Sunday, 14 January 2024

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்?

பார்ப்பனியம் கோலோச்சிய மன்னராட்சி காலங்களில், ஒடுக்கப்பட்ட மற்றும் சூத்திர சாதி மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவெங்கும், ஏன் பார்ப்பனியம் கோலோச்சிய எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை. 

நமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் தற்குறிகளாக இருந்ததற்குக் காரணம் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதனால்தான். இன்றைய 'சீனியர் சிட்டிசன்கள்' இதை நேரடியாகக் கண்டவர்கள்.

மராட்டியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கொடுக்க முயன்ற ஜோதிராவ்-சாவித்திரி பாய் புலேயின் போராட்டங்கள் இதைத்தான் உணர்த்துகிறது. தமிழ் நாட்டில் நீதிக் கட்சி, அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் கல்வியை பரவலாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அவர்களின் காலனி ஆதிக்கத் தேவைக்காக கல்வி அனைவருக்கும் பரவலாக்கப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு திராவிட இயக்கங்களைக் குறை கூற புறப்பட்ட சங்கிக் கூட்டம், 

"திராவிட இயக்கம்தான் தமிழர்களுக்குக் கல்வி கொடுத்ததா? அதற்கு முன்னர் தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கவில்லையா? சங்க இலக்கியங்களைப் படைக்கவில்லையா? பக்தி இலக்கியங்களைப் படைக்கவில்லையா?" என்று எதிர்வாதம் செய்கின்றனர். 

சில தமிழ் தேசிய அரைகுறைகளும், நாம் தமிழர் சீமானின் தம்பிகளும் இதை அப்படியே வாந்தி எடுக்கின்றனர். சீமானின் தந்தை யாக்கோபுவும், அவரது பாட்டனும் முப்பாட்டனும்,  ஏன் வள்ளுவனைப் போல, ஔவைப் பாட்டியைப் போல, கம்பனைப் போல  இலக்கியங்களைப் படைக்க முடியவில்லை? இலக்கியம் இருக்கட்டும், குறைந்த பட்சம் கைச்சாத்தாவது இடத் தெரிந்ததா? இதற்கெல்லாம் விடை தேடாமல் விடலைத்தனமாக பேசுவதால் யாருக்கு இலாபம்?

தமிழ் செழித்து விளங்கியதும், சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டதும் பார்ப்பனியம் கோலோச்சாத காலகட்டத்தில். ஒரு காலத்தில், கல்வியில் சிறந்து விளங்கிய தமிழ்ச் சமூகம், இடையில் தற்குறிகளாக மாறியதற்கு பார்ப்பனியம்தான் காரணம்; சனாதனம்தான் காரணம் என்பதை மூடி மறைப்பதற்காக, திராவிட இயக்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கின்ற வேலையை சங்கிக் கூட்டம் செய்கிறது. 

இவர்கள் திராவிட இயக்கத்தை வசை பாடுவது என்பது, மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவையும் வசை பாடுவதற்கு ஒப்பாகும்.

சனாதன-பார்ப்பனிய எதிர்ப்பின்  அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இன்றளவும் இருப்பது திராவிட கருத்தியல்தான். திராவிடக் கருத்தியலை ஒழித்துக் கட்டினால், பார்ப்பன எதிர்ப்பு மட்டுப் பட்டுவிடும் என்று பார்ப்பனர்கள் கருதுகின்றனர். 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எதிரான, சனாதனக் கோட்பாடு, அதாவது இந்து மதக் கோட்பாடு நடைமுறையில் இருக்கும் வரை, அதாவது சாதியும், தீண்டாமையும் நீடிக்கும் வரை திராவிடக் கருத்தியல் தேவைப்படுகிறது. 

சாதியும், தீண்டாமையும் சரியானது, அவசியமானது, தேவையானது என்பதுதான் சனாதனத்தின் மையக் கருத்து. இதை மேலும் உயிர்ப்பிக்கவும் நிலைநாட்டவும் பார்ப்பனர்கள் விரும்புகின்றனர். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் பாரதிய ஜனதா கட்சி. அதை பார்ப்பனிய ஜனதா கட்சி என்று அழைப்பதுதான் சாலப் பொருந்தும். 

மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி என்பது பார்ப்பனிய மீட்டுருவாக்கத்தின் பொற்காலம். இந்த 10 ஆண்டு காலத்தில் கோவில்கள் பெருகின. கோவில்கள் பெருகினால் பார்ப்பனர்களின் வயிறு மட்டும்தான் நிறையும்.

அரசு நடத்தும் ஆலைகளும், கல்விச்சாலைகளும் இழுத்து மூடப்பட்டு ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையும் வேலை வாய்ப்பும் பறிக்கப்பட்டு வருவதை கடந்த 10 ஆண்டுகளில் நிறைவே பார்த்து விட்டோம்.

