Tuesday, May 3, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1

I

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காகப் பார்ப்பன இந்துத்துவாக் கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டவர்களைத் தமிழக பாஜக தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை தன் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அதேபோல பட்டியலின மக்கட்பிரிவினரில் பிரபலமாக உள்ளவர்களை இழுக்க பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி. அந்த வரிசையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, திரைத்துறை பிரபலங்களான இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட ஒரு சிலரை ஏற்கனவே ஆர்எஸ்எஸ் இந்துத்துவாக் கும்பல் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டது. 

பிரபலமான தலித்துக்களை மட்டும் தங்கள் பக்கம் இழுத்தால் மட்டும் போதாது, பெருவாரியான தலித் மக்களையும் தங்கள் பக்கம் இழுக்கவேண்டும் என்பதற்காக அம்பேத்கரை ஒரு இந்துத்துவா ஆதரவாளராகக் காட்டுவதற்குப் பார்ப்பன பாஜக கும்பல் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காகத்தான் பார்ப்பன சனாதன இந்து மதத்தின் நேரடிப் பிரதிநிதியான மோடியை, இந்து மதத்தையும் அதன் தத்துவத்தையும் தனது இறுதி மூச்சு வரை மிகக் கடுமையாகச் சாடியும், எழுதியும், போராடியும் வந்த அம்பேத்கரோடு ஒப்பிட்டு பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளையராஜாவைக் கொண்டே முகவுரை எழுத வைத்தனர். இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கங்கை அமரன் இந்துத்துவாவிற்கு ஆதரவாக் காட்டுக் கூச்சல் போடும் அளவிற்கு அது தற்போது வேகம் எடுத்துள்ளது. 

ஒரு வேளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமா ஒருவர் இல்லையென்றால், ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் கிருஷ்ணசாமி, இளையராஜா, கங்கை அமரன் போன்ற பட்டியலின பிரபலங்களை அடியொற்றி இந்துத்துவாக் கும்பலுக்கு பலியாகி இருக்கக்கூடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. சனாதன தர்மத்தையும், அம்பேத்கரையும் பெரியாரையும், திராவிடக் கருத்தியலையும் திருமா மிகத்தெளிவாக உள்வாங்கி இருப்பதால்தான் அவர் இந்துத்துவாக் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்கிறார். அவரது தொண்டர்களும் அவருடைய கருத்துக்களுக்கு செவிமடுத்து பார்ப்பன இந்துத்துவாக் கும்பலுக்கு எதிராகக் களமாடி வருகின்றனர்.

இன்றைய அரசியல் சூழலில் அம்பேத்கரின் கருத்துக்களை உள்வாங்கினால் மட்டுமே பார்ப்பனக் கும்பலை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியும்‌. அம்பேத்கரை கொண்டாடுவதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை ஆணித்தரமாக நிறுவ முடியும். அம்பேத்கரின் எழுத்துக்களில் உள்ள ஒரு சில விவர முரண்களை எடுத்துக் கொண்டு அவரை இந்துத்துவா ஆதரவாளராகக் காட்ட முயற்சிப்பது மடமைத்தனம் மட்டுமல்ல, கயமைத்தனமும் ஆகும். 

பாரதிய ஜனதா கட்சியும், பார்ப்பன ஆர்எஸ்எஸ் இந்துத்துவாக் கும்பலும் நிலைநாட்ட விரும்பும் சனாதன தர்மம் எத்தகையது என்பதை, சனாதன தர்மத்தின் மூல நூலான மனுதர்ம சாஸ்திரத்தை, உலகில் வேறெவரையும் விட அம்பேத்கர் மட்டுமே மிக ஆழமாக அலசி, ஆராய்ந்து, இந்துமதம்  என்பது இந்து மக்களிடையே சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை மறுக்கும் ஒரு மக்கள் விரோத மதம் என்பதை மிகவும் ஆணித்தரமாக, 'இந்து என்பது ஒரு மதமே அல்ல' என நிறுவியுள்ளார். 

எந்த அம்பேத்கரை தூக்கிப் பிடித்துக்கொண்டு பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பல் வருகிறதோ அதே அம்பேத்கரின் எழுத்தீட்டிகளைக் கொண்டே பார்ப்பனக் கும்பலின் குடலை உருவி இந்தியாவெங்கும் தொங்க விடுவோம். இனியும் தாமதிப்பது ஆபத்து. இந்துத்துவாவிற்கு எதிராகக் களமாட விரும்புவோரே! அம்பேத்கரைப் படியுங்கள்! பரப்புங்கள்!

இதன் ஒரு பகுதியாக "இந்து மதத் தத்துவம்" என்ற கட்டுரையில் (பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6, இயல் 1, இந்து மதத் தத்துவம், பக்கம்  1 முதல் 127 வரை) அம்பேத்கர் தொகுத்து வழங்கியுள்ளவற்றில் சில முக்கியப் பகுதிகளை மட்டும் அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முழுமையாகப் படிக்க விரும்புவோர், அம்பேத்கரின் முழு கட்டுரையையும் படியுங்கள். படிக்கும்போது மனுதரும சாஸ்திரத்தையும் சேர்த்துப் படியுங்கள்.

ஊரான்

தொடரும்

No comments:

Post a Comment