Monday, 17 March 2025

அறுந்த செருப்பு!

பசி எடுக்கிறதோ இல்லையோ மாலை நேரமானால் எதையாவது கொறிக்க வேண்டும் என பழக்கப்பட்ட மக்கள் கூட்டம் சிக்கன் பக்கோடா, மீன்வறுவல், போண்டா, சமோசா, பஜ்ஜி கடைகளையும் பானிபூரி கடைகளையும்  மொய்த்துக் கொண்டிருந்தது. டாஸ்மாக்கின் உபயத்தால் சிலரின் கல்லாப் பெட்டிகள் கணக்கின்றன. பலரின் 'பர்சுகள்' மெலிகின்றன. பணம் புழங்கினால் நாட்டு வளம் பெருகிவிட்டதாக சில பொருளாதாரப் புலிகள் சொல்லுவது உண்மைதானோ என்பதை மெய்ப்பிக்கும் வண்ணமாய் மாலை நேரக் கடைகள் காட்சியளிக்கின்றன.

ஸ்ப்ளெண்டர், பேஷன், ஹோண்டா சிட்டிகள் தங்களது எசமானர்களை இறக்கிவிட்டு, 'சைடு ஸ்டேண்டில்' சாய்ந்து கொண்டு ஒய்யாரமாய் ஓய்வெடுக்கலாம் என்றால் வருவோர் போவோருக்கு இடையூறாய் நிறுத்தப்பட்டிருந்ததால் பலரின் வசவுச் சொற்களை சுமந்து கொண்டு சோகமாய்க் காட்சி அளித்தன.

கோப்புப் படம்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த போது, வேலூர் செல்லும் தனியார் பேருந்து நடத்துனருக்கும், அதற்கு அடுத்துப் புறப்பட வேண்டிய அரசுப் பேருந்து நடத்துனருக்கும் இடையே மிக மூர்க்மாய் சண்டை நடந்து கொண்டிருந்தது. தனது பேருந்து புறப்படுவதற்கு முன்பு அடுத்த பேருந்தில் யாரையும் ஏற்றக் கூடாது என்ற தனியார் பேருந்துக்காரர்களின் எழுதப்படாத சட்டமே சண்டைக்கு அடிப்படை.

எந்தப் பேருந்தில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் அந்த முதலாளிமார்களே தீர்மானிக்கிறார்கள். மீறி அடுத்தப் பேருந்தில் ஏறினால் மிரட்டி இறக்குகிறார்கள். ‘என் பயணம் என் உரிமை’ என்றெல்லாம் இங்கு பேச முடிவதில்லை.

சற்று நேரத்தில் தனியார் பேருந்து புறப்பட, அரசுப் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். காற்றைத் கிழித்துக் கொண்டு வேலூரை நோக்கிப் பேருந்து முன்னே விரைய, கிழிபட்ட காற்றோ சன்னல் இடைவெளிக்குள் புகுந்து முகத்தில் மோதி பின்னே மறைந்தது‌. பேருந்தின் வேகத்திற்கேற்ப காற்றின் வேகம் மாறுபடும் என்பதால் முகத்தைத் தழுவி நழுவும் அளவுக்கு சன்னல் திறப்பை குறைத்துக் கொண்டேன்.

மேற்கே கதிரவன் மறைய, கிழக்கின் இருள் மலைகளைப் போர்த்த, பேருந்தின் வேகத்திற்கேற்ப பக்கவாட்டில் தோன்றிய மலைகளும் பின்னோக்கி விரைந்து மறைந்தன. 

இது பங்குனியின் தொடக்கம். குளிரும் இல்லை, கடும் கோடையும் இல்லை என்பதால், பாலாற்றில் ஓரமாய் ஓடிய மெல்லிய நீரோடையைப் போல, ஜன்னல் காற்று இதமாய் முகத்தை வருட, நெடுஞ்சாலை நடுவே வரிசை கட்டி நின்ற வெண் விளக்குகள் பாதை காட்ட, ஆங்காங்கே சில செவ்விளக்குகள் தடம் மாறும் தடையங்களை சுட்டிக்காட்டி எச்சரித்து பின்னோக்கி மறைந்தன. 'சிவப்பு' எண்ணிக்கையில் குறைவுதான். ஆனால், அதுதானே சேதாரத்திலிருந்து நம்மைக் காக்கிறது.

தவறவிட்ட 'பிரேஸ்லெட்' ஒருமணி நேரத்தில் திரும்பக் கிடைத்ததை, கல்லூரிக்கால நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் “எல்லோரும் நல்லோர்களே” என்று கலீல் பகிர்ந்த செய்தியைக் கண்டபோது மற்றொரு கோணத்தில் எனது எண்ணம் ஓட, “நல்லவர்களைக் கெட்டவர்களாக்கும் மிகக்கொடிய 'ஆயுதம்' சொத்து!” என்றொரு செய்தியை முகநூலில் பகிர்ந்த போது, எனது வலது கால் பாதத்தின் மேல் ஏதோ விழுந்ததை உணர்ந்தேன். 

