Wednesday, 17 October 2012

கொசுக்களோடு ஒரு யுத்தம்: எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!


டெங்கு முன்னுக்கு வந்து மின்தடை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இன்றைய தேவை கருதி மீள்பதிவு.

************************************

சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி சென்னை சென்ற இளைஞர் தற்போது திருமணமாகி கையில் ஒரு குழந்தையுடன் தனது மனைவியோடு சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். அடுத்தக் குழந்தைக்கும் தயாராகியிருந்தார் அவரது மனைவி. சென்னையில் வாழ்க்கையை ஓட்ட முடியாததால் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். 

ஆலைகள் நிறைந்த தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள சிற்றூரில்தான் அவரது வீடு. ஏதோ ஒரு ஆலையில் குறைந்த ஊதியத்திற்கு வேலைக்குச் சென்றாலும் வயித்தக் கழுவலாம் என முடிவெடுத்து அவர் வந்திருக்கலாம். வீடோ ஓட்டு வீடு. சற்று பலமான மழை என்றால் உள்ளே ஒண்ட முடியாது. ஏற்கனவே அவரது தந்தையும், தங்கையின் குடும்பமும் என ஆறு பேர் வசிக்கும் வீடு. இவர்களோடு மொத்தம் ஒன்பது பேர். மூச்சுக் காற்றுகூட வெளியேற முடியாது. அவ்வளவு சிறிய வீடு. அவர்கள் அத்தனை பேரும் எப்படி அதில் வாழ முடியும்?

ஆனால் இதுவல்ல அவரது துணைவியாருக்குப் பிரச்சனை. பக்கத்திலிலேயே சாக்கடை. தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரில் இருந்து வரும் கொசுக்களின் தொல்லை. தாங்கமுடியவில்லை.  வந்து ஒருவாரமே ஆகிறது. வாடகைக்கு வேறு வீடு பார் எனக் கூறிவிட்டார். இன்னும் ஒரு வேலையைக்கூட தேடவில்லை. அதற்குள் வாடகை வீடு என்றால் சமாளிக்கமுடியுமா? வாழ வழியில்லை என ஊர் மாறி வந்தால் இங்கே கொசுவுக்காக சொந்த வீட்டை விட்டு ஓட வேண்டிய அவலம். வேறு வீட்டிற்குச் சென்றால் மட்டும் தீர்ந்தவிடுமா கொசுப்பிரச்சனை?

தேசியப் பிரச்சனை:

இது ஏதோ அவரது பிரச்சனை மட்டுமல்ல. இந்தியக் குடிமக்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு தேசியப் பிரச்சனை. கொசுக்களால் பிரச்சனைக்கு ஆளாகாத குடும்பங்களே இருக்க முடியாது. குடிசையோ, கோபுரமோ..அதெல்லாம் கொசுக்களுக்குத் தெரியாது. கொசுக்களுக்குத் தேவை மனித இரத்தம். எங்கே இடைவெளி இருக்கிறதோ அங்கே நுழைந்து தேவையான அளவு சட்டகுடித்துவிட்டு அங்கேயே ஒளிந்து ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாளும் வேலையைத் தொடரும் கொசுக்களும் உண்டு. அல்லது குடித்துவிட்டு தனது வசிப்பிடத்திற்கே திரும்பும் கொசுக்களும் உண்டு.

மழைக் காலமோ, கோடை காலமோ எல்லாக் காலங்களிலும் நம்மை விடாது துரத்தும் கருப்பு கொசுதான். என்ன.... கோடையில் சற்று வேகம் குறைவே ஒழிய துரத்தவது ஒன்றும் நிறுத்தப்படுவதில்லை. ஆனால் கோடையை சமாளித்து வாழும் கொசுக்களின் வல்லமை சற்றே அதிகம்தான். அதனால்தான் கோடை கொசுக்கள் 'சிக்குன்குனியா' மூலம் நம்மை முடக்குகின்றன.

தட்டினால் பொட்டெனெப் போகும் கொசுக்களைக் கண்டு அஞ்சாதவர்கள் உண்டோ? ஒன்றா, இரண்டா தட்டிவிட்டுத் தூங்குவதற்கு. பெரும் படையாய் அல்லவா அணிவகுத்து வருகின்றன. எப்படி அஞ்சாமல் இருக்க முடியும்? இருந்தாலும் வறியவர்கள் தட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்;

தப்பிக்க வழியே இல்லையா?:

ஒரே வழி தற்காப்புதான். தற்காப்புக்கு என சந்தையில் ஏராளமான கேடயங்கள். வசதியைப் பொருத்து வலுவான கேடயம் எனில் நமக்கு சேதாரம் குறைவு. மார்ட்டின் கொசுவத்திச் சுருள், 'ஆல் அவுட் லிக்குயிட்', 'ஹிட் ஸ்ப்பிரே'-இவைகள் உள்ளே நுழைந்த எதிரிகளை விரட்ட ஏவப்படும் அம்புகள். எத்தனை முறைதான் ஒரே 'பிராண்ட்' அம்புகளை ஏவ முடியும்? முனை மழுங்கிப் போகாதா? 

எதிரிகளை உள்ளே விட்டால்தானே. தடுப்பரண்களைப் போட்டு தடுத்துவிட்டால் எதிரிகள் முட்டிப் பார்த்துவிட்டு எட்டி ஓடிவிடுவார்கள். இதற்காகவே 'காட்டன்-நைலான்' கொசு வலைகளும், 'நெட்லான்களும்', 'ஒயர் மெஷ்களும்' ஏராளமாய் சந்தையில் குவிந்துள்ளன. என்ன.... தடுப்பரண் போட ஒரே நேரத்தில் சற்று கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். எதிரிகள் இலேசுப்பட்டவர்களா என்ன? எத்தனை யுத்தங்களைப் பார்த்திருப்பார்கள்? உங்கள் தடுப்பரண்கள் என்ன முக்காலத்துக்கும் தாங்கக்கூடியவையா? விரிசலுக்கிடையில் சர்.....சர்ரென நுழைந்து திடீர் தாக்குதல் நடத்துவதை தடுத்திடவா முடியும்?

இப்படிப்பட்ட திடீர்த் தாக்குதல்களை எதிர்கொள்ள சீனாக்காரன் ஏராளமான அதிரடி மட்டைகளை நமக்கு அளித்து வருகிறான். இரவில் எப்பொழுதும் இந்த அதிரடி மட்டை அருகில் இருக்க வேண்டும். இதுவே இப்போதைக்கு சிறந்த ஆயுதமாகத் திகழ்கிறது. இந்த மட்டைகள்கூட எதிரிகளின் தாக்குதலால் செயலிழந்து போகின்றன. பயனற்றுப் போன மட்டைகளுக்காக நான் ஒரு ஆயுதக் கிடங்கையே வைத்திருக்கிறேன். காசு கொடுத்து வாங்கியாச்சே. தூக்கியெறிய மனமில்லை.
கொசுக்களை விரட்ட பெரும்பாலானோருக்கு தற்போது அதிகமாகப் பயன்படுவது மின் விசிறிதான். கடுங் குளிரில்கூட காற்றாடி ஓட வேண்டும். குளிரைவிடக் கொடுமையானதல்லவா கொசுக்கடி. நள்ளிரவில் திடீரென மின்வெட்டு என்றால் நிலைகுலைந்து போகிறோம். ஆனால் எத்தனை நாளைக்கு? சுழன்றடிக்கும் சூறாவளியைக்கூட எதிர் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது விலங்கினங்களின் பரிணாமமாயிற்றே.

எதிரிகளின் படையெடுப்பை தனி மனிதர்களால் எதிர் கொள்ள முடியவில்லை என்பதால் நகராட்சிகள் அவ்வப் பொழுது ஏவுகனைத் தாக்குதல்களை நடத்துவதுண்டு. கவச வாகனங்கள் பெரும்புகையை எழுப்பிக் கொண்டு வீதிகளில் வரும் போது அச்சம் எதிரிகளுக்கு மட்டுமல்ல நமக்கும்தான். புகையில் சிக்கிக் கொண்டால் நாம்தான் விழ வேண்டி வரும். எதிரிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அதிகாரிகள் தங்கள் பையை நிரப்பிக் கொள்ளத்தான் இந்த 'ஆபரேஷன் மேலா'வேயொழிய எதிரிகளைக் கொல்வதற்கு அல்ல. கார்க்கில் யுத்தத்திலேயே கை வைத்தவர்கள் அல்லவா நம் 'கர்னல்கள்'.

யுத்த பாதிப்புகள்:

யுத்தத்தில் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களால் ஏற்படும் நச்சுப் புகையால் கண் எரிச்சல், தோல் நோய் உள்ளிட்டு பல்வேறு உபாதைகளையும் நாம் எதிர் கொள்ள வேண்டும். யுத்தம் என்றால் சும்மாவா?

நமக்குத் தெரிந்த போர்த் தந்திரங்கள் அனைத்தையும் கையாண்டு பார்த்தோம். அறுபத்து ஆறு ஆண்டு கால யுத்தத்தில் பொது மக்களின் சொந்தப் பணம் உள்ளிட்டு பல இலட்சம் கோடி விரயமானதோடு சரி.  டார்வினின் இயற்கைத் தேர்வு மூலம் (natural selection) எதிரிகள் பலமாகிவிட்டார்கள். 

இனி என்ன செய்வது? யாருடைய உதவியையாவது நாடலாமா? 'கேன்சரையும்', மூட்டு வலியையும் விரட்டும் பால் தினகரன்களை அழைப்பதா? மச்சவதாரம், பிச்சவதாரம் என பல அவதாரங்களைக் கண்ட மகா விஷ்ணுக்களை அழைப்பதா? அல்லது சைத்தான்களைத் துரத்தியடிக்கும் முல்லாக்களை நாடுவதா? ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்திய மக்களைக் காக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன். ஒரு வேளை ஒபாமா உதவுவாரோ? எதற்கும் கேட்டுப் பார்க்கலாம். அதற்கு முன்பு அமெரிக்க வாழ் நண்பர்கள் அங்குள்ள நிலமையைச் சொன்னால் ஒபாமாவை நாடுவது குறித்து முடிவெடுக்கலாம்.

சமீபத்தில் தொலை காட்சி ஒன்றில் புராணக் கதை ஒன்று கேட்டேன். ஐந்து சிறுவர்கள் ஒரு குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து மீனின் ஒரு கண் வழியாக முள்ளாள் குத்தி அது அடுத்த கண் வழியாக வருவதைக் கண்டு இரசித்தார்களாம். இதைக் கண்ட இறைவன் "இது என்ன கொடுமை?" என்று அந்த ஐவரையும் "மீனாய்ப் பிறக்கக் கடவ" என்று சாபமிட்டானாம். அது போல இந்தக் கொசு அரக்கனுக்குச் சாபமிட சாமிகள் ஏதும் வாராதோ என விழி வைத்துக் காத்திருக்கிறேன். 

ஒரு வேளை ஏதேனும் புதிய யுக்தியைக் கையாண்டு கொசுக்களைக் கொல்லும் போது அதைப் பார்த்து "கொசுவாய்ப் பிறக்கக் கடவ" என ஆண்டவன் நமக்குச் சாபமிட்டுவிட்டால்... அந்தப் பயமும் இருக்கத்தானே செய்கிறது. அது மட்டுமல்ல 'புளூகிராஸ்காரர்கள்' வழக்குப் போட்டால் அதையும் எதிர்கொள்ள வேண்டுமே. ஒரே பயமாக இருக்கிறதே. 'பிலீஸ் ஹெல்ப்'.

தாக்குதலில் எதிரிகள் ஏற்படுத்தும் சேதாரம் கொஞ்சமா? நஞ்சமா? 'சிக்குன் குனியா' வந்தால் நடமாட்டமே முடங்கிப் போகிறது. 'மலேரியா' வந்தால் மரணம் தவிர்க்க முடியாதது. யாணைக்காலை எத்தனை ஆண்டுகள் சுமப்பது? அதுவும் திருமணத்திற்கு முன்பு என்றால் வாழ்க்கை முழுக்க பிரம்மச்சரியம்தான். காஞ்சிபுரம், வாலாஜா, வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பிரதேசங்களில் யுத்தத்தின் விளைவு அதிக அளவில் யானைக்கால்தானாம். மருத்துவர்களும், செவிலியர்களும் யுத்த களத்தில் காயமடைந்த நமக்குத் தொடர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்க மருத்துவர்களும் பல்வேறு ஆலோசனைகளை அளித்தவண்ணம் உள்ளனர். உடைந்த சட்டி, பானை, ஓடு, கொட்டாங்குச்சிகளை கவிழ்த்து வையுங்கள். திறந்து வைத்தால் அவைகளே எதிரிகளின் புகலிடமாக அமைந்து விடும் என்பதால். நாமும் மெனக்கெட்டு இதையெல்லாம் செய்துதான் பார்க்கிறோம்.

இரான்-ஈராக் யுத்தத்தில் ஆயுதத் தளவாடங்களைத் தள்ளிவிட்டதன் மூலம் கோடிகளைச் சுருட்டிய அமெரிக்கா போல இங்கே 'குட்நைட்', 'ஆல் அவுட்', 'மார்ட்டின்', 'ஹிட்' என ஆயுத விற்பனை மூலம் முதலாளிகள் கோடிகளைச் சுருட்டுகிறார்கள். யுத்தம் தொடர்கிறது. புதிய புதிய 'பிராண்டுகளில்' சந்தையில் ஆயுதத் தளவாடங்களை முதலாளிகள் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எதிரிகளை ஒழிக்கமுடியுமா?:

இடையில்....எனக்கு ஒரே ஒரு கவலை மட்டும் உண்டு. எதிரிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டால்... ஆயுதத் தொழிற்சாலைகள் பல மூடப்படும். மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் உற்பத்தி குறையும். இதனால் இலட்சக் கணக்காணோர் வேலையிழந்து வீதியில் வீசப்படுவர். கொசுக்களை ஒழிக்கக்கூடாது என அவர்கள் போராடத் தொடங்கிவிட்டால் நாடே களேபரம் ஆகும். சொசுக்களைக்கூட ஒழிக்க இயலாத நமது அரசு மக்களின் இந்தப் போராட்டத்தை எப்படி சமாளிக்கும்? 

எதிரிகள் 'ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும்' அல்ல. 'அல்உமா' தீவிரவாதிகளும் அல்ல. எல்லாம் நம்ம ஊர் குளம்,  குட்டை, சாக்கடைகளின் கழிவு நீரில் பிறப்பவர்கள்தான். நம்ம தண்ணியக் குடிச்சவங்கதான். எதிரிகளுக்கு மட்டும் தண்ணிப் பஞ்சம் எப்போதும் வராது. எதிரிகள் பாதுகாப்பாக இருக்க சாக்கடையில் தண்ணி வடியாம பாத்துக்கிற வேலயத்தான் நம்ம ஊர் நாட்டாமைங்க... அதாங்க.... ஊராட்சி -  நகராட்சி கவுன்சிலரு, சேர்மேனுங்க கண கச்சிதமா செய்யராங்களே. எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை நம்மால் ஒழிக்கவா முடியும்?.

Sunday, 14 October 2012

பாடாய் படுத்தும் டெங்கு!


சொன்னது

‘’டெங்கு அச்சம் தேவையில்லை! – சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் - தினமணி (13.10.2012)

‘’மர்மக் காய்ச்சல் குறித்து பீதியடைய வேண்டாம் - நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் ஜி.கே.துரைராஜ் - தினமணி (13.10.2012)

‘’வேலூரில் மர்மக்காய;ச்சல்: பலி 10 ஆக உயர்வு! – தினமணி (13.10.2012)

‘’தென்மாநிலங்களில் கடந்த ஆண்டில் 2859 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு (12500) உயர்ந்துள்ளது. – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் - தினமணி (13.10.2012)

‘’கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை டெங்கு காய்ச்சலில் 33 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 77 பேர் வரை இறந்துள்ளனர் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தினமணி (13.10.2012)

என்னத்தச் சொல்ல!

எல்லாத்தையுந்தான் நீங்களே சொல்லீட்டீங்களே! அப்புறம் எப்படி பீதியடையாம இருக்க முடியும்?
***********
சொன்னது

''டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஈடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும் - நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் ஜி.கே.துரைராஜ் - தினமணி (13.10.2012)

''டெங்கு காய்ச்சலை பரப்பும் பகல்நேர கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாகும். – அரசு டாக்டர்கள் - தினமணி (12.10.2012)

வேலூரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். - தினமணி (12.10.2012)

கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். - தினமணி (13.10.2012)

என்னத்தச் சொல்ல!

வேலூரில் மனுசனுக்கேத் தண்ணியில்ல. பெறவு டெங்கு கொசுவுக்கு ஏதப்பா நல்ல தண்ணி?
**************
சொன்னது

‘’வேலூரில் மர்மக்காய்ச்சல்: பலி 10 ஆக உயர்வு! – தினமணி (13.10.2012)

‘’சொசு உற்பத்தியைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். - நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் ஜி.கே.துரைராஜ் - தினமணி (13.10.2012)

‘’தண்ணீரைத் தேக்கி வைக்கும் வாளிகளை நன்கு மூடி பராமரிக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். - பொது மக்களுக்கு அரசு டாக்டர்கள் அறிவுரை - தினமணி (13.10.2012)

‘’டெங்கு: மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய வேண்டும்.

டெங்கு காயச்சலில் இருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் பேண்ட், முழுக்கை சட்டை அணிய வேண்டும், மற்றவர்களும் இதை கடைபிக்கலாம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் - தினமணி (13.10.2012).

‘’பிரதமர் வீட்டு வளாகத்தில் டெங்கு கொசு:
என்.டி.எம்.சி அதிகாரிக்கு நோட்டீஸ்.

டெங்கு கொசுக்களை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்கும்படி புதுதில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்.டி.எம்.சி) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. - தினமணி (13.10.2012)

என்னத்தச் சொல்ல!

அங்க யாருமே மண்டய போடல. அதுக்கு நோட்டீசு.
இங்க பத்து பேர் மண்டய போட்டும் நமக்கு உபதேசமாம்?

