Wednesday, 20 June 2012

அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.


நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.
ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.



2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.



3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?



4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.



5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.



6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.



7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?



8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.



9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.



10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.



11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.



12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.



13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.



14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.



சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.



நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.



மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."

"A GOOD ONE FOR SUPERSTITIOUS PEOPLE" என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது. அதற்கான இணைப்பு:

அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்). 

மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"
அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள். அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று. மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள். பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.


பிறரை சிந்திக்கத் தூண்டும் நல்லதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி! நீங்களும் பிறருக்குப் பகிரலாமே!

Saturday, 19 May 2012

‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு?

பொதுவாக நமது நாளேடுகளில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தினமணியின் வெள்ளிமணி போல ஆன்மீக மலர்கள் வருவதுண்டு. பெரும்பாலும் இவை நான்கு பக்கங்களுக்கு மிகாது. ஆங்கில நாளேடுகளில் இப்படி தனியாக ஆன்மீக மலர் எதுவும் வருவதில்லை.


வாழ்க்கையில் ஏற்றம் பெற முடியாதவர்கள் இனி எந்த அம்பாளை வழிபட்டால் ஏற்றம் பெறலாம் என்பதை வழிகாட்டுவதற்காகவே இத்தகைய ஆன்மீக மலர்கள் வெளியிடப்படுகின்றன. செய்தித்தாள்கள் என்றைக்கு தோன்றினவோ அன்றைக்கே இவ் ஆன்மீக மலர்களும் வரத்தொடங்கின.


இவைகளைப் பார்த்து நாமும் பெரியபாளையத்தம்மன் - தேவி கருமாரியம்மன் - காஞ்சி காமாட்சி - பன்னாரி அம்மன் - படவேட்டம்மன் - அங்காள மரமேஸ்வரி - சமயபுரம் மாரியம்மன் - உறையூர் வெக்காளியம்மன் - மதுரை மீனாட்சி -  ‘கன்யா’ குமரிஅம்மன்......... என ஆயிரத்தெட்டு அம்மன்களையும் தரிசித்துவிட்டோம்.


ஆனாலும் இன்னும் நல்ல வேலை அல்லது அரசு வேலை கிட்டவில்லை; வெளிநாட்டுக் கனவு நனவாகவில்லை; நாற்பது வயதாகியும் நல்ல வரன் கிட்டவில்லை: சொந்தமாக ஒரு வீடு வாங்க முடியவில்லை; குடும்பத்தில் கணவன்-மனைவி பிரச்சனை தீரவில்லை; தொழிலில் முன்னேற்றம் இல்லை; தொட்ட நோய் விட்டபாடில்லை; கடன் தொல்லை தீரவில்லை.


ஸ்ரீ ஆயிரங்காளியம்மன்


தொல்லைகள் நம் வாழ்வில் ஒரு நெடுந்தொடராய் நீள்வதால்தான் ஒரு அம்மனுக்குப் பதிலாக ஓராயிரம் அம்மன்களை வழிபடுகிறோம் பரிகாரம் தேடி அலைகிறோம். செய்தித்தாள்களும் நமக்கு வழிகாட்டுதல்களை வாரி வாரி வழங்குகின்றன. நாம் கேட்டறியாத - பார்த்தறியாத புதப்புது அம்மன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றன. ஒரு அம்மன் போதாது என்பதால் ஓராயிரம் அம்மன்களும் ஒருங்கே உருவெடுத்த காரைக்கால் அருகில் உள்ள திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மனை அறிமுகப் படுத்துகிறது தினமணி வெள்ளி மணி. (18.05.2012).


இந்த அம்மனோ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவதரிப்பாளாம். அதுவும் மே 23, 24 ஆகிய இரண்டே நாட்கள்தானாம். ஐந்து ஆண்டுகள் காத்திருப்பதை தவிர்த்து இந்த ஆண்டே ஸ்ரீ ஆயிரங்காளியம்மனை வழிபட்டு ஆனந்தம் அடைய தினமணி வெள்ளிமணி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த அம்மனை வழிபட்டால் ஆனந்தம் கிடைக்குமா என்பதற்கான உத்தரவாதம் உண்டா? தினமணி வெள்ளிமணியிடம்தான் கேட்க வேண்டும்.


