Tuesday, November 12, 2024

மனக் களைப்பும் தூக்கமின்மையும்!

நெளித் தகடுகளால் வேயப்பட்ட கூரை பனிமழையில் உறைந்து கிடந்தது. பத்து மணிக்குப் படுத்தால் அலாரம் வைத்தாற் போல ஐந்து மணிக்கு எழுவது அறுபதுகளைக் கடந்தவர்களுக்கு இயல்புதானே?


குறுக்குக் கழியில் தொங்கிய மின்விசிறி கூரையின் குளிர்ச்சியை சால்வைக்குள் லேசாய் நுழைத்து, மேனியைத் தொடுவதை  விழித்த பிறகுதான் உணர முடிந்தது. இது பனிக்காலம் இல்லைதான். என்ன செய்ய? மழை வரவில்லை என்பதற்காக மார்கழி காத்திருக்குமா என்ன?  

உழைப்பின் களைப்பில் உடல் ஓய்வை நாடினாலும், மனம் இடறினால் உறக்கமும் ஒண்டாது. ஆழ்ந்து உறங்க வேண்டுமென்றால் உடலும் மனமும் பேசும் மொழி ஒன்றாக இருக்க வேண்டுமே?

இது சாத்தியமா? சிரமம்தான். மனைவி மக்கள், உற்றார் உறவினர், பணியிட ஊழியர்கள், பொதுவெளியில் புதுப்புது மனிதர்கள், சமூகப் பிரச்சனையில் தலையிடுவோருக்கு கட்சிக்காரர்கள்-இயக்கத் தோழர்கள் என வாழும் சூழலில்தான் எத்தனை எத்தனை பிரச்சனைகள்? முற்றும் துறந்தவர்கள் எவரும் இல்லையே, இறந்தவர்களைத் தவிர? மனக் களைப்புக்கு ஆளாகதவர் இவ்வுலகில் எவரும் உண்டோ?

மனக் களைப்பைப் போக்கும் ஆற்றலின்மையால்தானே ஆன்மீகம், தியானம் என்கிறான். இவை எல்லாம் கதைக்குவதாது என்பதால்தான் தம் அடிக்கிறான், தண்ணி அடிக்கிறான். தகாத உறவுக்கும் ஆட்படுகிறான்

இப்படி மனக் களப்பைப் போக்க முயன்றவன், உடல் கெட்டு உறவுகளின் வெறுப்புக்கும் ஆளாகிறான்பிறரின் வெறுப்பால் மனக் களைப்பு இரட்டிப்பாகிறது. இறுதியில் கல்லறை உறக்கம் மட்டும்தான் அவனது மனக் களைப்புக்கு முடிவு கட்டுகிறது.

சும்மா இருந்தாலே தூக்கம் வராது இப்பொழுது கைபேசி வேறு அவனைக் கவ்விக் கொண்டதால் கல்லறை தூரமும் குறைந்து கொண்டே வருகிறது. 

சமூகமே கொலைக்களமாய் இருக்கும் போது ஆன்மீகம், தியானம், தம், தண்ணி, தகாத உறவு இல்லாதவன் மட்டும் தப்பிவிட முடியுமா என்ன? இங்கே, ஏதோ ஓர் அளவுக்கு உதவுவது மருத்துவம் மட்டும்தான். மனக் களைப்புக்கு பெரிதாய் மருந்தில்லை என்றாலும், உடல் சிதைவுக்கு உரிய மருந்தை முறையாக எடுத்துக் கொண்டால், கல்லறை உறக்கத்தைத் தள்ளிப் போடலாம்.

குடும்பப் பாரத்தைச் சுமப்பவனுக்கு ஒன்று என்றால், ஓராயிரம் பேர் உதவிக்கரம் நீட்டும் இவ்வுலகில், குடும்பப் பார்த்தைச் சுமந்தவனுக்கு ஓராயிரம் பிரச்சனை என்றாலும், உதவிக்கரம் நீட்ட ஓரிருவர் கிடைப்பதே அரிதிலும் அரிதுதானே? ஒருவேளை அவன் உண்டியல் கணமாக இருந்தால் ஒரு சிலர் உதவக்கூடும்.

நோய் பலவாயினும் எண்பதைத் தொடுவது சாத்தியம்தான் என்றாலும், அறுபதைத் தாண்டிய பலர் உரிய பராமரிப்பின்றி கல்லறை நோக்கி பயணிப்பது‌ அன்றாட நிகழ்வாகிப் போனது. அலுவலக நண்பர்கள், உற்றார் உறவினர், தோழர்கள் என நாம் நேசித்த, நம்மை நேசித்த சிலரின் மரணச் செய்தி, நலமோடு இருப்போரின் மனதையும் கலங்கடிக்கத்தானே செய்கிறது? ஒரு வேளை பாசமும் நேசமும் இல்லை என்றால் மனம் கலங்காமல் இருக்குமோ? இப்படி இருப்போரும் இவ்வுலகில் இருக்கத்தானே செய்கின்றனர்.

தொடரும்

ஊரான்

No comments:

Post a Comment