பிரதமர் வீட்டில் கொசு இருந்தாலும் பிரமருக்கு பாதிப்பு வராதே! அவர்தான் குலாம் நபி ஆசாத்தின் ஆலோசனையை கச்சிதமாக கடை பிடிக்கிறாரே! போதாக் குறைக்கு தலைப்பாகையும் தாடியும் கூடுதல் பாதுகாப்பு.

நோட்டீசை வேலூருக்கு திருப்புப்பா!
**********
சொன்னது

வாளிகளில் பிடித்து வைக்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதால் வாளிகளை நன்கு மூடிவைத்து பராமரிக்கச் சொல்கிறீர்கள்.

ஆமாம்! சென்ற ஆண்டு வரை  கொட்டங்கச்சிகளிலும் உடைந்த சட்டிப்-பானை ஓடுகளிலும் தேங்கும் தண்ணீரில்தான் டெங்கு - சிக்குன் குனியா கொசுக்கள் உற்பத்தியாவதால் அவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்க அவைகளை கவிழ்த்துப் போடச் சொன்னீர்கள்.

என்னத்தச் சொல்ல!

இதைப்புரிந்து கொண்ட டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீருக்குத் தாவி பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டனவோ! எதுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை அடுத்த மூன்று மாத்துக்கு மூடி வையுங்க!.
*******
தொடர்புடைய பதிவு: 

எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!

http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html

Friday, 12 October 2012

என்னத்தச் சொல்ல!


இதுவரை தமிழகம் கண்டிராத மிகக் கடுமையான மின்வெட்டு. என்ன செய்வதென்று தெரியாமல் சென்னை தவிர்த்த பிற பகுதி மக்கள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்

'எப்பதான் இது தீரும்?' என்கிற கேள்விதான் இன்று மக்களை துளைத்தெடுக்கிறது

சொன்னது:

2013 ஜீனுக்குள் கூடுதலாக 4,000 மெகாவாட் உற்பத்தி: மின்துறை அமைச்சர் விசுவநாதன் - தினமணி (12.10.2012)

மாவட்டங்களில் மீண்டும் 15 மணி நேர மின் வெட்டு: மாநிலத்தின் மொத்த மின் பற்றாக்குறை 4500 மெகாவாட் அளவுக்கு உயர்ந்துள்ளது- தினமணி (12.10.2012)

என்னத்தச் சொல்ல!:

அமைச்சரே உங்கள் கணக்குப்படியே 500 மெகாவாட் உதைக்கிறதே.

அது சரி! இனி புதிதாக வீடுகளுக்கும் கடைகளுக்கும் ஆலைகளுக்கும் மின் இணைப்பே இருக்காதா? அல்லது இனி அடுத்த ஜீன் வரை யாரும்  வீடு கட்டவோ, கடை - ஆலை அமைக்கவோ கூடாதா? மின் தேவையே அதிகரிக்காதா அமைச்சரே?

சொன்னது:

வட சென்னையில் 1200 மெகாவாட், என்.எல்.சி நிறுவனத்தில் 250 மெகாவாட், வள்ளூரில் 1040 மெகாவாட் மின்சாரம் 2013 ஜீன் மாதத்துக்குள் உற்பத்தியாகும். இவற்றின் மூலம் 3,000 மெகாவாட்டும்,  கூடங்குளம் அணு உலையிலிருந்து 1,000 மெகாவாட் மின்சாரமும் கிடைக்க வாயப்புள்ளது. அப்பொழுது தமிழகத்தில் மின்வெட்டு அறவே இருக்காதுமின்துறை அமைச்சர் விசுவநாதன்தினமணி (12.10.2012)

என்னத்தச் சொல்ல!:

அணு உலையின் உற்பத்தித் திறன்:  80%. கூடங்குளத்தில் இதை எட்ட இரண்டு ஆண்டுகள் ஆகும். அதுவரை உற்பத்தி 30-40% மட்டுமே இருக்கும். இதில் தமிழகத்தின் பங்கு 46.25%. இரண்டு உலைகளும் உடனே இயங்கினாலும்கூட தமிழகத்திற்கு 370 மெகாவாட் மின்சாரமே கிடைக்கும். இதில் 22%  கம்பி இழப்பு போக கிடைக்கப் போவதென்னவோ அதிகபட்சம் சுமார் 290 மெகாவாட் மின்சாரம் மட்டுமே.

இதுல ஜீன் 2013 ல் கூடங்குளத்திலிருந்து 1000 மெகாவாட்டாம்! கேக்கிறவன் கேனயன்னா கேப்பையிலும் நெய்வடியுமாம்!

-----------------------------------

மின் தட்டுப்பாட்டால் மெகாசீரியல்களையும் நெடுந்தொடர்களையும் மக்கள் மறந்து போய் வெகு நாளாச்சு. பிறகு என்னைப் போன்ற புறநகர் பதிவர்கள் மட்டும் மெகா பதிவுகளையா வெளியிட முடியும்? இனி குட்டிப் பதிவுகள்தான். இதற்கே திண்டாட வேண்டியிருக்கு!

Wednesday, 5 September 2012

சிவகாசி: குட்டி ஜப்பானா? இல்லை ஹிரோஷிமா கொலைக்களமா?

மாலை 5 மணிக்கு வழக்கம் போல வீட்டிற்கு வந்தேன். தொலைக்காட்சி பார்க்கலாம் என ஸ்விட்ச்ஆன் செய்த போது சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிதான் வந்தது. அதில் சிவகாசி பட்டாசு ஆலை விபத்து பற்றி செய்தி ஓடிக்கொண்டிருந்தது. உடனடியாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சேனலை மாற்றினேன். அதில் வெளியான காட்சிகளைக் கண்டு நிலைகுலைந்து போனேன்.

