்கிறது என்பது புரிகிறது.நிர்வாகத்தில் நேர்மையாக ஒருவர் கூடவா இருக்க மாட்டார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.நிர்வாகத்தில் இருப்பவர்கள் 95% எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்களாகவே இருக்கும் போது அவர்களும் இதற்கு துணை போவது வேதனையை தருகிறது. நன்றி சார்.

வேலுமணி: நேர்மையான வாழ்க்கை ஆணித்தரமான கருத்து
யதார்த்தமான அணுகுமுறை.
என்றுமே தேவையான வாழ்க்கைமுறையை அழகாக சொல்லியுள்ளீர்கள்.

Friday, July 26, 2024

அம்மனின் தயவால் கறி விருந்து!

ஆத்தா பச்சையம்மன் தயவில்
இன்றைக்கும் ஒரு கறி விருந்து. உறவுகளை ஒன்று சேர்க்கும் உழைக்கும் மக்களின் ஆன்மீக விழா.

சித்திரையில் பொன் ஏர் கட்டி கடலை, கம்பு, சோளம் என, கோடை மழையின் கருணையால் மானாவாரியில் களங்கள் நிறைந்த காலம் மலையேறி காலங்கள் பல ஆச்சு. பருவநிலை மாற்றங்களால் கிராமங்கள் காய்ந்தன, நகரங்கள் செழித்தன.


ஆனாலும், அம்மனின் அருளாளே அனைவரும் வாழ வேண்டி, ஆடியிலே அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள் கிராம மக்கள். 

நச்சுக் கழிவுகளால் ஓசோனும் ஓடைகளும்  பாழ்பட்டுப் போன பிறகு அம்மன்தான் என்ன செய்வாள் பாவம்? பருவம் தவறிப் போனால் கன்னிகளும் காளைகளும் மலடாகிப் போவதைப் போல, பருவநிலை தவறியதால் மண்ணும் அல்லவா மலடாகிப் போகிறது. 

அம்மனின் அருளால் ஆறுதல் அடையலாமே ஒழிய, மானுட ஆற்றல் மட்டுமே  மண்ணைக் காக்க முடியும் என்பதை உணராத வரை வேண்டுதல்களும் நிற்கப் போவதில்லை. 

பகுத்தறிவுப் பிரச்சாரங்களால் அம்மன்களை அப்புறப்படுத்த முடியாது. ஏக்கப் பெருமூச்சு ஏதுமின்றி, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு சமூகம் உருவாகும் பொழுது, ஆன்மீக அம்மன்கள் அவர்களாகவே வானில் கரைந்து போவார்கள். 

அதுவரை நமக்கும் கறி விருந்துகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். 

ஊரான்
*****
விருந்தினராக,
பெரியகரம், திருப்பத்தூர் மாவட்டம்

****

வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த போது நண்பர்களின் கருத்துக்கள்: 

ராமு: நிறுவன மயமாக்காத பச்சையம்மன் மாரியம்மன் பேச்சியம்மன் கோயில்கள் திருவிழாக்கள்தான் இன்னும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை கொஞ்சமாவது இந்த நவீன மயமான காலத்தில் ஏதோ ஒரு நம்பிக்கையை காட்டிக் கொண்டு இருக்கிறது. இது போன்ற அம்மன்களை தங்களின் மூதாதையர்களாகத் தான் நினைத்து வழிபட்டு கொண்டு வருகின்றனர். நேரில் பார்க்க முடியாத கடவுள்களை இது போன்ற அம்மன்களின் மூலமாக கொஞ்ச நேரமாவது நிம்மதியாக இருக்கட்டும்.

Wednesday, July 24, 2024

சடங்குகளில் வயிறு வளர்க்கும் புரோகிதர்கள்!

