Wednesday, October 16, 2024

இலக்கியத்திற்கு வடார்க்காடு தூரமா? - தொடர் 2

செய்யுள் வடிவில் உள்ள இலக்கியங்களின் மொழிச் செழுமையும், வளமையும் இன்றைய நாவல்களில் இருப்பதில்லை என்பதனால் அவை இலக்கியங்கள் இல்லை என்று யாரும் அவற்றை ஒதுக்குவதில்லை. ஒருவரின் எழுத்துக்களை அச்சாக்கி நூலாகக் கொண்டு வந்தால்தான் அது இலக்கியப்  படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
 
எல்லாம் டிஜிட்டல் மயமாகி வரும் இன்றைய நவீன உலகில், பலரது படைப்புகள் அச்சுக்கு வராமலேயே சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் உலகிலும் பகிரப்பட்டு மென் நூலாக பலரால் படிக்கப்படுகிறது. இத்தகையப் படைப்புகள் இலக்கியத்திற்குள் அடங்குமா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
 
பாரதியும், கல்கியும்
சாண்டில்யனும், சுஜாதாவும் கி.ராஜநாராயணனும், ஜெயகாந்தனும்
அசோகமித்திரனும், பாலகுமாரனும்,
சிவசங்கரியும்-அனுராதா ரமணனும்,
வாலியும், வைரமுத்துவும்,
பெருமாள் முருகனும், சு.வெங்கடேசனும்
சாருநிவேதிதாவும், ஜெயமோகனும்
என இவர்களைப் போன்ற சிலரை மட்டும்தான் இலக்கியவாதிகள் என தமிழ் இலக்கிய உலகம் அங்கீகரிக்கிறது, கொண்டாடுகிறது

ஆனால், இதில் வேதனை என்னவென்றால் இலக்கியம் என்றாலே உலக அளவில் முதலில் வருவது தமிழ்தான் என்று ஒரு பக்கம் பழம்பெருமை பேசினாலும், இன்று இந்திய அளவில் இலக்கியப் பங்களிப்பு செய்யும் முதல் 75 எழுத்தாளர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை என்பதுதான். 

நிற்க, கதை, நாவல்களைப் தாண்டி, சமூகத்தின் இழிவுகளை, அரசின் கொள்கைகளை விமர்சித்து எழுதும் எழுத்துக்களை எதில் சேர்ப்பது? இந்த வரிசையில் ஏராளமாக எழுதிக் குவித்த அம்பேத்கரும், பெரியாரும் இலக்கியவாதிகள் இல்லையா? இன்றும் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கும் கொளத்தூர் மணி, வாலாசா வல்லவன், முகிலன், பொழிலன், மருதையன், கோவன் உள்ளிட்ட படைப்பாளிகள் இலக்கியவாதிகள் இல்லையா? 

வரலாற்று அதிர்ச்சியை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை அம்பலப்படுத்தும் கவித்துவமான உரைநடைக்காகத்தானே தென் கொரியாவின் ஹான் கங் இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுகிறார். 
 
பலரது படைப்புகள் இலக்கியங்கள் என்று சொல்லப்பட்டாலும் அவைகள் படிக்க, ரசிக்க, பொழுதுபோக்க என்பதோடு முடிந்து போகின்றன. பட்டுக் கோட்டைப் பிரபாகரைப் போல படித்துவிட்டு எடைக்குப் போடுவதற்கு அல்ல இலக்கியங்கள்.
 
1980 இல் வெளியான ஜம்பு திரைப்படத்தில், ஜெயமாலாவின் கணநேர ஆடைவிலகளை திரைகளில் கண்டு ரசித்த அடுத்த நொடியே திரையரங்குகளை விட்டு வெளியேறியதைப் போல, இலக்கிய நாயகிகளின் அவயங்களை நாவல்களில் அங்குலம் அங்குலமாய் வர்ணிக்கும் வரிகளை மட்டுமே அசைபோட்ட வாசகர் கூட்டமும் இருந்ததுதானே?
 
இன்று கதை நாயகிகளே அனைத்தையும் அப்பட்டமாய் திரைகளில் காட்டி விட்டதால் வரிகளுக்கு இங்கே வேலை இல்லாமல் போனது‌. ‘சரோஜாதேவிகளும், பட்டுக் கோட்டைகளும் சீந்துவாரின்றி ஒதுக்கப்பட்டது இதனால்தானோ?
 
மக்களின் துன்பங்களும் துயரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த அதே வேளையில் மக்களின் பாடுகளைப் பேசிய படைப்புகளும் தோன்றாமல் இல்லை.
 
இலக்கியங்கள் மனித அவலத்தை பேசுவதோடு மட்டும் நில்லாமல் அவற்றைக் களைவதற்கான தூண்டுதலையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்;  இன்றும் உலகை வலம் வரும் மக்சிம் கார்க்கியின் தாய் நாவலைப் போல.
 
ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அப்படி ஒருவரை அடையாளம் காண்பது அத்திப்பூவாய் அல்லவோ இருக்கிறது?
 
திரைப்படச் சுருளையெல்லாம் ஒரு தீக்குச்சிக்குத் தின்னக்கொடுப்போம்என்று தீவிரம் காட்டியவர்கள் கடைசியில் திரைப்படச் சுருளுக்குள் அடைக்கலமானார்கள்,
 
புலமையையும் வறுமையையும் பிரிக்க முடியாத பாணனைக் கண்ட இலக்கிய உலகம்தான் இன்று கோடிகளில் புரளும் ஒரு சில கோமான்களைக் காண்கிறது. அச்சில் ஏற்றினால் ஆயிரங்களையும், மேடையில் முழங்கினால் பல்லாயிரங்களையும் விழுங்கும் இலக்கிய வியாபாரிகளும் இங்குதான் உள்ளனர். இன்று காசு கொடுத்தால்தான் இலக்கியச் சுவையையும் ரசிக்க முடியும். இலக்கியம் வியாபாரப் பொருளாய் மாறியதன்றோ

நூல்களின் விலை ஐம்பதோ, நூறோ என்றால் அடித்தட்டு மக்களாலும் வாங்கப்படும். ஆனால் அதுவே ஆயிரங்களில் என்றால் யாரால்தான் வாங்க முடியும்? சிறிதாய் எழுதினால் எல்லோரையும் சென்றடையுமே? ஏன் பெரிது பெரிதாய் எழுத வேண்டும்? விருதுகளுக்கும் விளம்பரத்துக்கும் இவை பயன்படுமே ஒழிய, எளியோரை ஒருக்காலும் சென்றடையாது. எளியோர் இல்லாமல் எதைத்தான் மாற்ற முடியும்?
 
தொடரும்
 
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment