"Gemini AI on hooraan (ஊரான்) blog!" என்ற பதிவின் மீது வாழ்த்துக்கள் தெரிவித்த ஞானசேகரன், இராதாகிருஷ்ணன், திருமாவளவன், இரகுநாதன், தங்கவேலு, சக்திவேல், செந்தில்நாதன் மற்றும் வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
பொன்.சேகர்
இணையதளங்கள் (Web pages) இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், blogspot.com, wordpress.com போன்ற வலைதளங்கள் பல்லாயிரக்கணக்கில் வலம் வந்த 2010-ஆம் ஆண்டிலேயே நான் "ஊரான்" வலைப்பூவைத் தொடங்கினேன்.
'வினவு' இணையதளத்தில் வெளியான ஒரு புரட்சிகரத் திருமணம் குறித்த செய்திக்கு பின்னூட்டமிட (Comment) முயன்றபோது ஏற்பட்ட உந்துதல்தான், என்னை வலைப்பூ தொடங்கத் தூண்டியது.
எனது வலைப்பூ ஒரு சாதாரண வார்ப்புருவில் (Standard Template) அமைக்கப்பட்டதுதான் என்றாலும், கடந்த 15 ஆண்டுகளில் 4 லட்சம் பார்வைகளையும், 1230-க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களையும் கடந்து இன்றும் இயங்கி வருகிறது. ஒருவேளை நான் இதைத் தனிப்பட்ட இணையதளமாக (Domain) மாற்றியிருந்தால், இன்னும் கூடுதலான வாசகர்களைச் சென்றடைந்திருக்கலாம்.
முன்பு "தமிழ்மணம்" என்றொரு வலைப்பூ திரட்டி (Blog Aggregator) இருந்தது. அதில் நமது வலைப்பூவை இணைத்துவிட்டால், நாம் பதிவிடும் கட்டுரைகள் அதன் முகப்புப் பக்கத்தில் வெளியாகும். வாசிப்போர் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு வாரம் வரை அது முகப்பிலேயே இருக்கும். அக்காலகட்டத்தில் வாசகர்களின் எண்ணிக்கையும், பின்னூட்டங்களும் மிக அதிகமாக இருக்கும்.
"ஊரான்" வலைப்பூவும் அன்று பல வாசகர்களை ஈர்த்து அதிக பின்னூட்டங்களைப் பெற்று வந்தது. எனது தொடக்க காலப் பதிவுகளில் அதைக் காண முடியும்.
இங்கே உங்களுடைய வாழ்த்து மழை என்னை ஊக்கப்படுத்துவது போல, 2014-இல் காரிகன் என்ற வாசகர் இட்ட ஒரு பின்னூட்டம் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.
“குடுகுடுப்பைக்காரனை விட பூம்பூம் மாட்டுக்காரனே மேல்!” என்ற எனது பதிவு குறித்து அவர் எழுதியிருந்தார்:
"சரியான பகடி. அதகளம் செய்துவிட்டீர்கள் ஊரான் அவர்களே!
'நாடு வல்லரசு ஆவதற்குப் பதிலாக இவனது மாட்டுக்கு வைக்கோலும் தவிடும் புண்ணாக்கும் வைத்தவர்கள் மட்டுமே காடுகளையும், கனிம வளங்களையும் கபளீகரம் செய்தார்கள்; ராசாவானார்கள்; மாறா வலிமை பெற்றார்கள்' - அபாரமான உவமைகள். மிகவும் ரசித்தேன்.
உங்கள் பதிவு எழுதப்பட்டிருக்கும் முறையை ஆங்கிலத்தில் Allegory என்பார்கள். அடுத்து ஜோசியக்காரனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்!"
இந்த அங்கீகாரம் என்னை மேலும் எழுதத் தூண்டியது.
கடந்த சில ஆண்டுகளாக யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்ததால், வலைப்பூக்களை வாசிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பல பதிவர்கள் தளத்தை விட்டே வெளியேறிய போதும், தமிழ்மணம் போன்ற திரட்டிகள் முடங்கிய பிறகும், தொடர்ந்து வலைப்பூவில் இயங்கி வருபவர்களில் நானும் ஒருவன். உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம்தான் எங்களைப் போன்ற பதிவர்களை இன்றும் எழுத வைக்கிறது.
"ஊரான்" தவிர, எதிர்த்து நில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், நீதிக்கான குரல் ஆகிய வலைப்பூக்களையும் நான் பராமரித்து வருகிறேன்.
"இழிகுணம்" என்ற தலைப்பில் தமிழ்மணி பெயரில் நான் எழுதிய சுயசரிதைத் தொடர், 'எதிர்த்து நில்' வலைப்பூவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது தற்போது அமேசானில் மின்னூலாகவும் (E-book) கிடைக்கிறது. இதுவரை வலைப்பூக்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 7 மின்னூல்களை அமேசானில் வெளியிட்டுள்ளேன்.
நான் எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை. நான் காண்பவை, உணர்பவை - அது காட்சியாகவோ, நிகழ்வாகவோ அல்லது வாசிப்பாகவோ எதுவாக இருந்தாலும் - அவற்றை உடனுக்குடன் எழுத்தாக்குகிறேன்.
எனது எழுத்துக்கள் வாசகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பின்னூட்டங்கள் வாயிலாகவே அறிகிறேன். 2010-இல் நான் எழுதிய “மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!” என்ற பதிவை வாசித்த அம்ருதா என்பவர்,
"பெண்களுக்குத் தேவையான கட்டுரை. இனி பூ வைக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்"
என்று பதிவிட்டிருந்தார். ஒரு எழுத்து ஒருவரின் முடிவையே மாற்றுகிறது என்பது நெகிழ்ச்சியான விஷயம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக 2018 வரை 'பொன்.சேகர்' தான் 'ஊரான்' என்பது யாருக்கும் தெரியாது. பணி ஓய்வு விழாவின் போதுதான் அந்த முகமூடியைக் களைந்தேன். இந்த ஆண்டுதான் எனது புகைப்படத்தையே முகப்புப் படமாக (Profile Picture) மாற்றியுள்ளேன்.
வலை உலகில் எனது எழுத்துப் பயணம் தொடரும்.
நன்றி!
ஊரான்

No comments:
Post a Comment