Monday, December 15, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 10

"மாதமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசுடா?." (135)

மாதவிடாய் இல்லையேல் இனவிருத்தி ஏது என்று கேட்பதோடு, பெண்களின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியைத் தீட்டாகக் கருதும் சமூகக் கண்ணோட்டத்தைச் சாடுகிறார் சிவவாக்கியர். 

சபரிமலைக்குப் பெண்கள் போகலாம் என சரியான முறையில் வழங்கப்பட்ட சபரிமலைத்  தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என அங்கே கூச்சலிடுகின்றன; ஆனால், உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட திருப்பரங்குன்றம் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என இங்கே கூப்பாடு போடுகின்றன சங்கிகள்.‌


"நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் 
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அது என்பயன்?" (140)

ஆகமங்களையும் மந்திரங்களையும் எத்தனை நாள் ஓதினாலும் அதனால் என்ன பயன் என்று கேட்கிறார் சித்தர்.

"ஈணெருமையின் கழுத்தி  இட்டபொட்ட ணங்கள்போல் மூணுநாலு சீலையில் முடிந்தவழ்க்கும் மூடர்காள்"....(151)

எருமையின் கழுத்தில் கட்டப்படும் பொட்டணங்கள் போல அர்த்தமற்ற சடங்குகளில் மூழ்கி, உண்மையான இறைவனை அறியாமல் அலையும் மக்களை சிவவாக்கியர் சாடுகிறார்.

"கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா?
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா" (184)

வாயால் மந்திரங்களைச் சொல்வதால் என்ன பயன் என்று கேட்கிறார் சிவவாக்கியர்

"பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்" (235)

செதுக்கப்பட்ட ஒரு கல்லை (சிலை) பழைய, புனிதப் பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்தச் சிலைக்குள் இறைவனைக் காண்பதாகக் கூறி, ஏமாந்து போகிறீர்கள் என்கிறார் இந்த சித்தர்.

"ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே." (242)

தேரில் ஒரு சிலையை வைத்து, அதை வடங்களைக் கட்டி இழுப்பது அதாவது தேரோட்டம் நடத்துவது
அறியாமையுள்ள மனிதர்கள் செய்யும் வீண் சலசலப்பு என்கிறார் சிவவாக்கியர்.

"பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே" (252)

இப்படி, பேய் பிசாசுகளை நம்பி பேய் ஓட்டும் மந்திரவாதிகளிடம் ஏமாறும் மக்களிடம் கேள்வி எழுப்புகிறார் இந்த சித்தர்.

"ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தக்கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தக்கல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?". (424)

வாசலில் போடும் கல்லை மிதித்துச் செல்கிறீர்கள், ஆனால் பூசை செய்யும் கல்லை மட்டும் பூ, நீர் வைத்து வணங்குகிறீர்கள். இதில் எந்தக் கல்லில் இறைவன் இருக்கிறான் என உருவ வழிபாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார் சிவவாக்கியர்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, December 14, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 9

"அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அறிகிலீர்;
உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும் 
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்கனே? (75)"

ஞானம் என்பது வெறும் படிப்பிலோ, பேச்சிலோ இல்லை; அது செயலில், அனுபவத்தில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது வீண்; தயிர் உரியிலே இருக்கும்போது வெண்ணெய் தேடி வெளியில் அலைவது போலப் பயனற்றது. 


"மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்!
மந்திரங்கள் ஆவதும் மறத்தில் ஊறல் அன்றுகாண்;
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை;
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!" (92)

புறத்தில் சொல்லப்படும் வெறும் மந்திர வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்கிறார்.

"சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்,
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என் செய்வேன்? மூவராலும் அறியொணாத முக்கணனமுதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே". (129)

கற்களைக் கடவுளாக வணங்கும் இந்தச் செயலை நினைத்து (சிவவாக்கியர்) சிரிக்கிறார்.

"காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே." (130)

காலையிலும் மாலையிலும் புனித நீராடுவது, சடங்குகளில் ஈடுபடுவது போன்ற வெளித்தோற்ற வழிபாடுகளில் ஈடுபடும் மூடர்களே (அறிவில்லாதவர்களே), எப்போதும் நீரில் கிடக்கும் தேரையைப் போல, நீராடுவதால் என்ன பயன்? 
எனக் கேட்கிறார் சிவவாக்கியர்.

"எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ?
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?
வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே." (131)

வெவ்வேறு கடவுள்கள் உண்டு என்று கூறுபவர்கள் வாய் புண்ணாகி இறந்து போவார்கள்" (அதாவது, அவர்கள் சொல்வது தவறு) என்று சிவவாக்கியர் கூறுகிறார்.

இந்தப் பாடலின் மூலம், இறைவனைப் பிரித்துப் பார்ப்பதையும், மதவாதங்களையும், பல கடவுள் கொள்கைகளையும் கண்டிக்கிறார். 

சிவவாக்கியரின் சாட்டை அடி தொடரும். 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Friday, December 12, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 8

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ? (13)”

“நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர், (14)”

சிவவாக்கியர்

“சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் (18)”

“கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குலங்களும்
மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. (34)”

“செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே! (35)”

தராவிலும், அதாவது மரத்தால் செய்யப்பட்ட சிலைகளிலும்..

“பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்,
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! (36)”

“இருக்குநாலு வேதமும் எழுத்தை அறஓதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே! (37)”

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறெதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும உம்முளே! (39)

பணத்தி என்பது பார்ப்பனப் பெண்களைக் குறிக்கும்.

"ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்; 
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே! (41)"

"சாதியாவது ஏதடா சலம்திரண்ட நீரெல்லாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம் ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி, காரை, கம்பி, பண்டகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ? (46)

"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா! உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே (47)"

மறுபிறப்பு இல்லை என்கிறார்.

இப்படி சங்கிகளை வரிசை கட்டி அடிக்கிறார் சிவவாக்கியர். 

அவரது அடி இன்னும் தொடரும்...

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Thursday, December 11, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 7

“கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்? (48)”

நான்கு வேதங்களை ஓதினாலும் கடவுளைக் காண இயலாது எனவும்,


“ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்? (125)”

சாதி, மத, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்ற சித்தர்களின் ஆழ்ந்த ஏக்கத்தையும், கபிலர் போன்ற பெரியோர்களின் ஞான உபதேசத்தைப் பின்பற்றி அப்படிப்பட்ட உலகத்தில் வாழ்வது எப்போது நிகழும்,  என அவாவெழுப்பி,

"வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றலாப் பொருள் காண்பது எக்காலம்? (140)"

வேதங்கள், ஆகமங்கள் போன்ற நூல்களைப் படித்துப் புரிந்துகொண்டாலும், ஞானிகள் உபதேசித்த போதனைகளைக் கேட்டும், வாயால் பேசி விளக்கமளித்தும், பூசை, தியானம் போன்ற வழிபாடுகளைச் செய்தாலும், உண்மையை உணர முடியாது என்பதோடு,

“வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து 
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம? (147)”

வெறும் வேதப் புத்தக அறிவைக் கொண்டு அறிவை (ஞானத்தை)  அடைய முடியாது எனவும்,

“சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கி
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்? (155)”

சாத்திரங்களையும், நான்கு வேதங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, சூத்திரங்களின் உண்மையான பொருளை உணர்ந்து, துன்பங்களை நீக்கி, அறிவு (மெய்ஞ்ஞான) நிலையை அடைவது எப்போது?

எனக் கேட்கிறார் பத்திரிகிரியார்.

தொடரும்

ஊரான்

Wednesday, December 10, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 6

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப் பையை வைத்திருக்கும் நல்லப் பாம்பே!
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே!
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே! (20)

என்ற பிரபலப் பாடலைப் பாடிய பாம்பாட்டிச் சித்தர்,


“பொய்ம் மதங்கள் போதனைசெய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க் குருவின் பதம் போற்றி ஆடுபாம்பே! (11)’

என பொய்யான மதங்களைப் போதிக்கும் போலி குருமார்களுக்குப் புத்திமதி சொல்வதோடு, 

உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி?
உலகத்தின் மூடர்களுக் குண்டோ உணர்ச்சி?
புளியிட்ட செம்பிற்குற்றம் போமா? அஞ்ஞானம்?
போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே! (92)”. 

