Wednesday, December 17, 2025

சங்கிகளின் சங்கை அறுக்கும் சித்தர்கள்! - 12

"வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே!" (501)

வேதம் ஓதுவது வீண் வேலை என்கிறார் சிவவாக்கியர். 

"கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே." (508)

மரக்கட்டையாலும், கல்லாலும், மண்ணாலும், மஞ்சளாலும், துணியாலும், சாணத்தாலும் செய்யப்படும் சிலைகளை வணங்குவதில் பயனேதும் இல்லை என்கிறார் இந்த சித்தர்.

"தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத்துத் தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே." (509)


கோயில்களில் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலி கொடுப்பது மூடநம்பிக்கை என்கிறார் சிவவாக்கியர்.

"நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்
வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே." (511)

திருநீறு, சந்தனம், பொட்டு, நாமம், பட்டை அடித்துக் கொண்டு பூஜை சடங்குகள் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகளையும், பித்தலாட்டக்காரர்களையும் கடுமையாகச் சாடுகிறார் சிவவாக்கியர்.

"காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை." (516)

திருநீறு பூசி, காவியுடை அணிந்து, யோக தண்டுகளை ஏந்தி வீடுகளுக்குச் சென்று பிச்சையெடுக்கும் சாதுக்களை போலிகள் என்றுச் சாடுகிறார் இந்த சித்தர்.

"செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே." (518)

மரங்களை அழித்து சிலைகள் செய்து வணங்குவதை கைவிடச் சொல்கிறார் சிவவாக்கியர். 

"கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்?
இல்லைஇல்லை இல்லைஇல்லை ஈசன்ஆணை இல்லையே." (520)

கல்லிலும் இரும்பிலும் தெய்வ உருவங்களைச் செதுக்கி, அவற்றை வணங்கினால் துன்பங்கள் நீங்கிவிடும் என்று நினைப்பது தவறு என்கிறார் சிவவாக்கியர்.

"சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்
பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே." (522)

சாஸ்திரங்களில் மூழ்குவோரை மூடர்கள் என்று சொல்கிறார் சிவவாக்கியர்.

வேதங்களையும், மனு உள்ளிட்ட சாஸ்திரங்களையும் எள்ளி நகையாடுவதோடு, அவை தோற்றுவித்த சாதியப் பாகுபாடுகளையும், மூட நம்பிக்கைகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் எதிர்த்து, அதாவது சனாதனத்தை எதிர்த்து சித்தர்கள் மிகக் கடுமையாகப் போராடி உள்ளனர். 

அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இன்று ஆட்டம் போடும் ஆர்.எஸ்.எஸ், பாஜக,
பார்ப்பன சனாதனக் கும்பலுக்கு எதிரானப் போராட்டத்திற்கு  உரம் சேர்க்கும் சித்தர்களை உயர்த்திப் பிடிப்போம். அவர்களின் பாடல்களை மக்களிடையே பரவச் செய்வோம்!

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment