மாற்றுத் திருமண வடிவம்!
ஒரு ஆண் உயிரினமும் பெண் உயிரினமும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்வது என்பது உயிரினத்தின் இயற்கை நிகழ்வு (Natural phenomena). ஒரு உயிரியல் தேவை என்ற அடிப்படையில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறவாழ்வில் ஈடுபடமுடியும் என்ற வகையில் மட்டுமே தனங்களது துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்குச் சமூகம் ஏற்படுத்தியுள்ள சடங்குகள் சம்பிரதாயங்கள் தேவைதானா என்ற கண்ணோட்டத்திலிருந்து மாற்று திருமண முறையைத் தீர்மானிக்க வேண்டும்.
மாற்றுத் திருமண வடிவத்தை யார் நாடுகிறார்கள்? குறைந்த பட்சம் மணமக்களில் ஒருவர், நிலவுகின்ற இந்தச் சமூகத்தில் உள்ள இழிவுகளுக்கு எதிராகச் சிந்திக்கிற, போராடுகின்ற போராளியாக இருப்பவர்கள். இவர்கள் பார்க்கும் பொருத்தம் தன்னுடைய இந்த சமூகப் பணிக்கு இடையூறு இல்லாத வகையில் தங்களது இணையைத் தேடுகிறார்கள். இதுதான் இவர்கள் பார்க்கும் முதல் பொருத்தம்!
இங்கே சாதியோ, மதமோ, குலமோ, கோத்திரமோ தேவைப்படுவதில்லை. ஒரே சாதியில் ஒரே மதத்தில் அமைந்தாலும் இவற்றை மட்டும் பொருத்தமாக எடுத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்வதில்லை.
மணமக்களில் ஒருவர் மற்றவரைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர்கள் உழைப்பை நேசிக்கிறார்களா, உழைப்பில் ஈடுபடுகிறார்களா என்பதைத் தகுதியாகப் பார்க்கிறார்கள். உழைப்பில் ஈடுபடுபவர்கள் மட்டுமே, உழைப்பை நேசிப்பவர்கள் மட்டுமே உழைப்பாளி மக்களை, சொந்த பந்தங்களை, நண்பர்களை, உறவினர்களை நேசிப்பார்கள் என்ற புரிதலிலிருந்து இந்தத் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.
முக்கியமான, அவசியமான மேற்கண்டப் பொருத்தங்களை மட்டுமே எடுத்துக் கொள்வதால் பிற பொருத்தங்கள் தேவையற்றதாகி விடுகின்றன.
இப்படிப் பொருந்தம் அமைந்து விட்ட பிறகு மணவாழ்க்கையைத் தொடங்கிவிடலாமே, எதற்கு அதற்கு ஒரு விழா என்ற கேள்வி எழுகிறது.
சாதி, அந்தஸ்து, சம்பிரதாயம், சடங்குகள், ஆடம்பரங்கள் போன்ற முகமூடிகளுக்குள் திருமணங்களைப் பார்த்த இந்தச் சமூகம் மாற்றுத் திருமண நிகழ்வை தன்னுடைய உறவினர் செய்யும் போது அங்கீகரிப்பதில்லை.
ஒருவகையில் பழைய திருமண முறை, புதிய மாற்றுத் திருமண முறையின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்த முற்படுகிறது. அதற்கெதிரான போராட்டத்தின் மூலமே புதிய மாற்றுத் திருமணமுறை தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகவே, ஊர்க்கூட்டி புரட்சிகரத் திருமணங்களை நடத்த வேண்டியுள்ளது. வடிவம் என்ற அடிப்படையில் இத்திருமணமுறையை பிறர் கற்றுக் கொள்ளவும், கடைபிடிக்கவும் வேண்டும் என்பதற்காவே பகிரங்கமாக பலர் முன்னிலையில் செய்ய வேண்டியதாகிவிடுகிறது.
அழைப்பதற்கு ஒரு பத்திரிக்கையும், சில நேரங்களில் சுவரொட்டிகளும் தேவைப்படுகின்றன. வருகிறவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இடம் தீர்மானிக்கப்படுகிறது. வீடோ, மண்டபமோ அல்லது தெருமுனையோ அதற்கேற்ப முடிவு செய்யப்படுகிறது. வருபவர்களுக்கு எளிய உணவு பரிமாறப்படுகிறது. சில நேரங்களில் அது தேநீர், பிஸ்கட் என்ற அளவில் சுருங்கி இருப்பதும் உண்டு. இருந்தாலும் தவறேதும் இல்லையே? வடிவத்தை அறிமுகப்படுத்துவதற்குத்தான் இந்த நிகழ்வேயன்றி, தங்களது பகட்டை பறைசாற்றுவதற்கல்ல.
பட்டாடைகளும், பகட்டாடைகளும் இங்குத் தேவையில்லை. அதாவது, வரவேற்பின் போது மேற்கத்திய கோட்டு சூட்டு போட்ட அமெரிக்கனாகவும் – அது மே மாத வெயிலாக இருந்தாலும் கூட – மறுநாள் காலை தாலி கட்டும் போது, பூணூல் போட்ட புராதன இந்தியனாகவும் வேடம் போடவேண்டியத் தேவை இங்கே இல்லை.