கீழே பார்த்தபோது அது நான்காக மடிக்கப்பட்டிருந்த 200 ரூபாய் தாள். அந்தத் தாள் முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுடையதுதான் என்பதை என் மனம் உறுதியாக நம்பியதால், அவர்களிடம் அதை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பெற்றுக் கொண்டவர், எடுத்துக் கொடுப்பது யார் என்றுகூட பார்க்க விரும்பவில்லை போலும்; மாறாக, 'பாக்கெட்டிலிருந்து செல்போன் எடுக்கும் போது விழுந்திருக்கும்’ என்று அவரது மனைவி அவரிடம் சொல்வது மட்டும் என் காதில் விழுந்தது. சட்டைப் பையில் செல்போனோடு ரூபாய் தாளை வைத்தால், செல்போனை எடுக்கும் பொழுது அதோடு சேர்ந்து அந்தத் தாளும் வெளியே வந்து கீழே விழுந்த அனுபவம் எனக்கு உண்டு. 

இந்த அனுபவத்தைக் கைபேசியில் பதிவு செய்து கொண்டே வந்த பொழுது நேரம் போனதே தெரியவில்லை. வேலூர் பேருந்து நிலையம் வந்துவிட்டது. பேருந்திலிருந்து கீழே இறங்கிய போதுதான் தெரிந்தது இடது கால் செருப்பின் ஒரு வார் அறுந்திருந்தது. இரவு மணி எட்டு, இந்த நேரத்தில் செருப்பை செப்பனிடவும் முடியாது, வேறு செருப்பும் வாங்க முடியாது என்பதால் சற்றே காலை இழுத்தவாறு அடுத்தப் பேருந்தில்  வாலாஜாவுக்குப் பயணித்து, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் எனது இல்லம் இருக்கும் இடத்தில் இறங்கினேன். 

நான்கடி எடுத்து வைப்பதற்குள் செருப்பின் அடுத்த வாரும் அறுந்து போனது. அதனுடைய ஆயுள் அவ்வளவுதான், இனியும் அதை செப்பனிட முடியாது என்பதாலும், அறுந்த செருப்போடு நடப்பது மேலும் சுமைதான் என்பதாலும், இதுவரை என்னைச் சுமந்த அந்தச் செருப்பைத் தூக்கி எறிந்துவிட்டு வெறுங்காலோடு வீடு நோக்கி நடக்கலானேன். 

இதுவரை நாம் சுமந்த சில எண்ணங்கள்கூட நமக்குப் பயன்பட்டிருக்கலாம்; ஆனால் இனியும் அத்தகைய எண்ணங்கள் பயன்படாது என்று உணர்ந்த பிறகும் அவற்றைத் தூக்கிச் சுமப்பதும் ஒருவிதத்தில் சுமைதானே?

ஊரான்

Sunday, 16 March 2025

நவீன தொழில்நுட்பக் காலத்தில் நாக்கு வழிக்கவா கணினி அறிவியல்? பாவம் சுந்தர் பிச்சைகள்?

வருமான வரி கட்டுகின்ற அளவுக்கு எனக்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யச் சொல்லி அவர்கள் தொடர்ந்து அறிவிப்பு அனுப்புகிறார்கள். என்ன செய்ய?

எனது வங்கிக் கணக்கு  விவரங்கள், தொலைபேசி எண் மற்றும் ஓய்வூதியம், நிரந்தர வைப்பு நிதி வட்டி வருவாய் உள்ளிட்ட அனைத்தும் PAN அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்த்தாலே எனது வருவாய் என்ன என்பது தெரியுமே?



எல்லா வகையான வருவாயையும் வெளிப்படையாகக் காண்பிப்பவர்கள் மிகச் சொர்ப்பமே‌. வருவாயை மறைத்து பொய் கணக்குக் காட்டுவதற்கென்றே தனி படிப்பு வைத்திருப்பது முதலாளித்துவத்தின் 'சிறப்பு'.
ஒருவரின் அனைத்து வகையான வருவாய்களையும் கண்டுபிடித்து, கணக்கிட்டு வரியை வசூல் செய்ய வேண்டியது அரசின் கடமையல்லவா?

அறிவாளிகள்  காய்க்கும் மரங்களைத்தான் உலுக்குவார்கள். ஆனால் இங்கோ, காய்ந்த மரங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சரகுகளுக்காக! நிறுவன ஓய்வூதியம் மற்றும் சேமநல நிதி ஓய்வூதியம் என‌ இரண்டையும் சேர்த்து 'ஐயாயா...யிரம்' ஓய்வூதியம் பெறுபவனிடம் என்ன இருக்கும்? 

