Sunday, October 13, 2024

வரவு செலவு மோசடியா? காந்தியும் பெரியாரும் வழிகாட்டுகிறார்கள்!

அன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் ஒன்று குவிந்துப் போராடினார்கள்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஒரு மாத காலமாக சாம்சங் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், தாதுமணல்-ஆற்று மணல் மற்றும் கிரானைட் கொள்ளைகளுக்கு எதிரான போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை பொதுநலனில் அக்கறை உள்ள இடதுசாரி கட்சிகளும், இயக்கங்களும் மட்டுமே பெருமளவில் முன்னெடுத்து வருவதை நாம் அறிவோம்.
 
இத்தகையப் போராட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தி பிரசுரங்கள்-வெளியீடுகள் கொண்டு வருவதும், சுவரொட்டிகள்-பேனர்கள் மூலமாக விளம்பரம் செய்வதும், ஆர்ப்பாட்டங்கள்-பொதுக்கூட்டங்கள் நடத்துவதும் அவசியமாகிறது.
 
மேலும், போராட்டக் களத்தில் இருப்பவர்களுக்கான உணவு -தேநீர் மற்றும் மருத்துவத் தேவைகளும் ஏற்படுகிறது. இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள், நடுத்தரப்பிரிவினர் மட்டுமே. இவர்கள், தங்களால் இயன்ற அளவு சொந்தக் காசை இத்தகையப் போராட்டங்களுக்குச் செலவழித்தாலும், பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்தப் போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது.
 
அதனால்தான், சக தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் இராணிப்பேட்டையில் செயல்படும் பெல் நிறுவன ஊழியர்கள், போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டி, நிதி அளித்துள்ளனர்.
 
பொதுமக்களிடம் நிதி பெறும் இத்தகைய அணுகுமுறை காந்தி காலத்தில் இருந்தே நமக்கு பரிச்சயமானதுதான். மகாத்மா காந்தி முன்னெடுத்த போராட்டங்களுக்கான நிதி தேவையை பொதுமக்களை நம்பியே ஈடு செய்து வந்தார்.
 

காங்கிரசுக்கு என நிரந்தரமான நிதியைத் திரட்டி, அந்த நிதியைக் கொண்டு சொத்துக்களை வாங்கி, சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்து வருமாறு செய்ய வேண்டும் என்று முதலில் காந்தி விரும்பினார்.  
 
சொத்துக்களை வாடகைக்கு விட்டதிலிருந்து கிடைத்தத் தொகையைக் கொண்டு கட்சியையும் நடத்தி வந்தார். ஆனால் காலப்போக்கில் சொத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சச்சரவினால் சொத்து குறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் வாடகைப் பணம் எல்லாம் நீதிமன்றத்தில் செலுத்தும் நிலைக்கு ஆளானது. இந்தத் துக்ககரமான அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த பிறகு, நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்களை நடத்துவது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்தார்.
 
நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்திற்கு இருக்குமேயானால், அது அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும், அந்நிதியுடன் ஊன்றப்பட்டு விடுகிறது. பொது மக்களின் அங்கீகாரத்தின் பேரில் அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம்.
 
அத்தகைய ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஆதரவு இல்லை என்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்பிராயத்திற்கு மாறுபட்ட காரியங்களையும் அடிக்கடி செய்கின்றன. நம் நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம்.
 
மத சம்பந்தமான தரும ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் ஸ்தாபனங்கள் கணக்குக் காட்டுவது என்பதையே விட்டுவிட்டன. தருமகர்த்தாக்களே அச்சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் யாருக்கும் பொறுப்பாளிகள் அல்ல.
 
இயற்கையைப் போல அன்றைக்கு தேவையானதைப் பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை.
 
பொது ஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்து வரும் உரிமையே இல்லை. வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத் தொகை, அதன் செல்வாக்குக்கும், அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து
 
என்று தனது சுயசரிதையில் பதிவு செய்கிறார் மகாத்மா காந்தி. (சத்திய சோதனை: பக்கம் 236-238)
 
பொது மக்களின் நலனுக்காகச் செயல்படும் ஒரு பொது அமைப்பு, ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது அதற்குத்  தேவையான நிதியை அவ்வப் பொழுது பொது மக்களிடம் திரட்டிக் கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக நிதியைத் திரட்டி அதை பணம்-நகை, மனை-கட்டடம்-நிலம் என சொத்தாக சேர்த்து வைத்துக் கொண்டால், அதைக் கையாள்வதில் ஏற்படும் முறைகேடுகளால் அந்த அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டு, அடிதடி-கோர்ட்-கேஸ் என அலைவதோடு, பொதுமக்களிடையே அசிங்கப்பட்டு, அந்த அமைப்பின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
 
