Saturday, 22 April 2023

வாலாஜாப்பேட்டையில் தொடரும் வன்கொடுமை!

வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. வழக்கமாக வி.சி மோட்டூர் செல்வேன். ஆனால் இம்முறை தென்கடப்பந்தாங்கல் முசிறி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்று பெட்ரோல் போட்டுக் கொண்டு அன்றாடம் குடையப்படும் அருகில் உள்ள மலையைப் பார்க்கச் சென்றேன்.

பெருமலையோ குன்றோ அவை எதுவானாலும் பாறைகளாலும் கற்களாலும் உயர்ந்து நிற்பவைதானே! பாறைகளின் இடுக்குகளுக்கு இடையில் நீர் சேகரித்து வைக்கப்படுவதனால்தான் சிறு குன்றுகளிலும் பெரு மலைகளிலும் செழிப்பான மரங்களை நாம் பார்க்க முடிகிறது. 

மழைக்காலங்களில் இத்தகைய குன்றுப் பகுதிகளில் பெய்யும் மழைநீரானது வழிந்தோடி அருகில் உள்ள சிறு ஏரிகளிலும் குளங்கள் குட்டைகளிலும் நிரம்புகிறது. அதனால் அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுகிறது. அத்தகைய ஒரு மலைதான் வாலாஜாப்பேட்டை அருகில் உள்ள தென்கடப்பந்தாங்கல்-முசிறி சாலையில் அமைந்துள்ள சில சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு குன்றுப் பகுதி. 

இந்தப் பகுதியை இன்று நேரில் பார்த்தபோது அந்தப் பகுதியே களேபரமாக காட்சி அளித்தது. எங்கு திரும்பினாலும் பாறைகள் உடைக்கப்பட்டு நொறுக்கப்பட்டு அரைக்கப்பட்டு லாரிகளில் எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்த போது கேட்க நாதியற்றுக் கிடக்கிறோமே என்ற குற்ற உணர்வுதான் எஞ்சியது.

இயற்கை அன்னையை காமுகர்கள் அன்றாடம் கடித்துக் குதறுகிறார்கள். திமுக-அதிமுக ஆட்சிகள் எதுவாயினும் காமுகர்கள்தான் மாறுகிறார்களே ஒழிய இயற்கை அன்னை மீதான வன்கொடுமை மட்டும் நின்றபாடில்லை. 

இது ஒரு வகை மாதிரிதான். இப்படித் தமிழகம் எங்கும் பல நூறு இடங்களில் இயற்கை அன்னையை குதறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். குதறும் கயவர்கள் கோடிகளில் புரளுகிறார்கள். தட்டிக் கேட்க ஆள் இல்லையா? இல்லை என்பதுதான் எதார்த்தம். இருப்பதாகச் சொல்லிக் கொள்வோர் சோரம் போவதுதான் வாடிக்கையாக நடக்கிறது.

மலை குடையப்படுவதனால் எதிர்காலத்தில் நிகழப்போகும் அவலங்களைப் புரிந்து கொண்டு உள்ளூர் மக்கள் விலை போகாமல் என்றைக்குப்  போராடுகிறார்களோ அன்றைக்குத்தான் இத்தகைய இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும். அதுவரை இயற்கை அன்னை குதரப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

ஊரான்








Thursday, 6 April 2023

இப்பி ஃபக்கீர்: உமர்முக்தாரை நினைவுபடுத்தும் வரலாற்றுப் புதினம்!

விடுதலைப் புலிகள் தலைமையில் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் சிங்கள பேரினவாத அரசுப் படைகளால் மிகக் கொடூரமான முறையில் அழித்தொழிக்கப்பட்டது சமீபத்திய வரலாறு.

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார், அவர் மீண்டும் வருவார், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடருவார் என்ற கூறுவோரும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். பிரபாகரன் வருகிறாரோ இல்லையோ, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் பல்வேறு நாட்டுப் போராளிகளுக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்மறை அனுபவங்களையே விட்டுச் சென்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சீமான் போன்ற பித்தலாட்டக்காரர்களுக்குத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் பயன்படுகிறது.

ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்ட அனுபவங்கள், புதிய தலைமுறையினருக்கு நேர்மறை அனுபவங்களையும், உத்வேகத்தையும் அளிக்கவல்லதாக இருக்க வேண்டும். இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதப் போராட்ட அனுபவங்களும், லிபியா மீதான இத்தாலி முசோலினின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான உமர்முக்தாரின் கொரில்லாப் போர் முறை அனுபவங்களும், ஆண்டுகள் பலவாயினும் இன்னமும் பேசப்படுகின்றன.

இளம் வயதில் பகத்சிங்கும்,  தள்ளாத வயதில் உமர்முக்தாரும், ஆக்கிரமிப்பாளர்களால் தூக்கிலிடப்பட்ட போதும் அவர்களின் போராட்ட அனுபவங்கள் நம் நாடி நரம்புகளைப் புடைக்கச் செய்கின்றன.

நட்டநடு பாலைவனத்தில், ஒரு சிறிய கொட்டகையில் இத்தாலியப் பிரதிநிதிகளோடு உமர்முக்தார் நடத்திய சமாதானப் பேச்சு வார்த்தையின் காட்சிகள் கொரில்லா போர் காட்சிகளை விடவும் விஞ்சியது என்றால் அது மிகையல்ல.

*****

1937- 39 வாக்கில் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதியில், மலை உச்சியில், நெடிதுயர்ந்த அடர்ந்த மரங்களுக்குக் கீழே அமைக்கப்பட்ட கொட்டகையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது,

எங்களில் யாருக்கும் மனைவி மக்களோ வீடு வாசல்களோ எதுவும் இல்லை. நாங்கள் வாழும் பூமிதான் எங்கள் வீடு. இங்கு வாழும் மக்கள்தான் எங்கள் குடும்பத்தினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தப் பூமியை விட்டு வெளியேறு மட்டும் முஸ்லீம்களில் ஒரு பகுதியினராவது அவர்களுக்கு அடிமைப் படாமல் வாழ்ந்தார்கள் என்ற சரித்திரத்தை எழுத எங்கள் இரத்தத்தை மையாகக் கொண்டிருப்பதே எங்கள் தொழில். எங்களில் யாரையும் விலைக்கு வாங்க முடியாது. எங்களுடைய பூமி என்று நாங்கள் எல்லை வைத்துக் கொண்டுள்ள பகுதியில் ஒரு இஞ்ச் அளவில் கூட உங்கள் ஆட்சி ஒருபோதும் அடியெடுத்து வைக்க முடியாது. நீங்கள் எங்கள் எஜமானர்களாக ஆகும் எண்ணத்தை கைவிட்டதாக உங்கள் பாராளுமன்றத்தின் மூலம் அறிவிப்புச் செய்து விடுவதே புத்திசாலித்தனம்

என கர்ஜிக்கிறான் போராளிக் குழுத் தலைவன் இப்பி ஃபக்கீர்.

நீண்ட நெடிய பேச்சு வார்த்தைக்குப் பிறகு,

சமாதானத்துக்கு வழி? என்று கேட்கிறான் பிரிட்டிஷ் தரப்பு ஜார்ஜ் மிலான் பிரபு.

உங்கள் வழியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களை அடிமைப்படுத்த முயற்சிக்காதீர்கள். அது ஒன்றுதான் சமாதானத்திற்கான வழி" என்கிறான் இப்பி ஃபக்கீர்.

ஆம். 1947-இல் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் வரை வஜ்ரிஸ்தானை அடிமைப்படுத்த முடியவில்லை.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் கைபர் கனவாயையொட்டி அமைந்துள்ள, இஸ்லாமிய மதத்தைத் தழுவும் பத்தான் பழங்குடி மக்கள் வாழும் பகுதிதான் வஜிரிஸ்தான்.