என கல்லில் செதுக்கிய சிலைக்கு ஏதடா உணர்ச்சி எனக் கேள்வி எழுப்பி,

“ஏட்டுச்சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்
எண்திசை திரிந்துங் கதி எய்தல் இல்லையே!
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே! (94)”,

நீ எத்தனை கோவில் கட்டி பூசை செய்தாலும் கடவுளைக் காண இயலாது என எடுத்தியம்பி,

சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடுபாம்பே!. (98)”,

வேதங்களும், சாஸ்திரங்களும், புராணங்களும், ஆகமங்களும் வீணான நூல்கள் என துணிந்து சொல்லி,

“சமயபேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே அல்லாதுசற் சாதுக் களுக்கோ?
சிமயத்தி லேறினபேர் சித்தம் மாறுமோ?
சித்தர்சித் தாந்தந்தேர்ந்து ஆடுபாம்பே! (99)”

சாதி பேதம் நமக்குக் கூடாது என புத்திமதி சொல்லி,

பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ?
பூமிவலஞ் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வத்துவை
அடையலாம் என்று துணிந் ஆடுபாம்பே! (100)”

பூசை செய்து ஊர்ஊராய்ச் சுற்றி வந்தால் புண்ணியம் உண்டோ என வினா எழுப்பி,

“தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்
தனிமந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மதலினைச் சுற்றுவார் வாயில் காணார்.
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி
அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே
இந்த மருந்தினைத் தின்பீராகில்
இனிப் பிறப்பு இல்லையென்று ஆடுபாம்பே! (113)”

சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்
வேண்டாத மனையினில் உறவு செய்வோம்
சோதித் துலாவியே தூங்கி விடுவோம்
சுகமான பெண்ணையே சுகித்திருப்போம்
ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்
அறியார்கள் இதையென் ஆடுபாம்பே! (123)”

என் சாதிப் பிரிவினைக்குத் தீ மூட்டச் சொல்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

இப்படி, சனாதன சங்கிகளுக்கு எதிராகப் படமெடுத்து ஆடுகிறார் பாம்பாட்டிச் சித்தர்.

சங்கிகளுக்கு எதிரான சித்தர்களின் ஆட்டம் தொடரும்...

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 5

Tuesday, December 9, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 5

"அத்தி வரைவாடி அகப்பேய்
ஐம்பத்தோர் அட்சரமும் 
மித்தையாங் கண்டாயே அகப்பேய்
மெய்யென்று நம்பாதே. (17)"

மந்திரங்கள் தந்திரங்கள் என்பவை மாயை, அவற்றை மெய் என்று நம்புவது வீண் எனவும்,


"சரியை ஆகாதே அகப்பேய்
சாலோகங் கண்டாயே
கிரியை செய்தாலும் அகப்பேய் 
கிட்டுவது ஒன்றுமில்லை. (25)"

எவ்வளவுதான் சரியை (கோவில் வழிபாடு) செய்தாலும், 
எவ்வளவுதான் கிரியை (தியானம், யோகத்தின் ஒரு பகுதி) செய்தாலும், எதுவும் கிடைக்காது (மெய்ஞானம் கிட்டாது) எனவும்,

நாலு மறைகாணா அகப்பேய்
நாதனை யார் காண்பார்
நாலு மறை முடிவில் அகப்பேய் 
நற்குரு பாதமடி. (64)"

நான்கு வேதங்களைப் பேசினாலும் இறைவனைக் காண முடியாது எனவும்,

"சாதிபேதமில்லை அகப்பேய்
தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் அகப்பேய் 
ஒன்றுந்தான் இல்லையடி. (68)"

என்பதோடு,

"மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் முத்தியும் வேண்டார்கள்
திட்சை வேண்டார்கள் அகப்பேய் சின்மயமானவர்கள். (82)"

மோட்சமில்லை, முக்தி இல்லை, தீட்சை எனும் சடங்கு இவை எதுவும் இல்லை எனவும், அதனால்

"வேதம் ஓதாதே அகப்பேய் 
மெய் கண்டோம் என்னாதே
பாதம் நம்பாதே அகப்பேய் 
பாவித்துப் பாராதே. (90)"

என வேதம் ஓதக்கூடாது என்று முடிக்கிறார் அகப்பேய்ச் சித்தர்.

***

“தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே.

என்ற பிரபல பாடலுக்குச் சொந்தக்காரரான இடைக்காட்டுச் சித்தர்,

இடைக்காட்டுச் சித்தர்

“மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம்-தாகம்போம்
வேதமுதல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்
ஒதுபிர மரத்துஉற்றுக் கால். (24)”

அதாவது, வேதங்கள், ஆகமங்கள் இவை மேலானதல்ல என வேதாந்திகளின் முகத்தில் கரியைப் பூசுகிறார் இடைக்காட்டுச் சித்தர்.

சங்கிகளுக்கு எதிரான சித்தர்களின் சீற்றம் தொடரும்...

ஊரான்

Monday, December 8, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 4

“சாத்திரம் பார்த்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன? (16)”

என, சாஸ்திரங்களையும் வேதங்களையும் பார்ப்பதனால் என்ன பயன் எனக் கேட்பதோடு,

கொங்கண நாயனார்

சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ? (95)”

என சாதி பேதம் பேசும் சனாதனிகளைச் சாடுவதோடு,

“எல்லா மறிந்தவ ரென்றுசொல் லியிந்தப்
பூமியி லேமுழு ஞானியென்றே
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே! (103)

என வயிறு வளர்க்கவே எல்லாம் தெரிந்தவர் போல் வேடம் போடும் சனாதன குருமார்களை முச்சந்தியில் நிறுத்துகிறார் கொங்கண நாயனார் எனும் சித்தர்.

***
“நந்த வனத்திலோ ராண்டி-அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி-மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. (4)

என்ற பிரபலப் பாடலைப் பாடிய கடுவெளிச் சித்தர் கேட்கிறார்,

கடுவெளிச் சித்தர்

“காசிக்கோ டில்வினை போமோ-அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ?-பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ? (15)”

"பொய் வேதந் தன்னைப் பாராதே-அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழியாரைச் சாராதே-துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே‌. (24)"

என கலவரக்காரர்களான சனாதனிகளோடு சேராதே என எச்சரித்துள்ளார்.

“சிவமன்றி வேறே வேண்டாதே-யாருக்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே-நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. (26)

கடவுளை வணங்கு, ஆனால், பக்தியின் பெயரால் இன்று திருப்பரங்குன்றத்தில் கலவரத்தைத் தூண்டும் சங்கிகள் போன்று நடவாதே என அன்றே எச்சரித்துள்ளதோடு,

“எவ்வகை யானநன் னீதி-அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீ போதி
ஒவ்வா வென்றே பல சாதி-யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. (32)”

என பல சாதி இல்லை, மனிதர்கள் எல்லாம் ஒன்றென்று உறைப்பதோடு,

‘கள்ள வேடம் புணையாதே-பல 
கங்கையி லேயுன் கடம் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே-நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. (33)

என்று எச்சரிக்கிறார் கடுவெளிச் சித்தர். 

தொடரும்

ஊரான்

Sunday, December 7, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 3

வேதங்களும் சாஸ்திரங்களும்  தாங்கள் பிழைப்பதற்காக 'நூலார்' உருவாக்கியவை என்கிறார் அகத்தியர் எனும் சித்தர். நம்மை ஏய்க்க புனை நூல்களை ஆக்கியதனலோ அல்லது தங்களை உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வதற்காக (பூ)நூல் அணிவதாலோ என்னவோ  பார்ப்பனர்கள் நூலாரென்றே அன்றும் இன்றும் விளிக்கப்படுகின்றனர்.

