Saturday, 21 November 2020

வெள்ளையனை நடுங்க வைத்த மைசூர் புலி!

ஆற்காட்டு நவாப், ஹைதராபாத் நிஜாம், புதுக்கோட்டை தொண்டைமான், திருவிதாங்கூர் சமஸ்தானம், மராட்டிய பேஷ்வாக்கள் என பலரும் மண்டியிட்டு அண்டிப் பிழைத்த போது வெள்ளையனை எதிர்த்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமரசமின்றி போராடிய ஒரு மாவீரன். 

'மராத்தியர்கள் அல்ல நம் எதிரி, நிஜாமும் கூட அல்ல நமது எதிரி, இந்த மண் எவ்வளவு எனக்கு உரியதோ அதே அளவு அவர்களும் இதன் உரிமையாளர்களே. இந்த மண்ணுக்கு உறவற்ற பிரிட்டிஷ்காரர்களே நமது பொது எதிரி' என எதிரியை அடையாளம் காட்டியவன். 

உருது, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவன். 'சீனம் சென்றேனும் ஞானம் தேடு' என்பதற்கிணங்க, நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம், அரண்மனையில் பெரிய நூலகம் என அறிவுப் பசிக்கு வித்திட்டவன்.

தனது காதலி ஒரு சாதாரண படைவீரனின் மகள் என்று கருதாமல் தான் காதலித்த பெண்ணையே மணம் புரிந்து காதலுக்கும் மகுடம் சூட்டியவன்.

பெண்கள் மேலாடை உடுத்தக் கூடாது என்கிற நடைமுறையை ஒழித்துக்கட்டியவன்.

'ஏன் இந்துக்களையும் சமமாக பாவிக்கிறாய்? இஸ்லாமை வளர்ப்பது உன் கடமை அல்லவா?' எனக் கேட்டபோது 'நான் என் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறேன்',  நீங்கள், 'நான் என் மதத்தைச் சார்ந்த மக்களைக் காக்க வேண்டும் என்கிறீர்கள். இந்த மண் என்னுடையதல்ல, அவர்களுடையது. எனது வலிமை பெரியதா? மக்கள் ஒற்றுமை பெரியதா? ஒரு பிரிவினருக்கு அன்பு, மறு பிரிவினருக்கு கடுமை என்பது எப்படி நல்ல முடிவை எட்ட உதவும்? அவர்களை பதவியில் வைத்திருப்பது இராஜதந்திரம் என்றல்ல. அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்பதாலேயே. நான் இந்து கோவில்களுக்கு தாராளமாக உதவுவது  சமநிலை பேணும் ராஜதந்திரம் அல்ல. அவர்கள் பெரும்பான்மையினர். அவர்களுக்கு நான் அரசன். அதற்கு மேல் நானும் அவர்களும் இந்தியர்கள்' என மதமாச்சரியம் பார்க்க கூடாது என்பதை உணர்ந்தவன்.

உயர் பதவிகளில் தனது அரசின் முதலமைச்சராகவும் அந்தரங்கச் செயலாளராகவும் பார்ப்பனர்களையே அமர்த்தி தான் சாதி மதம் பார்க்காதவன் என்பதை நிலைநாட்டியவன்.

சட்டத்திற்குப் புறம்பாக எந்த மனிதனும் தண்டிக்கப்படக்கூடாது என அறிவித்தவன். மரண தண்டனையை ஏற்க மறுத்தவன்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவன். மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்தவன். இளைஞர்களின் நன்னடத்தையும் எதிர்காலமும் மது ஒழிப்புடன் இணைந்தது. மது ஒழிப்புடன் மக்கள் நல வாழ்வும் சமூகப் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டவன். மூடப்பட்ட சாராய ஆலைகளுக்கு இழப்பீடு இல்லை என்று அறிவித்தவன்.

வேளாண்மையையும் தொழில்துறையையும் வளர்ப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தவன்.

விவசாயிகளின் மேம்பாட்டிற்காக வருவாய்ச் சட்டங்களைத் திருத்தியவன். விவசாயி தவறு செய்தால் அதற்கு அபராதமாக பழ மரங்களை வளர்க்கச் சொன்னவன். 

