Friday, 23 October 2020

எனக்குக் கோவிட்-19 இருக்குமோ?

மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து உலகையே முடக்கிய கரோனாவால் நானும் முடங்கிப் போனேன். அகவை 62 ஐக் கடந்துவிட்ட நிலையில் சர்க்கரைக்கு ஆட்படவில்லை என்றாலும் இதயம், சிறுநீர் கழித்தல், தைராய்டு பிரச்சனைகள் இருப்பதால்  கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளி, முகக் கவசம், அடிக்கடி சோப்புப் போட்டுக் கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை சரியாகவேக் கடைபிடித்து வந்தேன். கடைவீதிக்குச் செல்லும் பொழுது சில நபர்களுடன் முகக்கவசத்திற்கும், சமூக இடைவெளிக்கும் மல்லுக் கட்ட வேண்டியிருந்தது. "என்ன உயிருக்குப் பயமா?" என முறைத்தவர்களும் உண்டு. அவ்வப்பொழுது ஆர்சனிகம் ஆல்பமும், இஞ்சி-சுக்கு-டீயும், ஆவி பிடித்தலும், சில வேலைகள் ஆங்கில மாத்திரைகளும் எடுத்துக்கொள்வது இயல்பாய் மாறின. சும்மாவா பின்னே! உயிர் வாழ்வது ஒரு முறைதானே!

இடைப்பட்டக் காலத்தில் நெருங்கிய உறவினர்களின் திருமணங்கள், நேசித்த உறவுகளின் மரணங்கள் நிகழ்ந்தபோதும் நேரில் செல்லவியலாத நிலைக்குத் தள்ளப்பட்டது நான் மட்டுமல்ல நீங்களும்தான். நிலைமையைப் புரிந்து கொள்ளாதவர்களிடையே உறவுகளும் நட்புகளும்கூட முறிந்து போய் இருக்கலாம். முறிவுகள் முடிவுக்கு வர சில காலங்கள்கூட ஆகலாம். காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் சில நேரங்களில் உயிருக்கும் மேலான பிரச்சனைகள் சிலருக்கு மேலெழக்கூடும். அந்த வகையில் இந்த மாதத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் 'வேன்' மற்றும் மகிழுந்துகளில் வெளியூர் பயணங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ளூர் பயணங்களை நான் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய நபர்கள் மற்றும் புதியச் சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.  பழைய ஒழுங்கே நமக்கு எட்டிக்காயாய் இருக்கும்பொழுது புதிய ஒழுங்கு மட்டும் கட்டுக்குள் வந்து விடுமா என்ன? ஆதங்கத்தை உள்அமுக்கிக் கொண்டுதான் சிலரோடு பழகவும் பேசவும் நேர்கிறது.

கோப்புப் படம் (நானல்ல)

சளித்தொல்லை எனக்கு இயல்பானதுதான் என்றாலும் இந்த ஒரு மாதத்தில் சற்றே கூடுதல் ஆனதால் 'சுவாப்' சோதனை எடுத்துக் கொள்ளச் சென்ற மாதமே மருத்துவர்கள் பரிந்துரைத்தும்,  முக்கிய வேலைகள் காரணமாகத் தள்ளிப் போட்டேன். நாட்கள் ஓடின. சளியும் குறைந்த பாடில்லை. கோவிட்-19 க்கான வேறு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் தள்ளிப்போடுவது சிலநேரங்களில்  தலைப்பாகைக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் 22.10.2020 அன்று வாலாசாப்பேட்டையில் உள்ள இராணிப்பேட்டை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சளி மாதிரிகளைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அரசு மருத்துவமனை என்றாலே எப்படி இருக்குமோ என்ற அச்சம் உள்ளூர நமக்கு இருக்கம்தானே? வாலாசாப்பேட்டை அரசு மருத்துவமனையில் செயல்படும் கோவிட்-19 பரிசோதனை மையம் பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்தாலும், சோதனை மாதிரிகள் எடுக்கின்ற இடத்தின் சுத்தம், பாதி அச்சத்தைப் போக்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் நேர்த்தியான சேவை மீதி அச்சத்தையும் போக்கி விட்டது. கோவிட்-19 பரிசோதனைக்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை நேரடியாக உணர்ந்து கொண்டேன்.

