Friday, October 10, 2025

நோபல் பரிசு: நாய்களுக்குப் போடும் எலும்புத் துண்டா?

வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் நடுவில் கரீபியன் தீவுகளை ஒட்டி, தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடுதான் வெனிசுலா.  சோசலிசத்தை ஏற்றுக் கொண்ட  'ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி'யைச் சார்ந்த ஹ்யூகோ சாவேஸ் தலைமையில் 1998 இல் இடதுசாரி அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்றைய  நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக் காலம் வரை  ஐக்கிய சோசலிஸ்ட் கட்சித் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்கு, தனது சிஐஏ உளவுத் துறை மூலம் அமெரிக்கா எண்ணற்ற சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. 

ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக் காலத்தில், பெரிய தனியார் நிறுவனங்கள் எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டன. மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், வெனிசுலா அரசாங்கம் பிடல் காஸ்ட்ரோவின் கியூபா நாட்டு இடதுசாரி அரசோடு நட்புறவு கொண்டிருந்தது.


வெனிசுலாவில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களால் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இடதுசாரிக் கருத்துக்கள் பற்றிப் படர்ந்தன. இடதுசாரியான டேனியல் ஓர்ட்டேகா தலைமையில், நிக்கராகுவா நாட்டில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இடதுசாரி அரசியல், தனது அடிவயிற்றையே கலக்குவதாக அமெரிக்கா அஞ்சி நடுங்கியது.

சோசலிசத்தைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளையும், வெனிசுலா நாட்டு  இடதுசாரி அரசாங்கத்தையும் அமெரிக்கா சும்மா விட்டுவிடுமா? 

வெனிசுலாவில் சர்வாதிகாரம் கோலோச்சுவதாகக் கூக்குரலிட்டது. வெனிசுலா நாட்டுக்கு எதிராக எண்ணற்ற பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி வெனிசுலாவை சீர்குலைக்க முயற்சிக்கிறது.
காரணம் மிகவும் எளிமையானதுதான் அமெரிக்காவுக்கு இடதுசாரிகளைப் பிடிக்காது; சோசலிசம், கம்யூனிசம் பிடிக்காது. 
***
ஜனநாயகம் எப்பொழுதும் பொதுவானதாக இருக்க முடியாது.

ஜனநாயகம் யாருக்கானது என்பதுதான் முக்கியமானது. அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் பேசும் ஜனநாயகம் முதலாளிகளுக்கானது. சோசலிசத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லது நாடுகள் பேசும் ஜனநாயகம் உழைக்கும் மக்களுக்கானது. 

முதலாளிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது, இவர்களது ஆட்சிக்கு எதிராகப்  போராடும் மக்களைக் கட்டுப்படுத்துவார்கள். அதேபோல்,  இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது இவர்களது ஆட்சிக்கு எதிராகப் போராடும் முதலாளிகளைக் கட்டுப்படுத்துவார்கள்.

சொத்துடமையும், சுரண்டலும் ஒழிக்கப்பட்டு கம்யூனிச சமூகம் உருவாகும்போதுதான், அனைவருக்குமான ஜனநாயகம் இருக்கும். அதுவரை ஜனநாயகம் சார்புத் தன்மை கொண்டதுதான்.

இத்தகையப் புரிதலில் இருந்துதான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோவைப் பார்க்க வேண்டும்.

சர்வாதிகாரத்துக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் வெனிசுலாவின் ஐக்கிய சோஷலிசக் கட்சி ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்கு ஏவிவிடப்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ என்பவருக்குத்தான், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவரது போராட்டம் சர்வாதிகாரத்திற்கு எதிரானதோ அல்லது ஜனநாயகத்திற்கானதோ அல்ல. மாறாக, இது வெனிசுலா நாட்டு முதலாளிகளின் நலனுக்கானது, அமெரிக்காவின் நலனைப் பாதுகாப்பதற்கானது. ஒரே வரியில் சொல்லப்போனால், இவரது போராட்டம் இடதுசாரிகளுக்கு எதிரானது.

தனக்காகக் குறைக்கும் நாய்களுக்கு, முதலாளிகள் எலும்புத் துண்டு போடுவது இயல்புதானே!

