Thursday, December 5, 2024

பெருவெள்ளம் என்னுள் ஏற்படுத்திய எண்ணங்கள்!

புவி வெப்பமயமாதல் காரணமாகத்தான் எதிர்பாராத புயல்கள் உருவாவதும், பெருமழை பெய்வதும் நடப்பதாக ஒரு கருத்து திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இது உண்மையா? இதற்கான குறிப்பான அறிவியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் ஏதேனும் உண்டா என்றால் இதுவரை யாரும் அப்படி முன்வைக்கவில்லை.

தற்போது பெய்யும் பெருமழையை விட, பலமடங்கு பெருமழை முந்திய காலங்களில் பெய்ததனால்தான் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடி அகலமான ஆழமான ஆறுகளை இன்றும் நாம் காண முடிகிறது.  கடந்த ஒரு நூறாண்டு கால மழை அளவை வைத்துக் கொண்டுதான், 'இது வரலாறு காணாத மழை' என்று பேசுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே வரலாறு என்பது பல நூற்றாண்டுகளைக் கொண்டது. முந்தைய காலங்களில் பெய்த மழையின் அளவு எவ்வளவு என்பது தெரியாத போது இன்று பெய்யும் மழையை மட்டும் வரலாறு காணாத மழை என்று பேசுவது அபத்தமானது.

கடலூர்

காடுகள் மலைகள் ஏரிகள் குளங்கள் நீர்நிலைகள் ஆறுகள் வயல்வெளிகள் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் அமைப்பதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே குடியேறியவர்களை அப்புறப்படுத்தி மாற்று இடங்களில் குடியேற்ற வேண்டும். இது ஒன்றுதான் வெள்ளப் பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பெருமளவில் உதவும். 

மேலும் நீர் நிலைகளை, நீர் வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பது, தேச விரோதக் குற்றமாகக் கருதப்பட்டு ஆக்கிரமிப்பு செய்வோரையும், ஆக்கிரமிப்புக்குத் துணை புரியும் அதிகாரிகளையும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதைச் செய்தாலே 90% பாதிப்புகளைத் தடுக்க முடியும்.

இயற்கையின் செயல்பாடுகளை வரும்முன் தடுக்க முடியாது. மாறாக வந்தபின் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க மட்டும்தான் முடியும். 

ஆறுகள் ஓடும் பகுதியில் உள்ள மக்களுக்குத்தான் ஆற்றுநீர் பயன்பட வேண்டுமே ஒழிய வெகு தொலைவில் உள்ள மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்று பேராசை கொண்டு ஆற்று நீர் முழுவதையும் தேக்கி வைத்து பெருமழை காலங்களில் திடீரென அதிகமாகத் திறந்து விட்டு ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதும் முறைப்படுத்தப்பட வேண்டும். 

நகரங்கள் பெரு நகரங்களாக வளர்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் குவிந்து வாழத் தொடங்கும் பொழுது அவர்களுக்கான நீர் தேவைக்காக எங்கோ ஓடுகின்ற ஆற்றை மறித்து அணை கட்டி நீர்தேக்கிக் கொண்டுவரும் இயற்கைக்கு எதிரான செயல்படுகள் நிறுத்தப்பட வேண்டும். 

மக்கள் ஒரே இடத்தில் குவியாமல் ஆங்காங்கே வாழ்வதற்கு ஏற்ப மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற திட்டங்களை வகுக்க வேண்டும். இதைச் செய்யத் தவறி, சென்னையை விரிவடையச் செய்ததன் விளைவுதான் சென்னை மக்கள் தத்தளிப்பதற்குக் காரணம்.

'டவுனுக்குப் போனா பொழச்சிக்கலாம்' என்ற எண்ணம் ஒழிக்கப்பட்டு இருக்கிற இடத்திலேயே பொழைக்க முடியும் என்ற எண்ணம் வளர்கிற அளவுக்குத் தொழில்கள் பரவலாக்கப்பட வேண்டும். தொழில் நடக்கிற இடத்தைத் தேடி மக்கள் செல்லக் கூடாது. மாறாக மக்கள் இருக்கிற இடத்தைத் தேடித்தான் தொழில்கள் வர வேண்டும்.

சொத்து சேர்ப்பதை மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாய் வரித்துக் கொண்டு, சென்னையில் 'பிளாட்டு', திருச்சியில் 'பிளாட்டு', மதுரையில் வீடு, நெல்லையில் 'பிளாட்டு' என நீர்நிலைகள் என்றும் பாராமல் ஓடி ஓடி இடம் பிடித்து மக்கள் ஓரிடத்தில் குவிவதால், ஒரு நாள் இயற்கை இவர்கள் மீதே 
தாண்டவமாடுகிறது. 

நிலத்தின் விலையை அரசே தீர்மானித்து நாடு முழுக்க நிலத்தின் விலை, அது வீட்டு மனையாயினும் வேளாண் நிலமாயினும், எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியாக இருக்கும்படி கட்டுப்படுத்த வேண்டும். இது 'ரியல் எஸ்டேட்' என்ற போர்வையில் நிலத்தின் மதிப்பு உயர்த்தப்பட்டு  சொத்து சேர்ப்பதற்காக மக்கள் ஓரிடத்தில் குவிவதையும் தடுக்க உதவும்.

இவற்றையெல்லாம் முறைப்படுத்துவதற்கு ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சிகளும் முயன்றதில்லை. வெள்ளக் காட்சிகள் வேண்டுமானால் ஆட்சிகள் மாற உதவலாம். ஆனால் அவலங்கள் என்றும் தொடர் கதைதானே?

ஊரான்

No comments:

Post a Comment