வீட்டுக்கு வந்தேன். முடிவு வரும்வரை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்று குறுஞ்செய்தி வந்தது. ஏற்கனவே சில நாட்களாக இருந்த மூச்சிரைப்பு 'கோவிட்டி'னால் இருக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டது. ஆனால் 'சுவாப்' எடுத்த போது, HR-106/mt, SPO2-99%  இருந்ததால் அச்சம் என்கிற மடமையை மட்டுப்படுத்தியது.  ஒரு வேளை எனக்கு 'பாசிட்டிவ்' என வந்து விட்டால், வீட்டில் உள்ளவர்களையும் அள்ளிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் துரத்த, நான் தனிமரமாய் வீட்டில். 'பாஸிட்டிவ்' ஆனாலும் அதற்கும் தயாராகிக் கொண்டேன். 

இன்று (23.10.2020) மாலை குறுஞ்செய்தியில் முடிவு வந்தது 'நெகட்டிவ்' என்று. நிம்மதிப் பெருமூச்சு! பைசா செலவு இன்றி!

பொன்.சேகர்

தொடர்புடைய பதிவுகள்


Wednesday, 21 October 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்? பகுதி - 2

இராணிப்பேட்டை ஏன் வாழத் தகுதியற்ற இடமாக மாறிப்போனது; இதற்கு யார் காரணம் என்பது குறித்து வரும் தொடர்களில் எழுதவிருக்கிறேன்.

இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர் உள்ளிட்டப் பகுதிகளில் செயல்படும் ஆலைகளின் மாசுக்கட்டுப்பாட்டைக் கண்காணிப்பதற்காக செயல்படும் வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதாக புகார் வந்ததையொட்டி  13.10.2020 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.3.25 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான 90 அசையாச் சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு சாதாரண பொறியாளராக உள்ளவர் இவ்வளவு சொத்துக்களை எப்படி சேர்க்க முடிந்தது?

மல்லாடி, திருமலை கெமிகல்ஸ், அல்ட்ரா மரைன் உள்ளிட்ட கொடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் 16 சிவப்பு வகை ஆலைகள் (red catagory industries), 176 ஆரஞ்சு மற்றும் பச்சை வகை ஆலைகள் இராணிப்பேட்டையில் செயல்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் விதிகளை இந்த ஆலைகள் முறையாக கடைபிடிக்கின்றனவா என்பதை சோதித்தறிந்து அதைக் கட்டுப்படுத்துகின்ற வேலைகளை வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்தான் மேற்கொண்டு வருகின்றனர். 

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் புளியங்கண்ணு ஏரிக்குள் திறந்துவிட்டதையொட்டி பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. அதன் பிறகு திருமலை கெமிக்கல்ஸ் உள்ளிட்ட ஆலைகளில் பெங்களூரு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு ரூ.6.88 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. 

வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு  இங்குள்ள ஆலை முதலாளிகள் தொடர்ந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றி வருவதனால்தான் உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இராணிப்பேட்டையும் இடம் பிடித்துள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் இனி இராணிப்பேட்டையில் வாழ முடியாது என்ற அளவுக்கு நமது மண்ணும் நீரும் காற்றும் மாசடைந்து விட்டது. இந்த சீர்கேட்டுக்கு காரணமானவர்கள் ஆலை முதலாளிகள் மட்டுமல்ல அவர்களுக்கு துணை போகும் பன்னீர்செல்வம் போன்ற அதிகாரிகளும்தான்.

எனவே, சுற்றுச்சூழலை நாசமாக்கிய ஆலைகள் அனைத்தையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும்.  பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வாலாஜா மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் 20.10.2020 அன்று காலை 10.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து வாலாஜா மேற்கு ஒன்றியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் புளியங்காண்ணு டி.ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இழுத்து மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


போராட்டக் களத்திலிருந்து

பொன்.சேகர், வழக்குரைஞர்



Wednesday, 14 October 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்?

