Thursday, 31 December 2020

இழி குணம் - முதல் ஐந்து.

இழி குணம் தலைப்பில் எதிர்த்து நில் என்ற எனது மற்றுமொரு வலைப்பூவில் தொடர் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறேன். 

அவற்றின் இணைப்புகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

இணைப்பு 

இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5

இழி குணம்: என்னை ஈர்த்த மக்கள் கலை இலக்கியக் கழகம்!.....4

இழி குணம்: கூட்டுறவு சொசைட்டி பொது நலன் சார்ந்ததா?.....3

தொடரும்

நன்றி!

ஊரான்

Monday, 28 December 2020

தஞ்சை விவசாயிகள் பேரணி: அடக்குமுறை! எஜமானர்களை மிஞ்சும் எடப்பாடிகள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி 29.12.2020 தஞ்சை பேரணி-பொதுக் கூட்டத்தைத் தடுப்பதற்கான ஈனத் தனமான வேலைகளில் ஈடுபடுகிறது எடப்பாடி கும்பல். 'நானும் விவசாயிதான்' என்று கூப்பாடு போட்டுக் கொண்டே போராடுவோர் குரல்வளையை நெரிப்பதில் ரவுடிக் கும்பலையும் விஞ்சி விட்டது இந்தக் கும்பல். 

மோடி கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும், ஏன் ஜெயலலிதா எதிர்த்தவைகளைக்கூட எடப்பாடிக் கும்பல் ஆதரிப்பது ஏன்? பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. எல்லாம் பெட்டியைக் காக்கத்தான்.

நீட் தேர்வு: (National Eligibilty cum Entrance Test-NEET): 2016


மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு தொடர்பான வழக்கில் 2016 ஆம் ஆண்டில் தடை நீக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வு முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. மறைந்த ஜெயலலிதா நீட் தேர்வு முறையை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார்.  ஆனால் இன்றைய எடப்பாடி கும்பல். நீட் தேர்வு முறையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் அனிதா, பிரதீபா உள்ளிட்ட பலரை நாம் இழந்தது மட்டுமல்ல ஏழை எளிய மக்களின் மருத்துவக் கனவுகளும் நாசமாகி வருகிறது.


ஜூலை 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை, 3, 5, 8 வகுப்புகளில் புதிதாக பொதுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தி குலக்கல்விக்கு வித்திட்டுள்ளது மோடி அரசு. இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு மட்டுமன்றி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி உரிமையை மத்திய அரசு பறித்து விடுகிறது. இதையும் ஆதரிக்கிறது எடப்பாடி கும்பல்.


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்: 2013


மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொது வினியோகத் திட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் ஒருங்கிணைந்த பொதுவிநியோகத் திட்டம் (integrated management of public distribution system) என்ற பெயரில் "ஒரே நாடு, ஒரே ரேஷன்" என்கிற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஜெயலலிதா எதிர்த்து வந்த இந்தத் திட்டத்தைத்தான் இன்றைய எடப்பாடி கும்பல் 01.10.2020 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.


உதய் மின் திட்டம்: 2015


நிதி மற்றும் செயல் திறனை மேம்படுத்துவது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் காலாண்டுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி மின்கட்டணம் உயர்வதை தவிர்க்கவியலாத ஒன்றாக மாற்றியுள்ளது. மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மாநில அரசின் நடவடிக்கைகள் மீது நேரடியாக மத்திய அரசு தலையிடுகிறது. இந்தத் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகக்கடுமையாக எதிர்த்து வந்தார்.


இதன் தொடர்ச்சியாகத்தான் புதிய மின்சார சட்டத் திருத்தம் 2020 என்கிற மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது மோடி அரசு. ஏற்கனவே 2003 இல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஒரே துறையாக இருந்த மின் வாரியத்தை உற்பத்தி (generation), அனுப்புதல் (trasmission), பகிர்மானம் (distribution) என்று தனித்தனியாக பிரித்து தனியாருக்குத் தாரை வார்க்கும் அடிக்கல்லை நாட்டியது‌. அரசு மின்சாரத்தைத் தயாரித்து கம்பிகள் வழியாக அனுப்பினால், அதை எடுத்து வீடுகளுக்கு விநியோகம் செய்து கட்டணத்தைத் தீர்மானித்து தனியார் கொள்ளையடிக்க அனுமதி அளிக்கிறது புதிய மின்சார சட்டத் திருத்தம் 2020. மின் கம்பி அரசுக்கு, அதில் பாயும் மின்சாரம் அதானிக்கு என்பதுதான் இந்த சட்டத்தின் சாரம். இதற்கும் பச்சைக்கொடி காட்டுகிறது எடப்பாடி கும்பல்.


