Saturday, 2 May 2015

அருந்ததிராயும் அம்பேத்கர் சுடரும்!

“மிக ஆழமாகவும் வலுவாகவும் மக்களிடையே ஊடுருவியுள்ள சாதி அமைப்புக்கு எதிராக ஈவிரக்கமின்றிப் போராட வேண்டிய தருணம் இது. மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக சாதியப் பாகுபாடுகள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளன.

பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை வெளிக்கொணராமல் சாதியத்துக்கு எதிரான போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.”

அருந்ததிராய் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் “அம்பேத்கர் சுடர்” விருது வழங்கும் விழாவில் அருந்ததிராய் அவர்கள் ஆற்றிய உரையின் மையக் கருத்து இது.

அருந்ததிராய் அவர்களின் பேச்சை நாம் எப்படி புரிந்து கொள்வது?

சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் ஏதுமற்றவர்களாகவும், சேவை செய்பவர்களாகவும் உருவாக்கியதில் பார்ப்பனியத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.

சாதிப் படிநிலையில் ஒரு சில சாதிகளை தீண்டத்தகாதவர்களாக்கியதால் பார்ப்பனியத்துக்கும் தீண்டாமைக்கும் தொடர்பிருக்கிறது.

மக்களின் உழைப்பைச் சுரண்டுவதால் முதலாளித்துவத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.

நாட்டு வளங்களையும் மக்களின் உழைப்பையும் சுரண்டுவதால் ஏகாதிபத்தியத்திற்க்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.

மக்களை சாதி ரீதியாக கூறுபோட்டு அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வை உருவாக்கி அவர்கள்  ஒன்று சேரவிடாமல் தடுப்பதற்கு பார்ப்பனியம் பெரிதும் உதவுவதால் முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் பார்ப்பனியம் தேவைப்படுகிறது.

எனவே முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் பார்ப்பனியத்துக்கும் தொடர்பிருக்கிறது.

அதனால்தான் ”பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை வெளிக்கொணராமல் சாதியத்துக்கு எதிரான போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.” என அருந்ததிராய் கூறுகிறார்.

அம்பேத்கர் பார்வையில் சமத்துவமின்மை

படிப்படியான முறையில் அமைந்துள்ள சமத்துவமின்மையை நிலைநாட்டும் கொள்கை மனுஸ்மிருமிதி முழுவதிலும் ஊருறுவி நிற்கிறது.

மனுவின் சமத்துவமின்மை கொள்கை இன்றைய சமூக வாழ்க்கையில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது.

பார்ப்பனன் மேலானவன்; சூத்திரன் கீழானவன் என்கிற வர்ண பேதமும் அதைத் தொடர்ந்து நிறுவப்பட்டுள்ள இன்றைய சாதிய ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மை கொள்கைக்கு சான்றாக உள்ளன.

இதுதான் பார்ப்பனியம் என்கிறார் அம்பேத்கர். மக்களின் ஊனுக்குள்ளும் எலும்புக்குள்ளும் ஊருறுவி நிற்குமாறு புகுத்தி வைத்தப் படிப்படியான சமத்துவமற்ற முறை அநியாயத்தை தூக்கி எறிய முடியாமல் முடக்கி வைப்பதற்கே உதவியது; உதவுகிறது.

படிப்படியான சமத்துவமின்மை முறை அநியாயத்தை எதிர்த்துப் பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் பாதிக்கப்படுபவர்களிடையேயும் சமத்துவமின்மை இருப்பதால் அநியாயத்தை எதிர்த்து எல்லா வகுப்பினரும் பொதுவாக ஒன்று சேரும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.

பார்ப்பனியத்துக்கும் அதன் அநியாயங்களுக்கும் எதிராகப் புரட்சி எதுவும் நடக்காமல் போனதற்கான காரணங்களில் படிப்படியான சமத்துவமின்மை முறை ஒன்றாகும்.  (பார்க்க: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 7 பக்கங்கள்: 235-239)                                                                                                        
ஏழைகள் ஏன் ஒன்றுபட முடியவில்லை?