அருள் சொரியும் ‘அம்மா’ளம்மன்


தன்னை நாடி வந்தவர்களுக்கு ஆனந்தத்தை மட்டுமே அளிக்கக்கூடிய ஒரு அம்மனின் சாதனைகள் பற்றி கடந்த இரண்டு நாட்களாக எல்லா செய்தி ஏடுகளிலும் புகழ் மாலைகள் குவிந்துள்ளன. ஸ்ரீ ஆயிரங்காளியம்மனைப் போல ஐந்து ஆண்டுகள் கழித்துதான் இந்த அம்மனும் அவதரித்துள்ளார். ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் இரண்டு நாட்கள் மட்டும்தான் எழுந்தருளியிருப்பார். ஆனால் இந்த அம்மனோ  ஐந்து ஆண்டுகளுக்கும் எழுந்தருளியிருப்பார். இவர் மீண்டும் அவதரித்து ஓராண்டாகிவிட்டது. இவரை துதிபாடிய பக்தர்கள் ஓராண்டிலேயே எண்ணிய பலன்களைப் பெற்றுவிடுகிறார்கள். அதனால்தான் “தங்களை வாழவைத்த” அம்மனுக்கு கோடானு கோடி நன்றியினை அம்மனின் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகிறார்கள். தனது உண்மை விசுவாசிகாளால் - உண்மைத் தொண்டர்களால் இவர் ‘அம்மா’ளம்மன் என்றே போற்றப்படுகிறார்.


பெரும்பாலும் அம்மன்கள் கிராமப்புற பாமர மக்களின் தெய்வங்களாகத்தான் கருதப்படுகிறார்கள். பெண்வழிச் சமுதாயம் நிலவிய காலகட்டத்தில் ஆதிக்கம் செய்தோரை எதிர்த்து போராடிய வீரமங்கைகளை தெய்வங்களாகக் கருதி மக்கள் வழிபட்டிருக்க வேண்டும். நாளடைவில் பார்ப்பனர்கள் இத்தகைய அம்மன்களை புராணக் கதைகளோடு இணைத்து தங்களின் வருவாயை பெருக்கிக் கொள்ள தலபுராணங்கள் எழுதி இருக்க வேண்டும்.


‘அம்மா’ளம்மனின் அவதாரமே ஆதிக்கத்தில்தான் தொடங்குகிறது. அதனால் இவரை யாரும் ஆதிக்கம் செய்ய முடியாது. தொண்டர்கள் தாங்களாகவே முன் வந்து இவரிடம் மண்டியிடுகிறார்கள். வீரதீரப் போர் எதுவும் புரியாமலேயே இவர் வீரத்தாய் என்ற பட்டம் பெற்றிருக்கிறார். நூறாண்டில் செய்ய வேண்டிய மகாத்மியங்களை ஓராண்டிலேயே செய்து முடித்த விட்டதால் இவருக்கு தலபுராணமெல்லாம் பொருந்தாது என்பதால்தான் நேரடியாக பெரியபுராணமே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இவரை அண்டிப் பிழைக்கும் அடியார்கள்.


ஊராட்சி – பேரூராட்சி - ஒன்றியம் – வட்டம் – மாவட்டம் – நகராட்சி – மாநகராட்சி – சட்டமன்றம் – நாடாளுமன்றம் – மந்திரி – நல வாரியம் என அருள் அட்டை வைத்திருந்தால் ‘அம்மா’ளம்மனின் அருள் முழுமையாக கிடைக்கும். இல்லை என்றாலும் பரவாயில்லை! மேற்கண்டவர்களுக்கு அல்லக் கைகளாக இருந்தாலே ‘அம்மா’ளம்மனின் அருள் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.