பணமதிப்பிழப்பு: 2016


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த 2016, நவம்பர் 8 நள்ளிரவை யாரும் மறக்க முடியாது. கருப்புப் பணம் ஒழியும், ஊழல் மறையும் எனக் கூவினார்கள். ‌ நடந்ததா? மாறாக நிச்சயக்கப்பட்டத் திருமணங்கள் நின்றன. சிகிச்சைக்குப் பணம் இன்றி நோயாளிகள் தவித்தனர். அன்றாட செலவுகளுக்காக வங்கி வாசலில் வரிசையில் நின்று மாண்டு போனவர்கள் ஏராளம். சிறுதொழில்கள் முடங்கியதால் தொழிலாளர்கள் கிராமங்களுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர். கட்டுமானத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதிகள் குறைந்தன. சுமார் 90 லட்சம் பேர் வேலை இழந்தனர். இதை மட்டும் எடப்பாடி கும்பல் எதிர்த்து விட்டதா என்ன?

ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி : 2017

மீண்டும் சிறு குறு தொழில்கள் நலிவடைந்தன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். ஏற்றுமதிகள் பாதிப்படைந்தன. மாநில அரசுகளுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இழப்பீட்டை ஈடுசெய்து கொள்ள 21 மாநில அரசுகள் ரூ.78,542 கோடி வெளியிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது மோடி அரசு. இதனால் மாநில அரசுகள் கடன் சுமைக்குத் தள்ளப்பட்டன. மாநில அரசுகள் ஓட்டாண்டி ஆனாலும் பரவாயில்லை, தங்களது பெட்டி பாத்திரமாக இருந்தால் போதும் என்று மௌனம் காக்கிறது எடப்பாடி கும்பல்.


கால்நடை விற்பனைக்குத் தடை: 2017


கால்நடை வளர்ப்பு மற்றும் விற்பனையை ஒரு பண்ணைத் தொழிலாக மாற்றி கிராமப் பொருளாதாரத்தை கார்ப்பரேடடுகளிடம் ஒப்படைக்கும் கெட்ட நோக்கம் கொண்டது. கால்நடை விற்பனைக்கு வரி விதித்து கால்நடை வளர்ப்பின் மூலம் பயனடைந்த கிராமப்புற விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும் திட்டம் இது. இப்படி ஒன்று இருப்பதே எடப்பாடி கும்பலுக்கு எங்கே தெரியப் போகிறது?


உணவு தானியத்திலிருந்து எரிபொருள் தயாரிப்புத் திட்டம்: 2018


உணவு தானியத்தில் இருந்து 30 சதவீத எரிபொருளை தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கும் திட்டம் இது. இதனால் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும். இது மட்டும் தெரிந்து விடுமா என்ன எடப்பாடி கும்பலுக்கு?


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: 2018


இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி அளிக்கிறது இந்தத் திட்டம். இதன் மூலம் சிறு வணிகத்தை ஒழித்துக்கட்டி, பன்னாட்டுக் கம்பெனிகளின் கைகளில் இந்திய வணிகத்தை ஒப்படைக்கிறது. எவன் வந்தால் நமக்கென்ன? பெட்டி பத்திரமாக இருந்தால் போதும் என்பதைத்தவிர வேறென்ன செய்துவிடப் போகிறது எடப்பாடி கம்பெனி?


வேளாண் சட்டத்திருத்தங்கள் 2020


கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண்மையை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவும், கள்ளச்சந்தையை ஊக்கப்படுத்தி பதுக்கலுக்கு வழிவகுத்து உணவுப்பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் வழிவகை செய்துள்ளது மோடி அரசு. இதற்கு எதிராகத்தான் இன்றைக்கு விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.


மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்பில் நீட் பொதுத்தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி, உதை மின் திட்டம் மற்றும் புதிய மின்சார சட்டத் திருத்தம், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்கிற பொது விநியோகத் திட்டம், புதிய வேளாண் சட்டங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் இவை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலேயே அமைந்துள்ளன. 


ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்து வந்த நீட் தேர்வு, பொது விநியோகத் திட்டம், உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம், ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட அனைத்தையும் அம்மா பெயரில் ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜெயலலிதா எதிர்த்தவைகளை இவர்கள் ஆதரிப்பது ஏன்? பஞ்சாப் ஹரியானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் வேளையில் எடப்பாடி கும்பல் மட்டும் ஏன் ஆதரிக்கிறது? 'ரெய்டு' எனும் கத்தி அவர்கள் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருப்பதை தவிர வேறென்னவாக இருக்க முடியும்?


'ரெய்டு' எனும் கத்தி!


21.12.2016 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடு என 14 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.48 லட்சம் பணம் ரொக்கமாகவும், 7 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. தலைமைச் செயலருக்கும் சேகர் ரெட்டி தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. சேகர் ரெட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டியின் வீட்டில் கட்டுகட்டாக கைப்பற்றப்பட்டதை நாடே அறியும். ஆனால் பின்னாளில் அவர் குற்றமற்றவர் என்று விடுக்கப்பட்டார் என்பது தனிக்கதை.


07.04.2017 அன்று சென்னை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ரூ. 5 கோடி அளவிற்கு ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.


அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இன்றைய ஆட்சியாளர்கள் ஜெயாவின் வழியிலே மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்து குவித்து வைத்துள்ளனர். இதையெல்லாம் தெரிந்து வைத்துள்ள மத்திய அரசு 'ரெய்டு' என்ற கத்தியைக் காட்டி இவர்களை மிரட்டி வருகிறது. 


மோடியின் அடிமைகளாய் மாறிப்போய் அம்பலப்பட்டு, செல்வாக்கிழந்து இனியும் தமிழக அரசியலில் முகவரி இல்லாமல் முடங்கிப் போவோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் தாங்கள் சுருட்டியப் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ள மோடி அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோதத் திட்டங்களையும், சட்டங்களையும் ஆதரித்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது எடப்பாடி கும்பல். அரசியல் அரங்கில் முகவரி இல்லாமல் உடனடியாக துடைத்தெறியப்படவேண்டிய கூட்டமிது.


ஊரான்


தொடர்புடைய பதிவுகள்


எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?




Saturday, 21 November 2020

வெள்ளையனை நடுங்க வைத்த மைசூர் புலி!

ஆற்காட்டு நவாப், ஹைதராபாத் நிஜாம், புதுக்கோட்டை தொண்டைமான், திருவிதாங்கூர் சமஸ்தானம், மராட்டிய பேஷ்வாக்கள் என பலரும் மண்டியிட்டு அண்டிப் பிழைத்த போது வெள்ளையனை எதிர்த்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமரசமின்றி போராடிய ஒரு மாவீரன். 

'மராத்தியர்கள் அல்ல நம் எதிரி, நிஜாமும் கூட அல்ல நமது எதிரி, இந்த மண் எவ்வளவு எனக்கு உரியதோ அதே அளவு அவர்களும் இதன் உரிமையாளர்களே. இந்த மண்ணுக்கு உறவற்ற பிரிட்டிஷ்காரர்களே நமது பொது எதிரி' என எதிரியை அடையாளம் காட்டியவன். 

உருது, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவன். 'சீனம் சென்றேனும் ஞானம் தேடு' என்பதற்கிணங்க, நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம், அரண்மனையில் பெரிய நூலகம் என அறிவுப் பசிக்கு வித்திட்டவன்.

தனது காதலி ஒரு சாதாரண படைவீரனின் மகள் என்று கருதாமல் தான் காதலித்த பெண்ணையே மணம் புரிந்து காதலுக்கும் மகுடம் சூட்டியவன்.

பெண்கள் மேலாடை உடுத்தக் கூடாது என்கிற நடைமுறையை ஒழித்துக்கட்டியவன்.

'ஏன் இந்துக்களையும் சமமாக பாவிக்கிறாய்? இஸ்லாமை வளர்ப்பது உன் கடமை அல்லவா?' எனக் கேட்டபோது 'நான் என் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறேன்',  நீங்கள், 'நான் என் மதத்தைச் சார்ந்த மக்களைக் காக்க வேண்டும் என்கிறீர்கள். இந்த மண் என்னுடையதல்ல, அவர்களுடையது. எனது வலிமை பெரியதா? மக்கள் ஒற்றுமை பெரியதா? ஒரு பிரிவினருக்கு அன்பு, மறு பிரிவினருக்கு கடுமை என்பது எப்படி நல்ல முடிவை எட்ட உதவும்? அவர்களை பதவியில் வைத்திருப்பது இராஜதந்திரம் என்றல்ல. அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்பதாலேயே. நான் இந்து கோவில்களுக்கு தாராளமாக உதவுவது  சமநிலை பேணும் ராஜதந்திரம் அல்ல. அவர்கள் பெரும்பான்மையினர். அவர்களுக்கு நான் அரசன். அதற்கு மேல் நானும் அவர்களும் இந்தியர்கள்' என மதமாச்சரியம் பார்க்க கூடாது என்பதை உணர்ந்தவன்.

