Sunday, March 2, 2025

வலை உலகில் எனது எழுத்துப் பயணம்! திரும்பிப் பார்க்கிறேன்! ---1

கணினி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாசிப்பு என்பது அச்சு ஊடகங்களிலிருந்து வலை உலக ஊடகங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம். 2010 இறுதியில்தான், ஊரான் என்ற வலைப்பூவைத் தொடங்கி வலை உலகில் எழுதத் தொடங்கினேன். அப்போது, சுமார் 12000 வலைப்பூக்கள் (blogs) வலை உலகில் பதிவுகளை வெளியிட்டு வந்தன. வலைப்பூக்களில் எழுதும் எழுத்துக்களை வாசிப்பதற்கு ஏற்ப மொத்த வலைப்பூ பதிவுகளையும் ஒருங்கே பார்க்கும் வகையில் தமிழ்மணம் (Blog aggregator)
என்றொரு தளமும் இயங்கி வந்தது.

தமிழ்நாட்டில், தோழர்கள் நாதன் மற்றும் மருதையன் ஆகியோரின் முன்முயற்சி மற்றும் பங்களிப்பால் அன்றைய ஒன்றுபட்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் (ம.க.இ.க) தோழமை வலை உலக ஊடகமாக 'வினவு' என்ற தளம் அறிமுகமாகி, அனைவரின் வரவேற்பையும்  பெற்றிருந்தது. அன்று வினவு தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகிறது என்றால் அது குறித்த எண்ணற்ற கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவது உண்டு.

அரசியல் தலைமைக் குழுவில் இருந்த இருவரின் தவறான அணுகுமுறையால்,
தோழர்கள் நாதன் மற்றும் மருதையன் ஆகியோர் ம.க.இ.க அமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு, மக்கள் கலை இலக்கியக் கழகமும் பிளவுபட்டு, வினவு தளமும் ஒரு சிறு லும்பன்கள் கையில் சிக்கிக்கொண்டு இன்று  சீந்துவாரின்றிக் கிடக்கிறது என்பது தனிக்கதை.

***
நிலவுகின்ற இன்றைய சமூக அமைப்பு, சுரண்டலை அடிப்படையாகக் கொண்டதாகவும், மிகவும் பிற்போக்கான பண்பாட்டு நடைமுறைகளைக் கொண்டதாகவும் இருப்பதனால் இதை மாற்றி அமைப்பதற்காக எண்ணற்ற சுயமரியாதை இயக்கங்களும், பொது உடைமை இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. புதிய சமூகத்தை அமைப்பதற்காகப் போராடுகின்ற அதே வேளையில் பண்பாட்டு தளத்திலும் ஒரு புதிய மாற்றுப் பண்பாட்டை இவர்கள் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.


பார்ப்பன புரோகிதர்களைத் தவிர்த்து விட்டு, சடங்கு சம்பிரதாயங்கள் ஏதுமில்லாத சுயமரியாதைத் திருமணங்கள் பெரியார் காலம்தொட்டே நடைபெற்று வருகின்றன.

கலைஞரின் கதை வசனத்தில், சிவாஜி கணேசனின் சிறந்த நடிப்பில், 1952-ல் வெளியாகி இன்றும்கூட உயிர் ஓவியமாகத் திகழும் பராசக்தி திரைப்படத்தின் கடைசி காட்சியில் குணசேகரன்-விமலா (சிவாஜிகணேசன் - பண்டரிபாய்) திருமணம், மாலை மாற்றிக் கொள்ளும் எளியதொரு சுயமரியாதைத் திருமணமாக  காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 

***
சடங்கு சம்பிரதாயங்களை மட்டுமே புறக்கணித்த போதும், பொருளாதார ரீதியாக சம தகுதியில் உள்ளவர்களையும், ஒரே சாதியில் உள்ளவர்களையும் மணமுடிப்பது என்கிற நடைமுறைதான் பெரும்பாலும் சுயமரியாதை இயக்கங்களில் இருந்து வந்தது; இன்றும் கிட்டத்தட்ட அதே நிலைதான் தொடர்கிறது. அன்றைய பொதுவுடமை இயக்கங்களில்கூட ஒரு சிலர் இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்களை நடைமுறைப்படுத்தினர்.