கட்டடங்கள் கொளுந்துவிட்டு எறிகின்றன; இடிந்து சிதறி நொறுங்கி தரைமட்டமாகிக் கிடக்கின்றன. இடிபாடுகளிலும் அருகாமை முட்புதர்களிலும் பிய்த்து எறியப்பட்ட மனித உடல்களும் உறுப்புகளும் சிதறிக்கிடக்கின்றன. தீயில் கருகி உயிருக்குப் போராடும் ஒரு தொழிலாளியை நான்கு பேர் சேர்ந்து அவரது கைகளையும் கால்களையும் மட்டும் பிடித்து தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். உடல் வெந்த நிலையில் ஒரு தொழிலாளியை தூக்கிச் செல்ல முடியாத நிலையில்  மண் தரையில் போடப்பட்டுள்ள ஒரு அட்டையின் மேல் உட்கார வைத்துள்ளார்கள். நான் பிழைப்பேனா என்கிற அவரது ஏக்கத்தை பார்க்கும் போது என் கண்கள் குளமாகின. ஒரு தொழிலாளியை இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து வண்டியிலிருந்து அவர் விழாமல் இருக்க அவரை மற்றொருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு மெல்லச் செல்கின்றனர். ஒரு போலீஸ் வேனில் காயமடைந்தவரை ஏற்றிச் செல்கின்றனர். இப்படி நெஞ்சை உறுக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.

எங்கோ காட்டுக்குள்ளிருந்து வெளியே வருவதைப்போலத்தான் இருந்தது அந்தப் பகுதி. ஒற்றறையடிப்பாதையும் கரடுமுரடான மண்சாலைகளுமே அங்கு தென்பட்டன. தீயணைப்பு வண்டி ஒன்றை பார்க்க முடிந்தது. மற்றபடி ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்ததா எனத் தெரியவில்லை.

இந்த பட்டாசு ஆலையில் மொத்தம் 42 அறைகள் உண்டு. நான்கு பேர் மட்டுமே ஒரு அறையில் வேலை செய்ய வேண்டும். 3 கிலோவுக்கு மேல் ஒரு அறையில் வெடி மருந்துகளை வைத்திருக்கக்கூடாது. ஆனால் விபத்து நடந்த அன்று ஒரு அறையில் 7 பேரும் சுமார் 400 லிருந்து 500 கிலோ வரையிலான  வெடிமருந்துகளும் வைக்கப்பட்டிருந்தன. இன்று 260 பேர் வேலை செய்துகொண்டிருதனர். 42 அறைகளில் 40 அறைகள் தரைமட்டமாகியுள்ளன. அதனால்தான் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  
தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகில் முதலிப்பட்டி என்ற ஊரில் இன்று (0பிற்பகல் 12.15 மணிக்கு ஓம்சக்தி ஃபயர் ஒர்க்ஸ் என்கிற பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 54 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 50 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இதே இடத்தில் சென்ற ஆண்டு வேறு ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலர் பலியாகியுள்ளனர். 2006 க்குப் பிறகு சிவகாசி பகுதியில் ஏற்பட்ட விபத்துகளில் 10 லிருந்து 12 பேர் வரை பலியாகி உள்ளனர். கடந்த 34 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் விபத்துகள் நடந்துள்ளதாக ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி நவநீதகிருஷ்ணன் கூறுகிறார். ஆண்டு தோறும் விபத்துகள் நடந்தாலும் இதுவே மிகக் கோரமான விபத்து.
ஒரு தொடர் நிகழ்வாக இத்தகைய விபத்துகள் நடந்த போதும் இவைககைளை கட்டுப் படுத்த யாருமே முன்வரவில்லையே ஏன்? தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் 2 இலட்சம் பேர் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். 5 இலட்சம் பேர் மறைமுகமாக  - விநியோகம் விற்பனை உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகையதொரு பெரிய தொழிலை கண்காணிப்பதற்காக ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் ஒரே ஒரு வட்டாட்சியர் மட்டும்தான் இருக்கிறாராம் அவரக்கு கீழே ஒரு தனி உதவியாளர் ஒரு தட்டச்சர் ஒரு வாகன ஓட்டுநர்.  இந்த நான்கு பேர் என்ன செய்வார்கள்? நேர்மையாளர்களாக இருந்தால்கூட – அவ்வாறு இருக்கமாட்டார்கள் என்பதே எதார்த்தம் - பட்டாசு ஆலைகளை அனைத்தையும் இரவு பகலாக ஆய்வு செய்தாலும் எதையும் கட்டுப்படுத்திவிட முடியாது.

வெடிமருந்துகளை கட்டுப் படுத்தவும் கையாளவும் ஆயிரம் சட்டங்கள் இருந்தாலும் அவைகளை மயிரளவுக்குக்கூட மதிப்பதில்லை முதலாளிகள். முதலாளிகளின் ஒரே நோக்கம் இலாபம் மட்டுமே. இந்த இலாபத்தில் ஒரு பகுதியை அதிகாரிகளுக்கு வெட்டிவிட்டால் போதும் – ஆலையின் உற்பத்தி தடையின்றி நடக்கும். சீனாவிலிருந்து பட்டாசுகள் அதிகளவு இறக்குமதியாவதால் போட்டி கடுமையாக உள்ளதாம். அதனால் முதலாளிகள் சீனாவுக்கே சென்று அங்குள்ள தொழில் நுட்பத்தை அறைகுறையாக கற்றுக் கொண்டு புதிய ரக பட்டாசுகளை அறிமுகம் செய்ய இங்கே  சோதனையில் ஈடுபடுகிறார்களாம். இதுவும் எதிர்பாராத விபத்து நடப்பதற்கு காரணமாக அமைகின்றன.

மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் ஆலைகள் அமைக்கக்கூடாது என விதி இருப்பதால் சுமார் 7 கி.மீ தள்ளி அலைகளை அமைக்கிறார்களாம். அவ்வாறு அமைக்கப்படும் அலைகளுக்கு சாலை வசதிகள் இருப்பதில்லை. மண்சாலை மட்டுமே இருக்கும். இச்சாலைகளை வண்டிப்பாதை என்றுதான் அழைப்பது வழக்கம். அதாவது மாண்டு வண்டிகள் மட்டுமே செல்லும் சாலைகள். இச்சாலைகளில் சைக்கிளில்கூட வேகமாகச் செல்ல முடியாது.இருந்தாலும்கூட இந்த ஆலைகளுக்கும் உரிமம் வழங்கப்படுகிறது.