உயர் பதவிகளில் தனது அரசின் முதலமைச்சராகவும் அந்தரங்கச் செயலாளராகவும் பார்ப்பனர்களையே அமர்த்தி தான் சாதி மதம் பார்க்காதவன் என்பதை நிலைநாட்டியவன்.

சட்டத்திற்குப் புறம்பாக எந்த மனிதனும் தண்டிக்கப்படக்கூடாது என அறிவித்தவன். மரண தண்டனையை ஏற்க மறுத்தவன்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவன். மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்தவன். இளைஞர்களின் நன்னடத்தையும் எதிர்காலமும் மது ஒழிப்புடன் இணைந்தது. மது ஒழிப்புடன் மக்கள் நல வாழ்வும் சமூகப் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டவன். மூடப்பட்ட சாராய ஆலைகளுக்கு இழப்பீடு இல்லை என்று அறிவித்தவன்.

வேளாண்மையையும் தொழில்துறையையும் வளர்ப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தவன்.

விவசாயிகளின் மேம்பாட்டிற்காக வருவாய்ச் சட்டங்களைத் திருத்தியவன். விவசாயி தவறு செய்தால் அதற்கு அபராதமாக பழ மரங்களை வளர்க்கச் சொன்னவன். 

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு அடிக்கல் நாட்டியவன். 'வானம் உள்ளவரை, பசி உள்ளவரை விவசாயிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உணவளிப்பவர்கள்' என்று அறிவித்தவன்.

மதத்தால், ஜாதியால், இனத்தால் ஒருவரை இழிவுபடுத்தி வேறுபாடு வளர்த்தால் அது சட்டத்திற்கு எதிரானது, தண்டனைக்குரியது என அறிவித்து சாதி மத வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தவன்.

தொழில் வணிக முனைவோரை ஊக்குவித்தவன். பன்னாட்டுப் பொருள் விற்பனைக்கான அரசு விற்பனை மையங்களை ஏற்படுத்தியவன்.

வெடி மருந்து தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் காவிரியில் கலந்து மீன்கள் சாவதைக் கண்டு அந்தத் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக நின்றவன்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை அளிப்பதற்காகவே சாலையை செப்பனிடுதல், மரம் வளர்த்தல், ஓய்வு இல்லங்கள் கட்டுதல் எனப் பல்வேறு பணிகளை உருவாக்கி வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்தியவன்.

அரசு ஆடம்பரங்களை, வீண் செலவுகளை முற்றாகக் கட்டுப்படுத்தியவன். கட்டில் மெத்தையைத் துரந்து பாயில் படுத்து உறங்கியவன். ஆடம்பர உடைகளைத் துறந்து போர் வீரனைப் போல வாழ்ந்தவன். அதிகாரிகள் மக்களிடம் வரி வசூலிப்பதில் கடுமை காட்டக் கூடாது என உத்தரவிட்டவன். 

போரின் இறுதிக்கட்டத்தில் தப்பித்து உயிர் வாழ வேண்டும் என மந்திரிகள் ஆலோசனை கூறிய போது, 

'உயிர் உன்னதமானது. ஏனெனில் நாம் அதை ஒரு உன்னத இலட்சியத்திற்காக தியாகம் செய்ய வேண்டும். நம் பெருமைக்குரிய மண்ணை அடிமைப்படுத்த ஒரு கொடிய எதிரி வருகிறான் எனும் போது அதை எதிர்த்து நின்று மரணத்தைத் தழுவுகிறவர்கள் மரணத்தின் பின்னும் வாழ்கிறார்கள். நாடு அவர்களை என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும்' என்ற இலக்கணத்திற்கு ஏற்ப போரில் வீரமரணம் அடைந்தாலும் இன்றும் நம் நினைவில் வாழ்பவன்.

போர் என்பது வெற்றி தோல்வி அல்ல அது வீரத்தின் களம் என்று காட்டியவன்.