அப்படி இருக்க, குற்றவாளிக்கு அழைப்பாணை அனுப்புவது போல எதற்குத் தொடர்ந்து எனக்கு அறிவிப்பு அனுப்புகிறார்கள்?  எதைத் தட்டினாலும் விவரங்களைக் கொட்டும் இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் நாக்கு வழிக்கவா கணினி அறிவியல்? பாவம் சுந்தர் பிச்சைகள்? 

ஊரான்

Thursday, 13 March 2025

பெண்களைப் பாழாக்கும் கவிதைகளை மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள்!

ஏன் பெண்கள் என்றால் மட்டும் சிலருக்கு எச்சில் ஊற கவிதைகள் ஊற்றெடுக்கின்றன?  பழங்காலம்தொட்டே,
பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஆண்களின் வக்கிரப் பார்வைதான்  பெண்களை வர்ணிக்கும் கவிதை வரிகள்! காமத்தில் திளைப்பவனால் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும்.

அதனால்தான் அன்று பெண்களின் அவயங்களை சிலைகளில் வடித்தார்கள். ஓவியங்களில் தீட்டினார்கள். கதைகளிலும் நாவல்களிலும் காமத்தைத் தெளித்தார்கள். இன்று திரைப்படங்களில் துருத்திக் காட்டுகிறார்கள்! 

விளைவு? கணன்று கொண்டிருந்த காம நெருப்பு, இன்று பச்சிளம் சிறுமி முதல் பல்லுபோன பாட்டிகள் என பலரையும் எரித்துப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது.


கவிதை எழுத பொருளா இல்லை? 
மக்களின் பாடுகளைப் பாடுங்கள். பெண்களைப் பற்றியும் பாடுங்கள். ஆனால், அவயங்களைத் தவிர்த்து அவர்களின் வேதனைகளை வெளிக்கொணருங்கள்!

இருவருக்கும் இடையிலான காதலை, அந்தரங்க ஆசைகளை, உணர்வுகளை, அனுபவங்களை ஏன் மற்றவர்களுக்குப் பாய் விரித்து பந்தி போடுகிறாய்?
உனது காதலி என்ன, அடுத்தவனின் நுகர்வுப் பொருளா? காதலி பற்றியக் கவிதை வரிகளை அடுத்தவன் படிக்கும் பொழுது உன் காதலியையும் சேர்த்தே அவன் அனுபவிக்கிறான் என்பதை நீ உணரவில்லையா?

கவிதை எழுதித்தான் ஆக வேண்டும், கற்பனைகளுக்கு வடிகால் தேடித்தான் ஆகவேண்டும் என்றால்,

மக்களின் வறுமை வேதனைகளைப் பாடத் தெரியாது என்றால்,

பசுமை நிறைந்த காடுகளையும் பாலை வனக்கங்களையும் 
மலைகளையும் மடுவுகளையும்
ஆறுகள் ஏரிகுளங்களையும் வயல்களையும் தோட்டங்களையும் 
பூத்துக் குலுங்கும் மலர்களையும் 
பறந்து மகிழும் பறவைகளையும்
ஓடி ஆடும் விலங்குகளையும் வானத்தையும், கடலையும்
என, நம் கண்முன்னே பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையைப் பாடுங்கள்! 
இக்கவிதைகளை, பாடல்களைப்
படிப்பவனுக்கும் ஆபத்தில்லை. பாடுபொருளுக்கும் ஆபத்தில்லை!

பெண்களைப் பாழாக்கும் கவிதைகளை மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள்! உங்களுக்குக் கோடி 'புண்ணியம்'!

ஊரான்

Wednesday, 12 March 2025

பெரியார் மக்களின் மனங்களில் வாழ்கிறாரா?

மக்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் மூடநம்பிக்கைகள் பரவி விரவிக் கிடக்கின்றன. பரிகாரங்களைத் தேடி மக்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மாசிமக புனித நீராடல்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பெரியாரின் தலைமையில் திருமணம் செய்து கொண்ட ஒரு மூதாட்டி, தன் பேத்திக்கு வரன் பார்க்க வருவோரை குளிகை தொடங்குவதற்கு முன் வந்து விடுங்கள் என்கிறார். வரன் குறித்துத் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், ராகு காலம் எனப் பலர் துண்டித்துக் கொள்கின்றனர்.


முற்போக்கு எனும் ஒரு சிறிய வட்டத்திற்குள் இன்று பெரியார் முடக்கப்பட்டிருக்கிறார். தங்களுக்குள்ளாகவே பெரியாரைப் பற்றி பேசி, புலகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் நம் தோழர்கள். அயல்நாடுகளுக்கெல்லாம் பெரியாரை எடுத்துச் செல்பவர்கள் உள்நாட்டில் எடுத்துச் செல்ல மறந்தது ஏனோ? 