மற்ற அம்மன்களை நீங்கள் எளிதில் ஏமாற்றி விடலாம். பலன் கிடைத்தாலும் காணிக்கை செலுத்த மறந்து விட்டால் பழி-பாவம் ஏதும் வராது. ஆனால் ‘அம்மா’ளம்மனை ஒழுங்காக வழிபடவில்லை என்றாலோ அல்லது காணிக்கையை முறையாக செலுத்தவில்லை என்றாலோ இவரது சாபத்திலிருந்து தப்பவே முடியாது. அம்மனின் அருளால் கிடைத்த பலன்கள் அனைத்தும் ஒரு நொடியில் பறிக்கப்படும். பிறகு நடுத் தெருவில்கூட நிற்க இடம் கிடைக்காது. வேலூர் அல்லது பாளையங்கோட்டையில் நான்கு சுவர்களுக்குள்தான் வாசம் செய்ய வேண்டும். ஒரு வேளை மீண்டும் 'அய்யன்' அவதாரம் எடுத்தால் ஐந்து ஆண்டுகள் கழித்து வேண்டுமானால் விமோசனம் கிடைக்கலாம்.


முன்பு 'அய்யன்' அவதாரம் எடுத்த போது 'அய்யனி'ன் அருளைப் பெற்று ஆதாயம் அடைந்தவர்கள் ஏராளம். இன்று 'அம்மா'ளம்மன் அவதாரம் எடுத்ததால் இவர்களில் சிலர் சோதனைக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு சோதனைகளை எதிர் கொள்வதா அல்லது பரிகாரம் வேண்டி 'அம்மா'ளம்மனிடமே சரணடைவதா? இது 'அய்யனி'ன் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம். ஆனானப்பட்ட பகுத்தறிவின் 'மணி'களே அம்மா'ளம்மனின் அருளைப் பெறவில்லையா?


‘அம்மா’ இருக்க ‘அய்யன்’ எதற்கு?


‘அம்மா’ளம்மனே போற்றி! போற்றி!!


‘அம்மா’ளம்மனின் அருள் கிடைக்காதா என மற்றவர்கள் ஏங்குவதும் எனக்குப் புரிகிறது. நம்ம ஊரு அம்மனுக்கு எல்லோரும் சேர்ந்துதான் காணிக்கை செலுத்துகிறோம். ஆனால் அம்மனின் அருள் வேதம் ஓதுவோருக்கும் அறங்காவல் கூட்டத்துக்கும் மட்டும்தானே கிட்டுகிறது.


அம்மா'ளம்மன் அவதாரம் எடுக்க நீங்கள் எல்லோரும் வாக்கு காணிக்கை செலுத்தியிருக்கலாம். அதனால் என்ன? இங்கு மட்டும் அருள் மாறி கிட்டுமா என்ன?

Saturday, 28 April 2012

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகளை இழுத்து மூடுவது எப்போது?

குடிக்காத ஆண்கள் எத்தனை பேர்? ஒரு பத்து சதம் இருப்பார்களா? இருக்காது என்றார் ஒரு நண்பர். அப்படியானால் ஒரு 90% சதம் பேர் குடிகார்களாக இருப்பார்களா? இந்தக் கேள்விகளுக்கு புள்ளி விவர அடிப்படையில் பதில் தேடுவதைவிட சாராய விற்பனையின் அளவைக் கணக்கிட்டாலே உண்மை விளங்கிவிடும்.

கடந்த நிதி ஆண்டில் (2011-12) டாஸ்மாக் மூலம் ரூ.18081 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தமிழக அரசு. இது கடந்த நிதி ஆண்டைவிட ரூ.3116 கோடி அதிகமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20% வளர்ச்சியைக் கண்டுள்ளது அரசின் சாராய விற்பனை.