இப்படி நீள்கிறது அவனது வாழ்க்கைக் கதை. அவன் மன்னனாக வாழ்ந்திருந்தாலும் ஒரு நவ கால சிற்பியாகக் காட்சியளிக்கிறான். இவனைப் படிக்கப் படிக்க இப்படி ஒருவன் நமக்குக் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கத்தை உருவாக்குகிறான். ஆனால் காவிக் கூட்டமோ இவனைப் படிக்கக் கூடாது என தடை விதிக்கிறது. தடைகளைத் தாண்டி அவன் பலரது நெஞ்சங்களில் ஊடுருவிக் கொண்டுதான் இருக்கிறான். 

வீரத்தின் விளைநிலம், மைசூர் புலி திப்பு சுல்தான் பிறந்தநாள் - நவம்பர் 20 - நினைவாக....

நெகிழ்ச்சியுடன்

ஊரான்

ஆதாரம்: திப்புவின் வாள் நூலிலிருந்து. நூலைக் கொடுத்து உதவிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்களுக்கு நன்றி.




Friday, 23 October 2020

எனக்குக் கோவிட்-19 இருக்குமோ?

மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து உலகையே முடக்கிய கரோனாவால் நானும் முடங்கிப் போனேன். அகவை 62 ஐக் கடந்துவிட்ட நிலையில் சர்க்கரைக்கு ஆட்படவில்லை என்றாலும் இதயம், சிறுநீர் கழித்தல், தைராய்டு பிரச்சனைகள் இருப்பதால்  கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளி, முகக் கவசம், அடிக்கடி சோப்புப் போட்டுக் கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை சரியாகவேக் கடைபிடித்து வந்தேன். கடைவீதிக்குச் செல்லும் பொழுது சில நபர்களுடன் முகக்கவசத்திற்கும், சமூக இடைவெளிக்கும் மல்லுக் கட்ட வேண்டியிருந்தது. "என்ன உயிருக்குப் பயமா?" என முறைத்தவர்களும் உண்டு. அவ்வப்பொழுது ஆர்சனிகம் ஆல்பமும், இஞ்சி-சுக்கு-டீயும், ஆவி பிடித்தலும், சில வேலைகள் ஆங்கில மாத்திரைகளும் எடுத்துக்கொள்வது இயல்பாய் மாறின. சும்மாவா பின்னே! உயிர் வாழ்வது ஒரு முறைதானே!

இடைப்பட்டக் காலத்தில் நெருங்கிய உறவினர்களின் திருமணங்கள், நேசித்த உறவுகளின் மரணங்கள் நிகழ்ந்தபோதும் நேரில் செல்லவியலாத நிலைக்குத் தள்ளப்பட்டது நான் மட்டுமல்ல நீங்களும்தான். நிலைமையைப் புரிந்து கொள்ளாதவர்களிடையே உறவுகளும் நட்புகளும்கூட முறிந்து போய் இருக்கலாம். முறிவுகள் முடிவுக்கு வர சில காலங்கள்கூட ஆகலாம். காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் சில நேரங்களில் உயிருக்கும் மேலான பிரச்சனைகள் சிலருக்கு மேலெழக்கூடும். அந்த வகையில் இந்த மாதத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் 'வேன்' மற்றும் மகிழுந்துகளில் வெளியூர் பயணங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ளூர் பயணங்களை நான் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய நபர்கள் மற்றும் புதியச் சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.  பழைய ஒழுங்கே நமக்கு எட்டிக்காயாய் இருக்கும்பொழுது புதிய ஒழுங்கு மட்டும் கட்டுக்குள் வந்து விடுமா என்ன? ஆதங்கத்தை உள்அமுக்கிக் கொண்டுதான் சிலரோடு பழகவும் பேசவும் நேர்கிறது.

கோப்புப் படம் (நானல்ல)

சளித்தொல்லை எனக்கு இயல்பானதுதான் என்றாலும் இந்த ஒரு மாதத்தில் சற்றே கூடுதல் ஆனதால் 'சுவாப்' சோதனை எடுத்துக் கொள்ளச் சென்ற மாதமே மருத்துவர்கள் பரிந்துரைத்தும்,  முக்கிய வேலைகள் காரணமாகத் தள்ளிப் போட்டேன். நாட்கள் ஓடின. சளியும் குறைந்த பாடில்லை. கோவிட்-19 க்கான வேறு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் தள்ளிப்போடுவது சிலநேரங்களில்  தலைப்பாகைக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் 22.10.2020 அன்று வாலாசாப்பேட்டையில் உள்ள இராணிப்பேட்டை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சளி மாதிரிகளைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அரசு மருத்துவமனை என்றாலே எப்படி இருக்குமோ என்ற அச்சம் உள்ளூர நமக்கு இருக்கம்தானே? வாலாசாப்பேட்டை அரசு மருத்துவமனையில் செயல்படும் கோவிட்-19 பரிசோதனை மையம் பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்தாலும், சோதனை மாதிரிகள் எடுக்கின்ற இடத்தின் சுத்தம், பாதி அச்சத்தைப் போக்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் நேர்த்தியான சேவை மீதி அச்சத்தையும் போக்கி விட்டது. கோவிட்-19 பரிசோதனைக்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை நேரடியாக உணர்ந்து கொண்டேன்.