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்கிற பட்டிமன்றம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இலஞ்ச ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

இராணிப்பேட்டை நகரம் உலகச் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் பத்தாவது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 


இவை எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகளை அல்ல. பல்வேறு ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட செய்திகள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை உறுதிசெய்கின்றன. நல்லவற்றில் நாம் முதலிடத்தைப் பிடிக்க முடியாதா என்கிற ஏக்கம் மட்டும்தான் நம்மிடம் மிஞ்சியிருக்கிறது. 

தவறுகளுக்கு எதிரான விடாப்பிடியான போராட்டத்தை நடத்தும் போது மட்டுமே குறைந்த பட்சம் நல்லவற்றின் பட்டியலில் நாம் ஓர் இடத்தையாவது பெற முடியும். தற்காலிக வெற்றி என்றாலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்கள் இதை நிலைநாட்டி இருக்கிறார்கள். 

போராட வேண்டும் என்றால் தரவுகள் வேண்டும். தரவுகள் இருந்தாலும் மக்களை நெஞ்சுரம் மிக்கவர்களாக மாற்றுகின்ற ஆற்றலுள்ள அமைப்புகளும், விலை போகாத தலைவர்களும் வேண்டும். அவர்களை மக்கள்தான் அடையாளம் காண வேண்டும்.

வேலூர் மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர்,  இலஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இராணிப்பேட்டையில் செயல்படும் நூற்றுக்கணக்கான ஆலைகளின் சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்து, சுற்றுச்சூழலைக் காப்பதற்கான பொறுப்பு வேலூர் மண்டல அதிகாரியிடம்தான் இருக்கிறது. இராணிப்பேட்டை ஆலைகளின் சுற்றுச்சூழல் குறித்து இந்தத் தொடரில் சற்று விரிவாக எழுதவிருக்கிறேன். 

வேலூர் சுற்றுச்சூழல் அதிகாரியின் லஞ்ச ஊழல் முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் கீழ்கண்ட இணைப்புகளில் உள்ளன.

1. விகடனில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.vikatan.com/amp/story/news%252Fcrime%252Fvellore-government-official-arrested-over-bribery&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjACegQIChAB&usg=AOvVaw2JMDVnUY1zqAVHgd0Xgae3&ampcf=1

2.தினமணியில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.dinamani.com/tamilnadu/2020/oct/14/environmental-associate-chief-engineer-house-rs-33-lakh-confiscated-3484791.amp&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjAAegQIAxAC&usg=AOvVaw2b2VLnxtlz6tzmQiOjuE93&ampcf=1

தொடரும்...


பொன்.சேகர்
வழக்குரைஞர்


Sunday, 27 September 2020

காசு, பணம், துட்டு!

 பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி தேவையா?

"......... நிரந்தரமான நிதியைத் திரட்டி, அந்த நிதியைக் கொண்டு சொத்துக்களை வாங்கி,  அச்சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்து வருமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ...... சொத்தை நிர்வகிப்பதற்குச் செல்வாக்கு உள்ளவர்களைக் கொண்ட தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம். ஆனால், அது இடைவிடாத சச்சரவுக்கு இடமாகி விட்டது. இதன் காரணமாக இப்பொழுது அச் சொத்தின் வாடகைப் பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தகராறு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று எனக்கு இருந்த கருத்து மாறி விட்டது. .....  'நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்கள் நடத்துவது நல்லது அல்ல' என்பதே இப்போது என்னுடைய திடமான கருத்தாகி விட்டது.

நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்தில் இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும்  அந்நிதியுடன் ஊன்றப் பட்டு விடுகிறது.

பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில், அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்பிராயத்திற்கு மாறுபட்டக் காரியங்களையும், அடிக்கடி செய்கின்றன. நம் நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். மத சம்பந்தமான தர்ம ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் சில ஸ்தாபனங்கள் கணக்குக் காட்டுவது என்பதையே விட்டு விட்டன. தர்மகர்த்தாக்களே, அச்சொத்துக்களுக்கு பொறுப்பாளிகள் அல்ல. 'இயற்கையைப் போல அன்றைக்குத் தேவையானதைப் பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது' என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பொதுஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்துவரும் உரிமையே இல்லை .வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத் தொகை, அதன் செல்வாக்குக்கும், அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து"

இதைச் சொன்னவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  இந்தக் கருத்து சரிதானா? உங்கள் கருத்து என்ன?

ஊரான்

Monday, 10 August 2020

பட்டா பெயர் மாற்றம்! சர்வேயர்கள் காட்டில் பண மழை!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஹுகான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவி இந்த அகிலத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மார்ச் மாதத்திலேயே முதல் கரோனாத் தொற்று கண்டறியப்பட்ட போதும் அதைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மணியடிப்பது, விளக்கு பிடிப்பது, அப்பளம்-கோமியம்- மந்திரம் உள்ளிட்ட கோமாளித்தனமான கூத்துக்களை அரங்கேற்றினார்கள். இதனால் 30 ஆம் இடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியதுதான் மிச்சம்.  ஆனால் தொற்று தொடங்கியபோது முதலிடத்தில் இருந்த சீனா முப்பதாவது இடத்திற்கு சென்றுவிட்டது. 

ஆறாவது மாதமாக பொது முடக்கும் தொடர்வதால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஏழை எளிய மக்கள் பட்டினிச்சாவுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கடும் வேதனையில் இருக்கும் மக்கள் மூச்சுக்கூட விடாமல் திணறிக் கொண்டிருக்கும் பொழுது மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். "வேளாண் விலை பொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம்" மற்றும் " பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம்" கொண்டு வந்து சிறு-குறு விவசாயிகளை ஒட்டச் சுரண்டவும், பதுக்கல்காரர்கள் கொள்ளையடிக்கவும் வழி செய்துள்ளார்கள். "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020" என்ற திட்டத்தின் மூலம் காடு, மலைகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க முன் வந்துள்ளார்கள்.

சாத்தான் குளம் நம் கண் முன்னே நிற்கும் போதே காவல்துறையினரையே நீதிபதிகளாக்கும் வகையில் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வரவிருகிறார்கள். "தேசியக் கல்விக் கொள்கை" என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையை முளையிலேயேக் கிள்ளி எறிய எத்தனிக்கிறார்கள்.

நாடும், மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; தங்களின் பணப் பைகள் நிறைந்தால் போதும் என்ற வெறியோடு அரசு அதிகாரிகள் அலைகின்றனர். "இ- பாஸ்"  முறையில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை உயர் நீதிமன்றமே எள்ளி நகையாடுகிறது. 

சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒரு வீட்டு மனை வாங்கினால், அதற்குப் பட்டா மாற்றம் பெற முடியவில்லை. குடும்பச் சொத்தைப் பாகப்பிரிவினை செய்தாலும்  உரியவர்களுக்கு  முறையாகப் பட்டா கிடைப்பதில்லை. சர்வேயர்களுக்குப் பணம் லஞ்சமாகக் கை மாறினல் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் நடக்கிறது. குறிப்பாக இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் காட்டில் பணம் அடை மழையாகப் பொழிகிறது. பணம் தரவில்லை என்றால் பட்டா பெறுவதற்கு நில அளவை கோரி விண்ணப்பித்தால் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கிறார்கள்.

சர்வேயர்களை நாம் நேரடியாக சந்திக்கவே முடியாது. எங்கும் புரோக்கர்களே  நிறைந்திருக்கிறார்கள். அதிலும் இதில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப்  பறக்கிறது. 

சர்வேயரைச் சந்திக்கச் சென்றால் நகராட்சி சர்வேயர் அலுவலகம் எப்பொழுதும் பூட்டியேக் கிடக்கிறது.