ஞானம்-1

பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
பலவேத சாத்திரமும் பாரு பாரு
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே. (2)


பாரப்பா நாலுவேதம் நாலும் பாரு 
பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி
வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி
வீணிலே யவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்!
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே. (3)

மூச்சொடுங்கிப் போனவிடம் ஆறுங் காணார்
மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே
ஆச்சப்பா கருவுதனில் அமைத்தாற் போலாம்
அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே. (7)

ஞானம்-4

தானென்ற பெரியோர்க  ளுலகத் துள்ளே
தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து
தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்
நாட்டினா ருலகத் தோர் பிழைக்கத்தானே. (2)

பிழைப்பதற்கு நூல் பலவுஞ் சொல்லா விட்டால்
பூரணத்தை யறியாமலிறப்பா ரென்றும் உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால்
உலகத்திற் புத்தி கெட்டேயலைவாரென்றும்
தழைப்பதற்குச் சாதி யென்றும் விந்துவென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரியென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை
உத்தமனே யறிந்தோர்கள் பாடினாரே. (4)

பாடினா ரிப்படியே சொல்லா விட்டால்
பரிபாடை யறியார்கள் உலக மூடர்
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத்
தலைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்
வாடுவார் நாமமென்றும் ரூபமென்றும்
வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தை யறியார் மூடர்
நாய்போலே குரைத்தல்லோ வொழிவார் காணே. (5)

அகத்தியர்
பதினெண் சித்தர்களில் ஒருவர்

தொடரும்

ஊரான்

Saturday, December 6, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 2

வேதங்களையும் சாஸ்திரங்களையும் புராணங்களையும் சாதிகளையும் கல் செம்பு சிலைகளைக் கொண்டே அடித்து நொறுக்குகிறார் வால்மீகர் எனும் சித்தர். இவை எல்லாம், வேதாந்திகளின் வயிற்றுப் பாட்டுக்கே எனச் சாடுகிறார்.

***
ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
அவரவர் கண்டதையெல்லாம் சரிதை யென்பார்
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே
உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனியாய் தின்று
வாய்பேசா வூமையைப் போல்திரிகு வார்கள்
காமப்பா ஞானமென விண்டு மேலும்
காக்கை பித்தன் மிருகம்போல் சுற்றுவாரே. (4)


சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
தூடிப்பா ருலகத்தில் சிற்சில் லோர்கள்
தெற்றுவா ரவர்கள் பிழைக்க அனேக வேடம்
தேகத்தி  லணிந்துகொண்டு திரிகு வார்கள்
பற்றுவார் குருக்களென் பார்சீட ரென்பார்
பையவே திட்சைவைப்பார் தீமை யென்பார்
கத்துவார் திரிமூர்த்தி தாமே யென்று
காரணத்தை யரியாத கசடர் தானே. (5)

தானென்ற வுலகத்தில் சிற்சில்லோர்கள்
சடை புலித்தோல் காசாயம் தாவடம் பூண்டு
ஊனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென்பார் ஞானி யென்பார்
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்
திருமாலைக் கண்ணாலே கண்டோம் மென்பார்
கானென்ற காட்டுக்கு ளலைவார் கோடி
காரணத்தை யறியாமல் கதறு வாரே. (6)

நில்லென்ற பெரியோர்கள் பாடை யாலே
நீடுலகம் தன்னுள்ளே நாலு வேதம்
வல்லமையாய்ச் சாத்திரங்கள் ளிரு மூன்றாக
வயிறுபிழை புராணங்கள் பதினெட் டாகக்
கல்லுகளைக் கரைப்பதுபோல் வேதாந் தங்கள்
கட்டினா ‌ரவரவர்கள் பாடை யாலே
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்க ளரவர்கள் பிழைக்கத் தானே. (8)

வால்மீகர்
பதினெண் சித்தர்களில் ஒருவர் 
(வடமொழியில் இமாயணம் எழுதிய வால்மீகர் அல்ல இவர்)

தொடரும்

ஊரான்

Friday, December 5, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 1

ஆறு குளம் கோயில் தேடி அலையாதே, பூசை புனஸ்காரம் என்று மூழ்காதே, வேத  சாஸ்திரங்கள் பேசுவோரை நம்பாதே என அறிவுறுத்துகிறார் கரூவூரார் எனும் சித்தர்.