ஏழைகள் எங்கு அதிகமாக நிறைந்திருக்கிறார்கள்? கிராமங்களில் நிறைந்திருக்கிறார்கள். நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.

இங்கெல்லாம் யார் ஏழைகளாக இருக்கிறார்கள்? படிநிலைச் சாதிகளில் கீழ் நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களே மிக அதிகமாக ஏழைகளாக உள்ளனர்.  அடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் கனிசமானவர்கள். அதற்கு அடுத்தபடியாக பிற்படுத்தப்பட்டவர்களில் ஒரு சிலர். உயர் சாதியினரில் மிகச் சொற்பமானோர் ஏழைகளாக உள்ளனர்.

ஏழைகள் அனைவருக்குமான பிரச்சனை பொதுவானதாக இருப்பினும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக தீண்டாமைக் கொடுமையும் சேர்ந்துள்ளதால் அவர்களின் பிரச்சனை மிகவும் கொடூரமானது.

ஏழ்மைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் இவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையில் சாதி அடிப்படையில் தனித்தனி அமைப்புகள், கட்சிகள். ஒரே சாதிக்குள்ளேயே பல்வேறு அமைப்புகள், கட்சிகள். மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியிலும் இதே நிலைதான்.

பார்ப்பனர்களின் சொந்த நலனுக்காக – பிழைப்புக்காக பார்ப்பனியம் மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்தது; வைக்கிறது அதேபோல ஒரு சில பிழைப்புவாதிகள் தங்களின்  நலனுக்காக மக்களை தனித்தனி சாதி அமைப்புகளாக, சாதிக் கட்சிகளாக பிளவுபடுத்தி வைத்திருப்பதன் மூலம் பார்ப்பனியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

சமத்துவமின்மை கொள்கைதான் பார்ப்பனியம் என்பதையோ, அதை பார்ப்பனர்களே உருவாக்கினார்கள் என்பதையோ, அதைக் கட்டிக் காப்பதில் இன்றளவும் பார்ப்பனர்களே முன்னிலையில் உள்ளனர் என்பதையோ இந்தத் தலைவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அல்லது புரிந்து கொண்டிருந்தாலும் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டமாக அதை முன்னெடுப்பதில்லை.

எனவே ஏழ்மைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் என்பது ”பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை” மிகச் சரியாக புரிந்து கொண்டு போராடும் போதுதான் ஏழ்மையும் தீண்டாமையும் ஒழிக்கப்படும். அதற்குத் தேவை மார்க்சிய சித்தாந்தமும் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துக்களும்தான்.

Tuesday, 28 April 2015

டொக்குச் சாலைகளும் குவார்ட்டர் கடைகளும்!

பேருந்துகள், லாரிகள், வாடகைக் கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், சிறு லோடு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர்கள், மெக்கானிக் ஷாப் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருசக்கர வாகன உரிமையாளர்கள் என வாகனம் தொடர்புடையவர்கள் அனைவரும் ஏப்ரல் 30 அன்று மோடி அரசுக்கு எதிராக அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
வாகனப் பதிவு, வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எப்.சி), வாகனங்களுக்கான சாலை வரி வசூல், ஓட்டுநர் உரிமம், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாகனம் தொடர்பான செயல்பாடுகள் இதுவரை அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
மாநில அரசுகளிடமிருக்கும் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதோடு தனியார் முதலாளிகள் இத்துறையில் நுழைவதற்கு வழிவகை செய்கிற நோக்கத்தோடு “சாலை பாதுகாப்பு மசோதா 2014” என்கிற சட்ட மசோதா ஒன்றை கொண்டு வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் என்ன நடக்கும்?
ஓட்டுநர் உரிமம் பெற எழுத்துத் தேர்வு. தேறினால் மட்டுமே ஓராண்டு கழித்து உரிமம் வழங்கப்படும்.
வாகனத் தயாரிப்பாளர்களே - அதாவது கார்பரேட் முதலாளிகளே - இனி வாகனப் பதிவை மேற்கொள்வார்கள்.

