Thursday, 24 April 2025

மணவிழாவில் ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்று கூடல்!

முன்னிரவு  தொடங்கிய மேடை அலங்கார வேலைகள் முடியும் தருவாயில் ஒரு பக்கம், மாலைநேர மணவிழா விருந்துக்கான சமையல் வேலைகள் மறுபக்கம் நடந்து கொண்டிருக்க, பங்குனியின் கடைசிநாள் ஞாயிறு பிற்பகலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவராக மண்டபத்தை நோக்கி வரத்தொடங்கினர். 

நண்பர்களும் உறவினர்களும் தோழர்களும் மண்டபத்தின் கீழ்வாசல் வழியாக திரள் திரளாய் நுழைவதைக் கண்டு அச்சமோ என்னவோ, கதிரவன் மேற்கு நோக்கி வேகமாக ஓடியதால்  வெக்கையும் சற்றே தணிந்தது.  வந்திருந்தோரின் நேச மழையில், நானோ கொடுங்கோடையிலும் உறைந்து போனேன்.

நண்பர்களை ஆரத்தழுவி கட்டி அணைப்பது வழக்கம்தான் என்றாலும், பல ஆண்டுகள் கழித்து சிலரைக் கட்டித் தழுவியபோது ‘ஸ்பைடர்மேனாக’ நான் பறக்கலானேன். 

வாழ்நாள் முழுக்க கூடவே பயணிக்கின்ற சொந்தங்கள், பொது வாழ்வில் களப்போராட்டங்களில் கைகோர்த்து பயணிக்கின்ற தோழர்கள், மிக நீண்டகாலம் அருகருகே அமர்ந்து வேலை பார்க்கும் சக ஊழியர்கள் 

என இவர்கள், சிலசமயங்களில் சிலபல காரணங்களுக்காக விலகி நிற்கவோ, தோழமையை துண்டித்துக் கொள்ளவோ, மனம் கசிந்து போகவோ நேரிடலாம்.

“நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்” என்கிறான் வள்ளுவன் (785)

அண்மையில் சென்னையில் மின்சாரத்தால் தாக்குண்டு மழை நீரில்  தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை ஒரு இளைஞன் காப்பாற்றிய போது அவன் மீது அதைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடுதானே? 

உலகையே உலுக்கிய சுனாமியின்போது உணவுக்காக நீண்ட வரிசையில் பலர் பசியோடு காத்திருக்க, முன்வரிசையில் தான்பெற்ற உணவை ‘என்னைவிடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்’ எனக்கூறி மீண்டும் மொத்த உணவோடு தனது உணவைச் சேர்த்த சிறுவனின் நடத்தையைப் படிக்கும் போது, அவன் எப்படி இருப்பான் என்பதுகூட தெரியவில்லை என்றாலும், அவன் மீது ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடன்றோ? 

அதனால்தான் நாம் உணர்வதை, நாம் செய்ய விரும்புவதை, பிறர் உணரும் போதும், செய்யும் போதும் ஏற்படும் உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கிறது என்கிறானோ வள்ளுவன்?

இரத்த உறவு எப்பொழுது ஒத்த உணர்ச்சியை ஏற்படுத்துகிறதோ அப்பொழுது உறவினர்களும் நண்பர்களாகி விடுவார்கள்; தோழர்களும்தான். ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது. 

இப்படித்தான், நான் எனது உறவினர்களையும் தோழர்களையும் நண்பர்களையும் பார்க்கிறேன்; பாவிக்கிறேன்.

முதுமையையும் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, பொள்ளாச்சி, தாராபுரம், பாண்டிச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, பெங்களூரு, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் மட்டவெட்டு-அத்திமூரான் கொட்டாய்  என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொலை தூரங்களிலிருந்தும் அந்த ஒத்த உணர்ச்சிதான் எனது இல்ல மணவிழாவிற்கு  
திருப்பத்தூரை நோக்கி பலரையும் ஈர்த்ததோ?

இதுஒரு மணவிழா என்பதையும் தாண்டி, இது ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்றுகூடல் (get together) என்பதாகத்தான் ஒவ்வொருவரையும் உணர வைத்தது. 

“குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனை தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்” என்கிறான் வள்ளுவன் (1025). இந்த ஒன்றுகூடல் கூட அப்படித்தானோ?

ஆம்! குற்றமற்றவர்களாகவும், குடிமக்களின் நலன்களுக்கு பாடுபடுவோராகவும் நம்மால் முடிந்தவற்றை செய்ய முனைவோம். நண்பர்களாய், மக்கள் நம்மைச் சூழ்ந்திருக்க நமக்கென்ன கவலை?

மணவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் 
நன்றிப் பெருக்குடன்,

பொன்.சேகர்

Monday, 7 April 2025

கம்யூனிஸ்டுகள் மனுதர்மத்தைப் புரிந்து கொள்ளவில்லையா?

குழந்தை பிறந்த பத்தாவது அல்லது பன்னிரண்டாவது நாளில் புண்ணிய திதியில் நல்ல முகூர்த்தத்தில் நல்ல நட்சத்திரத்தில் பெயர் சூட்ட வேண்டும் (மனு: 2-30) 

உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் இன்றும்கூட இதன்படித்தானே பெயர் சூட்டுகிறார்கள்?

பிராமணனுக்கு மங்களத்தையும், சத்ரியனுக்கு பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகின்ற பெயரைச் சூட்ட வேண்டும் (மனு: 2-31)

பிராமணனுக்கு சர்மா என்பதையும், சத்ரியனுக்கு வர்மா என்பதையும், வைசியனுக்குப் பதி என்பதையும், சூத்திரனுக்கு தாசன் என்பதையும் தொடர் பெயராக இட வேண்டும் (மனு: 2-32)


தோழர் மீனாட்சி முகர்ஜி, CPI (M) 
மத்தியக் குழு உறுப்பினர் 

சங்கர் தயாள் சர்மா, இது ஒரு பார்ப்பனரின் பெயர். சர்மா என்பது பார்ப்பனர்களில் ஒரு பிரிவு. இதுபோல முகர்ஜி, பானர்ஜி, சட்டர்ஜி, துபே, பாண்டே என பார்ப்பனர்களில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் உண்டு. 

ராம் கோபால் வர்மா. இது ஒரு சத்திரியனின் பெயர்.

குமுத் பல்லவ் பதி. இது ஒரு வைசியனின் பெயர். 

சித்தரஞ்சன் தாஸ் இது ஒரு சூத்திரனின் பெயர். 

இப்படித்தான் வட இந்தியாவில் மனுதர்மத்தின் வழிகாட்டுதல்படி இன்று வரை தங்களது பெயரை வைத்துக் கொள்கிறார்கள். 

விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த திராவிடர்கள் மனுதர்மத்தை ஏற்க மறுத்ததால் (மனு: 10-43, 44) அன்றிலிருந்து பெயர் வைத்துக் கொள்வதில் மனுவின் வழிகாட்டுதலை கடைபிடிக்கவில்லை. எனவே பார்ப்பனர்களைத் தவிர பிற அனைவருமே சூத்திரர்களாகத் தரம் இறக்கப்பட்டிருந்தனர்.  அதனால்தான் நமது பண்டைய பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில்கூட மனுவின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டதில்லை. 

வட இந்தியாவில் நான்கு வருணங்களும் உண்டு. ஆனால் தென்னிந்தியாவில் பிராமணன், சூத்திரன் என இரு வருணங்கள் மட்டுமே உண்டு.

இன்று தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் மனுவின் வழிகாட்டுதல்படி இல்லை என்றாலும் தஷ், புஷ் என வடமொழி கலந்த பெயர்களாகத்தான் வைக்கிறார்கள் என்பது தனிக்கதை. 

அண்மையில் மதுரையில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டத் தலைமைக் குழு உறுப்பினர்களின் பெயர்களில் சர்மா, பட்டாச்சார்யா, சவுத்ரி, தேஷ்பாண்டே, முகர்ஜிகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் வாசுகி, பாலபாரதி, சண்முகங்களைத்தான் காண முடிகிறது. 

கம்யூனிஸ்டுகளாய் இருந்தாலும், பெயர் வைப்பதில் வடக்கே இன்னும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மனுவின் பிடியிலிருந்து மீளவில்லை என்பதையும், தெற்கில் உள்ளவர்கள் மனுவிலிருந்து என்றோ துண்டித்துக் கொண்டவர்கள் என்பதையும் உணர முடிகிறது.

மனுதர்மம் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுப்பது. ஆனால் மூன்றையும் உயர்த்திப் பிடிப்பது பொதுவுடமை. எனவே, கம்யூனிஸ்டுகள் தங்களது பெயர்களுக்குப் பின்னால் மனுவின் வரையறையின்படி சாதிப்பட்டத்தைச் சுமப்பது மார்க்சுக்கு இழிவைத் தேடித் தருவதாகும்.

தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள்தான் இதை வடஇந்தியக் கம்யூனிஸ்டுகளுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஊரான்

Monday, 17 March 2025

அறுந்த செருப்பு!

பசி எடுக்கிறதோ இல்லையோ மாலை நேரமானால் எதையாவது கொறிக்க வேண்டும் என பழக்கப்பட்ட மக்கள் கூட்டம் சிக்கன் பக்கோடா, மீன்வறுவல், போண்டா, சமோசா, பஜ்ஜி கடைகளையும் பானிபூரி கடைகளையும்  மொய்த்துக் கொண்டிருந்தது. டாஸ்மாக்கின் உபயத்தால் சிலரின் கல்லாப் பெட்டிகள் கணக்கின்றன. பலரின் 'பர்சுகள்' மெலிகின்றன. பணம் புழங்கினால் நாட்டு வளம் பெருகிவிட்டதாக சில பொருளாதாரப் புலிகள் சொல்லுவது உண்மைதானோ என்பதை மெய்ப்பிக்கும் வண்ணமாய் மாலை நேரக் கடைகள் காட்சியளிக்கின்றன.

ஸ்ப்ளெண்டர், பேஷன், ஹோண்டா சிட்டிகள் தங்களது எசமானர்களை இறக்கிவிட்டு, 'சைடு ஸ்டேண்டில்' சாய்ந்து கொண்டு ஒய்யாரமாய் ஓய்வெடுக்கலாம் என்றால் வருவோர் போவோருக்கு இடையூறாய் நிறுத்தப்பட்டிருந்ததால் பலரின் வசவுச் சொற்களை சுமந்து கொண்டு சோகமாய்க் காட்சி அளித்தன.

கோப்புப் படம்

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த போது, வேலூர் செல்லும் தனியார் பேருந்து நடத்துனருக்கும், அதற்கு அடுத்துப் புறப்பட வேண்டிய அரசுப் பேருந்து நடத்துனருக்கும் இடையே மிக மூர்க்மாய் சண்டை நடந்து கொண்டிருந்தது. தனது பேருந்து புறப்படுவதற்கு முன்பு அடுத்த பேருந்தில் யாரையும் ஏற்றக் கூடாது என்ற தனியார் பேருந்துக்காரர்களின் எழுதப்படாத சட்டமே சண்டைக்கு அடிப்படை.

எந்தப் பேருந்தில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் அந்த முதலாளிமார்களே தீர்மானிக்கிறார்கள். மீறி அடுத்தப் பேருந்தில் ஏறினால் மிரட்டி இறக்குகிறார்கள். ‘என் பயணம் என் உரிமை’ என்றெல்லாம் இங்கு பேச முடிவதில்லை.

சற்று நேரத்தில் தனியார் பேருந்து புறப்பட, அரசுப் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். காற்றைத் கிழித்துக் கொண்டு வேலூரை நோக்கிப் பேருந்து முன்னே விரைய, கிழிபட்ட காற்றோ சன்னல் இடைவெளிக்குள் புகுந்து முகத்தில் மோதி பின்னே மறைந்தது‌. பேருந்தின் வேகத்திற்கேற்ப காற்றின் வேகம் மாறுபடும் என்பதால் முகத்தைத் தழுவி நழுவும் அளவுக்கு சன்னல் திறப்பை குறைத்துக் கொண்டேன்.

மேற்கே கதிரவன் மறைய, கிழக்கின் இருள் மலைகளைப் போர்த்த, பேருந்தின் வேகத்திற்கேற்ப பக்கவாட்டில் தோன்றிய மலைகளும் பின்னோக்கி விரைந்து மறைந்தன. 

இது பங்குனியின் தொடக்கம். குளிரும் இல்லை, கடும் கோடையும் இல்லை என்பதால், பாலாற்றில் ஓரமாய் ஓடிய மெல்லிய நீரோடையைப் போல, ஜன்னல் காற்று இதமாய் முகத்தை வருட, நெடுஞ்சாலை நடுவே வரிசை கட்டி நின்ற வெண் விளக்குகள் பாதை காட்ட, ஆங்காங்கே சில செவ்விளக்குகள் தடம் மாறும் தடையங்களை சுட்டிக்காட்டி எச்சரித்து பின்னோக்கி மறைந்தன. 'சிவப்பு' எண்ணிக்கையில் குறைவுதான். ஆனால், அதுதானே சேதாரத்திலிருந்து நம்மைக் காக்கிறது.

