Thursday, February 12, 2026

எழுதப்படாத பக்கங்கள்: ஓர் அறிமுகம் (1)

வாசிப்பும் வாழ்வியலும்: ஒரு தேடல்

அறிவியல், அரசியல், ஆன்மீகம், சிறுகதை, நாவல், இலக்கியம் எனப் பல தளங்களில் நான் வாசித்ததையும், அவை என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளையும், எனது வாழ்க்கை அனுபவங்களையும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக
வலை உலகில் எழுதி வருகிறேன்.

நாம் வாசிக்கும் நூல்கள் வெறும் கதைகளாகவோ கருத்துகளாகவோ மட்டுமல்ல. அவை அந்தந்த காலகட்டத்தின் அரசியல் சூழல், ஆன்மீகப் பார்வை, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றைப் பிரதிபலிப்பதோடு, மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், நற்செயல்கள், தீஞ்செயல்கள், நீதிபோதனைகள் போன்ற பல்வேறு அம்சங்களையும் நினைவூட்டுகின்றன.

நூல்களை வெறும் வாசிப்பாகக் கடந்து செல்லாமல், சற்று நின்று நிதானித்துப் பார்த்தால், உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப உருவாகும் சமூக மாற்றங்களையும், அரசியல் சூழலால் ஏற்படும் உற்பத்தி உறவுகளின் மாற்றங்களையும் அவற்றின் ஊடாகக் காண முடிகிறது. இவை அனைத்தும் கடந்த காலப் படைப்புகளில் மட்டுமல்ல, நிகழ்கால படைப்புகளிலும் தெளிவாக வெளிப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஏதோ சிலவோ, அல்லது பலவோ, நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறியிருப்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை.


வேர்களும் தொடக்கக் கல்வியும்

சுமார் அறுபத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வசதிகளோ மின்விளக்குகளோ இல்லாத ஒரு மலையோரக் குக்கிராமத்தில், ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் எண்மரில் ஒருவனாகப் பிறந்து வளர்ந்தவன் நான், ஒத்தையடிப் பாதையில் சில கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றே தொடக்கக் கல்வியையும், நடுநிலைக் கல்வியையும் முடித்தேன். அதன் பிறகு மிதிவண்டிப் பயணத்துடன் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்து, மெட்ராஸ் பட்டணத்தில் பொறியியல் பட்டயப் படிப்பைச் சிறப்பாக முடித்தேன்.

தொழில்முறைப் பயணமும் அரசியல் வாழ்வும்

திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, மார்க்சிய–லெனினிய அரசியலில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பன்முகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன்.
இதனூடே  BHEL நிறுவனத்தில் நடைபெற்ற போனஸ் போராட்டத்தையொட்டி என் வேலை பறிபோனது.

அந்தக் காலகட்டத்தில் உடல்நலக் குறைவால் கோமா நிலைக்குச் சென்று மீண்டெழுந்தேன். அதன் பின்னர் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றி, பிறகு இராணிப்பேட்டை BHEL நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்தேன். அந்தச் சூழலிலும் அரசியல் பணிகளைத் தொடர்ந்ததோடு, ஹோமியோபதி மருத்துவ முறையையும் கற்றறிந்தேன்.

எழுத்துப் பயணமும் தொடரும் தேடலும்

பணியிலிருந்து ஓய்வு பெற்று எட்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், இன்றும் வலை உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கைப் பயணம் பன்முக அனுபவங்களைக் கொண்டதனால், அவற்றை அவ்வப்போது எழுத்தாக்கி பகிர்ந்து வருகிறேன்.

எதிர்த்து நில்’ வலைப்பூவில் “இழி குணம்தலைப்பில், தமிழ்மணி என்ற பெயரில் என் அனுபவங்களைத் தொடராக எழுதினேன். பின்னர் அவற்றைத் தொகுத்து அமேசானில் மென் நூலாகவும் வெளியிட்டேன். நான் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் “குற்ற இயல் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி?” என்ற நூல் மட்டும் அச்சு வடிவில் வெளியானது.

இழி குணம்என்ற தலைப்பில் என் அனுபவங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்ற உணர்வு இன்னும் என்னுள் உள்ளது. அதனால் அவற்றை மேலும் விரிவாக எழுதலாம் என எண்ணுகிறேன். நான் எழுதப் போவது கட்டுரையா, கதையா, நாவலா என்று வகைப்படுத்தத் தெரியாது. இதுவரை எதையும் நான் திட்டமிட்டு எழுதியதுமில்லை.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்கள் இனியும் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையுடன்,
எழுதப்படாத பக்கங்களை
விரைவில் எழுதத் தொடங்குகிறேன்.

பொன்.சேகர்

3 comments:

sekar said...

[13/02, 12:03 pm] Maheshwari Srinivasan: 👌👏👏👏👏🙏
[13/02, 12:06 pm] Maheshwari Srinivasan: வணக்கம் பா எந்த வசதியும் இல்லாத நம்ம குக்கிராமம் கொடுத்த சந்தோஷத்தை அப்போது இருந்த வெள்ளந்தியான மனிதர்களை யாருமே தர முடியாது இப்போ நம்ம வாழுற வாழ்க்கை இயந்திரத்தனமான ஒன்றுதான் வசதியும் வாய்ப்பு இல்லாத போது வாழ்ந்த எளிமையான வாழ்க்கை நிறைவானதாக இருந்தது சின்ன சின்ன சந்தோஷங்களை தொலைச்சிட்டு ஓடிக்கிட்டு இருக்கும்போது எனக்கு தோணுது
[13/02, 12:09 pm] Maheshwari Srinivasan: சுயம் தொலைத்து நிற்கிறோம் வீடு அலுவலகம் பணிச்சுமை பொறுப்புகள் எல்லாம்சேர்ந்து முடக்கி போட்டுருச்சு
[13/02, 12:10 pm] Maheshwari Srinivasan: மின்சாரம் இல்லாத மண் மணம் மாறாத அந்த கிராமத்து வாழ்க்கைக்கு மனசு ஏங்குது

sekar said...

ஏதோ ஒரு வகையில் நான் அவ்வப்பொழுது கிராமத்து மண்வாசனையை நுகர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் உனக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.

ஆனாலும் கிராமத்தில் வாழுகின்ற வாய்ப்பை நானும் இழந்து விட்டேன்.

இன்று கிராமங்கள் பார்ப்பதற்குத்தான் பசுமையாய் இருக்கின்றன.
உடைமைச் சிந்தனை அதிகரிக்க அதிகரிக்க போட்டியும் பொறாமையும் அதிகரிப்பதனால் கிராம மனிதர்களின் இதயங்கள் எல்லாம் காய்ந்து கிடக்கின்றன.

sekar said...

[13/02, 5:33 pm] Maheshwari Srinivasan: போக்குவரத்து வசதி வந்தது அதனை தொடர்ந்து நாகரீகமும் உள்ளே வந்தது நாகரிகத்தோடு கூடி சுயநலமும் உடைமை சிந்தனையும் வந்தது மனிதர்களும் இயல்பு மாறி விட்டார்கள்
[13/02, 5:35 pm] Maheshwari Srinivasan: கால எந்திரத்தில் பயணம் செய்து பின்னோக்கி சென்றால் மட்டுமே சாத்தியம்