இத்தகைய மக்கள் விரோத, பார்ப்பன பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும் பேசுவது பார்ப்பனியத்துக்கு பல்லக்குத் தூக்குவதற்கு ஒப்பாகும்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்? நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.

ஊரான்

Sunday, 5 November 2023

மழைக்காலம்: வடிகால்களை சரி செய்யுமா விடியல் அரசு?

போதிய மழை பெய்து ஓடைகளில், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பினாலும் வயல்களுக்குச் சென்று சேரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்தாலும், தூர்வாரப்படாமல் இருப்பதாலும் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சென்று சேராததால் பயிர்கள் கருகி நாசமாகின்றன; 

அதேபோல வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்தாலும் தூர்வாரப்படாமல் இருப்பதாலும் பெருமழை காலங்களில் பெய்யும் மழைநீர், வடிய வழி இல்லாததால் மேலுள்ள வயல்களில் வளரும் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமாகின்றன.

கோப்புப் படம்

ஆதிக்கச் சக்தியினர் மட்டுமன்றி சாதாரண விவசாயிகள் உள்ளிட்ட அனைவருமே தங்களின் தன்னலத்திற்காக இத்தகைய ஆக்கிரமிப்புகளை செய்துள்ளனர். பல கிராமங்களில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களே இல்லை என்ற நிலைதான் உள்ளது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் முடங்கிப் போனதனால்தான், 30 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத இந்த நிலைமை தற்போது நிலவுகிறது. தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமையின் காரணமாக இத்தகைய நிலைமைகளை விவசாயிகளே கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர். இறுதியில் அவர்களே நட்டத்துக்கும் ஆளாகின்றனர்.

நிலைமைகளைப் புரிந்து கொண்டு, தன்னலத்தைக் கைவிட்டு, முடங்கிக் கிடக்கும் உள்ளாட்சி நிர்வாகத்தைத் தட்டி எழுப்பி, நீர் வரத்து மற்றும் வடிகால் வழிகளை சரி செய்யவில்லை என்றால் இனிவரும் காலங்களில் வேளாண்மையை கைவிட்டு திருவோடு ஏந்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். 

நகர்ப்புறங்களில் சிறு மழைக்கே வீதிகளில் நீர் தேங்கி வடியாமல், வீடுகளுக்குள் புகுவதற்கான காரணம், வடிகால் வசதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும் தூர்வாரப்படாமல் இருப்பதாலும்தான். 

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சீர்குலையத் தொடங்கிய உள்ளூராட்சி நிர்வாகம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீவிரமாகி, எடப்பாடி ஆட்சிக் காலத்தில் உச்சத்தைத் தொட்டது. இடையிடையே வந்த திமுக ஆட்சியிலும் இது தொடரவே செய்தது. இன்றும் தொடர்கிறது. 

நாம் விழித்துக் கொண்டு போராடவில்லை என்றால் அழிவு நமக்குத்தான்; அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அல்ல.

தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையில், வடிகால் வசதி இல்லாததால் வயலில் தேங்கிய மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகியதை ஒரு விவசாயி விவரித்த அவலக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு, வேதனையோடு இந்தப் பதிவை எழுதுகிறேன். 

ஊரான்

 

 

Thursday, 19 October 2023

பங்காரு அடிகளார் மரணம்: உணர்த்தும் பாடம் என்ன?

"1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது, இவரைத் தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்."

2011 ஆண்டு, பிப்ரவரி மாதம் சாமியார்கள் குறித்த எனது கட்டுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டேன்.

தற்போது பங்காரு அடிகளார் மறைந்து விட்ட நிலையில், அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால் அவரது மறைவு குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பங்காரு அடிகளார்

ஒரு நபர் சமூகத்தில் பிரபலமடைந்துவிட்டால், அவரது கடந்த காலத்தையும் மறந்து, அவரது தொழில் இரகசியத்தையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல மக்கள் பழகிக் கொண்டு விட்டார்கள். தொடக்க காலத்தில் கொலைக் குற்றசாட்டுக்கு ஆளான பங்காருவும் இதில் அடக்கம். 

பெண்கள் சூத்திரர்களுக்கு ஒப்பானவர்கள், மாதவிடாய் பெண்கள் தீட்டுக்குரியவர்கள் என்று எந்த சனாதன இந்து மதம் பெண்களை இழிவுபடுத்தி ஓரங்கட்டியதோ, அதே இந்துப் பெண்களை நேரடியாக பூஜை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் பங்காரு அடிகளார் இந்து மதத்தில் ஒரு 'புரட்சியை' ஏற்படுத்தினார் என்பதனால் அவரை ஏன் ஆதரிக்கத் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. பங்காரு அடிகளாருக்கு முன்பிருந்தே எண்ணற்ற குல தெய்வங்களுக்கு பெண்கள் பூஜை செய்வது நடந்து கொண்டுதான் இருந்தது; தொடர்ந்து நடக்கவும் செய்கிறது.

