Thursday, 22 August 2024

பிரபலம் எனும் பாழுங்கிணறு: ஜாக்கிரதை!

பொதுவுடமைக் கோட்பாட்டிற்குக் குறைவான எது ஒன்றும், ஒன்று அது சீர்திருத்தத்திற்கு  வித்திடும் அல்லது பிழைப்புவாதத்திற்கு இட்டுச் செல்லும். திரைத்துறை மூலம் கிடைக்கும் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டோ அல்லது சாதி - மதப் பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டோ கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் என்று பேசிக்கொண்டு சிலர் அரசியலுக்குள் நுழைவார்கள்.

பிழைப்பதற்கு இதுவரை எந்தக் கட்சியிலும் பொறுப்பு கிடைக்காமல் வெளியில் காத்திருந்த புதிய முகங்களும், மற்றபிற கட்சிகளில் நீண்ட காலமாக இருந்தும், பொறுப்பும் பிழைக்க வாய்ப்பும் கிடைக்காதவர்களுமே முதலில் இத்தகையப் புதிய கட்சிகளை நோக்கிப் படையெடுப்பார்கள்


பெரும்பாலும் இவர்களே புதிய கட்சியின் கிளை, வட்ட, ஒன்றிய, மாவட்டப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள். பாமர மக்களும் பிரபலம் எனும் கவர்ச்சியில் மயங்கி பாழுங்கிணற்றை நோக்கி நகருவார்கள்.

அரசு ஒப்பந்தங்களை எடுத்து காசு பார்ப்பது, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட உரிமங்களைப் பெறுவது, தொழில் தொடங்குகிறேன் என்ற பெயரில் வங்கிகளில் இருந்து சுலபமாகக் கடன் பெற்று பிறகு பட்டை நாமம் போடுவது, அரசு புறம்போக்கு நிலம் மற்றும் கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிலங்களை ஆக்கிரமிப்பது அல்லது அபகரிப்பது, லட்சங்களிலும் கோடிகளிலும் புரளும் கொடுக்கல் வாங்கல்களில் நீதி அரசர்களாக அவதாரம் எடுப்பது உள்ளிட்டத் தொழில்களைச் செய்வதற்கு மேற்கண்ட கிளை-வட்ட-ஒன்றிய-மாவட்டப் பொறுப்புகளே இவர்களுக்கு ஆயுதங்களாகப் பயன்படுகின்றன.  

எங்கேயாவது எக்குத் தப்பாக சிக்கிக்கொண்டால் அதே பொறுப்புகள்தான் இவர்களுக்குக் கேடயங்களாகவும் பயன்படுகின்றன

கஞ்சா-போதைப் பொருள் கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், தில்லுமுல்லு, மோசடி, ஏமாற்று, அடிதடி, மோதல், கொலை இவைதான் இவர்களின் வழமையானச் செயல்கள். நில மோசடி உள்ளிட்ட கட்டப் பஞ்சாயத்துகளில் நடைபெறும் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் - பொதுவுடமைக் கட்சிகளைத் தவிர்த்து - பிற சர்வ கட்சியைத் சேர்ந்தவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

ஒரு சில ஆண்டுகள் கழித்து இத்தகையப் புதிய கட்சிகள், பாழும் கிணறுதான் என்பதை பட்டுணர்ந்து, மக்கள் இவர்களை நிராகரிக்கும் பொழுது, ஏதோ ஒரு பின்புலத்தைக் கொண்டு மீண்டும் ஒருவர் வருவார்.  வரலாறுகளை விட எதிர்காலமே மக்களுக்கு முக்கியம் என்பதால், மீண்டும் முதலில் இருந்து தொடங்குவார்கள்.

பொதுவுடைமை பேசுவோர் மத்தியில் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவர்கள் மட்டும்தான் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம்

களைகளுக்கு உரம் போட்டு வளர்த்தால், பொதுவுடமை எனும் பயிர்கள் எப்படி வளரும்? களைகளை அப்புறப்படுத்தி பயிர்களை 
அரவணைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்குமல்லவோ?

பிரபலம் எனும் பாழுங்கிணறு: ஜாக்கிரதை!
 
 ஊரான்

Wednesday, 21 August 2024

மறந்தும் மனிதர்களைப் பற்றி மட்டும் எழுதி விடாதே!