இருபது கோடி ரூபாயும் 15 ஏக்கர் நிலமும் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்த முடியும். இவ்வளவு முதலீடு போடுபவன் பயிற்சிக் கட்டணம் எவ்வளவு வாங்குவான்? வண்டி ஓட்டியாவது பிழைக்கலாம் என எண்ணுவோருக்கு இனி ஆப்புதான்.

ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற தற்போது ஆகும் செலவு சுமார் ரூ.4000/= இனி அது 25000/= ரூபாயாக உயரும்.
ஒரு ஆட்டோவை பழுது பார்த்து தகுதிச் சான்று பெற தற்போது ஆகும் செலவு சுமார் ரூ.10000/= இனி அது 30000/= ரூபாயாக உயரும்.
வாகனங்களை இனி சாலை ஓர மெக்கானிக் கடைகளில் பழுது பார்த்தால் அது செல்லாது. அங்கீகரிக்கப்பட்ட வாகன உற்பத்தியாளர்களின் மெக்கானிக் ஷாப்புகளில் பழுது பார்த்தால் மட்டுமே வாகனங்களுக்கு சான்றளிக்கப்படும். வெளிப்படையாகச் சொன்னால் கார்பரேட் கம்பெனிகள் சான்றளித்தால் மட்டுமே உங்கள் வண்டி ஓடும். இல்லை என்றால் பேரீச்சம் பழம்தான்.
சிறு சிறு வாகன விதி மீறலுக்கான தண்டத் தொகை இனி பல மடங்கு உயரும்
ஒவ்வொறு விதி மீறலும் புள்ளி அடைப்படையில் கணக்கிடப்பட்டு 12 புள்ளிகள் பெறுபவர் ஓராண்டு சிறைக்குச் செல்ல வேண்டும். மீண்டும் 12 புள்ளிகள் பெற்றால் 5 ஆண்டு சிறை மட்டுமல்ல அவரது ஓட்டுநர் உரிமமும் காலியாகிவிடும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியே வந்தால் கார்பரேட் கம்பெனிகளில் வண்டி தொடைக்கலாம்.
ஆட்டோக்கள் மட்டுமல்ல இனி எந்த வாகனமும் இதிலிருந்து தப்ப முடியாது.
இரு சக்கர வாகனங்களுக்கும் இனி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச் சான்று (எப்.சி).
இப்படி இன்னும் பலப்பல அம்சங்கள் “சாலை பாதுகாப்பு மசோதா 2014” ல். எல்லாமே கார்பரேட்டுகள் கொழுக்கவே!
மசோதாவின் அம்சங்கள் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. இது நடைமுறைக்கு வந்தால் விபத்துக்கள் நடக்காது என நீங்கள் நினைக்கலாம். டொக்குச் சாலைகளும் குவார்ட்டர் கடைகளும் இருக்கும் வரை உங்கள் உயிருக்கு மட்டுமல்ல ஓட்டுநர் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. 
கார்பரேட்டுகள் இதை எல்லாம் சேவை நோக்கிலா செய்வான்? அவனுக்குத் தேவை பணம். அவன் பிடுங்கும் ஒவ்வொரு ரூபாயின் சுமையும் இறுதியில் பொது மக்களின் முதுகில்தான் ஏற்றப்படும்.

தொடர்புடைய பதிவு:

சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)

Saturday, 25 April 2015

நாம் நம்மைப் பற்றி எப்போது பேசப் போகிறோம்?

கடந்த பத்து மாதங்களாக பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை நாம் எதைப் பற்றி அதிமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்?

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பற்றிப் பேசுகிறோமா? 

நோக்கியா போன்ற ஆலைகள் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார்களே! அது பற்றி பேசுகிறோமா?

ஆலை விபத்துகளால் ஆன்றாடம் பலியாகும் தொழிலாளர்கள் பற்றி பேசுகிறோமா?