ஊரான்

Monday, October 6, 2025

மரண பீதியில் திருவண்ணாமலை கிரிவலம்!

2021 ஆம் ஆண்டுவரை கார்த்திகை தீபத்தன்று மட்டும்தான் திருவண்ணாமலையில் கூட்டத்தைப் பார்க்க முடியும். மற்றபடி அது ஒரு அமைதியான நகரம். 

ஆனால், இன்று ஆந்திராவிலிருந்தும் தெலுங்கானாவிலிருந்தும் வரும் பக்தர்களால், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் தொடர்வண்டி நிலையம், அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப்பாதைகளில்  கூட்டம் நிரம்பி வழிகிறது. 


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாக சொல்லப்படுகிறது. 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையை சுற்றிவர சுமார் 11 மணி நேரம் ஆகிறதாம்.

அண்ணாமலையார் கோவில் அருகில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு 40 அடி அகலம் இருந்த கிரிவலப் பாதை 20 அடி அகலமாக குறைக்கப்பட்டதால், எந்த நேரத்திலும் கூட்ட நெரிசலில் (stampede) பக்தர்கள் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திருவண்ணாமலையை இணைக்கும் ஒன்பது முக்கியச் சாலைகளில் 25க்கும் மேற்பட்ட தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களில், பௌர்ணமி நாட்களில் 40 சதவீதம் தமிழர்கள், 60 சதவீதம் தெலுங்கர்கள், இதுவே வார இறுதி நாட்களில் 95 சதவீதம் தெலுங்கர்கள் என சொல்லப்படுகிறது. 

அண்ணாமலையை அருணாச்சலேஸ்வரராக்கி, இந்த அருணாச்சலேஸ்வரர் தெலுங்கு மக்களின் குலதெய்வம் எனவும், தெலுங்கு மக்கள் கண்டிப்பாக இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் எனவும்,  சகாந்தி கோட்டீஸ்வர ராவ் என்கிற தெலுங்கு ஆன்மீகச் சொற்பொழிவாளர் தொடர்ந்து youtube சேனல்களில் செய்து வரும் பரப்புரையால்தான், தெலுங்கர்கள் திருவண்ணாமலையை நோக்கி அதிக அளவில் படையெடுப்பதாகக் கூறப்படுகிறது. 

“அருணாச்சலேஸ்வரர் எங்க சாமி” என்று தெலுங்கர்கள் வெளிப்படையாகப் பேசுவதையும் பார்க்க முடிகிறது. திருவண்ணாமலை ஊர் பெயரையே “அருணாச்சலம்” என தமிழ்நாடு அரசுப் பேருந்துகளிலேயே பெயர் மாற்றம் செய்கிற அளவுக்குச் சென்று, அது சர்ச்சையானதும் நாம் அறிந்ததே. 

திரைப்படக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு நடிகனைக் காண கூடும் கூட்டத்திற்கும், பக்திக்கு ஆட்பட்டு பரவசத்தோடு கோவில்களில் கூடும் கூட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது. இரண்டிற்கும் பொதுவானது தரிசனம். தரிசனத்திற்காக முண்டியடிக்கும் பொழுது, கூட்டநெரிசலால் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்க முடியாது. 

ஆண்டில் ஒரு நாள் என்றால் வெளியூர் பக்தர்களால் ஏற்படும் இன்னல்களை திருவண்ணாமலை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், இதுவே ஆண்டு முழுக்க என்றால்  யாரால்தான் சகித்துக் கொள்ள முடியும்?

காவல் துறையைச் சேர்ந்த இரண்டு கயவர்கள், ஆந்திராவிலிருந்து காய்கறி ஏற்றி வந்த இளம் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததால், திருவண்ணாமலை ஏற்கனவே அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. 

தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இன்றில்லை என்றாலும் ஒரு நாள், திருவண்ணாமலை பிணக்காடாக மாறுவதை அந்த சிவனே நினைத்தாலும்  தடுக்க முடியாது! 