1970 களுக்குப் பிறகு, மார்க்சிய-லெனினிய நக்சல்பாரி அரசியல் பின்னணி கொண்ட தோழர்கள், சடங்கு சம்பிரதாயங்களை புறக்கணித்த அதே வேளையில், இல்லற வாழ்க்கையில் இணையக் கூடியவர்கள், சமூகத்தின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும் என்பதை லட்சியமாக வரித்துக் கொண்டனர். இதனால் மணமகன், மணமகள் இருவரின் வசதி வாய்ப்புகளை இவர்கள் பெரிதாகப் பார்க்கவில்லை. தங்களது லட்சியத்திற்கு பொருந்தக்கூடியவர் எந்தச் சாதியாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டனர். 

இந்தக் காலகட்டத்தில்தான் அதுவரை சடங்கு சம்பிரதாயங்களை மட்டுமே புறக்கணித்து வந்த சுயமரிதைத் திருமணங்கள், வரதட்சணை, சீர் முதலியவற்றை முற்றிலுமாகப் புறக்கணித்த, கைம்பெண்களுக்கு மறுவாழ்வு, சாதி மறுப்பு மற்றும் சமூக விடுதலையை நோக்கமாகக் கொண்ட புரட்சிகரத் திருமணங்கள் என்ற உயர்ந்த கட்டத்தை எட்டின.

ஒரே சாதியோ அல்லது வேறு வேறு சாதியோ எதுவாக இருப்பினும், சமூக விடுதலைக்காக, புரட்சிக்காக மணமக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்று உறுதி ஏற்பதே புரட்சிகரத் திருமணங்களின் மைய நோக்கமாக இருந்தது. அப்படித்தான் 1986 இல் நடைபெற்ற எனது திருமணமும் ஒரு புரட்சிகரத் திருமணமாக அமைந்தது.

புரட்சிகரத் திருமண வடிவம் குறித்த போதிய புரிதல் பலருக்கும் இல்லாத அன்றைய காலத்தில் எமது திருமணம் ஒரு முன்மாதிரியாக அமைந்ததோடு எமது திருமணப் புகைப்படங்கள்கூட புரட்சிகர திருமணங்களுக்கான ஒரு பிரச்சார வடிவமாக அமைந்தது.

***
ம.க.இ.க அமைப்பைச் சார்ந்தவர்களின் புரட்சிகரத் திருமணமொன்று 2010 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில், நடைபெற்றது. முதன்முறையாக இத்தகையத் திருமணத்தைப் பார்த்த சந்தன முல்லை என்பவர், இத்திருமணம் குறித்து எழுதிய உணர்வு பூர்வமான கட்டுரை ஒன்று வினவு தளத்தில் அன்று வெளியானது. அதில் அவர் குறிப்பிட்டிருந்த அம்சங்கள் அனைத்தும் எனக்கு ஏற்கனவே பரிட்சயமானது என்பதனால் எனக்கு அது புதிதாகத் தோன்றவில்லை. ஆனாலும், அக்கட்டுரை மீது இணைய வாசகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நான் ஒரு பதிவை அத்தளத்தில் எழுதி இருந்தேன். இப்படித்தான் இணைய உலகில் எனது எழுத்துப் பணி தொடங்கியது.

புரட்சிகரத் திருமணம் செய்து கொண்ட ஒரு சிலர், பின்நாட்களில் சமூகப்பணியில் இருந்து விலகி, சொந்த வாழ்க்கையில் நாட்டம் கொண்டு புரட்சிகரத் திருமணத்தின் லட்சியத்தையே கைவிட்டவர்களும் உண்டு. இதில் சிலர் வேறு சில அரசியல் கட்சிகளில் ஐக்கியமாகி, பண்பாட்டளவில் பக்திமான்களாக மாறியவர்களும் உண்டு. ஆனாலும் பலர் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் புரட்சிகரத் திருமணம் செய்து கொண்ட அந்த இணையர்கள் இன்று என்னவானார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், பார்ப்பனிய மேலாதிக்கமும், மூடநம்பிக்கைகளும் அதிகரித்து  வரும் இன்றைய சூழலில், பண்பாட்டுத்தளத்தில் புரட்சிகரத் திருமணங்கள் அல்லது குறைந்தபட்சம் சுயமரியாதைத் திருமணங்கள் பரவலாக்கப்பட வேண்டி உள்ளதால், நான் வினவு தளத்தில் முன்வைத்த எனது முதல் இணையக் கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதைத்தொடர்ந்து நான் வலைப்பூ தொடங்கியது குறித்தும் அதில் எழுதி வருவது குறித்தும் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

குறிப்பு: ஹைபர்லிங்க் மூலம் தேவையான இணைப்புகளைக் கொடுத்துள்ளேன்.

No comments:

Post a Comment