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு அடிக்கல் நாட்டியவன். 'வானம் உள்ளவரை, பசி உள்ளவரை விவசாயிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உணவளிப்பவர்கள்' என்று அறிவித்தவன்.

மதத்தால், ஜாதியால், இனத்தால் ஒருவரை இழிவுபடுத்தி வேறுபாடு வளர்த்தால் அது சட்டத்திற்கு எதிரானது, தண்டனைக்குரியது என அறிவித்து சாதி மத வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தவன்.

தொழில் வணிக முனைவோரை ஊக்குவித்தவன். பன்னாட்டுப் பொருள் விற்பனைக்கான அரசு விற்பனை மையங்களை ஏற்படுத்தியவன்.

வெடி மருந்து தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் காவிரியில் கலந்து மீன்கள் சாவதைக் கண்டு அந்தத் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக நின்றவன்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை அளிப்பதற்காகவே சாலையை செப்பனிடுதல், மரம் வளர்த்தல், ஓய்வு இல்லங்கள் கட்டுதல் எனப் பல்வேறு பணிகளை உருவாக்கி வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்தியவன்.

அரசு ஆடம்பரங்களை, வீண் செலவுகளை முற்றாகக் கட்டுப்படுத்தியவன். கட்டில் மெத்தையைத் துரந்து பாயில் படுத்து உறங்கியவன். ஆடம்பர உடைகளைத் துறந்து போர் வீரனைப் போல வாழ்ந்தவன். அதிகாரிகள் மக்களிடம் வரி வசூலிப்பதில் கடுமை காட்டக் கூடாது என உத்தரவிட்டவன். 

போரின் இறுதிக்கட்டத்தில் தப்பித்து உயிர் வாழ வேண்டும் என மந்திரிகள் ஆலோசனை கூறிய போது, 

'உயிர் உன்னதமானது. ஏனெனில் நாம் அதை ஒரு உன்னத இலட்சியத்திற்காக தியாகம் செய்ய வேண்டும். நம் பெருமைக்குரிய மண்ணை அடிமைப்படுத்த ஒரு கொடிய எதிரி வருகிறான் எனும் போது அதை எதிர்த்து நின்று மரணத்தைத் தழுவுகிறவர்கள் மரணத்தின் பின்னும் வாழ்கிறார்கள். நாடு அவர்களை என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும்' என்ற இலக்கணத்திற்கு ஏற்ப போரில் வீரமரணம் அடைந்தாலும் இன்றும் நம் நினைவில் வாழ்பவன்.

போர் என்பது வெற்றி தோல்வி அல்ல அது வீரத்தின் களம் என்று காட்டியவன்.

இப்படி நீள்கிறது அவனது வாழ்க்கைக் கதை. அவன் மன்னனாக வாழ்ந்திருந்தாலும் ஒரு நவ கால சிற்பியாகக் காட்சியளிக்கிறான். இவனைப் படிக்கப் படிக்க இப்படி ஒருவன் நமக்குக் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கத்தை உருவாக்குகிறான். ஆனால் காவிக் கூட்டமோ இவனைப் படிக்கக் கூடாது என தடை விதிக்கிறது. தடைகளைத் தாண்டி அவன் பலரது நெஞ்சங்களில் ஊடுருவிக் கொண்டுதான் இருக்கிறான். 

வீரத்தின் விளைநிலம், மைசூர் புலி திப்பு சுல்தான் பிறந்தநாள் - நவம்பர் 20 - நினைவாக....

நெகிழ்ச்சியுடன்

ஊரான்

ஆதாரம்: திப்புவின் வாள் நூலிலிருந்து. நூலைக் கொடுத்து உதவிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்களுக்கு நன்றி.




Friday, 23 October 2020

எனக்குக் கோவிட்-19 இருக்குமோ?

மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து உலகையே முடக்கிய கரோனாவால் நானும் முடங்கிப் போனேன். அகவை 62 ஐக் கடந்துவிட்ட நிலையில் சர்க்கரைக்கு ஆட்படவில்லை என்றாலும் இதயம், சிறுநீர் கழித்தல், தைராய்டு பிரச்சனைகள் இருப்பதால்  கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளி, முகக் கவசம், அடிக்கடி சோப்புப் போட்டுக் கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை சரியாகவேக் கடைபிடித்து வந்தேன். கடைவீதிக்குச் செல்லும் பொழுது சில நபர்களுடன் முகக்கவசத்திற்கும், சமூக இடைவெளிக்கும் மல்லுக் கட்ட வேண்டியிருந்தது. "என்ன உயிருக்குப் பயமா?" என முறைத்தவர்களும் உண்டு. அவ்வப்பொழுது ஆர்சனிகம் ஆல்பமும், இஞ்சி-சுக்கு-டீயும், ஆவி பிடித்தலும், சில வேலைகள் ஆங்கில மாத்திரைகளும் எடுத்துக்கொள்வது இயல்பாய் மாறின. சும்மாவா பின்னே! உயிர் வாழ்வது ஒரு முறைதானே!

இடைப்பட்டக் காலத்தில் நெருங்கிய உறவினர்களின் திருமணங்கள், நேசித்த உறவுகளின் மரணங்கள் நிகழ்ந்தபோதும் நேரில் செல்லவியலாத நிலைக்குத் தள்ளப்பட்டது நான் மட்டுமல்ல நீங்களும்தான். நிலைமையைப் புரிந்து கொள்ளாதவர்களிடையே உறவுகளும் நட்புகளும்கூட முறிந்து போய் இருக்கலாம். முறிவுகள் முடிவுக்கு வர சில காலங்கள்கூட ஆகலாம். காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் சில நேரங்களில் உயிருக்கும் மேலான பிரச்சனைகள் சிலருக்கு மேலெழக்கூடும். அந்த வகையில் இந்த மாதத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் 'வேன்' மற்றும் மகிழுந்துகளில் வெளியூர் பயணங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ளூர் பயணங்களை நான் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய நபர்கள் மற்றும் புதியச் சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.  பழைய ஒழுங்கே நமக்கு எட்டிக்காயாய் இருக்கும்பொழுது புதிய ஒழுங்கு மட்டும் கட்டுக்குள் வந்து விடுமா என்ன? ஆதங்கத்தை உள்அமுக்கிக் கொண்டுதான் சிலரோடு பழகவும் பேசவும் நேர்கிறது.

கோப்புப் படம் (நானல்ல)

சளித்தொல்லை எனக்கு இயல்பானதுதான் என்றாலும் இந்த ஒரு மாதத்தில் சற்றே கூடுதல் ஆனதால் 'சுவாப்' சோதனை எடுத்துக் கொள்ளச் சென்ற மாதமே மருத்துவர்கள் பரிந்துரைத்தும்,  முக்கிய வேலைகள் காரணமாகத் தள்ளிப் போட்டேன். நாட்கள் ஓடின. சளியும் குறைந்த பாடில்லை. கோவிட்-19 க்கான வேறு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் தள்ளிப்போடுவது சிலநேரங்களில்  தலைப்பாகைக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் 22.10.2020 அன்று வாலாசாப்பேட்டையில் உள்ள இராணிப்பேட்டை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சளி மாதிரிகளைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அரசு மருத்துவமனை என்றாலே எப்படி இருக்குமோ என்ற அச்சம் உள்ளூர நமக்கு இருக்கம்தானே? வாலாசாப்பேட்டை அரசு மருத்துவமனையில் செயல்படும் கோவிட்-19 பரிசோதனை மையம் பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்தாலும், சோதனை மாதிரிகள் எடுக்கின்ற இடத்தின் சுத்தம், பாதி அச்சத்தைப் போக்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் நேர்த்தியான சேவை மீதி அச்சத்தையும் போக்கி விட்டது. கோவிட்-19 பரிசோதனைக்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை நேரடியாக உணர்ந்து கொண்டேன்.