‘கள்ளச் சாராயம்’ மற்றும் ‘கடத்தல் சாராயத்தை’ ஒழித்ததன் மூலமாக தமிழக அரசின் ‘நல்ல சாராய’ விற்பனை 2003 ம் ஆண்டிலிருந்து அதிகரித்தே வருகிறது. கலைஞரும் ஜெயலலிதாவும் கருத்து வேறுபாடு ஏதுமின்றி வளர்த்து வரக்கூடிய தமிழகத்தின் பிரதானமான ஒரே தொழில் சாராயத் தொழில்தான்.
‘குடி’ உயரக் கோன் உயரும்!

2009-10 ல் ரூ.12498 கோடி, 2010-11 ல் ரூ.14965 கோடி, 2011-12 ல் ரூ18081 கோடி. என சாராயத்தின் மூலம் அரசு வருவாயாக ஈட்டியுள்ளது. அதாவது வளர்ச்சி விகிதம் முறையே 17.89%, 19.74%, 20% என அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு போக்குவரத்துக் கழகமும் தமிழ்நாடு மின்சார வாரியமும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் அரசின் சாராயத் தொழில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக வளர்ச்சி கண்டு இலாபமீட்டி வருகிறது.

2003-04 ல் ரூ.3639 கோடி வருவாயாக இருந்த சாராய விற்பனை 2011-12 ல் ரூ18081 கோடியாக அதாவது ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? குடிப்பழக்கத்தை தடுப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளுக்கிடையிலும் சாராய விற்பனை இந்த போடு போடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

‘குடி’ உயரக் கோன் உயரும் என ஔவையார் சும்மாவா சொன்னார்கள்?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தைத் தாண்டுவதற்கே திண்டாடும் மன்மோகன் - மாண்டேசிங் அலுவாலியா தலைமையிலான பொருளாதாரப் புலிகள் கருணாநிதி - ஜெயலலிதாவிடம் பாடம் கற்றுக் கொண்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரே ஆண்டில் 20 சதவீதத்தைத் தாண்டும். யாராவது இதை அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அப்துல்கலாம் கனவு கண்டதைப் போல இந்தியா நாலுகால் பாய்ச்சலில் ஒரே ராத்திரியில் வல்லரசாகிவிடும்.

சாராயம் வாங்க வருவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசலை சமாளிக்க டாஸ்மாக் கடைகளில் ரசீது போடும் எந்திரங்களை அறிமுகப் படுத்தவிருக்கிறது தமிழக அரசு. முதல் கட்டமாக 2500 கடைகளுக்கு இந்த எந்திரங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதற்காக ரூ.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு (time management) கணக்குகளை முறையாக பராமறிக்கவும், அதிகாரிகள் திடீர் சோதனைக்கு வரும் போது அவர்களுக்கு உதவியாகவும் இந்த ரசீது போடும் எந்திரங்கள் பயன்படுமாம்.

போராடும் ஊழியர்கள் மயங்கினால் என்ன? ஊத்திக்கொடு!

ஏழைப் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் சத்துணவு ஊழியர்களின்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊழியர்கள் மயங்கி விழுகிறார்கள். இவர்கள் மயங்கி விழுந்து மாண்டு போனாலும் சவக்குழிக்கு செலவு செய்யவும் அரசு தாயாராக இருக்குமேயொழிய சலுகை எதுவும் செய்யாது போல!

கொதிக்கும் தார் தங்கள் கால்களில் ஏற்படுத்தும் கொப்புளங்களையும் பொருட்படுத்தாமல் நாம் வண்டிகளில் வழுக்கிச் செல்ல வழி ஏற்படுத்தும் சாலைப்பணியாளர்கள் நீதிமன்றப் படிக்கட்டுகளை தங்களின் ஏனிப்படிகளாக மாற்றியபோதும் மீண்டும் பணியில் சேர்வதற்கான அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் அலட்சியப்படுத்தி வருகிறது.

இரும்பைப் போன்று இருகிப்போன கரும்பை கசக்கிப் பிழிந்து நமக்கு இனிப்பை வழங்கும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் எனப் போராடி வருகிறார்கள். போராடும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் சக்கையாகிப் போனாலும் எந்தச் சலனமும் இன்றி வேடிக்கை பார்க்கிறது அரசு.