"மதச் சடங்குகள் உலகெங்கும் ஊதாரித்தனத்துடன் செய்யப்படுகின்றன; அவற்றால் காலமும், பொருளும் விரயமாகின்றன; அவை வலியையும்; வறுமையையும் உண்டாக்குகின்றன" என்று சொன்ன அறிஞன் மரேக் கோன் கூற்றோடு, "அவை மரணங்களையும் உண்டாக்கும்" என்பதையும் சேர்க்க வேண்டி வரலாம். எச்சரிக்கை!

ஊரான்

செய்தி ஆதாரம்: The Indian express, 06.10.2025

தொடர்புடைய பதிவுகள்

Sunday, October 5, 2025

யார் இந்த "ஊரான் ஆதி"?

முகநூல் தொடங்கும் போது, "ஊரான்" என்று மட்டும்தான் உள்ளீடு செய்தேன். ஆனால், "ஆதி" என்ற சொல்லை சேர்த்தபோதுதான் முகநூல் ஏற்றுக் கொண்டது. அதனால், நான் "ஊரான் ஆதி" ஆனேன். 

பொன்.சேகர் 

Sekar P என்ற பெயரில் உள்ள முகநூல் கணக்கும் என்னுடையதுதான்.

"ஊரான்" மற்றும்  "எதிர்த்து நில்" என இரு  வலைப்பூக்களை (blog) நடத்தி வருகிறேன்.‌ 

ஊரான் 

பள்ளிப்பருவ காலம்முதல் கடவுள் மறுப்பாளனாக, பகுத்தறிவாளனாக வளர்ந்த நான் பின்நாளில், மார்க்சிய-லெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு, 1980 களில் தொடங்கி இருபதாண்டு காலம் "மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்" தலைமைக் குழு உறுப்பினராகவும், இருபதாண்டு காலம் களப்போராளியாகவும் "தமிழ்மணி" என்ற பெயரில் பாடாற்றியுள்ளேன். தற்போது "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்" தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறேன். 

ஒன்றிய அரசு நிறுவனமான "பாரத மிகுமின் நிறுவனத்தில்" (BHEL) பணியாற்றிய நான் எனது அரசியல் மற்றும் BHEL வாழ்க்கையில் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. இது குறித்து "இழிகுணம்" என்ற தலைப்பில், "எதிர்த்து நில்" வலைப்பூவில் விரிவான தொடர் ஒன்றை எழுதியுள்ளேன். அதன் தொகுப்பு "இழிகுணம்" என்ற தலைப்பில் அமேசானில் மென்நூலாகவும் கிடைக்கும்.
15 ஆண்டுகளாக நான் வைத்திருந்த "ஊரான் ஆதி" profile புகைப்படத்தையும், தேவை கருதி தற்போதைக்கு மாற்றி அமைத்துள்ளேன்.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!

ஊரான்

Wednesday, October 1, 2025

நம்பிக்கையில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர்கள்!

நண்பகல் 12 மணி. பொன்னை உருக்கும் புரட்டாசி வெயில். வெண்மேகங்கள் கதிரவனின் கதிர்களை ஓரளவுக்குத் தடுத்தாட்கொண்டதால் வெப்பம் அவ்வளவாகத் தெரியவில்லை. ஊருக்குப் புறப்பட ஆயத்தமாகி, ‘பர்சைப்’ பார்த்தேன். இரண்டு இருபது ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்தன. ‘திருப்பத்தூர் நகரப் பேருந்து நிலையம்தானே செல்கிறோம்; 'ஏடிஎம்' இல் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற நம்பிக்கையோடு ஒரு இருபது ரூபாய் தாளைக் கொடுத்து 'ஷேர் ஆட்டோவில்' பேருந்து நிலையம் சென்றடைந்தேன்.

ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் மாவட்டத் தலைநகரின் பேருந்து நிலையம் அது. முதுகில் ஒரு 'ஏர்பேக்' தொங்க, கையில் ஒரு கட்டை பை சுமையுடன் 'ஏடிஎம்'ஐத் தேடினேன்; ஏமாற்றம்தான் மிஞ்சியது. விசாரித்தபோது வெளியில் உள்ளது என்றார்கள். 


கட்டை பையின் சுமை என்னை ஒரு பக்கம் இழுக்க, அதை சமாளித்துக் கொண்டு, இருநூறு மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு 'ஏடிஎம்' இல் உள்ளே நுழைந்த போது, ஒரு சிலர் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். வெளியே வந்தவர்கள், 'பணம் இல்லை' எனச் சொல்லியிருந்தால் உள்ளே சென்றிருக்கவே மாட்டேன். இத்தகையப் பண்புதான் இன்று இற்று வருகிறதே!