தவறவிட்ட 'பிரேஸ்லெட்' ஒருமணி நேரத்தில் திரும்பக் கிடைத்ததை, கல்லூரிக்கால நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் “எல்லோரும் நல்லோர்களே” என்று கலீல் பகிர்ந்த செய்தியைக் கண்டபோது மற்றொரு கோணத்தில் எனது எண்ணம் ஓட, “நல்லவர்களைக் கெட்டவர்களாக்கும் மிகக்கொடிய 'ஆயுதம்' சொத்து!” என்றொரு செய்தியை முகநூலில் பகிர்ந்த போது, எனது வலது கால் பாதத்தின் மேல் ஏதோ விழுந்ததை உணர்ந்தேன். 

கீழே பார்த்தபோது அது நான்காக மடிக்கப்பட்டிருந்த 200 ரூபாய் தாள். அந்தத் தாள் முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்களுடையதுதான் என்பதை என் மனம் உறுதியாக நம்பியதால், அவர்களிடம் அதை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பெற்றுக் கொண்டவர், எடுத்துக் கொடுப்பது யார் என்றுகூட பார்க்க விரும்பவில்லை போலும்; மாறாக, 'பாக்கெட்டிலிருந்து செல்போன் எடுக்கும் போது விழுந்திருக்கும்’ என்று அவரது மனைவி அவரிடம் சொல்வது மட்டும் என் காதில் விழுந்தது. சட்டைப் பையில் செல்போனோடு ரூபாய் தாளை வைத்தால், செல்போனை எடுக்கும் பொழுது அதோடு சேர்ந்து அந்தத் தாளும் வெளியே வந்து கீழே விழுந்த அனுபவம் எனக்கு உண்டு. 

இந்த அனுபவத்தைக் கைபேசியில் பதிவு செய்து கொண்டே வந்த பொழுது நேரம் போனதே தெரியவில்லை. வேலூர் பேருந்து நிலையம் வந்துவிட்டது. பேருந்திலிருந்து கீழே இறங்கிய போதுதான் தெரிந்தது இடது கால் செருப்பின் ஒரு வார் அறுந்திருந்தது. இரவு மணி எட்டு, இந்த நேரத்தில் செருப்பை செப்பனிடவும் முடியாது, வேறு செருப்பும் வாங்க முடியாது என்பதால் சற்றே காலை இழுத்தவாறு அடுத்தப் பேருந்தில்  வாலாஜாவுக்குப் பயணித்து, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் எனது இல்லம் இருக்கும் இடத்தில் இறங்கினேன். 

நான்கடி எடுத்து வைப்பதற்குள் செருப்பின் அடுத்த வாரும் அறுந்து போனது. அதனுடைய ஆயுள் அவ்வளவுதான், இனியும் அதை செப்பனிட முடியாது என்பதாலும், அறுந்த செருப்போடு நடப்பது மேலும் சுமைதான் என்பதாலும், இதுவரை என்னைச் சுமந்த அந்தச் செருப்பைத் தூக்கி எறிந்துவிட்டு வெறுங்காலோடு வீடு நோக்கி நடக்கலானேன். 

இதுவரை நாம் சுமந்த சில எண்ணங்கள்கூட நமக்குப் பயன்பட்டிருக்கலாம்; ஆனால் இனியும் அத்தகைய எண்ணங்கள் பயன்படாது என்று உணர்ந்த பிறகும் அவற்றைத் தூக்கிச் சுமப்பதும் ஒருவிதத்தில் சுமைதானே?

ஊரான்

Sunday, 16 March 2025

நவீன தொழில்நுட்பக் காலத்தில் நாக்கு வழிக்கவா கணினி அறிவியல்? பாவம் சுந்தர் பிச்சைகள்?

வருமான வரி கட்டுகின்ற அளவுக்கு எனக்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யச் சொல்லி அவர்கள் தொடர்ந்து அறிவிப்பு அனுப்புகிறார்கள். என்ன செய்ய?

எனது வங்கிக் கணக்கு  விவரங்கள், தொலைபேசி எண் மற்றும் ஓய்வூதியம், நிரந்தர வைப்பு நிதி வட்டி வருவாய் உள்ளிட்ட அனைத்தும் PAN அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்த்தாலே எனது வருவாய் என்ன என்பது தெரியுமே?