***
பாரேது, புலனேது? அனலு மேது?
பாங்கான காலேது? வெளியு மாகும்
நாரேது பூவேது வாச மேது?
நல்ல புட்பமந்தானேது பூசை யேது?
ஊரேது பேரேது சினமு மேது?
ஓகோகோ அதிசயந்தா னென்ன சொல்வேன்
ஆறேது குளமேது கோயி லேது
ஆதிவத்தை யறிவதனா லறிய லாமே. (10)


புகலுவார் வேதமெல்லாம் வந்ததென்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவும் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோமென்றே
அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி
இகலுமன மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே. (16)

பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப் 
புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்
ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி
புரட்டுருட்டாய் நினைவு தப்பிப் பேசுவானே. (17)

கரூவூரார்
பதினெண் சித்தர்களில் ஒருவர் 

தொடரும்

ஊரான்

Thursday, December 4, 2025

திருப்பரங்குன்றம் உணர்த்தும் பாடம்!

கல்லில் என்ன இருக்கிறது? இயற்கையாய் இருந்தால் அது பாறை. செதுக்கினால் அதுவே சிலை. அதைத்தாண்டி அதில் ஒரு வெங்காயமும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் செதுக்கிய சிலைகூட அல்ல; அது செங்குத்தாய் நிற்கும் ஒரு வெற்றுக்கல். இதற்கு தீபம் ஏற்றச் சொல்லி கலவரத்திற்கு தூபம் போடுகிறார் ஒரு நீதிபதி.  தமிழ்நாடு காவல்துறை இருக்கும்பொழுது, அதற்கு மத்திய காவல்படை, மனுதாரருக்கு பாதுகாப்புத்தர வேண்டும் என்கிறார். இது தீபத்தூண் அல்ல அது ஒரு எல்லைக் கல் என்கின்றனர் பிறர். 



“நட்டகல்லைத் தெய்வம்என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்! …” (494)

என கல்லை வணங்குவோரை எள்ளி நகையாடுவதோடு,.

“ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்…” (424) 

“..செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர் ..” (35)

“…பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்…” (235)

என சிவவாக்கியர் கல் வழிபாட்டைச் சாடிச் சீறுவதோடு‌, 

“இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான் …” (37)

“…எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?...” (222)

“…கோயில்பள்ளி ஏதடா? குறித்து நின்றது ஏதுடா?
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா? 
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே!” (184)

அதாவது, புறச் சடங்குகளை விட, அறிவை வளர்க்கும் பள்ளியில் உண்மை பக்தியுடன் ஈடுபடும்போது, இறைவனின் இருப்பை தன் உடலிலேயே உணர முடியும் என்பதை இந்தப் பாடலில் சிவவாக்கியர் வலியுறுத்துகிறார்.

“…சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ…” (13),

“ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே (463)

“..ஓதுகின்ற வேதம்எச்சில், உள்ளமந்திரங்கள் எச்சில்…” (41)

“…நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?...” (140)

“புத்தகங் களைச்சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்!” (472)

“பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே,” (248)

“பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?” (192)

என வேதங்களையும் மந்திரங்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்கிறார் சிவவாக்கியர் எனும் சித்தர். 
  
வேதங்கள், ஆகமங்கள், மந்திரங்கள், கோவில்கள், உருவ வழிபாடுகள் இவை இறைவனை அடைவதற்கு அல்ல, மாறாக வேதியர்கள் தங்கள் பிழைப்புக்காக உருவாக்கிக் கொண்ட ஏற்பாடுகள் என்பதை வால்மீகர் எனும் சித்தர் 
சொல்வது போல,

தொடுத்தார்க ளரவர்கள் பிழைக்கத் தானே". (8 - சூத்திர ஞானம்), என்பதை நாம் புரிந்து கொண்டு,

இறை நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளத்தில் மட்டும் இறைவனை நினைவுகூர்வதோடு  நிறுத்திக்கொண்டால், சனாதனம் சவக்குழிக்கு செல்வது உறுதி.  

சித்தர்கள் எனும் சம்மட்டியைக் கையில் எடுப்போம்! சனாதனத்தை அடித்து நொறுக்குவோம்!
திருப்பரங்குன்றம் உணர்த்தும் பாடம் இதுதான்! 

ஊரான்