              

                    ஜெ.அசேன் உரை

தண்டோராப் போராட்டம்

லஞ்சம் வாங்கும் வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 'பிரண்ட்ஸ் ஆப் போலீசை' ஒழித்தது போல, புரோக்கர்களாக செயல்படும் 'பிரண்ட்ஸ் ஆப் சர்வேயர்களை' ஒழிக்கக் கோரியும், பட்டா கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக நில அளவை செய்து பட்டா வழங்கக் கோரியும் 10.08.2020, திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் வாலாசாப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக வாலாஜாவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள "நீதிக்கான குரல்"  என்ற  அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் "தண்டோராப் போராட்டம்" மிக எழுச்சியோடு நடைபெற்றது.

திரு K.K.ரவி, திரு P.மதன், திரு.D.ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்குரைஞர் பொன்.சேகர் அவர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார். சர்வேயர்களின் ஊழல் முறைகேடுகள் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக திரு.ஜானகிராமன் அவர்கள் நன்றி கூறினார்.

                  பொன்.சேகர் உரை

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த தண்டோரா ஒலி அரசு அதிகாரிகளின் செவிகளை எட்டியிருக்கும். 

போராட்டம் முடிந்த பிறகு பட்டா வழங்குவதில் உள்ள முறைகேடுகளைக் களையக் கோரி மாவட்ட ஆட்சியர், இராணிப்பேட்டை கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வாலாஜா வட்டாட்சியர், வாலாஜா நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. 

வாலாஜாவில் தொடங்கிய இந்த  நீதிக்கான குரல் இராணிப்பேட்டை மாவட்டம் முழுதும் ஓங்கி ஒலிக்கட்டும். 

செய்தித் தொகுப்பு

பொன்.சேகர்

வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் மனு


புகார் மனு

நீதிக்கான குரல்

வாலாசாப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டம்

தேதி: 10.08.2020

வாலாஜாபேட்டை

பெறுநர்


உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் 

இராணிப்பேட்டை மாவட்டம் 


அன்புடையீர் வணக்கம்,


பொருள்: வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா அலுவலக சர்வேயர்களின் நடவடிக்கைகள் குறித்து 


தமிழகத்தின் முதல் நகராட்சியும் பழம்பெரும் நகரமுமான வாலாஜா நகராட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அலையவிடும் வகையிலும் நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் நடந்து கொள்வதாக பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன


உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த போதும், நில அளவை செய்து பட்டா வழங்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றது. சர்வேயர் அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடப்பதால் சர்வேயர்களை பொதுமக்கள் அணுக முடியாத சூழலே எப்பொழுதும் நிலவுகிறது. இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே அவர்களை சந்திக்க முடியும் என்ற நிலைதான் உள்ளது விதிகள் எல்லாம் புறம் தள்ளப்பட்டு பணம் லஞ்சமாகக் கை மாறினால் மட்டுமே வேலைகள் நடைபெறுகின்றன. இல்லை என்றால் கோரிக்கைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 

உதாரணத்திற்கு,

1. வாலாஜா நகராட்சி, அம்பேத்கர் நகர், வார்டு 2, பிளாக் 30, டவுன் சர்வே நம்பர் 2109 ல் உள்ள இடத்தை சர்வே செய்வதற்கு பாண்டியன் என்பவர் 25.02.2019  அன்றுநகராட்சி அலுவலகத்தில் ரூபாய் 270 பணம் செலுத்தி உள்ளார். (இரசீது எண் 36/ WL2/18-19/0011115). அதன்பிறகு வாலாஜா நகராட்சியில் 21.05.2020 அன்று  ரூபாய் 120 பணம் செலுத்தி உள்ளார். ( இரசீது எண் 036/WL2/1/20-21/0000060). ஒன்றறை ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை வீட்டுமனையை சர்வே செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

2. வாலாஜா தாலுக்கா, அம்மன ந்தாங்கல் பஞ்சாயத்து சர்வே எண் 58/2 ல் அடங்கல் மனை எண் 1 ஐ சர்வே செய்ய சுந்தர் என்பவர் மனு செய்து 23.01.2020 அன்று ரூபாய் 80 பணம் செலுத்தி உள்ளார். ஆறு மாத காலம் ஆகியும் இதுவரை சர்வே செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

