ஆர் எஸ் எஸ் ரவி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் "திராவிட" என்ற சொல் வரும் வரியைப் புறக்கணித்ததையொட்டி நடைபெறக்கூடிய விவாதங்கள், குறிப்பாக எதற்காகத் திராவிடத்தை நாம் தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற கோணத்தில் நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட பலர் ஆர் எஸ் எஸ் ரவிக்கு ஜால்ரா போட்டு வருகின்றனர்.
முதலாளித்துவ சுரண்டலுக்கு, ஒடுக்கு முறைக்கு எதிராகப் பேச வேண்டுமானால் மார்க்சியம் பேசியாக வேண்டும். காரணம் மார்க்சியம் முதலாளித்துவ சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒரு கோட்பாடு.
அதே போல, பார்ப்பனிய மேலாண்மை, சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை, மொழி-பண்பாட்டு ஒடுக்கு முறைக்கு எதிராகப் பேச வேண்டுமானால் திராவிடத்தைப் பேசியாக வேண்டும். ஏனென்றால் திராவிடம் என்பது பார்ப்பன எதிர்ப்பின் ஒரு அடையாளம்.
'தமிழ்நாட்டில் மட்டும்தானே திராவிடம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், கேரளாவில் ஆந்திராவில், கர்நாடகாவில் அல்லது வேறு எங்கேயாவது திராவிடம் பற்றி பேசுகிறார்களா?' என்ற ஒரு வாதத்தை அப்பாவித்தனமாக சிலர் முன்வைக்கின்றனர். ஏன் மார்க்சியத்தைக் கூடத்தான் நம்மில் சிலர் பேசுவதில்லை. சிலர் பேசவில்லை என்பதற்காக கம்யூனிசம் இல்லை என்று ஆகிவிடுமா? அதுபோல, திராவிடம் குறித்து அங்கே பேசவில்லை, இங்கே பேசவில்லை என்பதனால் திராவிடக் கருத்தியல் இல்லை என்று ஆகிவிடுமா?
எப்படி, கம்யூனிசம் பேசுவதனால் தமிழனின் அடையாளமும், தமிழ் மொழியின் மேன்மையும் குறைந்து விடாதோ, அதுபோல திராவிடம் பேசுவதனால் தமிழனின் அடையாளமும் தமிழ் மொழியின் மேன்மையும் குறைந்து விடாது. கடந்த நூறு ஆண்டுகளில் எதுவும் குறைந்து விடவும் இல்லை.
இந்த எளிய உண்மையைக்கூட புரிந்து கொள்ளாமல், சிலர் ஆர் எஸ் எஸ் ரவிக்கு ஜால்ரா போடுவது பார்ப்பனியத்துக்குப் பல்லக்குத் தூக்குவதேயாகும்.
கம்யூனிசத்தைக் கைவிடச் சொல்வது எப்படி முதலாளிகளுக்கு எடுபிடி வேலை செய்வதோ, அதுபோல திராவிடத்தைக் கைவிடச் சொல்வது பார்ப்பனியத்துக்கு எடுபிடி வேலை செய்வதாகும். இதைத்தான் சீமான் உள்ளிட்ட சிலர் செய்யச் சொல்கின்றனர்.
எனவே, எடுபிடிகள் மட்டுமே திராவிடத்திற்கு எதிராகப் பேசிக் கொண்டிருப்பர்.
திராவிடத்துக்கு எதிராகப் பேசுவோருக்கு வரலாறும் தெரியவில்லை. வாழ்வியலும் தெரியவில்லை. சீமானைப் போல வரலாறும் வாழ்வியலும் தெரிந்தே பேசுவோர் பார்ப்பனியத்திற்கு விலை போனவர்கள். வரலாறும் வாழ்வியலும் தெரியாமல் அப்பாவித்தனமாக பேசுவோருக்கு திராவிடம் குறித்த வரலாற்றுத் தரவுகளையும், வாழ்வியல் முறைகளையும் சொல்லித்தர வேண்டும்.
வாழ்வியல் முறைகளில்தான் பார்ப்பன மேலாதிக்கமும், சாதியும், தீண்டாமையும் ஊடுருவி இருக்கிறது என்பதை உணரும் மானமுள்ள எவனும் திராவிடத்தைக் கைவிடச் சொல்ல மாட்டான். வரலாறும் இதைத்தானே உணர்த்துகிறது.
கம்யூனிசம் பேசுகின்ற கட்சிகள்கூட நாளடைவில் சீரழிந்து கம்யூனிசத்தைக் கைவிட்டு சீர்திருத்தவாதக் கட்சிகளாக சீரழிந்து போனால் கம்யூனிசம் இல்லை என்று ஆகிவிடுமா? அதுபோல திராவிடம் என்ற பெயரை வைத்துள்ள கட்சிகளில் உள்ளவர்கள் பிழைப்புவாதிகளாகவும், மக்கள் விரோதிகளாகவும் சிலர் இருக்கிறார்கள் என்பதற்காக திராவிடக் கருத்தியல் இல்லை என்று ஆகிவிடுமா?
நபர்களை, கட்சிகளை வைத்து தீர்மானிப்பதல்ல கம்யூனிசமும் திராவிடமும். அது கொண்டிருக்கிற கொள்கையை வைத்து தீர்மானிப்பது.
எப்படி முதலாளித்துவ சுரண்டல் நீடிக்கும் வரை கம்யூனிசமும் பேசப்பட்டுக் கொண்டே இருக்குமோ அதுபோல பார்ப்பனிய மேலாதிக்கம் நீடிக்கின்ற வரை திராவிடமும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.
வர்க்க உணர்வு உள்ளவர்கள் மார்க்சியம் பேசுகிறார்கள். சொரணை உள்ளவர்கள்
திராவிடம் பேசுகிறார்கள். சொரணையற்றவர்களுக்கு இதெல்லாம் எப்படி புரியும்?
யார் கண்டது, ஒருவேளை, நாளை பார்ப்பனிய ஒடுக்கு முறைக்கு ஆளாக நேர்ந்தால், சீமானின் பிள்ளையேகூட தந்தையை புறங்கையால் தள்ளிவிட்டு திராவிடத்தைத் தூக்கிப் பிடிக்கும் காலம் வரலாம்.
ஊரான்
No comments:
Post a Comment