நாம் மின்னொளியில் மிளிர்வதற்காக தங்கள் மேனியை கரியாக்கிக் கொள்ளும் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் ஏதோ வேற்று கிரகங்களில் நடப்பதைப் போல வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு. இவர்களின் போராட்டக் குரல் அரசின் செவிகளில் ஏற மறுக்கிறது. ஆனால் நமக்கு பாடைகட்டும் சாராய சேவகர்களுக்கு மட்டும் அவர்கள் போராடாமலேயே ஊதிய உயர்வாம். என்ன கொடுமை இது?

தமிழகத்தில் உள்ள 6798 சில்லரை விற்பளைக் கடைகளில் சாராயம் ஊற்றிக் கொடுக்கும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கும் 28650 சேவகர்களுக்கு ரூ300 முதல் ரூ 500 வரை ஊதிய உயர்வாம்.

வேலை வாய்ப்பை அள்ளித் தரும் சாராயப் படிப்பு!

7785 சாராயக் கங்காணிகளையும் (supervisors)16826 சாராய விற்பனையாளர்களையும் 4039 சாராய விற்பனை உதவியாளர்களையும் புதிதாக நியமிக்கப் போகிறார்களாம். முதலமைச்சரே இதற்கு உத்தரவிட்டிருக்கிறார்களாம். இவை எல்லாம் சாராய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் தெறிவித்த விவரங்கள். மக்களுக்கு பாடை கட்டும் தொழில் வளர்ந்து வருகிறது. இதில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கிறது. ஆனால் தனியார்மயம் – தாராளமயம் - உலகமயம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகளால் அடிப்படை கட்டுமானம் மற்றும் சேவைப்பிரிவுகள் நலிந்து வருகின்றன. இத்தொழில்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சாராயம் தயாரிப்பு அதன் விநியோகம் மற்றும் பராமரிப்பை மேலும் செம்மைப் படுத்த உதவும் வகையில் B.E (Arrack Technology), DAE (Diploma in Arrack Engineering), ITI (Arrack man) உள்ளிட்ட தொழில் நுட்பப் படிப்புகளை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த அரசு முயற்சி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. போண்டியாகாத தொழிலுக்கெல்லாம் படிப்புகள் இருக்கும் போது கொடி கட்டிப் பறக்கும் சாராயத் தொழிலுக்கு மட்டும் படிப்பு இல்லாமல் இருப்பது நியாயமா?

சரக்கடிப்பதை திடீர் என நிறுத்தி விட்டால்?

சரக்கடிப்போர் சரக்கடிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டால் என்னவாகும்? எனக்கு இப்படி ஒரு ஐயம் திடீர் என எழுந்தது.

அடுத்தவன் கெட்டுப் போனால்தான் சில தொழில்களை தொடர்ந்து நடத்த முடியும். மேலும் மேலும் மக்கள் கெடுதலுக்கு உள்ளானால்தான் அத்தகையத் தொழில்களில் மேலும் வளர்ச்சியைக் காண முடியும்.

அலோபதி - ஆயுர்வேதம் - ஹோமியோபதி - சித்தா – யுனானி - நேச்சுரோபதி என வகை வகையான மருத்துவப் படிப்புகளைப் படித்துவிட்டு லட்ச லட்சமாய் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கோடு ஒருவர் மருத்துவத்தைப் படித்தவிட்டு கிளினிக் வைத்தால் அவர் லட்சியம் எப்போது நிறைவேறும்? மக்கள் அன்றாடம் நோய்வாய்ப்பட வேண்டும். மருத்துவரின் வேண்டுதலும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரது லட்சியம் நிறைவேறும். எல்லோரும் நலமாக வாழ்கிறார்கள் என்றால் கிளினிக்குகளை இழுத்து மூடித்தான் ஆகவேண்டும்.

பிஃ.பார்ம் படித்துவிட்டால் வேலை கிடைக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. ஒரு மருந்துக் கடை வைத்தாலே போதும் பொழப்பை ஓட்டலாம் என கணக்குப் போட்டால் மேலே சொன்னதுதான் மருந்துக் கடைகளுக்கும் பொருந்தும்.