ஒரு மனிதன் இறந்த பிறகு உயிர் உடலை விட்டுப் பிரிந்தாலும் அவனது ஆத்மா ஆவியாக உலவிக்கோண்டுதான் இருக்குமாம். உயிரோடு இருந்த போது அவன் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்து அவனது ஆத்மாவை நரக லோகத்திற்கு அனுப்புவதா இல்லை சொர்க்க லோகத்திற்கு அனுப்புவதா என்பதை சித்திரகுப்தனை வைத்து தீர விசாரித்து எமதர்மன் தீர்ப்பு எழுதுவானாம்.‌

தீர்ப்பு எழுதிய பிறகு அந்த ஆத்மா சொர்க்கத்தை நோக்கியோ அல்லது நரகத்தை நோக்கியோ பயணிக்கும் போது பல்வேறு லோகங்களைக் கடந்து செல்ல வேண்டுமாம்.‌ அதற்குக் கால அவகாசம் பிடிக்குமாம். ஒரு மாதம் முடியும் போது ஆத்மாவிற்கு அகோரப்பசி எடுக்குமாம். பசியைப் போக்கிக் கொள்ள தனது வீட்டை நோக்கி திரும்பி ஓடிவருமாம். அப்பொழுது படையல் போட்டு சாப்பாடு தயாராக வைத்திருக்க வேண்டுமாம். அங்கே வரும் ஆத்மா சாப்பாட்டில் உள்ள சந்தை மட்டும் உறிஞ்சி வயிற்றை நிறப்பிக்கொண்டு மீண்டும் சொர்க்கத்தை நோக்கியோ அல்லது நரகத்தை நோக்கியோ பயணிக்குமாம்.ஒரு மாதம் கழித்து மீண்டும் வருமாம். மீண்டும் படையல், உணவை உறிஞ்சி வயிற்றை நிறப்புதல், மீண்டும் சொர்க்கத்தை நோக்கிய அல்லது நரகத்தை நோக்கியப் பயணம்….

இப்படியாக ஓர் ஆண்டு முடியும் போது பெரும் பசியோடு ஆத்மா வருமாம் அப்பொழுது பெரும் படையல் போட வேண்டுமாம்இப்படி மாதந்தோறும் ஆண்டு தோறும் ஆத்மாவின் பசியை ஆற்ற போடப்படும் படையலுக்குப் பேர்தான் நீத்தாருக்குக் கொடுக்கும் திதியாம்.

80 வயதில் ஒரு தந்தை இறக்கும் பொழுது அவருடைய மகனின் வயது ஒரு 50 என்று எடுத்துக் கொண்டாலும் அதன் பிறகு அந்த மகன் தனது இறுதிக் காலம் வரை கிட்டத்தட்ட 80 வயது வரை அதாவது 30 ஆண்டுகளுக்கு இறந்த தனது தந்தைக்குத் திதி கொடுக்க வேண்டும். தந்தை இறக்கும் வயதைப் பொருத்து இந்தக் காலம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். இப்படி திதி கொடுப்பது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறதே ஒழிய அந்த ஆத்மாவானது சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைந்ததாகத் தெரியவில்லை‌. 

இப்படியாக ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் ஆத்மாவின் வயிற்றை நிறப்புகிறேன் என்ற பெயரில் புரோகிதப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றை நிறப்பிக் கொள்கிறார்கள்.

திதி கொடுக்கும் அவசியத்தைப் பற்றி விளக்கும் ஒரு புரோகிதப் பார்ப்பானின் வீடியோ ஒன்றை முகநூலில் பார்த்துவிட்டு கீழ்கண்ட கருத்தைப் பதிவு செய்தேன்.


ன்னென்ன கதை விடுறான் பாருங்க பொழப்புக்காக? அடேய்! திதி கொடுக்கிறது ஆத்மாவின் வயிற்றை நிறப்ப அல்ல; உன்னைப்போன்ற பார்ப்பானின் வயிற்றை நிறப்ப நடப்படுவதுதான் திதி. நல்லா உருவாக்கி இருக்கீங்கடா கதையை”.

இதில் என்ன தவறு இருக்கிறது? இதுதானே உண்மை. அதனால்தானே எனது இந்தக் கருத்தின் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.  
திதி கொடுக்கவில்லை என்றால் அதாவதுஆத்மாவிற்கு படையல் போடவில்லை என்றால் குடும்பத்திற்கு பெரும் கேடு விளையுமாம். இந்த அச்சம்தானே பார்ப்பானின் மூலதனம்.

தங்களது பிழைப்புக்காக திதி கொடுப்பது போன்ற எண்ணற்ற சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உருவாக்கி அதன் மூலம் இன்றுவரை வயிறு வளர்ப்பவர்கள் பார்ப்பனர்கள்தானே!

இது குறித்து அம்பேத்கர் அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அடுத்து பார்ப்போம்.
 
தொடரும்.
 
ஊரான்
 
தொடர்புடைய பதிவுகள்