தொழிற்சாலைக்கு தோல் செருப்புகூட அணிந்து செல்லக்கூடாது. தோல் செருப்பு தரையில் உராயும் போது ஏற்படும் சிறு தீப்பொறிகூட மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தும் இலாபம் மட்டுமே நோக்கம் என்பதால் பாதுகாப்பு விதிகள் எதையும் முதலாளிகள் மதிப்பதில்லை; பாதுகாப்பு வசதிகள் எதையும் செய்வதில்லை. ஆலைகள் இருக்கும் இடங்களில் தண்ணீர் வசதி துளியும் கிடையாது. தொழிலாளிகள் வாட்டர் பாட்டிலில் எடுத்துச் செல்லும் ஒரு லிட்டர் தண்ணீர்தான் அன்றைக்கு முழுக்க அவர்களுக்கு தாகம் தீர்க்க வேண்டும். சிறு நீர் கழிக்க மலம் கழிக்கவென அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. ஓய்வெடுக்க ஓய்வறைகளும் கிடையாது. கிட்டத்தட்ட அடிமைச்சமூகத்தில் நிலவிய ஒரு சூழல்தான் இங்கே நிலவுகிறது. தொழிலாளார்கள் கொத்தடிமைகளைப் போல வேலை செய்கிறார்கள்.

எந்நேரத்திலும் மரணம் நிகழலாம் என்று தெரிந்தேதான் வேறு வழியின்றி இத்தகைய சூழலில் அவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால் காரணம் அப்பகுதியல் நிலவும் வேலையின்மை. வானம் பார்த்த பூமி என்பதால் மழை பெய்தாலே பெரிதாக எதுவும் விளைந்துவிடாது. மழை பொய்த்துப் போனால் -  அடிக்கடி பொய்த்துப் போவதுதானே நாம் காணும் காட்சி – வேறு எங்கே செல்வார்கள் அப்பகுதி மக்கள்? வயிற்றைக் கழுவ வேண்டுமே! வேறென்ன செய்ய?

இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. அவசரத்திற்கு சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு எதுவும் செயல்படுவதில்லை. அதனால்தான் 80 கி.மீ தொலைவில் உள்ள மதுரை இராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க சிவகாசி அரசு மருத்துவ மனையில் ஏசி அறை அமைக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து நவீன கருவிகள் வாங்கி நிறுவப்பட்டன. ஆனால் மருத்துவ மனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் அவை எதுவுமே இன்று செயல்படுவதில்லை. மருத்துவ மனையை முறைாயக பராமறித்தால் பலி எண்ணிக்கையையாவது குறைக்கலாம்.

இந்த விபத்துகளுக்குக் காரணம் யார்? யாரைக் குற்றவாளியாக்குவது? பாதுகாப்பு விதிகளைப் பற்றி ஏதுமறியாத தொழிலாளிகளா? அல்லது பாதுகாப்பு விதிகளை காற்றிலே பறக்கவிட்டு இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகளா? அல்லது முதலாளிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு தங்கள் பைகளை மட்டுமே நிரப்பிக் கொள்ளும் அரசு அதிகாரிகளா? அல்லது ஆபத்தில்கூட உதவாத மருத்துவர்களா? அல்லது இவை எல்லாம் தெரிந்த பிறகும் அலட்சியமாய் நடந்து கொள்ளும் அரசாங்கமா?

இறந்தவர்களுக்கு ஒரு இலட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு 25000 ரூயாயும் இலேசான காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 10000 பணமும் நிவாரணமாகக் கொடுத்துவிட்டால் பரிகாரமாகிவிடுமா? இது விபத்தல்ல. ஆட்சியாளர்கள் – அதிகாரிகள் - முதலாளிகளின் அலட்சியத்தால் நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை. இவர்களை முச்சந்தியிலே நிற்க வைத்து தண்டிக்கும் நாள் எந்நாளோ - அந்நாளே அப்பாவி தொழிலாளிகளை மரணப்பிடியிலிருந்து மீட்கும் நாள்!

நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திகளை பகிர்ந்து கொண்ட திரு.நவநீதகிருஷ்ணன்,  வருவாய் ஆய்வாளர் (ஓய்வு) மற்றும் துரித கதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட திரு.பாண்டியன். 

Wednesday, 29 August 2012

மகாபலி இனி வரமாட்டார்!

உயிரற்ற ஓணம் பண்டிகையைக் கண்டு துவண்டு போன மகாபலி சக்ரவர்த்தி!

ஓணம் பண்டிகையின் இன்றைய தன்மை குறித்து திரு C.V.சுகுமாரன் (email: lscvsuku@gmail.com) என்பவர் 26.08.2012 அன்று இந்து நாளேட்டில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.

“அன்புள்ள வாசகர்களே,

முன்பொரு காலத்தில் கேரளாவின் சக்ரவர்த்தியாக விளங்கிய மகாபலி பேசுகிறேன். ஆண்டுக்கு ஒரு முறை நான் கேரளாவுக்கு விஜயம் செய்யும் மற்றுமொரு ஓணம் நெருங்கி விட்டது. நான் ஒரு பேராசை பிடித்த மன்னன் அல்ல. நான் ஒரு இளிச்சவாயன் என்பதால் கீழ்லோகத்திற்குள் தள்ளப்பட்டேன். மகாவிஷ்ணு குள்ளனாக ‘வாமன’ அவதமாரம் எடுத்து மூன்றடி மண்ணை பிச்சையாகக் கேட்டான். நானும் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் மகாவிஷ்ணு விஸ்வரூபமெடுத்து முதல் அடியிலேயே மொத்த பூமியையும் அளந்தான்; இரண்டாம் அடியை சொர்க்கத்தில் அளக்க மூன்றாம் அடியை அளக்க இடம் இல்லாததால் எனது தலையைக்காட்ட அவனும் என் தலைமீது முன்றாவது அடியை வைத்து அழுத்த நான் கீழ்லோகத்திற்குள் தள்ளப்பட்டேன். நான் கீழ்லோகத்திற்கு தள்ளப்படும் தருவாயில் ஏதாவது வரம் வேண்டுமானால் கேள் என்றான் விஷ்ணு. ஆண்டுக்கொரு முறை என் அன்பிற்குறிய மக்களை சந்திக்க மட்டும் வரம் கொடு என்றேன். அவனும் கொடுத்தான். அன்றிலிருந்து நான் கேரளாவிற்கு விஜயம் செய்வதை ஒரு தேசியத் திருவிழாவாகவே எனது மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதுவே ஓணம் பண்டிகையாகும்.