சட்டம் படித்தவன் சம்பாதிக்க வேண்டும் என்றால் நீயும் நானும் அன்றாடம் அடித்துக் கொள்ள வேண்டும். அமைதியாக நாம் வாழ முனைந்தால் கருப்பு அங்கிகளை கொக்கிகளில்தான் தொங்க விடவேண்டும் – தோளில் அல்ல.

பங்க்சர் கடை வைத்தால் எப்படியோ பொழப்பை நடத்தலாம் என நம்பி பங்க்சர் கடை வைத்துவிட்டு வண்டிகள் எதுவும் பங்க்சர் ஆகாமல் ஓடத் தொடங்கினால் பங்க்சர் கடையில் ஈதான் ஓட்ட வேண்டும்.

மேற்கண்ட சில தொழில்கள் நேற்று வரை சேவைத் தொழில்களாகத்தான் கருதப்பட்டன. ஆனால் அவையே இன்று பொருள் ஈட்டும் தொழில்களாக  மாற்றப்பட்டுவிட்டன.

அட போய்யா! படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலேன்னா என்ன? தெரு முனையில ஒரு பெட்டிக் கடை வைச்சாப் போச்சு! அதை வைத்தே சொந்த வீடு கட்டிட மாட்டேன்! என வேலை தேடும் பட்டதாரி இளைஞன்  பேசுவதைக் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறோம். புகைப்பவன் புகைப்பதை நிறுத்திக் கொண்டால்; கஞ்சா – பான்பராக் - ஹான்ஸ் போடுவதை இளைஞர்கள் நிறுத்திக் கொண்டால் பெட்டிக் கடைகள் ஆயாவின் போண்டாக் கடைகளாகத்தான் மாற வேண்டும். போண்டாவை பொட்டலம் கட்டலாமேயொழிய பில்டிங் கட்ட முடியாது.

சரக்கடிப்போர் சரக்கடிப்பதை திடீர் என நிரந்தரமாக நிறுத்திக் கொண்டால் என்னவாகும் என எனக்கு எழுந்த ஐயத்திற்கு இப்போது வருவோம். என்னவாகும்? தமிழகமே செயலற்றுப் போகும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகளை இழுத்து மூடுவதைத்தவிர வேறு வழியேதும் உண்டோ?

Saturday, 14 April 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை.......தொடர் - 4


பௌத்தத்தில் பொறாமை

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள பொறாமை குணம் அன்றைய சமூகத்தில் நிலவியவை என்பதை முன்னறே கண்டோம். அதேபோல பொளத்த இலக்கியங்களிலும் இத்தகைய பொறாமை மக்களிடையே நிலவியதைக் காணமுடிகிறது.

பேராசை, பகைமை, மயக்கம், செருக்கு, பொறாமை முதலிய தீய மனப்பான்மைகளை பௌத்த ஓவியக்கலைகளில் காணமுடிகிறது. பௌத்த ஓவியக்கலையில் இந்தக்காட்சிகளை ஓவியர்கள் அற்புதமாக வரைந்திருக்கிறார்கள்.

வள்ளுவத்தில் பொறாமை

பொறாமை இல்லாமல் வாழ்வதே சிறந்த ஒழுக்க நெறி எனவும்,

பொறாமை இல்லாமல் இருப்பதே பெரிய பேறு எனவும்,

பொறாமைப் படுவது தனக்கே தீங்கைத் தரும் எனவும்,

அறிவுடையோன் பொறாமை கொண்டு அறன் அல்லாதவற்றைச் செய்யமாட்டான் எனவும்,

பொறாமைதான் ஒருவனுக்கு மிகப் பெரிய பகை எனவும்,

பிறருக்குத் தரும் பொருளைக் கண்டு பொறாமைப் படாதே எனவும்,

பிறர் ஆக்கங் கண்டு பொறாமைப்பட்டால் அது உன்னை வறியவனாக்கிவிடும் எனவும்,

பொறாமை என்கிற பாவி உன்னை நரகத்தில் தள்ளிவிடும் எனவும்,

பொறாமைப் படுபவனின் செல்வமும் - பொறாமையற்றவனின் வறுமையும் / துன்பமும் எதனால் என ஆராயப்படும் எனவும்,