அருந்ததியர்களை இழிவாகப் பார்க்கும் பறையர்களைப் பற்றி எழுதினால் பறையர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

பறையர்களை இழிவாகப் பார்க்கும் வன்னியர்களைப் பற்றி எழுதினால் வன்னியர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

வன்னியர்களை இழிவாகப் பார்க்கும் முதலியார்கள்-வெள்ளாளர்களைப் பற்றி எழுதினால் முதலியார்கள்-வெள்ளாளர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

பள்ளர்களை இழிவாகப் பார்க்கும் முக்குலத்தோரைப் பற்றி எழுதினால் முக்குலத்தோர் கோபித்துக் கொள்கிறார்கள்.

முக்குலத்தோரை
இழிவாகப் பார்க்கும் நாய்க்கர்களைப் பற்றி எழுதினால் நாய்க்கர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

நாடார்களை இழிவாகப் பார்க்கும் பிள்ளைமார்கள் பற்றி எழுதினால் பிள்ளைமார்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

பிறர் எல்லோரையும் இழிவாகப் பார்க்கும் பார்ப்பனர்களைப் பற்றி எழுதினால் பார்ப்பனர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். 

ஏதோ ஒரு வகையில், 
சாதிய இழிவுகளைப் பற்றி 
யாரும் எழுதக்கூடாது என்பதே இவர்கள் அனைவரின் எண்ணமாக உள்ளது. 



எனவே, எழுது

மேகங்களை, மழைத்துளிகளை
நதிகளை, குளங்களை
நிலவை, கதிரவனை 
பகலை, காரிருளை
மலைகளை, பனித்துளிகளை
விதைகளை, தளிர்களை
செடி-கொடிகளை, மலர்களை, 
மரங்களை, காய்-கனிகளை 
 
மான்களை, மயில்களை
சிங்கம் புலி கரடிகளை 
ஆடுகளை, மாடுகளை 
நாய்களை, பன்றிகளை கோழிகளை, குருவிகளை
நாரைகளை, தேரைகளை

இவை, 
எவை பற்றியும் எழுது
எப்படி வேண்டுமானாலும் எழுது
எழுதிக் கொண்டே இரு
இவைகளுக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே?
ஆனால், மறந்தும்
மனிதர்களைப் பற்றி மட்டும் 
எழுதி விடாதே!
அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஆயிற்றே?

ஊரான்

திருக்குறள்: முக்காலத்திற்கும் ஏற்றதா? அப்படியானால்...?

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". -குறள்.

இதில் எதைக் கற்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரா என்ன? நல்ல நூல்களைத்தான் கற்க வேண்டும், அதில் கூறப்பட்டுள்ள
நல்லவைகள்படிதான் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு நாமே பொழிப்புரை எழுதிக் கொள்கிறோம்.

எதைக் கற்றாலும் அதற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் என்பதுதானே இந்தக் குறளின் பொருள். 

அப்படியானால், மத்தியப் பிரதேச கிராமங்களில் சிறுவர்கள் கற்பதும், அதற்குத் தக அவர்கள் நடப்பதும் சரியன்றோ?

"ம.பி கிராமங்களில் திருட்டு, கொள்ளை பற்றி சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கும்பல்! 

மத்திய பிரதேசம் ராஜ்கர், மாவட்டத்தில் காடியா, குல்கேடி ஹல்கேடி ஆகிய கிராமங்களில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பிக்பாக்கெட், வழிப்பறி, கூட்டமான இடங்களில் பைகளைப் பறிப்பது, வேகமாக ஓடுவது, போலீஸ்காரரை ஏமாற்றுவது, பிடிபட்டால் தாக்குதலை சமாளிப்பது என சகல பயிற்சி அளிக்கப்படுகிறது." 

இது இந்து தமிழ் திசை நாளேட்டில், ஆகஸ்டு 21, 2024 அன்று வெளியான செய்தி. 


பயிற்சி பெற்ற இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேற்கண்ட திருட்டுச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கற்றதைத்தானே இவர்கள் செயல்படுத்துகிறார்கள் "நிற்க அதற்குத் தக" என்பது இங்கும் பொருந்தும்தானே? இப்படியும் பொழிப்புரை எழுதலாம்தானே?

நேர்மையாய் வாழ வழியற்ற நிலைமை இருப்பதனால்தானே இப்படி மாற்று வழிகளில் வாழ மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். முறையற்ற வழியில் பணம் பறிக்கும் பயிற்சி அங்கு மட்டுமா அளிக்கப்படுகிறது? அரசு அலுவலகங்களில், காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில் கையூட்டு பெறும் பயிற்சியை எங்கே கற்றுக் கொண்டார்கள்? யார் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது? இதையும் சேர்த்து அல்லவா நாம் பரிசீலிக்க வேண்டும்.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்கணக்கு நூல்கள் அனைத்துமே சமுதாயம் மிகவும் கெட்டுச் சீரழிந்திருந்த ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. சமுதாயத்தை மாற்றி அமைக்கத் துணியாமல் உபதேசங்களை மட்டும் அன்று அழகாய் வடித்துக் கொடுத்தார்கள்.

அதே உபதேசங்கள் இன்றும் போதிக்கப்படுகின்றன. குறள் முக்காலத்துக்கும் பொருந்தும் என்கிறார்கள். அப்படியானால், சமுதாயம் கெட்டுச் சீரழிந்த சமுதாயமாகவே தொடரட்டும்,  ஊதேசங்களை மட்டுமே நாம் போதித்துக் கொண்டே பழம் பெருமை பேசிக்கொண்டே இருப்போம். சமுதாயம் எக்கேடு கெட்டுச் சீரழிந்தால் என்ன என்கிற கவலை இன்றி, அதை மாற்றி அமைக்கின்ற போர்க்களத்தில் தம்மை இணைத்துக் கொள்ளாமல் வெறும் உபதேசங்களை மட்டுமே போதிப்பது மேதைத்தனம் பொருந்திய கோழைத்தனம் அல்லவோ? 

பழைய உபதேசங்களுக்கு பொழிப்புரை எழுதுவதை நிறுத்திவிட்டு, சமுதாயத்தைப் புரட்டிப் போடும் புது பொழிப்புரை எழுதாதவரை, ஞானிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள், உபதேசங்களும் நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்! 

ஊரான்

Monday, 19 August 2024

வினேஷ் போகத்: 'மல்'யுத்தம் தொடர்கிறது!

கொடுங்கோன்மை மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டி, சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்திற்கு வித்திட்ட பிரஞ்சுப் புரட்சி, அதன் நினைவாக எழுப்பப்பட்ட ஈஃபிள் கோபுரம், இரண்டு மாத காலமே நீடித்தாலும்  பொதுவுடைமை பூங்காவின் நுழைவு வாயில் என கருதப்படும்  பாட்டாளி வர்க்கத்தின் பாரிஸ் கம்யூன் என பிரான்சுக்குப் பெருமைகள் பல உண்டு.

உடலையே வில்லாக வலைத்து, உலகையே தன் பக்கம் ஈர்த்த ரொமானியாவின் நாடியா எலனா கொமனச்சிகள் இல்லை; மின்னலைக் கிழிக்கும் ஜமைக்காவின் உசேன் போல்ட்டுகள் இல்லை; தண்ணீரில் தாண்டவமாடி தன்னை விஞ்ச இனி ஒருவன் பிறப்பானா என சவால் விடும் அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்புசுகள் இல்லை.
 
ஆனால், வெற்றிக் களிப்பில் கசிந்த ஆனந்த கண்ணீருக்கும், தோல்வியாலும் துரோகத்தாலும் வழிந்த கண்ணீருக்கும் இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பஞ்சமில்லை.
 
கிராம் கணக்கில் எடை போட இது என்ன கோல்டு வியாபாரமா? தங்க மாலையை சூட வேண்டியவள் முதுகில் துருப்பிடித்த நூறு கிராம் ஆணியைச் சொருகினார்கள்.
 
ஆனந்தக் கண்ணீரில் தளும்பு வேண்டிய நம் கண்கள், வெம்பிய நீரையே வெளியேற்றியதால் பருவ மழை காலத்திலும் தேசம் வெம்பியது. ஆடுகளத்தில் அவளை வீழ்த்த முடியாது என உணர்ந்ததாலோ என்னவோ களத்திலிருந்தே அவளை அப்புறப்படுத்த  முனைந்தார்கள். 