வீட்டுக்கு வந்தேன். முடிவு வரும்வரை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்று குறுஞ்செய்தி வந்தது. ஏற்கனவே சில நாட்களாக இருந்த மூச்சிரைப்பு 'கோவிட்டி'னால் இருக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டது. ஆனால் 'சுவாப்' எடுத்த போது, HR-106/mt, SPO2-99%  இருந்ததால் அச்சம் என்கிற மடமையை மட்டுப்படுத்தியது.  ஒரு வேளை எனக்கு 'பாசிட்டிவ்' என வந்து விட்டால், வீட்டில் உள்ளவர்களையும் அள்ளிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் துரத்த, நான் தனிமரமாய் வீட்டில். 'பாஸிட்டிவ்' ஆனாலும் அதற்கும் தயாராகிக் கொண்டேன். 

இன்று (23.10.2020) மாலை குறுஞ்செய்தியில் முடிவு வந்தது 'நெகட்டிவ்' என்று. நிம்மதிப் பெருமூச்சு! பைசா செலவு இன்றி!

பொன்.சேகர்

தொடர்புடைய பதிவுகள்


Wednesday, 21 October 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்? பகுதி - 2

இராணிப்பேட்டை ஏன் வாழத் தகுதியற்ற இடமாக மாறிப்போனது; இதற்கு யார் காரணம் என்பது குறித்து வரும் தொடர்களில் எழுதவிருக்கிறேன்.

இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர் உள்ளிட்டப் பகுதிகளில் செயல்படும் ஆலைகளின் மாசுக்கட்டுப்பாட்டைக் கண்காணிப்பதற்காக செயல்படும் வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதாக புகார் வந்ததையொட்டி  13.10.2020 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.3.25 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான 90 அசையாச் சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு சாதாரண பொறியாளராக உள்ளவர் இவ்வளவு சொத்துக்களை எப்படி சேர்க்க முடிந்தது?

மல்லாடி, திருமலை கெமிகல்ஸ், அல்ட்ரா மரைன் உள்ளிட்ட கொடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் 16 சிவப்பு வகை ஆலைகள் (red catagory industries), 176 ஆரஞ்சு மற்றும் பச்சை வகை ஆலைகள் இராணிப்பேட்டையில் செயல்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் விதிகளை இந்த ஆலைகள் முறையாக கடைபிடிக்கின்றனவா என்பதை சோதித்தறிந்து அதைக் கட்டுப்படுத்துகின்ற வேலைகளை வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்தான் மேற்கொண்டு வருகின்றனர். 

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் புளியங்கண்ணு ஏரிக்குள் திறந்துவிட்டதையொட்டி பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. அதன் பிறகு திருமலை கெமிக்கல்ஸ் உள்ளிட்ட ஆலைகளில் பெங்களூரு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு ரூ.6.88 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. 

வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு  இங்குள்ள ஆலை முதலாளிகள் தொடர்ந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றி வருவதனால்தான் உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இராணிப்பேட்டையும் இடம் பிடித்துள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் இனி இராணிப்பேட்டையில் வாழ முடியாது என்ற அளவுக்கு நமது மண்ணும் நீரும் காற்றும் மாசடைந்து விட்டது. இந்த சீர்கேட்டுக்கு காரணமானவர்கள் ஆலை முதலாளிகள் மட்டுமல்ல அவர்களுக்கு துணை போகும் பன்னீர்செல்வம் போன்ற அதிகாரிகளும்தான்.

எனவே, சுற்றுச்சூழலை நாசமாக்கிய ஆலைகள் அனைத்தையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும்.  பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வாலாஜா மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் 20.10.2020 அன்று காலை 10.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து வாலாஜா மேற்கு ஒன்றியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் புளியங்காண்ணு டி.ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இழுத்து மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


போராட்டக் களத்திலிருந்து

பொன்.சேகர், வழக்குரைஞர்



Wednesday, 14 October 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்?

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்கிற பட்டிமன்றம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இலஞ்ச ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

இராணிப்பேட்டை நகரம் உலகச் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் பத்தாவது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 


இவை எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகளை அல்ல. பல்வேறு ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட செய்திகள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை உறுதிசெய்கின்றன. நல்லவற்றில் நாம் முதலிடத்தைப் பிடிக்க முடியாதா என்கிற ஏக்கம் மட்டும்தான் நம்மிடம் மிஞ்சியிருக்கிறது. 