அந்த அமைப்பு மட்டுமல்ல, அந்த அமைப்பில் செயல்படுகின்ற ஒவ்வொருவரும் நிதி விவகாரத்தில் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும். வசூலான நிதியையும், செய்த செலவுகளையும் ஒவ்வொரு தனிநபரும் முறையாகக் கணக்குக் காட்ட வேண்டும். முன்பெல்லாம் பேருந்துகளிலும் கடைவீதிகளிலும் உண்டியல் குலுக்கும் பொழுது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என நாணயங்கள்தான் கிடைக்கும். இன்றோ நூறு, இருநூறு, ஐநூறு, இரண்டாயிரம் என நோட்டுகள் கிடைக்கலாம். எது கிடைத்தாலும் பைசா பிசிறில்லாமல் வரவு-செலவு கணக்கை அமைப்பில் ஒப்படைக்க வேண்டும். இயக்க வேலைகளின் போது களைப்புக்குத் தேநீர் குடிக்கலாம், ஆசையாய் இருக்கிறது என்பதற்காக மக்கள் பணத்தில் பாதாம்கீர் குடிக்கக் கூடாது. அதேபோல நிதி கிடைக்கிறது என்பதற்காக கந்துவட்டிக்காரர்களிடமும், கஞ்சா-சாராய வியாபாரிகளிடமும் அவர்கள் கொடுத்தாலும் நிதி பெறக்கூடாது.
 
புத்தகங்கள், வெளியீடுகள் விற்பனை செய்யும் பொழுது புத்தகத்தின் விலை ரூபாய் 30 என்றால், ஒருவர் 100 ரூபாய் கொடுத்து மீதி சில்லரை வேண்டாம், வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால், அந்த மீதி 70 ரூபாயை வரவாக கணக்கில் காட்ட வேண்டும். அதை தனது பாக்கெட்டில் போட்டுக் கொள்ளக் கூடாது.
 
தான் கொடுத்த பத்து ரூபாய் நிதி விடுதலை ஏட்டில் வெளியான பட்டியலில் இல்லை என்பதை அறிந்து, நிதி கொடுத்த ஒரு மருத்துவர்
பெரியாரிடம் கேட்டபோது, அந்தப் பத்து ரூபாய் வசூல் செய்த ஒரு மாவட்ட தலைவர், அதைக் கணக்கில் காட்டாததால் அவரை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து பெரியார் நீக்கி இருக்கிறார் என்பது வரலாறு. அதனால்தான் பெரியார் நிதி விவகாரத்தில் மகாத்மாவை போல உயர்ந்து நிற்கிறார்.
 

ஆனால், இன்று அப்படியா? கணக்குக் காட்டாமல் ஆட்டயப் போடுபவர்களை எல்லா இயக்கங்களிலும் காண முடிகிறது. என்னோடு ஒரு அமைப்பில் பயணித்த ஒருவர் நிதி விவகாரத்தில் கையும் களவுமாக பிடிபட்ட போது இயக்கத்தை விட்டு வெளியேறி வேறு அணியில் சேர்ந்து கொண்டார். 30 ரூபாய் வெளியீடு விற்ற போது கிடைத்த 100 ரூபாயில் 70 ரூபாயை கணக்கில் கட்டாமல் ஆட்டயப் போட்டவரும் இவர்தான். பலரிடம் மாதாந்திர நிதி வசூல் செய்து அதை கணக்கில் காட்டாமல் ஏமாற்றியவரும் இவர்தான்.
 
கணக்கு வழக்குகளை முறையாக முன்வைக்காமல் பலலட்சம் பற்றாக்குறை காட்டி பதிப்பகங்களையே படுக்கவைத்த பதிப்பகப் பொறுப்பாளர்களும் சில அமைப்புகளில் இருக்கத்தான் செய்கின்றனர்.
 
பொதுவாழ்வில் ஈடுபடுவோர், தங்களுக்கு நிதி தேவை என்றால் வெளிப்படையாக தாங்கள் செயல்படுகின் அமைப்பில் முன்வைத்துக் கோர வேண்டும். வசூல் பணத்தைக் கணக்குக் காட்டாமல் ஏமாற்றக் கூடாது‌. இது, தான் செயல்படும் அமைப்புக்கு மட்டுமல்ல நம்பி நிதி அளிக்கும் பொதுமக்களுக்கும் செய்யும் துரோகமாகும். தனிப்பட்ட முறையில் கொடுத்தால் கூட அதைக் கணக்கில் காட்டி, அவசியத் தேவை எனில் அமைப்பின் அனுமதியுடன்தான் அதைப் பெற வேண்டும். சில அமைப்புகளில் தோழமை அற்றுப் போவதற்கு இதுவும் ஒரு காரணம்

பொது நல அமைப்புகளில் இத்தகைய நபர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான் என்றாலும் அது மொத்த அமைப்பையும் பார்த்தினீயம் போல சீரழித்து விடுகிறது. அவர்கள் எத்தகைய திறமைசாலிகளாக இருந்தாலும், முக்கியப் பொறுப்புகளில் இருந்தாலும்பெரியார் செய்ததைப் போல, இப்படிப்பட்ட நபர்களைக் களை எடுக்க வேண்டும். இத்தகைய நபர்களை விட்டால் அமைப்புக்கு வேறு ஆள் கிடைக்குமா என ஒரு அமைப்பு அந்த நபர்களைக் களை எடுக்கத் தயங்குமேயானால் காலப் போக்கில் அந்த அமைப்பே காணாமல் போகும்.

ஊரான்

No comments:

Post a Comment