இது சதியா, இல்லை தவிர்க்க முடியாமல் நிகழ்ந்த பிழையா என்கிற வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் பிரிட்ஜ் பூஷனங்கள், பி.டி.உஷாக்களின் முகங்கள் வெளிறிப் போயின. சங்கிகள் சருகாய் மாறின.
 
ஆதாயம் அடைந்தால்  போதும் என தலை கவிழும் எடப்பாடிகளின் வாரிசு அல்ல  அவள். அநீதிக்கு எதிராய்  நெஞ்சை நிமிர்த்தி ஆர்த்தெழும் ஜான்சி ராணியின் அவதாரம் அவள்.
அதனால்தானோ என்னவோ வெறுங்கையோடு ஊர் திரும்பிய அவளை நாடே கொண்டாடி மகிழ்ந்தது.
 
ஆகஸ்ட் 17 சனிக்கிழமை, காலை பத்து மணி, வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட வஞ்சியை வரவேற்க டெல்லி விமான நிலையமே நிரம்பி வழிந்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி கிராமத்தை நோக்கி அவள் திறந்த வெளி ஜீப்பில் அழைத்து செல்லப்படுகிறாள். வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் வரிசைகட்டி வரவேற்கிறார்கள்.
மூன்று மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தைக் கடக்க அவளுக்கு 12 மணி நேரம் ஆகிறது.
 
கோவிலில் தயாரான 750 கிலோ லட்டுக்களை இதுவரை பாதுகாத்து வந்த பத்து வயதே ஆன அன்சஜ் குமார் 'ஒத்த கோடு' நோட்டோடு மேடையின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறான்.  விழா மேடையில் வினிஷா போகத்தை வாழ்த்த பலரும் வருகிறார்கள்.
 
கிராமக் காவலாளி சஞ்சய் பத்தாவது ஆளாக ரூபாய் நூறு, ரக்பீர் மாஸ்டர் 500, ஷாலு பாதல் 5100, குன்வார்பீர் சிங் தலைக்கவசமும்  வாளும் வழங்க, நட்டு குழுமம் 21,000 என  நீள்கிறது அன்பளிப்புகள். லட்டுகள் குறையக் குறைய சிறுவனின் நோட்டுப் புத்தகம் பண மழையால் கணக்கிறது. அவன் டேபிள் ட்ராயரில் போடும் பணம் தங்கத்தைப் போல மின்னவில்லை என்றாலும் "அவள் தனி ஆள் இல்லை" என்பதை அது உணர்த்தியது.

 
"அவளுக்கு ஐந்து வயது இருந்தபோது இரவு நேர காவல் வேலை பார்க்கும் என்னைப் பார்த்து 'அங்கிள் நீங்கள் ரொம்ப தைரியசாலி!' என்பாள். ஆனால், இன்று பார்த்தீர்களா யார் தைரியசாலி என்பதை? உலகின் தைரியமான உறுதியான மகள் அவள்தான்எனக் கண்களில் நீர்வழிய தனது உணர்ச்சிகளைக் கொட்டுகிறார் கிராமக் காவலாளி.
 
அவளது அப்பா இறந்த பிறகு குடும்ப பாரத்தைச் சுமக்கத் தனது தாய்க்கு உதவியாக வயல்களில் உழைத்த அவள், உரிமைக்காக போராடுங்கள் என்று பிறருக்கு எடுத்துச் சொல்லுவாள். பிரிட்ஜ் பூசனுக்கு எதிராக அவள் போராடிய போது அந்த உறுதியை அவளிடம் நான் கண்டுள்ளேன் என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
 
பயிற்சி முடித்து வந்த சில மல்யுத்த மங்கைகளுக்கு, சாமியான பந்தலுக்கு வெளியே பாலும் லட்டும் தருகிறார்கள். வினேஷைப் போல நீங்களும் வர வேண்டும் என்று அவர்களை வாழ்த்துகிறார்கள்.
 
தங்கம் அவளுடையது, இங்கே உள்ள ஒவ்வொருவரின் கனவும் ஒலிம்பிக்காக இருக்க வேண்டும் என்கிறாள் நேகா சங்க்வான் என்கிற விளையாட்டு வீராங்கனை.
 
தனக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆனதால் தன்னால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால், தனது கணவனை அனுப்பி வைத்திருந்தார் அந்த கிராமத்துத் தலைவி. வினேஷ் தொட்ட ஆடையை தனது குழந்தைக்கு அணிவித்தால் அவளைப் போன்றே தனது குழந்தையும் தைரியசாலியாக வரும் என்று அவள் தன் கணவனிடம் தனது குழந்தையின் ஆடை ஒன்றை கொடுத்துனுப்புகிறாள்.
 
சில கிராம்களில் பதக்கம் கை நழுவிப் போயிருக்கலாம். ஆனால் வினேஷின் எடைக்கு எடை வழங்கப்பட்ட நாணயங்கள் அதைவிட பல மடங்கு கணமானது. இவை ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது.
 
நம்மை ஈர்த்த போகத்என்ற தலைப்பில் இளம் டிஜேக்களின் கரோ சுவாகத்…” என்ற இசை நிகழ்ச்சியில் இளைஞர்களின் ஆட்டமும் பெரியவர்களின் வாழ்த்தும் என இரவிலும் பலாலி விழித்துக் கொண்டிருந்தது!

ஊரான்

Saturday, 17 August 2024

எச்சரிக்கை! நம்மைச் சுற்றி வட்டமடிக்கும் youtube சேனல்கள்!

ஒரு கீரையைப் பற்றி youtube சேனல் ஒன்றில் பார்த்தேன். அது குறித்து முகநூலில் எனது பின்னூட்டம்: 

"இந்தக் கீரையில் கால்சியம் இருக்கின்றான். பாஸ்பரஸ் இருக்கின்றான். என்னென்னமோ சத்துக்கள் இருக்கின்றான். ஏதோ ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில போய் ஆராய்ச்சி பண்ணி அதுல உள்ள சத்துக்களைக் கண்டுபிடிச்சது மாதிரி பேசுறான் பாருங்க. 

கிராமப்புறங்களில் கொல்லமேட்டில மானாவாரியா கெடக்கற கீரை அது.  இதைத்தான் எல்லா விவசாயிகளும் பருவ காலங்களில் திங்கிறார்கள். அதுவும் நிறையவே திங்கிறாங்க. அவங்களுக்கெல்லாம் முகப்பரு வரலையா? அவங்க எல்லாம் நோஞ்சானா இல்லையா? எதுக்கு இந்தப் பொழப்பு?


வீடியோ போட்டா காசு வரும் என்பதைத் தவிர இவர்களுக்கு வேற எதுவும் தெரியாது. இயற்கை மருத்துவம், இயற்கை உணவு, நாட்டுச் சமையல் என ஏகப்பட்ட தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான யூடியூப் சேனல்கள் நம்மை சுற்றி வட்டமடிக்கின்றன. நாமும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதால் இவற்றையெல்லாம் பார்த்துத் தொலைகிறோம். சிலவற்றை கடைபிடிக்கவும் செய்கிறோம். 

ஆனால், கடைசியில் பலன் என்னவோ வீடியோ போட்ட யூடியூப் சேனல் காரனுக்குத்தான். நமக்கோ டேட்டா காலியானதும் கண்டதைத் தின்று வயிறு கெட்டதும்தான் மிச்சம்"
****
whatsapp குழுவில் இதன் மீதான விவாதத்தில் எனது பதில்.

" நீங்கள் குறிப்பிடுகின்ற தலைப்புகளுக்கும் (ஆன்மீகம்) எனது பதிவு பொருந்தும். சடங்குகள், சம்பிரதாயங்கள், திருத்தலங்கள், புண்ணிய தீர்த்தங்கள், யாத்திரைகள் என இதிலும் ஏறாளம் உண்டு. 

செய்யச் சொன்னவன்-
போகச் சொன்னவன் youtubeபில் காசு பார்க்கிறான். வரச்சொன்னவனோ  காணிக்கை பார்க்கிறான். ஆனால் நமக்கோ நேரமும் அலைச்சலும் காசும் வீணாகிறது என்பதை பார்க்கத் தவறுகிறோம்!"

ஊரான்