படித்த இளைஞர்கள் வேலை தேடி அலையும் அவலம் பற்றி பேசுகிறோமா?

பெருகி வரும் கல்விக் கட்டணங்கள் பற்றி பேசுகிறோமா?

அதிகரித்து வரும் நோய்கள் பற்றியோ அதற்கான மருத்துவச் வசதிகள் மற்றும் செலவு குறித்தோ பேசுகிறோமா?

ஒருபக்கம் கடும் வறட்சி! குடிநீருக்கே மக்கள் அல்லல்படும் துயரமான சூழலில். காலிக் குடங்களுடன் ஆங்காங்கே தாய்மார்களின் போராட்டம் நடக்கிறதே! அதைப்பற்றி பேசுகிறோமா?

பருவம் தவறி பெய்த மழையால் வடஇந்திய மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து பேசுகிறோமா?

பெரும் கடன் சுமையில் சிக்கி மீளமுடியாமல் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி பேசுகிறோமா?

பருவ காலத்தில்கூட மழை பொய்த்து விடுகிறது. ஆனால் தமிழக வீதிகளில் எப்பொழுதும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் சாராயம் பற்றியோ, இந்தச் சாராயத்தால் அன்றாடம் தாய்மார்களின் தாலி அறுக்கப்படுவது பற்றியோ பேசுகிறோமா?

வாழ்வாதாரத்திக்காகப் போராடும் மக்கள் மீது ஏவப்படும் காவல்துறையின் அடக்குமுறைகள் பற்றி பேசுகிறோமா? 

இப்படி மக்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகள் பற்றி பேசாமல்..........

கோட்சே பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்

பகவத் கீதையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்

சமஸ்கிருதம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்

மாட்டிறைச்சி பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
.
கிருஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

மசூதிகள் ஆன்மீகத் தலங்கள் இல்லை என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்துப் பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

தாலி பற்றியும் பூணூல் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மக்களின் நலன் புறம்தள்ளப்பட்டு பார்ப்பனர்களின் நலனை மட்டும் முன்னெடுக்கும் தற்போதைய இந்துத்துவவாதிகளின் ஆட்சி தொடருகிறவரை நாம் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்போம்!

Tuesday, 21 April 2015

அதானிக்கும் கும்பிடு! அகோரிக்கும் கும்பிடு!

அங்கே அதானிக்கு கும்பிடு போட்டவர் கோட்டையைப் பிடித்தார். 

இங்கே அகோரிக்கு கும்பிடு போடுபவர் எதைப் பிடிக்கப் போகிறாரோ!



பேஷ்! பேஷ்!! நன்னாயிருக்கு இந்தியாவின் பெருமையும் பாரம்பரியமும்!

Saturday, 18 April 2015

அடுத்த ஒலிம்பிக்ஸில் உசேன் போல்ட்டுக்கு ஆப்பு!

ஒரு பக்கம் 10 இலட்ச ரூபாயில் கோட்டு அணிந்து இந்தியாவின் செல்வச் செழிப்பை உலகெங்கும் பறைசாற்றும் இந்தியர்களின் வழிகாட்டி. 
மறுபக்கம் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் “இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்வியல் முறை” என நம் பாரதப் பெருமையை நிலைநாட்டும் இந்துக்களின் வழிகாட்டிகள். 


பெண்கள் கண்ணிமாக உடையணிய வேண்டும்  என ஒரு பக்கம் உபதேசம்.
கண்ணியமாக உடையணிந்துள்ள பெண்கள் முன்னிலையில் அம்மணமாய் அருள்பாலிக்கும் ஆன்மீக ஆண்கள் மறுபக்கம். 


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை கோப்பை கிடைக்காவிட்டால் என்ன? அடுத்த ஒலிம்பிக்ஸில் ”உசேன் போல்ட்டுக்கு ஆப்பு! அம்மண ஓட்டத்தில் நமக்கே தங்கம்!” என ஆர்ப்பரிக்கும் அகோரிகள்.



இதுதான் புனிதம் என்பதோ!