Monday, July 31, 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! 'அட நன்றி கெட்டவனே!' தொடர் - 2

செங்கத்திலிருந்து சாத்தனூர் செல்லும் நகரப் பேருந்தில் பயணித்து, 19 ஜூலை, மாலை நேர வேளையில் கல்தாம்பாடி கூட்ரோட்டில் இறங்கி சுற்று முற்றும் பார்த்தேன். மேற்கே பறந்து விரிந்த காடுகளும், கிழக்கே பசுமை நிறைந்த வயல்களும் என்னை வசீகரித்தன. 

பள்ளிப் பருவ காலங்களில், பாட்டி வீட்டில் கோடை விடுமுறையை கழித்தபோது, காடுகளில் கலாப் பழம் பறித்த காட்சிகளும், அண்ணன் பாலுவோடு சேர்ந்து கொல்ல மேட்டில் கன்னி வைத்து புறா பிடித்த காட்சிகளும், சிற்றோடையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் பறிவைத்து மீன்பிடித்த காட்சிகளும் கண்முன்னே வந்து போயின.

சாலையோரம் புதிதாய் முளைத்திருந்த பெட்டிக் கடையில் பத்து ரூபாய் ஸ்பிரிட் ஒன்றை சில்லென தொண்டையில் இறக்கி எனது தங்கையின் நிலம் நோக்கி நடக்கலானேன். செல்லும் வழியில் பால்ய நண்பனும் உறவினருமான பாலகிருஷ்ணனின் இணையர் எதிர்பட்டு வரவேற்க, 'இப்பத்தான் தெரிஞ்சதா ஊருக்கு வழி?' என்று வினவிய போது, அதன் பொருள் புரிந்ததால் நான் குருகித்தான் போனேன். 

2018 பிப்ரவரியில், ஒரு பாதி செயல் இழந்து நடக்க முடியாமல், சைகை மொழி பேசி, பச்சிளம் குழந்தை போல படுக்கையில் கிடந்த எனது தாயை, நான் உடனிருந்து பராமரிக்க இயலாத ஒரு இக்கட்டான சூழலில், நம்பியவர்களும் கைவிட, எனது அன்னையின் அண்ணன் மகன் நேசக்கரம் நீட்ட, அன்னையின் மூன்றாம் மகள் அரவணைக்க தான் பிறந்த இம்மண்ணிலே பத்து மாதம் தவழ்ந்து, 2019 சனவரியில் மரணத்தைத் தழுவினாள் எனது தாய். 

அவள் மறைந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், ஓரிரு முறை மட்டுமே அங்கு சென்றுள்ளேன். அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எட்டிக் கூடப் பார்க்கவில்லை‌. 'அட நன்றி கெட்டவனே!' என ஈட்டி போல எனது நண்பனின் இணையர் கேட்ட கேள்வி என் நெஞ்சைத் துளைத்ததன் பொருள் இதுதான். 'நன்றி மறப்பது நன்றன்று' என்று சும்மாவா சொன்னான் வள்ளுவன்?

எதிர்பாராத எனது வரவைக் கண்டு கொல்லையில் கடலைக்காய் பறித்துக் கொண்டிருந்த எனது தங்கை 'வாண்ணே!'என வாஞ்சையாய் அழைத்த போது என் நெஞ்சுக்கூடு சற்றே லேசாகியது.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

1 comment:

  1. N.Rajamohan: கிராமப்புறங்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்ற நினைவலைகள் ஏற்படுவதுண்டு , அனுபவப் பதிவு அருமை , தொடருங்கள் ...

    ReplyDelete