தனது
தாயாருக்குத் தவறான சிகிச்சை அளித்ததாகக் கருதிய ஒரு இளைஞன், ஒரு மருத்துவரைக் கத்தியால் குத்திய சம்பவம் குறித்த விவாதம், தெலுங்கு பேசும் மக்கள் பற்றி, ஒரு நடிகையின் சர்ச்சைப்
பேச்சால் மடைமாற்றப்பட்டு விட்டது.
ஆட்கள்
பற்றாக்குறை மற்றும் பணிச்சுமை காரணமாக, மருத்துவர்கள் பெரும் நெருக்கடிக்கு
உள்ளாகிறார்கள் என்று மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டிப்பவர்கள் கருதுகின்றனர்.
அடுத்தத்
தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதைத்தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத எதிர்கட்சிகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூப்பாடு போடுகின்றன.
ஆளுகின்ற
அரசு எதுவாயினும், அதற்கு எதிராகப் பேசுவதுதான் அரசியல் என்று கருதும் சில முற்போக்காளர்கள், இது மருத்துவக்
கட்டமைப்பின் மீதான தாக்குதல் என மார்க்சிய முலாம் பூசி கத்திக் குத்தை நியாயப்படுத்துகின்றனர்.
அவலங்கள் எங்குதான் இல்லை?
அரசுப்
பள்ளிக் கல்லூரிகளில் படிப்புத் தரமாக இல்லை என்று கருதும் நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினர், கான்வெண்டுகளையும், தனியார் கல்லூரிகளையும்தான் நாடுகின்றனர். ஏழை எளிய
மக்கள் இதுவாவது கிடைக்கிறதே என்று அரசுப் பள்ளிக் கல்லூரிகளில் திருப்தி அடைகின்றனர்.
தரமான கல்வியை அரசே தரவேண்டும் என்று எத்தனைக் குரல்கள் எழுகின்றன?
கெட்டுக்
குட்டிச்சுவரான ஊராட்சி நகராட்சிகளின் செயல்பாடுகளால் ஊரே கெட்டு நாறினாலும், மூக்கை
பொத்திக் கொண்டு வாழப் பழகிக் கொண்டோமே ஒழிய கெட்ட நாற்றத்திற்கு எதிராக நாம் சீற்றம் கொள்கிறோமா?
பிறப்பு-இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை நாடும் பொழுது, நம் 'பாக்கெட்டி'லிருந்து பணத்தை அரசு ஊழியர்கள் உருவும் பொழுது, நமது ஆத்திரத்தை அடகு வைத்துவிட்டுத்தானே வெளியே வருகிறோம்.
வளர்ச்சித்
திட்டங்களுக்காக அரசு ஒதுக்கும் நிதியை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக,
‘கிணற்றைக் காணோம்’
கதையாக கபளீகரம் செய்வதை அறிந்தாலும் நாம் அமைதியாகத்தானே இருக்க விரும்புறோம்!
அரசுக் கட்டமைப்பை மேலும் சீர்குலைக்கும் ஒப்பந்த முறை
மருத்துவம்
மட்டுமல்ல, கல்வி, வேளாண்மை, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசின்
அனைத்துக் கட்டமைப்புகளும், அது தோன்றிய காலத்திலிருந்தே கெட்டுச்
சீரழிந்து மக்களுக்கு எதிராகத்தான் இருந்து வருகின்றன. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவை மேலும் மேலும் சீரழிந்து வருகின்றன. மருத்துவம், துப்புறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அயலகப் பணி (out sourcing) என்ற வகையில் ஒப்பந்த முறைக்கு (contract) மாற்றப்பட்டு விட்டதால், ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்டு, மிகக் குறைந்த ஊதியத்தில் அவர்கள் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர்.
மருத்துவச் சேவை உள்ளிட்ட சில துறைகளில் மிகக் குறைந்த ஊதியத்திற்குப் பணியாற்றக் கூடியவர்கள் ஒப்பீட்டளவில் திறமை குறைவானவர்களாக இருப்பதால் சேவையின் தரமும் குன்றித்தான் இருக்கும். அரசுக் கட்டமைப்பு சீர்குலைந்து போவதற்கு இந்த ஒப்பந்த முறை மிக முக்கியக் காரணியாக இருக்கிறது.
