வாட்ஸ்அப் வருவதற்கு முன்பு நேரில் பார்க்கிற ஒரு சிலருக்கு காலை வணக்கம் சொல்வது வழக்கம். இன்று குறுஞ்செய்தியாகவே அனுப்பி வருகிறோம். ஒரிருநாள் காலை வணக்கம் குறுஞ்செய்தி வரவில்லை என்றால் நண்பர்களுக்குள் ஐயம் எழுகிறது.
'என்ன ஆச்சு, அவரிடமிருந்து காலை வணக்கமே வரவில்லையே' என்று? குறிப்பாக மூத்த குடிமக்களிடம் இந்தக் கவலை உண்டு.
1950 ஆம் ஆண்டு மே மாதத்தில் மனங்கவரும் ஒரு மாலைப் பொழுதில், பம்பாய் காபி பேரேடில் உள்ள பெஞ்ச் ஒன்றின் மீது அமர்ந்துகொண்டு இரண்டு பேர் உரையாடுகின்றனர். ஒருவர் பிரபல பத்திரிகையாளர் முல்க்ராஜ் ஆனந்த். மற்றொருவர் அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கர்.
அம்பேத்கரைப் பார்த்து, 'நமஸ்காரம்' என்கிறார் முல்க்ராஜ் ஆனந்த். அதற்கு 'ஓம் மனி பத்மாயி', அதாவது 'தாமரைகள் மலரட்டும்' என்று புத்த சமய வாழ்த்து சொல்கிறார் அம்பேத்கர்.
சில சொற்களை அதன் பொருள் புரியாமலேயே அப்படியே எடுத்துக் கொண்டு நாம் பயன்படுத்துகிறோம். நமஸ்காரம் என்றால் வணக்கம் என்று பொருள் என்கிறார் முல்க்ராஜ் ஆனந்த்.
அதற்கு, நமஸ்காரம் என்றால் சரண் அடைவதைக் குறிக்கிறது, தாமரைகள் மலரட்டும் என்றால் விழிப்புணர்வுக்கான பிரார்த்தனை என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
உண்மைதான் பழைய வழக்கங்கள் அவ்வளவு எளிதில் மறைவதில்லை. எந்த விதமான சிந்தனையும் செய்யாமல் அவற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்கிறார் முல்க்ராஜ் ஆனந்த். இதில் மட்டுமல்ல எல்லா விசயங்களிலும்தான் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
இப்படி நீள்கிறது அவர்களுடைய உரையாடல்.
அன்று ஒடுக்கப்பட்ட சாதியினர், உயர் சாதியினரைப் பார்க்கும்போது "கும்பிடறேன் சாமி" என்பார்கள். அது அடிமைத்தனத்தை நேரடியாக வெளிப்படுத்துவதால் மெல்ல மெல்ல அது மாறி வணக்கம் என்றானது. 'நமஸ்காரம்' என்று சொல்வதற்கும் 'கும்பிடுறேன் சாமி' என்று சொல்வதற்கும் பாரிய வேறுபாடு இல்லை என்றே தெரிகிறது.
'தாமரை மலர்ந்தே தீரும்!' என்று கூப்பாடு போடுபவர்கள், தாமரையை எங்கிருந்து களவாடினார்கள் என்பதும் இந்த உரையாடலின் ஊடே புரிந்து கொள்ள முடிகிறது.
ஊரான்
செய்தி ஆதாரம்: அம்பேத்கர் நூல் தொகுப்பு: 35
No comments:
Post a Comment