Wednesday, November 26, 2025

சேக்கிழாரின் பெரியபுராணத்தில் ஆபாசமா?

“கடவுளை அங்கும், இங்கும் காட்ட முடியாதென்றும், அவர் எங்கும் நிறைந்தவர் என்றும் வாய் கூசாமல் வாதிப்பதால், யாருக்கு என்ன விளங்கும்? அங்கேயாகிலும், இங்கேயாகிலும் காணக்கூடாத ஒன்றை எங்கும் காண்பதெப்படி? நாம் காணும் உலகில், பார்க்க முடியாத கடவுளை, நமக்கு எட்டாத பிரபஞ்சத்தில் வியாபித்திருக்கின்றார் என்றால் இது என்ன ஆபாசமெனக் கேட்கின்றோம்? இந்த ஜாலச் சொற்களைக் கொண்டே, ஆஸ்திகர் உலகை ஏமாற்றி வருகின்றனர். இந்தச் சூழ்ச்சியை உணராத மாந்தர் மூடபக்தியில் முழுகிக் கோயில்களும், கோபுரங்களும் கட்டுவித்து மயங்கித் தியங்கி நிற்கின்றனர். உலகம் இனி எவ்வளவு காலம் இம்மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கப் போகின்றதோ, அதை நாம் அறியோம். ஆனால் நமது கடமை மூடபத்திக்கு ஆதாரமாயுள்ளவருக்கு வாதங்களை எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம் எனத் துணிந்து கூறுவோம்”. 

என்கிறார் சிங்காரவேலர்.

அதற்கு ஆபாசக் கோர்வை (String of absurdities) அடங்கிய பாடல் ஒன்றை எடுத்துக்காட்டுகிறார்.

“உலகெலாம் வுணர்ந்தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்”

சேக்கிழார் 

'உலகெலாம்' என்று சிவபெருமானே சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்தாகவும், அதனாலேயே மேற்கண்ட பாடல்  ‘பெரிய புராணத்தின்’ தொடக்கப் பாடலாக அமைந்ததாகவும் வேதாந்திகள் வியந்தோதி வருகின்றனர். 

இப்பாடல் குறித்து சிங்காரவேலர், 

“இதனைப் பாடும்போது எனக்கும், மற்றுமுள்ள சுயமரியாதைத் தோழர்களுக்கும் சிரிப்பு உண்டாகியது. இந்தப் பாடலை 50 வருஷத்திற்கு முந்தி நான் கைவல்ய நவநீத விருத்தியுரையில் படித்தேன். 50 வருடம் கடந்தும் இந்த ஆபாசப் பாடலைக் கேட்க நேரிட்ட சமயமும், ஆபாசமாகவே தோன்றியது. இந்தச் சொற்களில் அடங்கிய ஆபாசங்களைச் சற்று நோக்கினால் கல்வி, கேள்வி நிறைந்துள்ள மாந்தரும், விசாரணை இன்றி, கிளிப்பிள்ளைகளைப் போல் பாடலை ஒப்பிப்பதே, பெரும் வியப்பையும் தருவதோடு, அவர்களுடைய மூடநம்பிக்கையின் வன்மையையும் காட்டுகிறது. இது நிற்க, இந்தப் பாடலின் சொற்களைக் கூறுபடுத்தி பார்ப்போம்.

“உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” இதன் பொருள் என்னவெனில், எந்த மனிதராலும் தெரிந்து கொள்ள முடியாதவன் என்று பொருள். யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவனை இருப்பதாக எப்படி சொல்லக் கூடும்? இன்னவென்று உணர முடியாதவனைப் பற்றி ஓதுவதால் யாது பயன்? இந்த சொற்ப அர்த்தத்தை உணராமலே, பல்லாண்டுகளாக ஆத்திகர்களும், வேதாந்திகளும் இச்சொற்களை ஓதி வருகின்றனர். வெறும் சொற்களுக்கு, நமது அறிஞர்கள் அடிமைகளாகிய விந்தையே விந்தை!

“நிலவுலாவிய நீர்மலி வேணியனென்றார்கள்” இது எப்படி தெரிந்தது? யாருக்கும் ஒன்றுந் தெரியாதவர் என்று முதலில் பாடிவிட்டு, நீர்மலி வேணியன் என்றால், இது முரண்பட்டதல்லவா? இதனை மூட பக்தி என்றால் என்ன தவறு? முரண்பட, முரண்பட பக்தி மேலிடும் போலும்! ஆபாசம் மேலிட, மேலிட அவ்வளவும் பக்திக்கு விசேடமென்று ஒரு ஆங்கில வாக்கியமுண்டு. இந்த வாக்கியப்படி, நமது ஆக்கியோனும் அவரைப் போன்ற பக்திமான்களும் ஆபாசத்தில் ஆனந்தம் கொள்ளுகின்றார்கள் போலும்!

“என் அம்பலத்தில் ஆடுவான்” இது எப்படித் தெரிந்தது. அங்கும் எங்கும் இல்லாதவன், அம்பலத்தில் எப்படி ஆட வந்தான்? இதனைத்தான் ஆபாசக் கோர்வை (Tissue of Absurdities) என்கிறோம்?

எந்த லட்சணத்தாலும் அறியக் கூடாத ஒன்றை, அதன் “மலர் சிலம்படி வாழ்த்தி வணங்க”, வேண்டியதாம். இந்தப் பைத்தியக்காரப் பேச்சை அறிஞர் கூட்டங்களில் வாய் கூசாமல் பாடுவதைக் கேட்டால் நாம் அறிஞர் உலகில் இருக்கின்றோமா? அல்லது உன்மத்த உலகில் இருக்கின்றோமா என்பதே சந்தேகமாகி விடுகின்றது”.

குடி அரசு
16.7.1933
பக்கம் 3-18

சிங்காரவேலர் கட்டுரைகள் நூலிலிருந்து..

குறிப்பு: சேக்கிழார் என்ற உடனே எடப்பாடியும் கம்பராமாயணமும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. 

Absurdities-Absurdity-  அபத்தம், முட்டாள்தனம், அறிவுக்கு ஒவ்வாதது. இதற்கு ஏன் ஆபாசம் என்ற சொல்லை சிங்காரவேலர்
பயன்படுத்தியிருக்கிறார் என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். ஒரு செயல் அல்லது பேச்சின் தவறான தன்மையைக் குறிக்க ஆபாசம் என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்பதனால், அவர் 'ஆபாசம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஊரான்

No comments:

Post a Comment