வேறு 'ஏடிஎம்' ஐ தேடிச் செல்ல வேண்டும் என்றால், எந்தப் பக்கம் சென்றாலும் குறைந்தது அரை கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். கையில் உள்ள சுமையையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது என்பதால், அருகில் இருந்த ஒரு பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று, 'ஃபோன்பே' மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில், அங்கு வந்து நின்ற ஓரிரு அரசுப் பேருந்துகளில் ‘'ஃபோன்பே' வசதி உண்டா’ எனக் கேட்டேன். ‘நம்பிக்கைதானே சார் வாழ்க்கை!’ என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம்தானே? நான் மட்டும் நம்பிக்கை கொள்ளக்கூடாதா என்ன?

இதற்கிடையில், மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து 'ஃபோன்பே' வசதி உள்ள எனது வங்கிக் கணக்கிற்கு பண மாற்றம் செய்து விட்டு, 'ஃபோன்பே' வசதி உள்ள ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஆனால், பணம் மட்டும் எனது கணக்கிற்கு இன்னமும் மாறவில்லை. ‘ஒரு ஐந்து நிமிடம்’ என நடத்துநரிடம் சொல்லிவிட்டு, பணம் வந்து விட்டதா எனத் திரும்பத் திரும்ப கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

நான் அனுப்பிய பணம் மாறும் என்று இனியும் காத்திருப்பது உசிதமல்ல என்பதனால், உறவினருக்குத் தெரிவிக்க, அவர் :ஜிபே' மூலம் பணம் அனுப்ப, அதுவும் உடனடியாக மாறவில்லை. நடத்துநர் என்னைப் பார்க்க, பணம் வந்து விட்டதா என நான் கைப்பேசியைப் பார்க்க, அதற்குள் ஜோலார்பேட்டையும் வந்துவிட்டது. 

‘வங்கிக்குப் பணம் மாறினால் சமாளித்துக் கொள்ளலாம், இல்லையென்றால் அடுத்த ஊரில் இறங்கிவிடலாம்’ என்ற முடிவோடு நடத்துநர் ஏதும் சொல்வதற்கு முன்பாகவே, நானே முந்திக்கொண்டு, ‘வாணியம்பாடிக்கு எவ்வளவு?’ என்று கேட்டேன். 20 என்றார். கையில் இருந்த 20 ரூபாயைக் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொண்டேன். 

'பர்சும்' காலி, 'ஃபோன்பே'வும் காலி என்றால், யாராக இருந்தாலும் படபடப்பு ஏற்படத்தானே செய்யும். நான் இங்கே நம்பிக்கை வைத்தது 'டிஜிட்டல்' பணப் பரிமாற்றத்தின் மீது. அது எனது தரப்பு நம்பிக்கைதானே ஒழிய, அதற்கு, கைப்பேசி 'சிக்னலும்', இரு வங்கிகளின் 'சர்வர்களும்' சரியாக இருக்க வேண்டும் அல்லவா? 

கைப்பேசி 'சிக்கனல்' பலவீனமாக இருப்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், 'சர்வர்களின்' நிலையை நான் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இங்கே எனது நம்பிக்கை ஈடேறவேண்டுமானால், எதன் மீது நான் நம்பிக்கை வைக்கிறேனோ, அதைப்பற்றி நான் அறிந்திருக்க வேண்டும். இந்தப் புரிதல் இல்லை என்றால், ‘நம்பிக்கை நாசமாப் போச்சு!’ என விரக்தியில்தான் விழவேண்டிவரும். 