பிரிட்டிஷார் வெளியேறிய பிறகு, அப்பகுதி பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டாலும் பதான்களின் இன விடுதலைக்கான போராட்டமும் தொடர்ந்தது என்பது பிந்தைய வரலாறு. 1960 இல் இப்பி ஃபக்கீர் மரணிக்கும் வரை பிரிட்டிஷ் இராணுவமோ அல்லது பாகிஸ்தான் இராணுவமோ அவரை நெருங்கக்கூட முடியவில்லை.

உமர்முக்தாரின் வீரத்தை, உமர்முக்தார் திரைப்படம் வெளிப்படுத்தியதைப் போல, ஏ.எம்.யூசுப் அவர்களின் இப்பி ஃபக்கீர் வரலாற்றுப் புதினம், இப்பி ஃபக்கீரின் வீரத்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது மிகை அல்ல. 

பரங்கியருக்கு எதிரான கொரில்லாப் போராட்டத்தை மிக நேர்த்தியாக திரைக்கதை போல் அமைத்து நவீன க்ரைம் சப்ஜெக்ட் சினிமாவைத் தோற்கடிக்கும் விதமாக பல்வேறுத் திருப்பங்களுடன் இந்த வரலாற்றுப் புதினத்தை, ஏ.எம்.யூசுப் அவர்கள் படைத்துள்ளார்கள் என்ற பதிப்பாசிரியரின் கூற்றை மெய்ப்பிக்கிறது இந்த வரலாற்றுப் புதினம்.

அடிமைத்தனத்தை வெறுக்கும், விடுதலையை நேசிக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஊடுருவ வேண்டிய வீரன் இப்பி ஃபக்கீர்.

ஊரான்

குறிப்பு: படிப்பதற்கு நூலைத் தந்துதவிய வாலாஜா ஜெ.அசேன்,  Ex.MLA, அவர்களுக்கு நன்றி.


நூல்: இப்பி ஃபக்கீர்,
ஆசிரியர்: ஏ.எம்.யூசுப்
விலை: ரூ.90/-
இரண்டாம் பதிப்பு: 2016
நூல் வெளியீடு: புது யுகம்,
84-3, அங்கப்பன் தெரு, மன்னடி,
சென்னை-600 001.
 
தொடர்புடைய பதிவுகள்

Thursday, 23 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - இறுதிப் பகுதி

  IX

ஹிண்டன்பர்க்கைப் புரிந்து கொள்ள வேண்டுமா? நாக்பூரைப் படி!

குடியுரிமை திருத்தச் சட்டம்

குஜராத்தில் இஸ்லாமியர்களைக் கொன்றொழித்ததைப்போல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கொல்ல முடியாது என்பதால், அவர்களை நாட்டைவிட்டே விரட்டும் நோக்கத்துடன் 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு அச்சட்டம் ஷாகின்பாக்குகளில் புதைக்கப்பட்டன.

வேளாண் திருத்தச் சட்டம்

நிலத்தைவிட்டே விவசாயிகளை வெளியேற்றி, விலை நிலங்களை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்க ஏதுவாக 2020 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்கள், ஓராண்டு 'டெல்லி சலோ' போராட்டங்களால் புதை குழிக்கு அனுப்பப்பட்டன.

தொழிலாளர் நல சட்டத் திருத்தம்

ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பாக இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை, 4 சட்டத் தொகுப்புகளாக்கி, தொழிலாளர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து, இனி தொழிலாளர்களை முதலாளிகள் வரைமுறையின்றி சுரண்டுவதற்கு ஏற்ப, 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள் மட்டும் ஏனோ போதிய எதிர்ப்பின்றி நடைமுறைக்கு வந்துவிட்டன.

இவை தவிர,

அரசியல் துறையில்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  எதிர்கட்சிப் பிரதிநிதிகளை மிரட்டிப் பணிய வைப்பது அல்லது விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தி மாநில அரசுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் எதிர்கட்சியினர் மீது ஆயுதப் பயிற்சி பெற்ற RSS குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது, பொய்வழக்குகள் போட்டு அடக்க முனைவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் RSSல் பயிற்சி பெற்ற தனது ஆட்களை ஆளுநர்களாக நியமித்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பது, வெளிஉறவு உள்ளிட்ட முக்கியமானத் துறைகளில் RSS ஆட்களை பணியில் அமர்த்துவது, மாநில மொழிகளை ஒழித்துக்கட்டி அவ்விடத்தில் முதலில் இந்தியைப் புகுத்தி இறுதியல் சமஸ்கிருத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது

பொருளாதாரத் துறையில்,

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த அதானி-அம்பானி போன்ற முதலாளிகள் நாட்டு வளங்களை கொள்ளையடிக்க வழிவகை செய்வது, அதற்கு ஏற்ப சட்டங்களை இயற்றுவது அல்லது திருத்துவது, பொதுத்துறை வங்கிகளில் குவிந்து கிடக்கும் மக்கள் பணத்தை முதலாளிகளுக்குக் கடனாக வாரிக் கொடுப்பது, பிறகு வாராக் கடன் என்ற போர்வையில் அவற்றைத் தள்ளுபடி செய்து வங்கிகளுக்கு பட்டை நாமம் போடுவது,

மோடி அரசின் அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இந்திய மக்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சாதி-மத-இன-மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தியே வைத்திருக்க முயற்சிப்பது, மக்களின் ஒற்றுமையை சிதைப்பதற்காக அவ்வப் பொழுது சாதி-மத-இனக் கலவரங்களை திட்டமிட்டே அரங்கேற்றுவது,

என ஒட்டு மொத்தமாக ஒரு மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

RSS

மோடியை இயக்குவது RSS. RSS-ஐக் கட்டுப்படுத்துவது பார்ப்பனர்கள். பார்ப்பனர்களின் நோக்கம் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவது. ஒரு பக்கம் நாமெல்லாம் இந்துக்கள் என அணிதிரட்டிக் கொண்டே மறுபக்கம் மற்ற சாதியினரைவிட பார்ப்பனர்களே மேலானவர்கள் என்கிற சமத்துவமற்ற படிநிலை வருண-சாதி அமைப்பு முறையை நியாயப்படுத்துவது, ஒவ்வொரு சாதியும் அவரவர் குலத்தொழிலை மேற்கொள்ள வேண்டும்  எனப் பேசுவது, இதையே இந்து தர்மம்-சனாதன தர்மம் எனக் கூறிக் கொண்டு, நாக்பூரில் திட்டம் வகுத்து அதை இந்தியா முழுக்கச் செயல்படுத்தி வருகின்றனர்.


இட ஒதுக்கீடு

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற பலர், பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் அது சாதிய அமைப்பு முறைக்கு பேராபத்து என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. எனவே தொழில் நடத்துவதிலிருந்து அரசு முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி வருகிறது மோடி அரசு. புதிய தாராளமயக் கொள்கையும் இவர்களின் நோக்கத்தோடு ஒன்று சேர்வதால் இது மேலும் தீவிரமடைகிறது.

சிறந்த நிர்வாகம்

மன்னராட்சி கோலோச்சிய நிலவுடமை காலகட்டத்தில், ஒவ்வொரு சாதியினரும் அவரவர் குலத்தொழிலை மட்டுமே செய்வதை உறுதி செய்வது, குடிமக்களிடம்  வரி வசூல் செய்வது, சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லைகளைக் காப்பது உள்ளிட்ட நிர்வாக வேலைகளை மட்டுமே மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு மேற்கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் மட்டுமே படித்தவர்களாக இருந்ததால் சாதியப் படுநிலையில் தங்களை மேலானவர்களாக நிலை நிறுத்திக் கொண்டதோடு, மன்னனே தங்களுடைய ஆலோசனைப்படிதான் ஆட்சி நடத்த வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி வந்தனர். பிற்கால சேர சோழ பாண்டியர் ஆட்சிகள் இவ்வாறுதான் நடைபெற்று வந்துள்ளன.