கடந்த காலங்களில் எனது மக்களை சந்திக்க ஓணத்திற்காக நான் காத்திருப்பேன். அன்று அறுவடையின் வாசனையை உணர முடிந்தது. பூத்துக் குலுங்கும் செடிகளையும் கொடிகளையும் பார்க்க முடிந்தது. எங்கு நோக்கினும் ஒய்யாரமாய் பறக்கும் தும்பிகள். தேனீக்களின் ரீங்கார ஓசை மற்றும் பறவைகளின் இசைக் கோலங்களை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் பொது இடத்தில் ஒன்று கூடுவார்கள். தங்களின் வீட்டு வாசலில் மலர்களால் பூக்களம் அமைத்து என்னை வரவேற்பார்கள். கால்நடைகளுக்குக்கூட அவர்கள் தனியொரு ஓணம் வைத்திருந்தார்கள். சுற்றுச்சூழல்கூட என்னை அன்பாக வரவேற்பதில் தன்னை இணைத்துக் கொண்டது.
செடிகளிலும் கொடிகளிலுமிருந்து சிறுவர்கள் மலர்களைப் கொய்து வருவார்கள். அதைக்கொண்டு எனக்கு விதவிதமன வடிவங்களில் பூக்களம் அமைப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து வகுப்பு மற்றும் சாதி சனங்களும் ஒன்றுகூடி கொண்டாடும் விழாதான் ஓணம் பண்டிகை. சந்தைக்கும் விழாவிற்கும் எந்தத் தொடர்பும் அன்று கிடையாது. ஓணசத்யா என்கிற அறுசுவை விருந்துக்குத் தேவையான அனைத்து வகைக் காய்கறிகளும் தங்கள் வீடுகளிலேயே விளைவித்துக்கொண்டனர்.

விவசாயம் புறக்கணிக்கப்பட்டு அனைத்தையும் சந்தையில் வாங்கிக் கொள்ளும் போக்கும் மக்கள் ஒன்றுகூடி ஐக்கியப்படுவதும் மெல்ல மெல்ல காணாமல் போவதை சமீப காலங்களில் பார்க்க முடிகிறது. இன்று தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு பன்னாட்டு வர்த்தகர்களின் விளம்பரங்களைப் பார்த்து ஓணத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். சுற்றுச்சூழலை பாழ்படுத்திவிட்டு காசு மேல் காசு சேர்ப்பதில் குறியாய் உள்ளனர். அடிப்படையில் ஓணம் ஒரு அறுவடைத் திருவிழா என்பதை மறந்துவிட்டனர். பாரம்பரிய விவசாயம் அவர்களுக்குத் தேவையானதை அதிகபட்சமாக அளித்திருந்த போதிலும் அது அவர்கள் பணம் குவிக்க உதவவில்லை போலும்.

காணாமல் போன நெல்லும் மலர்களும்!

இயற்கையோடு இயைந்த தன்னிறைவை ஒழித்துவிட்டு அதிக மணம் ஈட்ட அலைகிறார்கள். அவர்கள் கொய்வதற்கு இன்று பூக்கள் இல்லை; அறுவடை செய்ய நெல்வயல்கள் இல்லை; ஆனால் இவைகள் அனைத்தையும் வாங்க அவர்களிடத்தில் பணம் கொட்டிக் கிடக்கிறது. பற்றிப் படரும் நுகர்வுக் கலாச்சாரத்தை எங்கும் பார்க்க முடிகிறது; சந்தைகளின் ஆதிக்கம் இல்லாத மக்கள் ஒன்றுகூடும் சூழல் நிறைந்த ஓணம் இல்லாதது கண்டு நான் வாடி வதங்குகிறேன்.

பணத்தைக் கொட்டி மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பூக்களங்களைத்தான் இன்று பார்க்க முடிகிறது. செடிகளிலும் கொடிகளிலிமிருந்து பறிக்கப்பட்ட தும்பா, முக்குட்டி, மந்தாரம், துளசி போன்ற உள்ளுர் மலர்களைக் கொண்டு மிக எளிமையான வடிவத்தில் அமைக்கப்படும் பூக்களங்களை நான் பெரிதும் விரும்புவேன்.

இன்று ஓணத்தையொட்டி ஆண்கள் அனைவரும் சாராய – பிராந்தி கடைகளுக்கு முன்பாகக் கூடுகிறார்கள். போதையேற்றிக் கொண்டு ஓணத்தைக் கொண்டாடி என்னைக் கேவலப்படுத்துகிறார்கள். முன்பு மக்கள் ஒன்றுகூடி விளையாடுவார்கள். ஆனால் இன்று பிளாஸ்டிக் பாட்டில்களும் சாராய பாட்டில்களும் சிதறிக் கிடக்கின்றன. மக்கள் பொதுவாக ஒன்று கூடுவதற்குப் பதிலாக போதை ஏற்றிக் கொள்வதற்காக நான்கைந்து பேர் அவர்களுக்குரிய இடத்தை தேர்வு செய்து அங்கே ஒன்றுகூடுகிறார்கள்.

சாராயத்தின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்றாலும் நான் ஒருபோதும் எனது மனக்களிடம் போதைப்பழக்கத்தை வளர்க்கவில்லை. சாராயத்தை வருவாய்கான ஒரு ஆதாயமாக இன்றைய அரசாங்கங்கள் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. மக்களின் நலனைக் குட்டிச்சுவராக்கிவிட்டுதான் அவர்கள் அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டுமா? வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்ட உங்களது அபிவிருத்தித் திட்டங்களால்  எமது மக்கள் நற்பண்புகளை இழந்ததோடு மட்டுமன்றி அவர்கள் வாழ்வில் நிம்மதியையும் இழந்தார்கள். இன்று எமது மக்கள் வசதிபடைத்தவர்களாக மாறியபோதும் அவர்கள் கூடிவாழும் கோடி நன்மையை இழந்தார்கள். உண்மையிலேயே அவர்கள் தங்களை வறியவர்களாக்கிக் கொண்டார்கள்.