பொறாமைப்பட்டால் பெருமையடைய முடியாது எனவும்

அழுக்காறாமை என்கிற தலைப்பில் வள்ளுவன் பொறாமை குறித்து பேசியுள்ளதைப் பார்க்கும் போது பௌத்தத்தைத் தொடர்ந்து சமணம் கோலோச்சிய காலத்தில் அதாவது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மக்களிடையே நிலவிய பொறாமை குணம் எந்த அளவுக்கு குடிகொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தொடரும்...

தொடர்புடைய பதிவுகள்:

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! .... தொடர் - 2



Sunday, 1 April 2012

“புள்ளத்தாச்சியப் பாத்து புள்ள இல்லாதவ தன் வயித்த உலக்கையால் இடித்துக் கொள்வாளாம்”


கலி முத்திவிட்டது; அதனால்தான் கேடுகளும் அதிகரித்துவிட்டன என்று பேசுவதை இன்றும் நாம் கேட்க முடிகிறது. பழங்காலத்தில் அதாவது கலி முத்தாத காலத்தில் குற்றங்கள் குறைவாக நடந்தன; இன்று அவைகள் அதிகரித்துவிட்டன என்பதுதான் அதன் பொருள். பழங்கால புராணங்களையும், நீதி போதனைகளையும், மதக் கோட்பாடுகளையும் புரட்டினால்தான் எது உண்மை என்பது விளங்கும்.

மகாபாரதத்தில் பொறாமை

பொறாமை குணம் பல்வேறு தீய செயல்களுக்கும் பல்வேறு குற்றங்களுக்கும் அடிப்படையான காரணமாக இருக்கிறது. “புள்ளத்தாச்சியப் பாத்து புள்ள இல்லாதவ தன் வயித்த உலக்கையால் இடித்துக் கொள்வாளாம்” இது இன்றும் கிராமப்புறங்களில் நிலவும் பிரபலமான வழக்கு மொழி. பொறாமையின் ஒருவகை வெளிப்பாடு இது. இவளுக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக அடுத்தவள் பிள்ளை பெறுவதைப் பார்த்து ஏன் உலக்கையால் தன் வயிற்றை இடித்துக் கொள்ள வேண்டும்? இந்த எண்ணம் எதனால் வருகிறது? யார் இப்படி எல்லாம் செய்யச் சொல்லி தூண்டினார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

பாண்டு மன்னன் தன் மனைவி குந்தியுடன் வேட்டையாட வனத்திற்குச் செல்கிறார். சில காலம் அவர்கள் காட்டிலேயே வேட்டையாடி வருகின்றனர். அஸ்தினாபுரத்தில் ஆட்சி செய்து வரும் திருதராட்டிரனின் மனைவி கருவுற்றிருந்தாலும் இரண்டு ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை. அதே வேளையில் வனத்தில் இருந்த குந்திக்கு குழந்தை பிறக்கிறது. இதைக் கெள்விப்பட்டு பொறாமை கொண்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி குத்துகிறாள். அப்பொழுது தன் வயிற்றிலிருந்து மாமிசப் பிண்டம் ஒன்றை பெற்றெடுக்கிறாள். இந்தப் பிண்டத்திலிருந்துதான் துரியோதனன், துச்சாதனன் என அண்ணன் தம்பிகள் நூறு பேர் வந்தார்கள் என்பது தனிக்கதை.

இளவரசனாக வேண்டும் என்பது துரியோதனனின் ஆசை. ஆனால் வயதில் மூத்தவன் தருமன். அவனே அப்பதவிக்கு உரியவன். அதனால் தான் இளவரசனாக முடியாது என்பதாலும் பீமன் முரடனாக இருப்பதாலும் இவர்கள் மீது துரியோதனன் வெறுப்பையும் பொறாமையையும் வளர்த்து வந்தான்.