எல்லா வகையான வருவாயையும் வெளிப்படையாகக் காண்பிப்பவர்கள் மிகச் சொர்ப்பமே‌. வருவாயை மறைத்து பொய் கணக்குக் காட்டுவதற்கென்றே தனி படிப்பு வைத்திருப்பது முதலாளித்துவத்தின் 'சிறப்பு'.
ஒருவரின் அனைத்து வகையான வருவாய்களையும் கண்டுபிடித்து, கணக்கிட்டு வரியை வசூல் செய்ய வேண்டியது அரசின் கடமையல்லவா?

அறிவாளிகள்  காய்க்கும் மரங்களைத்தான் உலுக்குவார்கள். ஆனால் இங்கோ, காய்ந்த மரங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சரகுகளுக்காக! நிறுவன ஓய்வூதியம் மற்றும் சேமநல நிதி ஓய்வூதியம் என‌ இரண்டையும் சேர்த்து 'ஐயாயா...யிரம்' ஓய்வூதியம் பெறுபவனிடம் என்ன இருக்கும்? 

அப்படி இருக்க, குற்றவாளிக்கு அழைப்பாணை அனுப்புவது போல எதற்குத் தொடர்ந்து எனக்கு அறிவிப்பு அனுப்புகிறார்கள்?  எதைத் தட்டினாலும் விவரங்களைக் கொட்டும் இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் நாக்கு வழிக்கவா கணினி அறிவியல்? பாவம் சுந்தர் பிச்சைகள்? 

ஊரான்

Thursday, 13 March 2025

பெண்களைப் பாழாக்கும் கவிதைகளை மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள்!

ஏன் பெண்கள் என்றால் மட்டும் சிலருக்கு எச்சில் ஊற கவிதைகள் ஊற்றெடுக்கின்றன?  பழங்காலம்தொட்டே,
பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் ஆண்களின் வக்கிரப் பார்வைதான்  பெண்களை வர்ணிக்கும் கவிதை வரிகள்! காமத்தில் திளைப்பவனால் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும்.

அதனால்தான் அன்று பெண்களின் அவயங்களை சிலைகளில் வடித்தார்கள். ஓவியங்களில் தீட்டினார்கள். கதைகளிலும் நாவல்களிலும் காமத்தைத் தெளித்தார்கள். இன்று திரைப்படங்களில் துருத்திக் காட்டுகிறார்கள்! 

விளைவு? கணன்று கொண்டிருந்த காம நெருப்பு, இன்று பச்சிளம் சிறுமி முதல் பல்லுபோன பாட்டிகள் என பலரையும் எரித்துப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது.


கவிதை எழுத பொருளா இல்லை? 
மக்களின் பாடுகளைப் பாடுங்கள். பெண்களைப் பற்றியும் பாடுங்கள். ஆனால், அவயங்களைத் தவிர்த்து அவர்களின் வேதனைகளை வெளிக்கொணருங்கள்!

இருவருக்கும் இடையிலான காதலை, அந்தரங்க ஆசைகளை, உணர்வுகளை, அனுபவங்களை ஏன் மற்றவர்களுக்குப் பாய் விரித்து பந்தி போடுகிறாய்?
உனது காதலி என்ன, அடுத்தவனின் நுகர்வுப் பொருளா? காதலி பற்றியக் கவிதை வரிகளை அடுத்தவன் படிக்கும் பொழுது உன் காதலியையும் சேர்த்தே அவன் அனுபவிக்கிறான் என்பதை நீ உணரவில்லையா?

கவிதை எழுதித்தான் ஆக வேண்டும், கற்பனைகளுக்கு வடிகால் தேடித்தான் ஆகவேண்டும் என்றால்,

மக்களின் வறுமை வேதனைகளைப் பாடத் தெரியாது என்றால்,

பசுமை நிறைந்த காடுகளையும் பாலை வனக்கங்களையும் 
மலைகளையும் மடுவுகளையும்
ஆறுகள் ஏரிகுளங்களையும் வயல்களையும் தோட்டங்களையும் 
பூத்துக் குலுங்கும் மலர்களையும் 
பறந்து மகிழும் பறவைகளையும்
ஓடி ஆடும் விலங்குகளையும் வானத்தையும், கடலையும்
என, நம் கண்முன்னே பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையைப் பாடுங்கள்! 
இக்கவிதைகளை, பாடல்களைப்
படிப்பவனுக்கும் ஆபத்தில்லை. பாடுபொருளுக்கும் ஆபத்தில்லை!

பெண்களைப் பாழாக்கும் கவிதைகளை மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள்! உங்களுக்குக் கோடி 'புண்ணியம்'!

ஊரான்