பெண்களுக்கு இடமில்லை

பெண்களும் மற்றும் இளம் வயதுப் பெண்களும் பொது இடங்களில் இருக்கும் போது பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் அச்சப்படுவதை நான் பார்க்க முடிகிறது. எல்லாவிடங்களிலும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். எனது மக்கள் தங்களது உரிமைகள் குறித்து மிகவும் விழிப்போடு இருக்கிறார்கள். ஆனால் கடமைகள் என்று வரும்போது பாராமுகமாய் இருப்பது வேதனையளிக்கிறது. பெண்களைப் பொருத்வரை அவர்களுக்கு எந்த உரிமையும் உரிய இடமும் கிடையாது. ஆண்கள்  அவர்களை பொது இடங்களில் ஆபாசமான வார்த்தைகளால் நாகூசும்படி பேசுகிறார்கள். கேவலமாக நடத்துகிறார்கள்.

பொது சுகாதாரம் எங்கே?

முடைநாற்றமடிக்கும் குப்பைகளும் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் எங்கும் சிதறிக்கிடப்பதைப் பார்க்க முடிகிறது. பொது இடங்களில் ஆண்கள் மூத்திரமடிக்கிறார்கள். சுத்தமான கிராமச் சாலைகளின் ஓரங்களில் கோழிக் கழிவுகளும் பிளாஸ்டிக் பைகளும் கொட்டப்படுகின்றன. “நிர்மல் கிராமப் பஞ்சாயத்து உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்கிற விளம்பரப் பலகையின் அடியிலேயே இதுதான் நிலமை.  எல்லா நிர்மல் பஞ்சாயத்துகளிலும் என் மூக்கைத் தொடுவது முடைநாற்றம்தான். மக்கள் தங்கள் வீட்டுக் கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் திணித்து அதை அப்படியே சாலைகளில் வீசிவிடுகிறார்கள். ஒரு காலத்தில் சுகாதாரமாகத் திகழ்ந்த எனது கிராமங்கள் இன்று எப்படி இருக்கின்றன என்று பார்த்தீர்களா?

சாராய நெடி, குன்றுகளாகக் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளிலிருந்தும் வெளியேறும் முடைநாற்றத்தை சுவாசிக்கவும் மற்றும் நுகர்வுமயமாகிப்போன ஓணத்தையும் காண நான் வரவேண்டுமா சொல்? எல்லாவற்றையும் கடைகளிலேயே வாங்கி நுகர்வுக்கலாச்சாரத்திற்கு ஆட்பட்ட மக்கள் கொண்டாடும் ஓணத்தைக் காண நான் விரும்பவில்லை. மக்களை ஐய்கியப்படுத்தும் தம்மையை இழந்த, உயிரற்ற ஓணத்தைக் காண நான் விரும்பவில்லை. வர்த்தக சூதாடிகளால் கட்டுப்படுத்தப்படும் ஓணத்தில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை.


இப்படிக்கு

உங்களின்
மகாபலி
கேரளாவின் முன்னாள் சக்ரவர்த்தி  
கீழுலுகம்.”

*****

இதன் மீதான எனது பார்வை.....

ஆரியர்களால் கொன்றொழிக்கப்பட்ட மகாபலி சக்ரவர்த்தி!

”மகாபலி சக்கரவர்த்தி இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஓரு அரக்க அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். இந்து புராணங்களின்படி இவர் பக்த பிரகாலதனின் பேரன் ஆவார். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டு முதல் இரண்டடியால் பூமியையும், வானத்தையும் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து பூமியில் அமிழ்த்தி அவரை வதம் செய்தார். மகாபலி வாமனரிடம் தான் ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு (கேரளா) மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே ஓணம் பண்டிகையாக கேரளா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.தமிழ்விக்கிப்பீடியா

இது மகாபலி சக்ரவர்த்தியைப் பற்றிய புராணக்கதை.

இப்படிப்பட்ட புராணக்கதைகள் தென் இந்தியாவில் பல உள்ளன. குடித்தலைவன் முதல் மகா சகக்ரவர்த்திவரை யாரெல்லாம் ஆரியர்களின் வருகையை / ஆதிக்கத்தை எதிர்த்தார்களோ அவர்களெல்லாம் ஏதாவதொரு வகையில் சதிக்குள்ளாக்கப்பட்டு ஆரியர்களால் கொன்றொழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆரியர்களை எதிர்த்த இம்மண்ணை ஆண்ட மூதாதையர்களெல்லாம் அரக்கர்கள் என சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களது தலைவர்கள் ஆரியர்களால்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர்ந்து விட்டால் அது ஆரியர்களி்ன் இருப்புக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பதால்தான்  இத்தகைய படுகொலைகளை மூடிமறைத்து கடவுளே அவதாரம் எடுத்து அரக்கர்களை அழித்ததாக புனை கதைகளை உருவாக்கி அதை மக்கள் ஏற்குமளவுக்கு நம்ப வைத்துள்ளார்கள். இத்தகைய கதைகளில் ஒன்றுதான் தீபாவளி நரகாசுரன் புராணக்கதையும்.

வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் அந்தணர்களை துன்புறுத்திய கஞ்சனன் என்கிற அரக்கனை ஈஸ்வரன் விஸ்வரூபம் எடுத்து அவனது தலையை கொய்து போட்டானாம். தலை விழுந்த இடம் சீக்கராஜபுரமாம். (சீக்கராஜபுரம்) வலது காலை திருகிப் போட்டானாம். அது விழுந்த இடம் வடகாலாம் (வடகால்). அதேபோல இடது கால் விழுந்த இடம் தெங்காலாம் (தெங்கால்). இது லாலாப்பேட்டையின் தலபுராணம். கஞ்சனனுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அவ்வூர் மக்கள் விழா எடுக்கிறார்கள்.

இப்படி ஊருக்கு ஊர் ஒரு தலபுராணம் இருக்கத்தான் செய்கிறது.

இத்தகைய படுகொலைகளைக் கண்டு ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக மக்கள் விழா எடுப்பதுதான் கேவலத்திலும் கேவலம்.

ஊரான்