Sunday, September 15, 2024

அருந்ததியர் உள் ஒதுக்கீடு: ஆதரவும், எதிர்ப்பும்!

அருந்ததியர்களுக்கான 3% உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டி,  பட்டியல் சாதியினர் இரு கூறாகப் பிளவுபட்டு, உள் ஒதுக்கீடு ஆதரவு-எதிர்ப்புக் கூட்டங்ளையும் மாநாடுகளையும் நடத்தி வருகின்றனர். 

உள் ஒதுக்கீடு தொடர்பான அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்கக் கூடாது மற்றும் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார வரம்பைக் கொண்டு வரக்கூடாது என்று மட்டும்தான் தாங்கள் பேசுவதாகவும், அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் திருமா தெளிவுபடுத்தினாலும், 

அருந்ததியர்கள் தனியாக 3% இட ஒதுக்கீட்டைப் பெறுவதோடு,  பட்டியல் சாதியினருக்கான 15% இட ஒதுக்கீட்டிலும் போட்டி போட முடியும், ஆனால், அருந்ததியினருக்கான 3% இட ஒதுக்கீட்டில் பள்ளர், பறையர் பிரிவினர் போட்டியிட முடியுமா என பறையர், பள்ளர் சாதிகளைச் சார்ந்தவர்கள் வாதம் செய்கின்றனர். 


இந்தியாவில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் கடந்த பிறகும்,
பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினரே அதிகார மையங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். 
இட ஒதுக்கீட்டுக்கான முழுமையான பலனை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, 
பழங்குடி மக்கள் பெறுவதில் பெரும் பின்னடைவு இன்றும் நிலவுகிறது.

சாதியப் படிநிலையில் ஆகக் கீழே உள்ள பிரிவினர், கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பின்தங்கி இருப்பதனால், அவர்களை கைதூக்கி விடுவதற்கான ஒரு ஏற்பாடுதான் இட ஒதுக்கீடு. 

இதற்காக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, 
பழங்குடி மற்றும் சிறுபான்மை இஸ்லாமிய, கிருத்துவர்கள் என மக்கள் வகைப்படுத்தப்பட்டாலும், அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை  மொத்தம் உள்ள இடங்களில் மேற்கண்ட பிரிவினருக்கு
69% இட ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 31% உயர் சாதியினர் உள்ளிட்ட எல்லா சாதியினருக்குமான பொதுப்பட்டியலாக வரையறுக்கப்பட்டுள்ளது. 69% இட ஒதுக்கீட்டில் பயன்பெறுகின்ற அனைவருமே இந்தப் பொதுப் பட்டியலிலும் போட்டியிட்டு இடங்களைப் பெற முடியும். 

இதனால் இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள், அருந்ததியர்கள்,
பட்டியல் சாதியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், பிற்படுத்தப்பட்ட சாதியினர்
என பலரும் இடங்களைப் பெறுவதால் உண்மையிலேயே அவர்கள் பெறுகின்ற பிரதிநிதித்துவம் 
இட ஒதுக்கீட்டைவிட அதிகமாகவே இருக்கிறது. 

இதே கோட்பாட்டின் அடிப்படையில்தான் பட்டியல் சாதிகளிலேயே ஆகக் கடை கோடியாக இருக்கின்ற அருந்ததியர்களும் பட்டியல் சாதியினருக்கான பொதுப் பிரிவிலும் (15%) போட்டியிடலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் சாதிகளில் மிகவும் கீழ்நிலையில் உள்ள ஒரு பிரிவினரை கை தூக்கி விடுவதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இது போன்றதொரு உரிமை பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து, தனியாகப் பிரிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குக் கிடையாது. அதாவது  பிற்படுத்தப்பட்டோருக்கான 30 % இட ஒதுக்கீட்டை பொதுப் பட்டியலாகக் கருதி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அதில் போட்டியிட முடியாது.