முதலில் புரோகிதப் பார்ப்பானுக்கு பெண்டாட்டியாகி, பிறகு மணமகனுக்கு மனைவியாகும் அற்பங்கள் இங்கே நிகழ்வதில்லை. அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பஞ்ச பூதங்களையும் சொந்தங்களையும் சாட்சிக்கழைத்து, நடத்தப்படும் திருமணங்களில் ஆணோ அல்லது பெண்ணோ அவற்றுக்காக பயந்து கொண்டிருப்பதில்லை. அவர்கள் விருப்பத்திற்கேற்ப முரண்பாடுகள் வரும் போது முறித்துக் கொண்டுதானே செல்கிறார்கள்?
ஆனால், புரட்சிகரத் தம்பதியினர் தங்களுக்குச் சமூகக் கடமை இருப்பதனால், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள். காரணம், தங்களது சமூகப் பணிக்கு இல்லற செயல்பாடு குறுக்கிடக் கூடாது என்ற உயரிய நோக்கமே! மற்ற திருமணங்களில், சில இடங்களில் பேசித் தீர்த்துக் கொள்வதில்லையா என்று கேட்கலாம், அது அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளில் இருந்து, பழைய சமூகம் அவர்கள் மீது திணித்துள்ள மதிப்பீடுகளில் இருந்து முடிவு செய்து கொள்கிறார்கள். இங்கே சமூகத்திற்கான கடமை, பொறுப்பு என்பதெல்லாம் எதுவும் கிடையாது!
புரட்சிகரத் திருமண முறையில் மணமக்கள் உறுதி மொழியும், ஒரு சிலர் உரையாற்றுவதும், கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான கலைநிகழ்ச்சிகள் மட்டுமே இடம் பெறுகின்றன. இதுவும் ஒரு ஒழுங்கில் நடக்கிறது.
சில பதிவர்கள், ”ஏன் மாலை மாற்றிக் கொள்ளவேண்டும்?”, ”பெற்றோர்கள் ஏன் பட்டாடை உடுத்திக் கொள்ள வேண்டும்?” என்பன போன்ற ஒரு சில அம்சங்களை வைத்து கேள்வி எழுப்பி, இந்த மாற்றுத் திருமண முறையையே கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். இதன் மீது ஒருவித முத்திரையைக் குத்த எத்தனிக்கிறார்கள். மாற்றுத் திருமணங்களை ஆதரிப்பவர்கள் போல வந்து, இது போன்று குறை கூறுவதன் மூலம், அவர்களிடம் பழைய சமூகக் கருத்துக்கள்தான் உள்ளன என்பதைக் காட்டுகிறார்கள்.
ஏற்கெனவே, சொன்னது போல மாற்றுத் திருமண முறையில் பட்டாடைகள் தேவையில்லைதான்! குற்றம் சொல்வதைவிட அவர்களுக்குச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வார்கள்.
மாலை மாற்றுவது என்பது இங்கு சடங்காகத்தான் செய்யப்படுகிறது என்றே கருதவேண்டும். சம்பிரதாயம் என்ற அடிப்படையில் இவையும் தவிர்க்கப்பட வேண்டியவைதான்.
மாலை மாற்றுவது என்பது இங்கு சடங்காகத்தான் செய்யப்படுகிறது என்றே கருதவேண்டும். சம்பிரதாயம் என்ற அடிப்படையில் இவையும் தவிர்க்கப்பட வேண்டியவைதான்.
இந்தத் திருமண முறை என்பது கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புத் தோழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருவதோடு அவர்கள் வெற்றிகரமாக தங்களது வாழ்க்கையை நடத்தியும் வருகிறார்கள். அவர்கள் சொந்த பந்தங்களாலும் நண்பர்களாலும் சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டும் இக்ருகிறார்கள்.
இந்த விவாதம் இணைய பதிவர்களுக்குத்தான் புதியதே ஒழிய, வெளியே வாழும் தோழர்கள் மக்களோடு மக்களுடன் விவாதித்தும் தெளிவு படுத்தியும் வருகிறார்கள். மேலும், இந்தத் திருமண வடிவங்களை எளிமைப்படுத்தவும், விரிவுபடுத்தவும் வாசகர்கள் முன்வருவார்களேயானால், அதுவே அவர்கள் இந்தச் சமூகத்திற்கு செய்யும் பெரும் தொண்டாகும்.
வாசகர்கள் முடிந்தால் இது போன்ற திருமணங்களில் பங்கேற்பதன் மூலம், அதைத் தொடர்ந்து தம்பதியரின் வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமும் மட்டுமே, இதுதான் சிறந்த திருமண முறை என்பதை அவர்கள் உணர முடியும்"
***
இதுவே இணையத்தில் பின்னூட்டங்கள் (comments) என்ற வகையல் நான் எழுதிய முதல் பதிவு.
இனி நான் வலைப்பூ தொடங்கியது குறித்தும், அதில் எனது எழுத்து அனுபவம் குறித்தும் பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
No comments:
Post a Comment