தவறுகளுக்கு எதிரான விடாப்பிடியான போராட்டத்தை நடத்தும் போது மட்டுமே குறைந்த பட்சம் நல்லவற்றின் பட்டியலில் நாம் ஓர் இடத்தையாவது பெற முடியும். தற்காலிக வெற்றி என்றாலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்கள் இதை நிலைநாட்டி இருக்கிறார்கள். 

போராட வேண்டும் என்றால் தரவுகள் வேண்டும். தரவுகள் இருந்தாலும் மக்களை நெஞ்சுரம் மிக்கவர்களாக மாற்றுகின்ற ஆற்றலுள்ள அமைப்புகளும், விலை போகாத தலைவர்களும் வேண்டும். அவர்களை மக்கள்தான் அடையாளம் காண வேண்டும்.

வேலூர் மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர்,  இலஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இராணிப்பேட்டையில் செயல்படும் நூற்றுக்கணக்கான ஆலைகளின் சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்து, சுற்றுச்சூழலைக் காப்பதற்கான பொறுப்பு வேலூர் மண்டல அதிகாரியிடம்தான் இருக்கிறது. இராணிப்பேட்டை ஆலைகளின் சுற்றுச்சூழல் குறித்து இந்தத் தொடரில் சற்று விரிவாக எழுதவிருக்கிறேன். 

வேலூர் சுற்றுச்சூழல் அதிகாரியின் லஞ்ச ஊழல் முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் கீழ்கண்ட இணைப்புகளில் உள்ளன.

1. விகடனில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.vikatan.com/amp/story/news%252Fcrime%252Fvellore-government-official-arrested-over-bribery&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjACegQIChAB&usg=AOvVaw2JMDVnUY1zqAVHgd0Xgae3&ampcf=1

2.தினமணியில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.dinamani.com/tamilnadu/2020/oct/14/environmental-associate-chief-engineer-house-rs-33-lakh-confiscated-3484791.amp&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjAAegQIAxAC&usg=AOvVaw2b2VLnxtlz6tzmQiOjuE93&ampcf=1

தொடரும்...


பொன்.சேகர்
வழக்குரைஞர்


Sunday, 27 September 2020

காசு, பணம், துட்டு!

 பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி தேவையா?

"......... நிரந்தரமான நிதியைத் திரட்டி, அந்த நிதியைக் கொண்டு சொத்துக்களை வாங்கி,  அச்சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்து வருமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ...... சொத்தை நிர்வகிப்பதற்குச் செல்வாக்கு உள்ளவர்களைக் கொண்ட தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம். ஆனால், அது இடைவிடாத சச்சரவுக்கு இடமாகி விட்டது. இதன் காரணமாக இப்பொழுது அச் சொத்தின் வாடகைப் பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தகராறு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று எனக்கு இருந்த கருத்து மாறி விட்டது. .....  'நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்கள் நடத்துவது நல்லது அல்ல' என்பதே இப்போது என்னுடைய திடமான கருத்தாகி விட்டது.

நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்தில் இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும்  அந்நிதியுடன் ஊன்றப் பட்டு விடுகிறது.

பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில், அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்பிராயத்திற்கு மாறுபட்டக் காரியங்களையும், அடிக்கடி செய்கின்றன. நம் நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். மத சம்பந்தமான தர்ம ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் சில ஸ்தாபனங்கள் கணக்குக் காட்டுவது என்பதையே விட்டு விட்டன. தர்மகர்த்தாக்களே, அச்சொத்துக்களுக்கு பொறுப்பாளிகள் அல்ல. 'இயற்கையைப் போல அன்றைக்குத் தேவையானதைப் பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது' என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பொதுஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்துவரும் உரிமையே இல்லை .வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத் தொகை, அதன் செல்வாக்குக்கும், அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து"

இதைச் சொன்னவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  இந்தக் கருத்து சரிதானா? உங்கள் கருத்து என்ன?

ஊரான்