அன்று மக்களையும் தொண்டர்களையும் தேடி கிராமங்களுக்குச் சென்றார் பெரியார். இன்று தலைவர்களைத் தேடி தங்கும் விடுதிகளுக்குச் செல்கின்றனர் தொண்டர்கள்.

செல்லும் இடமெல்லாம் கிராமங்களில் மக்களோடு மக்களாக வாழ்ந்ததோடு அவர்களோடு தங்கிப் பழகியதால், பாமர மக்களால் பெரியாரைப் புரிந்து கொள்ள முடிந்தது. பகுத்தறிவும் அன்று பற்றிப் படர்ந்தது. 

ஆனால் இன்று, பெரியாரை எடுத்துச் செல்பவர்கள் சொகுசுந்துகளிலே பயணித்து, குளு குளு அறைகளில் ஓய்வெடுத்து திரும்பி விடுகின்றனர். மெய்நிகர் உலகில் மட்டும் பெரியாரை மெச்சிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மெய்யுலகில்  பெரியாரைப் போன்று யாரும் இல்லையே?  அதனால், பெரியாரின் சிந்தனைகளும், கருத்துக்களும் மக்களின் மனங்களில் ஆழப் பதியாமல் காற்றோடு காற்றாய் கரைந்து போகின்றன.

மார்க்சியத்திற்கும் இதே நிலைதான். தலைவர்கள் மக்களோடு ஒன்று கலக்காமல் பகுத்தறிவும் மார்க்சியமும் ஒருபோதும் மக்களைச் சென்றடையாது.

வீழ்ந்து கிடப்பவனை உடனிருந்து, கரம் பிடித்து தூக்கி நிறுத்துபவர்களையே மக்கள் நம்புவார்கள்.

ஊரான்

Tuesday, 11 March 2025

காணொளி அலப்பறைகள்!

இன்றைய பெரும்பாலான காணொளிகள் எதற்காக? 

இரும்பு, அலுமினியம், பித்தளைப் பாத்திரங்களில் சமைத்து உண்பது பற்றி ஒரு காணொளியில் உலோகங்களைப் பற்றி கதை அளந்திருந்தார்கள். இரும்புச் சட்டியில சமைச்சா உடம்புக்கு  இரும்புச் சத்து சேருமாம்? என்னமோ சட்டியில உள்ள இரும்பு சூடாகி உருகி (melt) அப்படியே நேரா உணவோடு சேர்ந்து குருதியில் கலக்குற மாதிரி பேசுறாங்க. இந்தக் காணொளியில் ஐயர்ன், அலுமினியம், நிக்கல், குரோமியம் போன்ற உலோகங்களை அலசுவதோடு மட்டுமல்ல,  'ஹெவி மெட்டல்' பத்தி எல்லாம் பேசுறாங்க. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பத்தி எல்லாம்கூட பேசுறாங்க.
Metallurgy படிச்சவனையே மிரள வைக்கிறாங்கன்னா பாத்துக்கங்களேன்!


இவர்களுக்கு அறிவியல் எதுவும் தெரியாது. தெரிந்தது போல காணொளியை வெளியிட்டு அதை நம்மைப் பார்க்க வைத்து அதன் மூலம் காசு பார்ப்பவர்கள்.

இவர்களின் காணொளிப் பார்வைகள் மில்லியங்களைத் தொடும் பொழுது இவர்கள் லட்சங்களில் புரளுகிறார்கள். சவுக்கு சங்கர் அதற்கு ஒரு எடுப்பான உதாரணம். அவன் அரசியலில் கதை அளந்து காசு பார்த்தான். இவர்கள் அறிவியல் என்ற போர்வையில் கதை அளந்து காசு பார்க்கிறார்கள்.

சமையல், உணவு, உடல் நலம், ஜாதகம், ஜோதிடம் என எண்ணற்ற தலைப்புகளில் இவர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது காணொளிகளைக் காணும் பொழுது நம்முடைய டேட்டா உருவப்பட்டு அவர்கள் காசு பார்க்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் சொல்வதை உண்மை என நம்பி அதை கடைபிடித்து கெட்டுப் போகிறவர்களும் நாம்தான்.

துட்டு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொள்கிறோம்.

அறிவியல் ரீதியாக மக்களுடைய சிந்தனை மட்டம் மிகவும் பின்தங்கி இருப்பதால்தான்.
இத்தகையக் காணொளிகளை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்; அவற்றை நம்பவும் செய்கிறார்கள்.

எனவே, நாம் உண்மையை, அறிவியலை புரிந்து கொள்வதோடு, அடுத்த சந்ததிக்கும் உண்மையைப் புரிய வைத்தால் மட்டுமே காணொளி அலப்பறைகளும், கொள்ளைகளும் குறைய வாய்ப்பு உண்டு.

ஊரான்