ஒரு குறிப்பிட்ட நாளில் தருமனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறான் திருதராட்டிரன். பாழடைந்து கிடக்கும் காண்டவப் பிரஸ்தம் அவனுக்கு ஒதுக்கப்படுகிறது. பிறகு காண்டவப் பிரஸ்தம் புதுக்பிக்கப்பட்டு இந்திரப் பிரஸ்தம் எனும் புதிய பெயர் பெற்று மிளிர்வதைக் கண்ட கௌரவர்களுக்கு பாண்டவர்கள் மீது வெறுப்பும் பொறாமையும் உருவெடுக்கலாயின.

வில்வித்தை கற்பதற்கு கீழ்சாதிக்காரனுக்குத் தகுதி கிடையாது என துரோணாச்சாரியால் ஏகலைவன் விரட்டப்படுகிறான். ஆனால் எப்படியாவது வில்வித்தை கற்க வேண்டும் என்கிற ஆவலால் துரோணாச்சாரி பாண்டு மற்றும் திருததாட்டிரனின் புதல்வர்களுக்கு கற்றுக் கொடுப்பதை மறைவிலிருந்து பார்த்தே கற்றுக் கொண்ட ஏகலைவனின் வில்வித்தை திறமை கண்டு பொறாமை கொண்ட துரோணாச்சாரி ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாகப் பெற்றுக் கொண்டு அவனை முடமாக்குகிறான்.

பாண்டவர்களை ஓர் ஆண்டு வனத்திற்கு அனுப்ப துரியோதனன் செய்த சதித்திட்டத்திற்கு திருதராட்டிரன் அனுமதி வழங்கியதே பாண்டு புதல்வர்கள் மீது திருதராட்டிரன் வைத்திருந்த பொறாமையே காரணம்.

இராமாயணத்தில் பொறாமை

கோசல நாட்டு ‘சக்ரவர்த்தி’ தசரதனுக்கு 350 மனைவிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களில் கௌசல்யாவுக்கு இராமனும் கைகேயிக்கு பரதனும் சுமித்ராவுக்கு இலட்சுமணன்-சத்ருக்கன என்கிற இரட்டையர்களும் பிள்ளைகள். இராமனுக்கு முடிசூட்டப்படக்கூடாது என்று பொறாமை கொண்ட கைகேயி தசரதனிடம் வரங்களைப் பெற்று இராமனை வனவாசத்திற்கு அனுப்பியதால் தனது மகன் பரதனுக்கு முடிசூட்டப்படுகிறது.

பொறாமை படைத்துள்ள தம்பி ஒருவன் நெருக்கடியான நேரத்தில் ஆக்கம் படைத்துள்ள தன்னுடைய அண்ணாவை அடியோடு கவிழ்த்து விடுகிறான்.  இப்பொழுது உன்னைச் சிதைத்துவிட எனக்கு இயலும். ஆயினும் உடன் பிறந்தவன் என்னும் ஒரே காரணத்தை முன்னிட்டு உன்னை நான் விட்டுவிடுகிறேன். என் காட்சியினின்று இக்கணமே மறைந்துபட்டுப்போ” இது இராவணன் விபீடணனைப் பார்த்துக் கூறியது.

இந்துக்களின் இதிகாசங்களாப் போற்றப் படும் இராமயணமும் மகாபாரதமும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இறுதி வடிவம் பெற்றதாகத் தெரிகிறது. இராமயணமும் மகாபாரதமும் நடந்த கதைகளா அல்லது கற்பனைகள் கலந்து புனையப்பட்ட கதைகளா என்கிற வாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் இவற்றில் சொல்லப்பட்டுள்ள பொறாமை உள்ளிட்ட பல கருத்துகள் அன்றைய சமூத்தில் நிலவியவை என்பதை நாம் கருத்தில் கொள்வதே இங்கு முக்கியம்.

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்: