கைநெட்டிக் எனர்ஜி, பொட்டன்ஷியல் எனர்ஜி, நியூமேட்டிக் எனர்ஜி,
தெர்மல் எனர்ஜி,
ஹைடெல் எனர்ஜி,
எலக்ட்ரிக் எனெர்ஜி,
கெமிக்கல் எனர்ஜி,
நியூக்கிளியர் எனர்ஜி
இப்படி
சில பல எனர்ஜிகளை
நானும் படித்திருக்கிறேன்.
ஆனால், இந்த
நெகட்டிவ் எனர்ஜி,
பாசிட்டிவ் எனர்ஜி
எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தானோ?
பி.இ படிக்கிறவரை
அப்படிப்பட்ட எனர்ஜியை
நான் படிக்கவே இல்லையே?
அதுவும்,
நான் படித்தது
தமிழ்நாட்டின் தலைசிறந்த பாலிடெக்னிக்கான
சென்னை சிபிடி
மற்றும்
தமிழ்நாட்டின் தலை சிறந்த
பொறியியல் கல்லூரியான
திருச்சி ஆர்இசி (இன்று என்ஐடி).
ஒரு வேளை இவை,
அதான், இந்த
பாசிட்டிவ் எனர்ஜி,
நெகட்டிவ் எனர்ஜி
சிலபஸ்ல இல்லையா?
இல்ல
எங்க ப்ரொபசர்தான்
நடத்தாமல் விட்டுட்டாரா?
அல்லது
நான்தான்
சாய்ஸ்ல விட்டுட்டேனா? தெரியலையே?
அட, நான்
நாற்பதாண்டு காலம் பணிபுரிந்த
எனர்ஜிக்குப் பேர் போன
பெல் கம்பெனியில்கூட
இந்த
பாசிட்டிவ் எனர்ஜி
நெகட்டிவ் எனர்ஜி பற்றி கேள்விப்பட்டதே இல்லையே?
எங்க ஊரு
மட்டவெட்டு காட்டுல
கருங்காலி மரம்
நிறையவே உண்டு.
பெருசா வளராது.
கொஞ்சம் குட்டையாத்தான் இருக்கும்.
எவ்வளவு வேணாலும்
வறட்சியைத் தாங்கும்.
ஆனா, நல்லா வைரம் பாய்ஞ்ச மரமா இருக்கும்.
ஏர் கலப்பைக்கு ஏற்ற மரம்,
நல்லா ஒழைக்கும்,
நீண்ட நாள் வரும்
என்பது மட்டும்தான்
எனக்குத் தெரியும்;
எங்க விவசாயிகளுக்கும் தெரியும்.
ஆனா,
அந்த மரத்தையே
கொட்டையா உருட்டி
கழுத்துல போட்டா
பாசிட்டிவ் எனர்ஜி வருதுங்கிறானே?
இந்த கண்டுபிடிப்புக்கு
ஏதாவது
நோபல் பரிசு கொடுத்தாங்களா?
நமக்குத் தெரியாமப் போச்சே?
ஏர் உழ டிராக்டர்கள் வந்துவிட்டதால்,
ஏர் கலப்பைக்கு இனி
கருங்காலி தேவைப்படாது என்பதால்,
அவற்றை
கொட்டையாக்கிக் காசாக்குகிறானோ?
சரி,
இவன் விக்கிற கருங்காலி மாலைகள்,
கருங்காலி மரத்தில்தான் செய்யப்பட்டது என்பதற்கு
ஏதாவது சர்வதே தரச்சான்று பெறப்பட்டுள்ளதா?
கருங்காலி மாலை உற்பத்தி செய்யும் ஆலைகள்
ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்றவையா?
இவை பற்றி எல்லாம்
தெரிந்து கொள்வதற்கு
ஒரு கருங்காலி மாலையை கழுத்திலே போட்டுக் கொள்ளணுமோ?
வாழ்க்கையில்
நீ சந்திக்கும் உன்
ஏக்கப் பெருமூச்சுக்குக்
காரணம் என்னவென்று அறிந்து, அதைக் களைவதற்கு
நீ போராட முற்படாத வரை,
நாளை "பீய் மாலை"கூட
உன் கழுத்தை அலங்கரிக்கும்! என்ன, கொஞ்சம் காய வெச்சு உருட்ட வேண்டி இருக்கும்.
மாய வலையில்
நீ சிக்கியிருக்கும் வரை,
மாலைகள் மாறலாம்;
ஆனால், உன் வாழ்க்கை
ஒருபோதும் மாறாது!
இதை, உணர்வதுதான்டா
பாசிட்டிவ் எனர்ஜி.
இதை நீ
உணர்ந்து விட்டால்,
நானும் நம்புகிறேன்,
பாசிட்டிவ் எனர்ஜி
இருக்கு என்று!
ஊரான்
வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த போது நண்பர்களின் கருத்துக்கள் கீழே:
துரைராஜ்: வருங்கால வாழ்க்கை வளத்திற்காக கனவு காணும் மக்களின் நம்பிக்கையை மூலதனமாக வைத்து நடத்தும் வணிகம்.
இது எனது கருத்து.
ஞானசேகரன்: மூலதனம், மூடநம்பிக்கை😡
இத்தகைய வியாபாரம் பெருகுவது, தன்னம்பிக்கை குறைந்து வருகிறது அல்லது விட்டது என்பதையே காட்டுகிறது.
செல்வம்: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் 😟
பெரும்பாலானவர்கள் ஏமாறுவது பேராசையும் மூடநம்பிக்கையும் ஒன்று சேருவதால்.
சுப்பிரமணி: நல்ல கருத்து, இது ஒரு வகையான ஏமாற்று தந்திரம், மேலும் மூட நம்பிக்கை. ஹரித்துவரர் (வட நாடு) கடைக்கு சென்றவர்களுக்கு தெரியும். அதாவது கண்ணாடியால் செய்யப்பட்ட பாசி மாலை எடுத்து, இரண்டு பாசிகளை இருட்டில் (வெளிச்சத்தை அனைத்து) உரசி காட்டுவார். வெளிச்சம் வரும். இதனை கழுத்தில் அணிந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றனர். அன்றைய பாசியின் விலை ரூ 500/. அதனை வாங்கி கழுத்தில் அணிந்தேன். எந்தவித மாற்றம் தெரியலை. உடல் ஆரோக்கியம் அடையும் எனபது என்பது ஒரு வகையான ஏமாற்றுதல். அவர்களது சொல் பேச்சில் நாம் அனைவரும் மயங்கி நம்பி விடுகிறோம். ஒரு வகையான வியாபார தந்திரம். எவரும் புரிந்து கொள்வதில்லை என்பது தான் உண்மை.
இவண்: ஆ சு
இரவிக்குமார்: எனக்கும் இந்த கயிறு / தாயத்து மாலைகளில் நாட்டமோ / நம்பிக்கையோ இல்லை.
பதிவில் மக்களின் மூட நம்பிக்கை / அறியாமையின்பால் கோபமும் ஆவேசமும் கொப்பளிக்கின்றன.
"பீய் மாலை" கொஞ்சம் ஓவர். ஆனால் அதையே கமர்கட் மாலை என்று அமைத்திருந்தால், பொட்டில் அறைந்தார்ப் போல் இருந்திருக்காது. 👏👏
மக்களுக்கு பொதுவாகவே குறுக்கு வழியில் இலக்கை சுலபமாக அடையும் நாட்டம் / அல்லல்களை நீக்கும் எண்ணம் எப்போதுமே இருக்கிறது. இந்த மாதிரி மடத்தனங்களை, சந்தைப் படுத்தும் கயவர்கள், இம்மக்களின் அறியாமை மற்றும் பேராசையை தங்கள் சுய லாபத்திற்கு பயன் படுத்திக் கொள்கின்றனர்.
எம்.ஆர்.செல்வராஜ்: 👌மிக முக்கியமான மற்றும் அவசியமான பதிவு. என்று மடியும் இந்த அடிமைத்தன அவலம்? 🤝