3. வாலாஜா தாலுக்கா, வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட தேவதானம் ரோடு, ரஜிவ் காந்தி நகர், சர்வே எண் 12/7 ல் (one scheme patta) அரசு ஆவணங்களில் மாற்றங்கள் கோரி 30.11.2015 முதல் பல முறை மனு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட 107 பேரில் அரசு ஆவணங்களில் மாற்றங்கள் எதையும் செய்யாமலேயே ஒரு சிலருக்கு மட்டும் போலி பட்டா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவை சில உதாரணங்கள்தான். விதிமுறைப்படி சர்வேயர்கள் செயல்பட்டு பட்டாவை முறைப்படுத்தாததால் பல குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று அல்லல் பட்டு வரும் அவலம் தொடர்கிறது.

எனவே, இது போன்ற கோரிக்கைகள், புகார்கள் மீது உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்து நீதி தர்மத்தை நிலைநாட்டக் கோரி தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு 


(வாலாஜா  ஜெ.அசேன்)

நீதிக்கான குரல்

வாலாசாப்பேட்டை

முழக்கங்கள்

சர்வேயர்களின் ஊழலைக் கண்டித்து

வாலாஜாவில்

தண்டோராப் போராட்டம்

முழக்கங்கள்


பட்டா மாற்றம் செய்வதற்கு 

பகல் கொள்ளை அடிக்கிறான் 

நில அளவைத் துறையிலே

லஞ்சப் பணம் குவியுது


தமிழக அரசே தமிழக அரசே 

மாவட்ட நிர்வாகமே 

பிரண்ட்ஸ் ஆப் போலீஸை ஒழித்தது போல 

பிரண்ட்ஸ் ஆப் சர்வேயர்களை ஒழித்திடு

இடைத்தரகர்களை ஒழித்திடு


பூட்டிக்கிடக்குது பூட்டிக்கிடக்குது

எப்போதுமே பூட்டிக்கிடக்குது 

சர்வேயர் ஆபீஸ் பூட்டிக்கிடக்குது

திறந்து வை திறந்து வை 

சர்வீஸ் ஆபீஸைத் திறந்து வை 

பொதுமக்கள் அணுகுவதற்கேற்ப

சர்வையர் ஆபீஸைத் திறந்து வை


தடுத்திடு தடுத்திடு

ரிட்டையர் ஆன அதிகாரிகள் 

பட்டா வழங்கும் வேளைகளில் 

தலையிடுவதைத் தடுத்திடு


புறம்போக்கு நிலம் என்ன

உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா

கையூட்டு கிடைத்து விட்டால் 

பட்டா செய்து கொடுப்பதற்கு?


தாலுக்கா அலுவலகமா

புரோக்கர்களின் கூடாரமா

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

வெளிப்படைத் தன்மைக்காக 

உடனடியாக நடவடிக்கை எடு


பறிபோகுது பறிபோகுது 

புறம்போக்கு நிலமெல்லாம் 

பறிபோகுது பறிபோகுது

அரசு நிலத்தை விற்பதற்கு 

சர்வேயர் என்ன வாலாஜா நவாப்பா?


நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

புறம்போக்கு நிலத்தையெல்லாம் 

சூறையாடும் சர்வேயர்கள் மீது 

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

மாவட்ட நிர்வாகமே 

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு


சுல்தானே சொத்துக்கழும்போது 

சுல்தான் குதிரை குலாப்ஜாமுனுக்கழுததாம் 

கரோனாவிலே நாம் தவிக்கும்போது 

சர்வேயர்கள் நம்மைச் சுரண்டுவது நியாயமா?


இவண்

நீதிக்கான குரல் 

வாலாசாப்பேட்டை 

இராணிப்பேட்டை மாவட்டம்

10.08.2020

ஊடகங்களில்

இந்து தமிழ் 11.08.2020


  PRD தங்கம் online TV

தொடர்புடைய பதிவுகள்