இட ஒதுக்கீடு பெறுபவர்கள் பொது பட்டியலுக்குள் வரக்கூடாது என்று பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் சொல்வதற்கும், பட்டியல் சாதி என்கிற பொதுப் பிரிவில் அருந்ததியர்கள் வரக்கூடாது என்று பள்ளர், பறையர் உள்ளிட்ட பிரிவினர் சொல்வதற்கும் பாரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. 

மேற்கண்ட வாதங்களை முன்வைத்துதான், பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்  சாதியினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் என்று வகைப்படுத்தி தங்களுக்கென தனியாக 10% இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டனர் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பழங்குடி பிரிவைச் சார்ந்த இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்கும் எவரும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருந்தது என்பது ஒரு வரலாற்று பிழை.

ஒரு காலை இழந்தவனுக்கு கொடுக்கப்படும் சலுகையும், இரண்டு கால்களையும் இழந்தவனுக்குக் கொடுக்கப்படும் சலுகையும் ஒன்றாக இருக்க முடியாது. இரண்டு கால்களை இழந்தவனுக்கு சற்று கூடுதலாகத்தான் சலுகை வழங்க வேண்டும்‌. அப்பொழுதுதான் அவன் மேலெழுந்து வர முடியும். 

இதே அளவுகோலின்படிதான், சாதியப்படிநிலையில் ஆகக் கடைக்கோடியில் உள்ள பிரிவினருக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் அவர்கள் பொதுப்பட்டியலிலும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதுதான் மிகவும் கீழ் நிலையில் உள்ளவர்களை கைதூக்கி விடுவதற்கு ஏற்ற சமூக நீதிக் கோட்பாடாக இருக்க முடியும்.

சாதியப்படிநிலையில்
பள்ளர் மற்றும் பறையர் சாதியினருக்குக் கீழாக உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினர்தான் அருந்ததியர் என்பதை மறுக்க முடியுமா? 

சாதியப்படிநிலையில் ஆகக் கீழ் நிலையில், வஞ்சிக்கப்படுகின்ற மக்களுக்கு கூடுதல் சலுகை கொடுத்து அவர்களை கை தூக்கி விடுவதும், குறிப்பிட்ட அளவு அவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முன்னேற்றம் காணும் வரை மேற்கண்ட இட ஒதுக்கீட்டைத் தொடர்வதும்தான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும். 

மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கும் போதுதான், சாதிய இடஒதுக்கீடு தொடர்பான சாதியப் பிணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானதாக இருக்கிறது. இட ஒதுக்கீடு கோருபவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு ஒன்றிய அரசை நிர்பந்தம் செய்கின்ற போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டி உள்ளது.

தற்போதைய சமூக கட்டமைப்பில் இட ஒதுக்கீட்டின் மூலமாக எல்லா மக்களும் கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முன்னேறிவிட முடியாது என்கிற கள எதார்த்தத்தையும் நாம் மறந்து விடக்கூடாது. 

சில பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு இட ஒதுக்கீடு பிரிவுக்குள்ளும் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களே இட ஒதுக்கீடு சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கிறார்கள் என்று அந்தந்தப் பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், பொருளாதார வரம்பைக் கொண்டு வர வேண்டும் என்றுகூட போர்க்கொடி உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் நாம் மறுதலித்து விட முடியாது. இத்தகைய கோரிக்கைகள் வர்க்கப் போராட்டம் என்கிற வடிவத்தை நோக்கிகூட நகருவதற்கான வாய்ப்புகளும் உருவாகக்கூடும்.

குறிப்பு: கிடைக்கின்ற தரவுகள் மற்றும் நடைமுறை அனுபவங்களில் இருந்து எனது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். மாற்றுக் கருத்து உடையவர்கள் தாராளமாக விவாதிக்கலாம். ஒத்தக் கருத்தை நோக்கி பயணிப்பதற்கு அது உதவும்.

ஊரான்

No comments:

Post a Comment