ஆனால் இன்று, அரசாங்கமே தொழில் நடத்துவதனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பிறசாதினர் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதை பார்ப்பனர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வசதி வந்தவுடன் பிறசாதியினர் தங்களை மதிப்பதில்லை என்பதாகவும், தங்களுடைய மேலாதிக்கும் சிதைவதாகவும் கருதுகின்றனர். அதனால்தான் முதலில் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துவிட்டு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முழங்கியவர்கள், அது சாத்தியமில்லை என்பதனால், தற்காலிகமாக தங்களுடைய ஆதிக்கத்தை  நிலைநிறுத்திக்கொள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டனர். 

ஆனால்  ”தொழில் நடத்துவது அரசின் வேலை அல்ல, மாறாக சிறந்த நிர்வாகத்தை வழங்குவதே அரசின் கடமை” (good governance) என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதனால்தான் பார்ப்பனர்கள் தனியார் மயத்தை வரவேற்கின்றனர், ஊக்கப்படுத்துகின்றனர்.

காவிகளும் கார்ப்பரேட்டுகளும் இணையும் புள்ளி

தொழில் நடத்துவதிலிருந்து அரசு வெளியேறுவதையும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதையும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதையும் மோடி அரசு நடைமுறைப்படுத்துவது புதிய தாராளமாக கொள்கையின் அடிப்படையிலானது மட்டுமல்ல, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது.  இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு கேள்வி கேட்பவரை அடக்கி ஒடுக்கி நசுக்குவது, அதற்காக அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக அனைத்து பஞ்சமா பாதக செயல்களையும் செய்வது என்பதுதான் மோடி வகையறாக்களின் நடைமுறையாக உள்ளது.

எனவே, நாக்பூரைப் புரிந்து கொண்டால்தான் மோடி எதற்காக அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் பெருமுதலாளிகள் பக்கம் நிற்கிறார் என்பதையும் முதலாளிகள் ஏன் மோடியை ஆதரிக்கிறார்கள் என்பதையும், ஹிண்டன்பர்க் அறிக்கையையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அரசியல் அதிகாரத்திலிருந்து நாக்பூர் கூட்டத்தை அகற்றாத வரை இந்த அவலங்கள் மேலும் தீவிரமாகத் தொடரவே செய்யும்.

முற்றும்.

நன்றி

வணக்கம்

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-8

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொட‌.ர்-6

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1

Wednesday, 22 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-8

VIII

வேலை வாய்ப்பு

விலைவாசியைத்தான் கட்டுப்படுத்தவில்லை. ஏதாவதொரு நல்ல வேலை கிடைத்தால் விலைவாசி உயர்வை சமாளித்துக் கொள்ள முடியும் என்று பலர் கனவு கண்டார்கள். மோடி வெளிநாடுகளையே சுற்றிக் கொண்டிருக்கிறார், நிச்சயம் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வருவார், இந்தியாவில் தொழில் வளம் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என பலரும் நம்பினர். இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு அடிக்கடி மோடி பயணம் செய்தது அதானிக்கும் அம்பானிக்கும் தொழில் பிடித்துக் கொடுக்கத்தான் என்பதை அன்று ஏனோ நாம் உண்ராமல் போனோம்.

புதிய தொழில்கள் பெருகவில்லை என்றாலும், ஏற்கனவே இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும் என நம்பி, லட்சங்களைக் கொட்டி தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்தனர் பலர். ஐயகோ! என் செய்ய? அரசாங்கத்தை நடத்துவதற்குப் பணம் தேவை என்று சொல்லி இந்தயாவின் கோவில்கள் என்று சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக விற்கத் தொடங்கினார் மோடி.

ஜவஹர்லால் நேரு காலத்தில் 33, லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் 5, இந்திரா காந்தி காலத்தில் 66, ராஜீவ் காந்தி காலத்தில் 16, வி.பி.சிங் காலத்தில் 2, பி.வி.நரசிம்மராவ் காலத்தில் 14, ஐ.கே.குஜ்ரால் காலத்தில் 3 என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியதோடு, இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் பங்காற்றி உள்ளன.


புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்தப்பட்ட தொடக்கக் காலத்தில்கூட ஒரு சில பொதுத் துறைகள் விற்கப்பட்ட அதே நேரத்தில், புதிதாக சில பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 7 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டாலும், புதிதாக 17 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மன்மோகன் சிங் காலத்தில் 3 நிறுவனங்கள் விற்கப்பட்டாலும் புதிதாக 23 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் மோடியின் கடந்த 9 ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனம்கூட தொடங்கப்படவில்லை; மாறாக 23 பொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலுமாக தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டன. குறிப்பாக IPCL நிறுவனத்தை அம்பானியின் ரிலயன்சுக்கும், BALCO வை தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்குக் காரணமான வேதாந்தாவுக்கும்,  VSNL ஐ டாடாவுக்கும் விற்பனை செய்துள்ளார் மோடி. இவை தவிர BHEL, BSNL, GAIL, NTPC, ONGC, SAIL உள்ளிட்ட இலாபமீட்டும் நவரத்னா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை படிப்படியாக விற்று வருகிறது மோடி அரசு.

அதுமட்டுமன்றி பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் வகையில் பாரபட்சமாக நடந்து வருகிறது நடுவண் அரசு. ரிலயன்சின் ஜியோவும், பாரதியின் ஏர்டெல்லும் 5 ஜியில் மிதக்கும் போது, பி.எஸ்.என்.எல் மட்டும் இன்னமும் 4-ஜிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட, பி.எஸ்.என்.எல் புதைக்கப்பட்டுவிட்டது.

பொதுத்துறைகள் விற்கப்படுவதாலும், புறக்கணிக்கப்படுவதாலும் இந்தியப் பொருளாதாரம் மட்டும் சரியவில்லை கூடவே இதுவரை இடஒதுக்கீட்டின் கீழ் இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுவந்த ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, பட்டியல்-பழங்குடி மக்களின் வேலைவாய்ப்புகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. இருக்கிற ஒரு சில வேலைகளையும், ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிக்கும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட முற்பட்ட சாதியினரை, அறிய வகை ஏழைகள் என அறிவித்துப் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கிடு (EWS) என்ற பெயரில் பறித்துக் கொண்டுவிட்டது மோடி அரசு.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7

Tuesday, 21 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7

 VII

குஜராத் இனப்படுகொலை

முதலில் மோடியை குஜராத்தின் முதலமைச்சராக்கி, குஜராத்தின் வளர்ச்சி நாயகன் என்கிற பிம்பத்தைக் கட்டமைத்தது RSS. குஜராத் மாநிலம் வேகமாக வளர்ந்து வருதாகக் கதை அளந்தார்கள். அதற்கு, “குஜராத் மாடல்” என்று நாமகரணம் சூட்டி அவர்களுக்குள்ளாகவே அகமகிழ்ந்து கொண்டார்கள். குஜராத்தின் வளங்களைக் கொள்ளையடிக்க அதானிக்கும், அம்பானிக்கும் பட்டுக் கம்பளம் விரித்ததைத் தவிர மோடி வேறு எதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் கைம்மாறாக அவர்கள் மோடிக்குக் கோடிகளை வாரிக் கொடுத்தனர். 

இவற்றை எல்லாம் மூடிமறைப்பதற்காக இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைத்து, ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும் கோத்ரா இரயிலை இஸ்லாமியர்கள்தான் எரித்தார்கள்  என்கிற பொய்யைத் திட்டமிட்டே பரப்பி, “இஸ்லாமியர்களுக்குப் பாடம் புகட்டுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்து, 2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது RSS கும்பல். இந்தத் தாக்குதல் மூலம் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்து டெல்லிக் கோட்டைக்குப் பாதை அமைத்துக் கொண்டார் மோடி. 

குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் படுகொலைகளுக்கு மோடிதான் காரணம் என்பதை அம்பலப்படுத்தி பிபிசி நிறுவனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட ஆவணப்படத்தை மோடி அரசு தடை செய்ததன் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிரானப் படுகொலைகளை மூடிமறைக்க முயன்றது. ஆனால் தடையையும் மீறி இரத்தக்கரை படிந்த மோடியின் கோரப் பற்கள் வெளியே தெரிவதை அவர்களால் மறைக்க முடியவில்லை.

டிஜிட்டல் பரிவர்த்தனை

2014  ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என ஆசை வார்த்தைக் கூறி அனைவரையும் வங்கிக் கணக்குத் தொடங்கச் சொல்லி நம்மை வங்கி வலைப்பின்னலில் சிக்க வைத்தார்.  குறைந்தபட்ச இருப்பு இல்லை எனக்கூறி நம் பாக்கெட்டில் இருந்த பணத்தை எல்லாம் வங்கிகள் அபகரித்துக் கொண்டதைத் தவிர வேறு எதைக் கண்டோம் நாம்?

எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என மாயாஜாலம் காட்டினார் மோடி. நாமும் அதை நம்பி ஜி-பே, கூகுள்-பே என அதன் பின்னால் ஓடினோம். இன்று அதற்கும் கட்டணம் வசூலித்து கல்லாக் கட்டுகிறது மோடி அரசு.

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சங்களை இழந்த பலர் கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றினால், அதைக் கிடப்பில் போட்டு வேடிக்கைக் காட்டுவதோடு, தற்கொலைகளுக்கு வெண்சாமரம் வீசி வருகிறார் ஆளுநர்  RSS இரவி. 

பண மதிப்பிழப்பு

கள்ளப் பணம் நாட்டில் பெருகிவிட்டதாகவும், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை பலர் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பர் 8 அன்று திடீரென அறிவித்தார் மோடி. ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்த ரூபாய் நோட்டுகள் உருவப்பட்டன. கார்டைச் சொருகிய போது  .டி.எம் எந்திரங்கள் நம் முகத்தில் காரி துப்பிய போதும், அதைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தேமேயொழிய மோடியின் முகத்தில் காரித்துப்ப வேண்டும் என எண்ணியதில்லை.

வங்கிக்குச் சென்று மணிக் கணக்கில் கால்கடுக்க நின்றும் வெறும் கையோடு திரும்ப வேண்டியதாயிற்று. அன்றாட தேவைக்கும், அவசரத் தேவைக்கும் பணம் கிடைக்காமல் மக்கள் பரிதவித்தனர்.  ஏதோ கருப்புப் பணம் ஒழிந்தால் சரி என மக்களும் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைத் தாங்கிக் கொண்டனர். அதன் பிறகு புதிய 500 ரூபாய் தாள்களையும் 2000 ரூபாய் தாள்களையும் புழக்கத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால் இன்று 500 ரூபாய்த் தாள்களை மட்டுமே பார்க்க முடிகிறது. 2000 ரூபாய்த் தாள்கள் எங்கே சென்றன என்பது மர்மமாகவே உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்தன. அதன் விளைவுதான் இன்று நாம் காணும் ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்திய அதானியில் இமாலய நிதி மோசடி.

விலைவாசி உயர்வு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும், அதன் விளைவாக விலைவாசி குறையும் என நம் நாவில் தேன் தடவினார்கள். நாமும் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு மீண்டும் மோடியை பிரதமராக்கினோம். என்ன நடந்தது?

2014 க்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சுமார் 400 ரூபாயாக இருந்த போது விலைவாசி விண்ணை முட்டுவதாகக் கூப்பாடு போட்டவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இன்று ஒரு சிலிண்டர் கேஸ் விலையை 1100 ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டனர். 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.103. ரூ.55 க்கு விற்பனை செய்யப்பட் டீசல் விலை இன்று ரூ.95. மோடியை மீண்டும் பிரதமராக்கியது நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொண்ட கதையாவிட்டது நமது கதை.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்