முன்னிரவு தொடங்கிய மேடை அலங்கார வேலைகள் முடியும் தருவாயில் ஒரு பக்கம், மாலைநேர மணவிழா விருந்துக்கான சமையல் வேலைகள் மறுபக்கம் நடந்து கொண்டிருக்க, பங்குனியின் கடைசிநாள் ஞாயிறு பிற்பகலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவராக மண்டபத்தை நோக்கி வரத்தொடங்கினர்.
நண்பர்களும் உறவினர்களும் தோழர்களும் மண்டபத்தின் கீழ்வாசல் வழியாக திரள் திரளாய் நுழைவதைக் கண்டு அச்சமோ என்னவோ, கதிரவன் மேற்கு நோக்கி வேகமாக ஓடியதால் வெக்கையும் சற்றே தணிந்தது. வந்திருந்தோரின் நேச மழையில், நானோ கொடுங்கோடையிலும் உறைந்து போனேன்.
நண்பர்களை ஆரத்தழுவி கட்டி அணைப்பது வழக்கம்தான் என்றாலும், பல ஆண்டுகள் கழித்து சிலரைக் கட்டித் தழுவியபோது ‘ஸ்பைடர்மேனாக’ நான் பறக்கலானேன்.
வாழ்நாள் முழுக்க கூடவே பயணிக்கின்ற சொந்தங்கள், பொது வாழ்வில் களப்போராட்டங்களில் கைகோர்த்து பயணிக்கின்ற தோழர்கள், மிக நீண்டகாலம் அருகருகே அமர்ந்து வேலை பார்க்கும் சக ஊழியர்கள்
என இவர்கள், சிலசமயங்களில் சிலபல காரணங்களுக்காக விலகி நிற்கவோ, தோழமையை துண்டித்துக் கொள்ளவோ, மனம் கசிந்து போகவோ நேரிடலாம்.
“நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்” என்கிறான் வள்ளுவன் (785)
அண்மையில் சென்னையில் மின்சாரத்தால் தாக்குண்டு மழை நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை ஒரு இளைஞன் காப்பாற்றிய போது அவன் மீது அதைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடுதானே?
உலகையே உலுக்கிய சுனாமியின்போது உணவுக்காக நீண்ட வரிசையில் பலர் பசியோடு காத்திருக்க, முன்வரிசையில் தான்பெற்ற உணவை ‘என்னைவிடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்’ எனக்கூறி மீண்டும் மொத்த உணவோடு தனது உணவைச் சேர்த்த சிறுவனின் நடத்தையைப் படிக்கும் போது, அவன் எப்படி இருப்பான் என்பதுகூட தெரியவில்லை என்றாலும், அவன் மீது ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடன்றோ?
அதனால்தான் நாம் உணர்வதை, நாம் செய்ய விரும்புவதை, பிறர் உணரும் போதும், செய்யும் போதும் ஏற்படும் உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கிறது என்கிறானோ வள்ளுவன்?
இரத்த உறவு எப்பொழுது ஒத்த உணர்ச்சியை ஏற்படுத்துகிறதோ அப்பொழுது உறவினர்களும் நண்பர்களாகி விடுவார்கள்; தோழர்களும்தான். ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது.
இப்படித்தான், நான் எனது உறவினர்களையும் தோழர்களையும் நண்பர்களையும் பார்க்கிறேன்; பாவிக்கிறேன்.
முதுமையையும் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, பொள்ளாச்சி, தாராபுரம், பாண்டிச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, பெங்களூரு, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் மட்டவெட்டு-அத்திமூரான் கொட்டாய் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொலை தூரங்களிலிருந்தும் அந்த ஒத்த உணர்ச்சிதான் எனது இல்ல மணவிழாவிற்கு
திருப்பத்தூரை நோக்கி பலரையும் ஈர்த்ததோ?
இதுஒரு மணவிழா என்பதையும் தாண்டி, இது ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்றுகூடல் (get together) என்பதாகத்தான் ஒவ்வொருவரையும் உணர வைத்தது.
“குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனை தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்” என்கிறான் வள்ளுவன் (1025). இந்த ஒன்றுகூடல் கூட அப்படித்தானோ?
ஆம்! குற்றமற்றவர்களாகவும், குடிமக்களின் நலன்களுக்கு பாடுபடுவோராகவும் நம்மால் முடிந்தவற்றை செய்ய முனைவோம். நண்பர்களாய், மக்கள் நம்மைச் சூழ்ந்திருக்க நமக்கென்ன கவலை?
மணவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும்
நன்றிப் பெருக்குடன்,
பொன்.சேகர்