தரமற்ற சாலைகள், பாலங்கள், கட்டடங்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள், சிறு மழைக்கே சிதிலமாகிப் போவதற்குக் காரணம் மேற்கண்ட பணிகள் அனைத்துமே ஒப்பந்த முறையில் நிறைவேற்றப்படுவதால்தான். ஒப்பந்த முறை என்பதே கொள்ளையடிப்பதற்கான ஒரு வழிமுறைதானே ஒழிய திட்டங்களை அதற்குரிய தரத்துடன் நிறைவேற்றுவதற்கான ஒன்றல்ல. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என்கிற இந்த முக்கூட்டு கும்பல் ஒரு முடிச்சவிழ்க்கும் கூட்டம் என்றால் அது மிகையல்ல. ஆட்சிகள் மாறினாலும் இந்தக் கும்பலின் களவாணித்தனம் மட்டும் மாறுவதே இல்லை.
ஒப்பந்த முறை பல்வேறு துறைகளில் தொடர்ந்து புகுத்தப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் எல்லா துறைகளுமே மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். ஒப்பந்த முறையை ஒழித்துக் கட்டாத வரை அவலங்கள் தொடரவே செய்யும்.
யார்தான் இங்கே யோக்கியர்கள்?
அதிகாரிகளும்,
அரசியல்வாதிகளும்
லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு முடிந்தவரை பணத்தைச் சுருட்டிக்கொண்டு
வாழ்க்கையில் தாங்கள் ‘முன்னேறுவதை’ மட்டுமே ஒரே இலக்காகக் கொண்டு செயல்பட்டு
வருகின்றனர்.
நேற்று
வரை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளால் தனிப்பட்ட முறையில்
வஞ்சிக்கப்பட்டு ஆத்திரம் கொள்ளும் ஒருவன், தான் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது ஒரு அரசு ஊழியராகவோ மாறும் பொழுது, எதைக் கண்டு ஆத்திரம் கொண்டானோ அதையேதான் இவனும் செய்ய முற்படுகிறான்.
முறைகேடாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புக் கிட்டாதவர்கள் மட்டுமே இங்கே தங்களை நல்லர்களாகக் காட்டிக்கொள்ள முடிகிறது. வாய்ப்புக் கிட்டியவுடன் முடிந்தவரை காசு பார்ப்பதையே கடமையாக்கிக் கொள்கின்றனர். இதுதான் கள எதார்த்தம். சொத்துடமைச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் பண்பாட்டு உளவியல் இதுதான்.
தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் யார்?
அரசோடு
தொடர்புடைய துறைகளில் மட்டுமல்ல,
தனிப்பட்ட வாழ்க்கையிலும் அடுத்தவர் சொத்தை ஆட்டயப் போடுவது,
வாங்கியப் பணத்தைக் திருப்பித் தராமல் ஏமாற்றுவது, வேலை செய்யும் இடத்தில் முறைகேடு மற்றும் நம்பிக்கைத் துரோகம் செய்வது,
கட்டப் பஞ்சாயத்து மூலம் – பிணக்குகளுக்கு நீதியை
நாடினாலும் - காசு பார்ப்பது, ரியல்
எஸ்டேட் மோசடி, வரதட்சணை என ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில்
அநீதியின் அணியில்தானே இருக்கிறார்கள். காசு, பணம், துட்டு யாரைத்தான் விட்டு வைக்கிறது? வன்மம் இல்லாத குடும்பத்தையோ, தெருவையோ, ஊரையோ இன்று நம்மால் பார்க்க முடிகிறதா? இவை எல்லாம் சமூகக் கட்டமைப்பின் அவலம் இல்லையா?
மேற்கண்ட அவலங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது எது? சொத்துதானே? சொத்தை அடைவதற்காகத்தானே இத்தனை
அட்டூழியங்கள்.
சேவை குறைபாடு
மருத்துவச் சேவையில் ஏற்படும் குறைபாட்டைச் சொத்துடமையோடு தொடர்புபடுத்துவது சரியா என்று நீங்கள் கேட்கக் கூடும். கட்டமைப்பு வசதி குறைபாடுகளால் சேவைக் குறைபாடு ஏற்படுகிற அதே வேளையில், தனிப்பட்ட நபர்களின் தன்னலம் காரணமாகவும் ஏற்படுகிறது. இந்தத் தன்னலம் பொருளாதாரம் சார்ந்ததாகவோ அல்லது அங்கீகாரம் சார்ந்ததாகவோகூட இருக்கக்கூடும்.
கட்டமைப்பு குறைபாடுகளால் உரிய முறையில் சேவை செய்ய முடியவில்லை என்றால், கட்டமைப்பு வசதி கோரி, சேவை செய்கிறவர்கள் குரல் எழுப்ப வேண்டும். இருப்பதை வைத்துக் கொண்டு ஒப்பேற்ற முயன்றால் சேவை குறைபாட்டிற்கு அவர்களும் பொறுப்பானவர்கள் ஆகிறார்கள்.
பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதற்காகத் தங்களது கடமையைச் சுருக்கிக் கொள்வோரும் உண்டு. பதவி உயர்வு என்பது அளிப்பதோடு மட்டுமன்றி அது கூடுதல் ஊதியம் என்ற வகையில் பணத்தோடும் தொடர்புடையது. மேலும் எங்கே கையூட்டு கிடைப்தற்கு வாய்ப்பு இல்லையோ அங்கெல்லாம் சேவைக் குறைபாடுகளைப் பார்க்க முடியும்.
கத்திதான் தீர்வா?
அரசு மற்றும்
சமூகக் கட்டமைப்பு நெருக்கடியினால் பாதிக்கப்படுகின்ற ஒவ்வொருவரும் கத்தியைக் கையில்
எடுத்துத் தன் கண்முன்னே உள்ள நபரைத் தாக்குவதன் மூலம் தனது ஆத்திரத்தை வேண்டுமானால்
தணித்துக் கொள்ளலாம். இப்படித்தான் பலரும் நடந்து கொள்கின்றனர். முன்பின் யோசிக்காமல் செய்யும் ஒரு வகை 'லும்பன்' பண்பாடு இது.
இதன்
விளைவுதான் நாட்டில் இன்று நாம் காணும், கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்த கணவன் படுகொலை-மாமியார் படுகொலை, திருமணம் செய்ய மறுத்த பெண் ஆசிரியர் படுகொலை, சொத்துத் தகராறில் தந்தை படுகொல-அண்ணன் தம்பிகளுக்கு இடையில் வெட்டுக் குத்து போன்ற பல்வேறு வன்முறைகள்.
அநீதியை
ஓரங்கட்டி, நீதிக்காகவே வாழுவோர் எத்தனை பேர்?
இவர்களைப் பட்டியலிட்டால், எந்த அரசியல்
பின்னணியும் இல்லாத ஒரு சிலரும் மற்றும் பொதுவுடமை கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு
களப்பணியில் ஈடுபடும் மிகச் சிலரும் மட்டுமே பட்டியலில் இடம் பிடிப்பர். இங்கும்கூட தொழிலாளர்களுக்கான சங்கம் என்ற பெயரில் சந்தா வசூல் செய்து ஏப்பம் விடுவது மற்றும் தொழிலாளர்கள் பணிபுரியும் முதலாளிகளிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் கையூட்டுப் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களின் நலனை அடகு வைப்பது போன்ற செயல்களில் சில தொழிற்சங்கத் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
எல்லா மனிதர்களையும் சொத்து என்கிற பேய் பல்வேறு வடிவங்களில் பிடித்தாட்டுகிறது. கடுமையான சட்டங்கள் மூலமாகவோ, ஒழுக்க நெறிகளை மற்றும் ஆன்மீகத்தைப் போதிப்பதனாலேயோ மனிதர்களை பிடித்தாட்டும் இந்தப்பேயை விரட்டவே முடியாது.
நமது நாடு வளமான நாடுதான். ஆனால் இந்த வளம் எல்லோருக்கும் பயன்படுவதைவிட முறைகேடாக வாழுவோருக்கு மட்டுமே பயன்படுகிறது.
எனவே, நிலம், வீடு, தங்கம் உள்ளிட்ட வளங்களை, சொத்துக்களை அரசுடமையாக்கு, தனிநபர் பணப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்து, உழைப்பவனுக்கு மட்டுமே வாழ உரிமை வழங்கு, உழைக்காமல்
உண்டி வளர்க்கும் சோம்பேறிகளை உலகத்தை விட்டே விரட்டு என்பதைத் தவிர இந்த சமூக
அவலங்களுக்கு வேறு நிரந்தரத் தீர்வு உண்டா?
இந்தக் கட்டமைப்பில் இது சாத்தியமில்லை எனில் புதிய கட்டமைப்பை நோக்கித்தானே பயணிக்க வேண்டும்?
நல்லதொரு அரசு மற்றும் சமூகக் கட்டமைப்பு இருக்குமேயானால் மக்களுக்கும்-இயற்கைச் சீற்றங்களை தவிர-பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. ஒருவேளை மருத்துவரைத் தாக்கிய அந்த இளைஞனின் தாயைப் போல யாரேனும் நோய்வாய்ப்பட்டால் சிறந்த மருத்துவச் சேவையும் கிடைக்கும். இதற்குக் கத்தி ஒருபோதும் உதவாது.
ஊரான்
No comments:
Post a Comment