வீட்டுக்கு வந்தேன். முடிவு வரும்வரை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்று குறுஞ்செய்தி வந்தது. ஏற்கனவே சில நாட்களாக இருந்த மூச்சிரைப்பு 'கோவிட்டி'னால் இருக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டது. ஆனால் 'சுவாப்' எடுத்த போது, HR-106/mt, SPO2-99%  இருந்ததால் அச்சம் என்கிற மடமையை மட்டுப்படுத்தியது.  ஒரு வேளை எனக்கு 'பாசிட்டிவ்' என வந்து விட்டால், வீட்டில் உள்ளவர்களையும் அள்ளிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் துரத்த, நான் தனிமரமாய் வீட்டில். 'பாஸிட்டிவ்' ஆனாலும் அதற்கும் தயாராகிக் கொண்டேன். 

இன்று (23.10.2020) மாலை குறுஞ்செய்தியில் முடிவு வந்தது 'நெகட்டிவ்' என்று. நிம்மதிப் பெருமூச்சு! பைசா செலவு இன்றி!

பொன்.சேகர்

தொடர்புடைய பதிவுகள்


Wednesday, 21 October 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்? பகுதி - 2

இராணிப்பேட்டை ஏன் வாழத் தகுதியற்ற இடமாக மாறிப்போனது; இதற்கு யார் காரணம் என்பது குறித்து வரும் தொடர்களில் எழுதவிருக்கிறேன்.

இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர் உள்ளிட்டப் பகுதிகளில் செயல்படும் ஆலைகளின் மாசுக்கட்டுப்பாட்டைக் கண்காணிப்பதற்காக செயல்படும் வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதாக புகார் வந்ததையொட்டி  13.10.2020 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.3.25 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான 90 அசையாச் சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு சாதாரண பொறியாளராக உள்ளவர் இவ்வளவு சொத்துக்களை எப்படி சேர்க்க முடிந்தது?

மல்லாடி, திருமலை கெமிகல்ஸ், அல்ட்ரா மரைன் உள்ளிட்ட கொடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் 16 சிவப்பு வகை ஆலைகள் (red catagory industries), 176 ஆரஞ்சு மற்றும் பச்சை வகை ஆலைகள் இராணிப்பேட்டையில் செயல்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் விதிகளை இந்த ஆலைகள் முறையாக கடைபிடிக்கின்றனவா என்பதை சோதித்தறிந்து அதைக் கட்டுப்படுத்துகின்ற வேலைகளை வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்தான் மேற்கொண்டு வருகின்றனர். 

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் புளியங்கண்ணு ஏரிக்குள் திறந்துவிட்டதையொட்டி பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. அதன் பிறகு திருமலை கெமிக்கல்ஸ் உள்ளிட்ட ஆலைகளில் பெங்களூரு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு ரூ.6.88 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. 

வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு  இங்குள்ள ஆலை முதலாளிகள் தொடர்ந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றி வருவதனால்தான் உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இராணிப்பேட்டையும் இடம் பிடித்துள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் இனி இராணிப்பேட்டையில் வாழ முடியாது என்ற அளவுக்கு நமது மண்ணும் நீரும் காற்றும் மாசடைந்து விட்டது. இந்த சீர்கேட்டுக்கு காரணமானவர்கள் ஆலை முதலாளிகள் மட்டுமல்ல அவர்களுக்கு துணை போகும் பன்னீர்செல்வம் போன்ற அதிகாரிகளும்தான்.

எனவே, சுற்றுச்சூழலை நாசமாக்கிய ஆலைகள் அனைத்தையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும்.  பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வாலாஜா மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் 20.10.2020 அன்று காலை 10.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து வாலாஜா மேற்கு ஒன்றியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் புளியங்காண்ணு டி.ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இழுத்து மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


போராட்டக் களத்திலிருந்து

பொன்.சேகர், வழக்குரைஞர்