நான் அவசரமாகப் போக வேண்டியத் தேவை எதுவும் இல்லை. ‘பணம் வங்கிக்கு மாறினால் பயணத்தைத் தொடருவோம், இல்லை என்றால் வாணியம்பாடியில் இறங்கி, பணம் மாறும்வரை காத்திருப்போம் அல்லது அங்கே, அருகில் ஏதாவது 'ஏடிஎம்' இருந்தால் பணம் எடுத்துக் கொண்டு பயணிப்போம்’ என்று ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதால்  இதற்காக நான் சோர்ந்து விடவில்லை.
***
தேர்வுகளில் தேர்ச்சி பெற, படித்தபின் விரும்பிய வேலை கிடைக்க, அவசரத் தேவைக்குக் கடன் பெற, நிலம் வீடு என ஆசைப்படும் குறிப்பிட்ட சொத்துக்களை வாங்க, உறவுக்காரப் பெண்ணை மணம் முடிக்க, பருவம் பொய்க்காமல் மழை பொழிய, நல்ல விளைச்சல் கிடைக்க, செய்யும் தொழிலில் இலாபம் ஈட்ட என இவற்றையெல்லாம் பெறுவதற்காக, அடைவதற்காக பிறர் மீதும், பிறவற்றின் மீதும் நம்பிக்கை கொள்ளாத மனிதன் இருக்க முடியாதுதானே?

நமது நம்பிக்கைகள் ஈடேற வேண்டுமானால், நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது; மாறாக, நாம் எதை, எவற்றை, யாரை நம்புகிறோமோ, அந்தத் தரப்பின் நிலையையும் புரிந்து கொண்டால், ‘நமது நம்பிக்கைகள் வீண் போய்விட்டன’ என்று துவண்டு விடாமல் அடுத்தடுத்த செயலுக்கு ஆயத்தமாவோம். 

போதிய காரணம் இன்றி, ஒருவர் ஒன்றை நம்புவதை, பொதுவாகப் பார்க்கும் போது, அது ‘நம்பிக்கையின் இயல்பாகவே’ உள்ளது. இந்த இயல்பு காரணமாகத்தான், பலரும் கடவுள் உள்ளிட்ட சிலவற்றின் மீது நம்பிக்கை (faith) கொள்கின்றனர். ஆனால், ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதன்மீது வைக்கும் நம்பிக்கை (belief) என்பதே சரியான நம்பிக்கையாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன். மேலும், ஒன்றைப் பற்றிய விவரங்கள் தெரியத் தெரிய, அதன்கூடவே, அதன் மீதான நம்பிக்கையும் மாறவே செய்யும்.

இருதரப்பு நம்பிக்கைகளும் ஒன்றுபடும்போது வேண்டுமானால் நம்பிக்கைகள் ஈடேறலாம். மற்றொரு தரப்பு என்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே, நான் நம்புவதால் மட்டுமே எனது நம்பிக்கை ஈடேறும் என்று எதிர்பார்ப்பது கானல் நீரே!

நம்பிக்கை குறித்த இத்தகையப் புரிதல் இல்லாததால், ‘ரொம்ப நம்பினேம்பா, ஏமாத்திட்டாம்பா! துரோகம் பண்ணிட்டாம்பா!’ என்று பேசுவோர் பலரையும் நம்மால் பார்க்க முடிகிறது. இவர்கள், எதை நம்புகிறார்களோ அதைப் பற்றிய அறியாமையே இதற்குக் காரணம். இத்தகையோரை, ‘நம்பிக்கையை மட்டுமே நம்புபவர்கள்’ (believing the belief) எனக் கருதலாம். நடிகர் விஜய் மீதான நம்பிக்கையும் இத்தகையதே! இத்தகைய நம்பிக்கைகளில் எல்லாம் கடைசியில் ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சி நிற்கும். 
***
பெங்களூர் புறவழிச்சாலை மூங்கில் 'சர்க்கிள்' நெருங்கியபோது உறவினர் அனுப்பிய பணம் வந்து விட்டதை உறுதி செய்து கொண்டேன். ஆனால், நான் அனுப்பிய பணம் மட்டும் இன்னும் மாறவில்லை. 'ஃபோன்பே' மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு, அதே பேருந்தில் வேலூருக்குப் பயணமானேன். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன், உள்ளேயே இருந்த ஒரு 'ஏடிஎம்’ இல் 'கார்டைச்' சொருகி எனக்குத் தேவையான அளவு 100 ரூபாய் தாள்களுடன் பணத்தைப் எடுத்துக்கொண்டு இல்லம் இருக்கும் வாலாஜா நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஊரான்
29.09.2025