மக்களின் உளவியலைப் புரிந்து கொண்டவர்கள்தான் சாமியார்களாக வளர முடிகிறது. அந்த வகையில் வட மாவட்டங்களில் குறிப்பாக வன்னியர் சாதிப் பெண்களின் உளவியலை நன்றாகப் புரிந்து கொண்ட பங்காரு அடிகளார் அதை அறுவடை செய்து கொண்டார். 

பூஜை செய்கிற பெண்கள், தாங்கள் சனாதனத்திற்கு எதிராகச் செயல்படுகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது; பங்காருவும் அத்தகைய எண்ணத்தோடு பெண்களை பூஜையில் ஈடுபடுத்தவில்லை. அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருந்திருக்குமேயானால் சங் பரிவார கும்பலுக்கு எதிராக தன்னுடைய பக்தர்களை வளர்த்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்ததாகச் சான்றுகள் இல்லை. மாறாக,  வன்னிய சாதி மக்கள் சங் பரிவாரக் கும்பல் பக்கம் சாய்ந்து வருவதுதான் மிச்சம். இதில் அன்புமணியின் பங்கும் உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஏராளமான கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, அதன் மூலம் எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி-மருத்துவச் சேவையை செய்துள்ளார் என்றும் பங்காருவைப் புகழ்கின்றனர். இது உண்மை என்றாலும்கூட அவரால் இதை எப்படிச் செய்ய முடிந்தது என்பதை பரிசீலிக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கல்வி-மருத்துவம் வழங்க வேண்டியது அரசினுடைய கடமை. அதை ஒரு சாமியார் செய்கிறான் என்பதற்காக நான் வெட்கப்பட வேண்டுமே ஒழிய பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏழை எளிய மக்கள் அன்றாடம் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதிலிருந்து விடுபட வேண்டுமானால், ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மூடநம்பிக்கைகள் அவர்களிடைய ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. தங்களது துன்ப துயரங்களுக்கு நிரந்தரமானத் தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு காணிக்கைகளை அள்ளிக்கொண்டு சாமியார்களை நோக்கி ஓடுகிறார்கள் அப்பாவி மக்கள். அங்கே, சாமியார்களின் உண்டியலும் தொந்தியும் பெருகுகிறது. மனதை மட்டும் நிறைத்து கொண்டு பக்தர்கள் வீடு திரும்புகிறார்கள்; வந்த பிறகு மீண்டும் அதே வாழ்க்கை. 

ஒவ்வொரு முறையும் தனக்குத் துன்ப துயரம் நேரும் பொழுது, மீண்டும் மீண்டும் சாமியார்களையும் கோவில்களையும் நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், அவர்களின் துன்ப துயரங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. மாறாக, ஆழமான மூடநம்பிக்கைகள் மேலும் மேலும் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. மக்களின் மூடநம்பிக்கைகள்தான் சாமியார்களின் மூலதனம். மூடநம்பிக்கைகள் பெருகப் பெருக மூலதனமும் பெருகத்தானே செய்யும். அப்படித்தான் கோடிக்கணக்கிலே பங்காருவிடம் சொத்துக்கள் குவிந்தன.

மக்களின் சிந்தனை மட்டத்தை எவன் உயர்த்துகிறானோ அவனது மரணத்தைத்தான் பேரிழப்பாகக் கருத முடியும். பரோபகாரியாக இருப்பதனால் மட்டும் ஒருவன் போற்றுதலுக்கு உரியவனாகிவிட மாட்டான். 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Monday, 16 October 2023

தியானம் - வேலையற்றவர்களின் வேலை!

தியானம் (meditation) நல்லதா?

ஹோமியோபதி கோட்பாட்டின்படி தியானம் (meditation) என்பது ஒரு நோய். desire to be alone, don't want to talk with others என்கிற குறிகள் கன்னபிஸ் இன்டிகா என்ற ஹோமியோ மருந்து நிரூபணத்தில் உறுதி செய்யப்பட்டவை. மேற்கண்ட குறிகள் இயல்புக்கு மாறானவை. இயல்புக்கு மாறானவைதான் நோய்க்குறிகள். 

குழப்பத்தில் (confusion) உள்ளவர்கள்தான் வழி தெரியாத போது தியானத்தை நாடுவார்கள். தெளிவாக இருப்பவர்களுக்குத் தியானம் தேவைப்படாது. தியானம் என்பது தற்காலிகமாக பிரச்சனையிலிருந்து ஒதுங்கி இருப்பது. தியானத்தில் இருக்கும்போது கூட அவன் மனதில் பிரச்சனைகள்தான் ஓடிக்கொண்டிருக்கும். தியானத்திலிருந்து வெளியே வந்த பிறகு குழப்பங்கள் தொடரவே செய்யும்.

பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண தெளிவுதான் (clarity) தேவை. தெளிவு பெற விவரங்கள் தேவை. அதற்கு வெளி உலக அனுபவங்களும்,  உரையாடல்களும், விவாதங்களுமே உதவும். இதற்கு தியானம் ஒரு போதும் உதவாது.

confusion is disease, clarity is health என சும்மாவா சொன்னார், கிரேக்க நாட்டு ஹோமிமியோபதியர் வித்தல் காஸ். 

தியானம் - வேலையற்றவர்களின் வேலை.

ஊரான்

Thursday, 28 September 2023

"இந்தியா முன்னேற வேண்டுமானால் சனாதனத்தை வேரடி மண்ணோடு அழித்து ஒழிக்க வேண்டும்!" - அம்பேத்கர்

தர்காவில் தட்சணை வாங்கும் பிராமணன்

"பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில், பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டுதோறும் உர்ஸ் விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

அவர் முஸ்லிம் உடை அணிந்து தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்திற்காக செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்" என்கிறார் அம்பேத்கர்.

முன்னேற்றத்திற்கான முதல் படி

"புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க முடியும் என்றாலும், அந்த அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஏனென்றால், ஐயம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது. ஆய்வு இல்லை என்றால் அறிவு வளராது. ஏனென்றால், அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல. தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், அதன் காரணமாகப் பெரும் தியாகமும் செய்வதன் விளைவாகத்தான் அறிவு கிட்டுகிறது.

ஐயம் குறுக்கிட்டால்தான் ஆய்வு தொடங்கும். எனவே, ஐயப்படும் செயல்தான் எல்லாம் முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது. அல்லது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமைகிறது எனக் காண்கிறோம்"

அறிஞர் பக்கிள் அவர்களின் "நாகரிகத்தின் வரலாறு" என்கிற நூலிலிருந்து மேற்கண்ட மேற்கோள் ஒன்றை எடுத்துக்காட்டி அம்பேத்கர் கீழ்கண்டவாறு எழுதுகிறார்,

உதவாக்கரை வேதங்கள்

"பிராமணர்கள் ஐயம் எழுவதற்கு இடமே வைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் விஷமத்தனமான ஒரு கருத்தை மக்களிடையேப் பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை, தவறுக்கு இடமற்றவை என்பதே இந்தக் கருத்து. இந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்று விட்டதென்றால், இந்து நாகரீகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடை நாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்க வேண்டும். வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள்தான் அவற்றைப் புனிதம் என்றும், பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் பிற்காலத்தில் இடைச் செருகளான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள் பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன.

இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள் எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, தங்களை வழிபடுபவருக்குக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளும் வேண்டுகோளைத் தவிர வேறெதுவும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமல் போயிற்று.

இந்தியாவின் வருங்காலம்

ஆனால் பிராமணர்கள் பரப்பி உள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியிலிருந்து, இந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த விடுதலை ஏற்படாமல், இந்தியாவுகு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை நன்றாக அறிந்தே இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத்தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்".
என்று, "இந்து மதத்தில் புதிர்கள்"  என்ற நூலுக்கான முன்னுரையில் தெரிவிக்கிறார் அம்பேத்கர். (தொகுதி: 8)









புதை சேற்றில் இந்து மதம்

மேலும், "பிராமணர்கள் இந்துக்களை ஒரு புதை சேற்றில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியச் செய்வதற்காகவும் பகுத்தறிவு ரீதியான சிந்தனைப் பாதையில்இந்துக்களை இட்டுச் செல்வதற்காகவும் இந்த நூலை தான் எழுதி உள்ளதாகக் குறிப்பிடுகிறார்" அம்பேத்கர். 

"இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது" என பிராமணர்கள் பரப்பி வரும் கருத்து, "உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்த புத்தகத்தில் எடுத்துக்காட்ட" அம்பேத்கர்  முயன்றுள்ளார்.

புதை சேற்றில் சிக்கித் தவிக்கும் இந்துக்களை, பிராமணர்களின் பிடியிலிருந்து மீட்பதற்கும், சனாதனத்தை அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் அம்பேத்கரின் எழுத்துக்கள் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.

ஊரான்