Friday, 24 December 2010

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!

”சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாடுகளை விடுவித்துள்ளனர்.” - இது 17.12.2010 வெள்ளிக்கிழமை தினமணி நாளேட்டில் வெளிவந்தச் செய்தி.

"ஸ்ரீபெரும்புதூர் அருகில் பனப்பாக்கத்தில் செயல்படும் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிர்வாகம் 13 பசுக்களை படுகொலை செய்திருக்கிறது. விஷம் வைத்து பசுக்களை கொலை செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின்மீது அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். யூரியா உரம் கலந்த இட்லி, தோசை, பொங்கல் ஆகியவை கல்லூரி வளாக மைதானத்தில் மூன்று இடங்களில் இருந்ததை விவசாயிகள் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டம் செய்துள்ளனர். வட்டாட்சியர் மற்றும் ஓரகடம் காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். குற்றச்சாட்டை  மறுத்தாலும் வட்டம்பாக்கம் ஊராட்சித் தலைவர் கே.முருகேசன் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து நடைபெற்று இறுதியில் ஒரு பசுவுக்கு ரூபாய் 20 000 வீதம் கல்லூரி நிர்வாகம் நட்டஈடு கொடுத்ததோடு பசுக்களை மொத்தமாக குழி தோண்டி புதைத்துள்ளது. மிருக வதை தடைச் சட்டத்தின்படி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என விலங்கு நல வாரிய உதவித் தலைவர் சின்னி கிருஷ்ணா கூறியுள்ளார்."- இச்செய்தியும் 17.12.2010 வெள்ளிக்கிழமை அன்று டெக்கான் கிரானிக்கிள் (deccan chronicle) நாளேட்டில் வெளிவந்துள்ளது.

இச்செய்திகள் படிப்பதற்கு மிகச்சாதாரணமாக சிலருக்குத் தோன்றலாம். பசுக்களை ஒழுங்காக கட்டி வைக்க வேண்டியதுதானே என்றுகூட சிலர் உபதேசம் செய்யலாம்.

கிராமப்புறங்களில் ஆடு மாடுகள் தற்செயலாக அடுத்தவர் நிலத்தில் புற்களை மேய்வதும் சில சமயங்களில் பயிர்களை மேய்வதும் நடப்பதுண்டு. யாரும் திட்டமிட்டே பயிர்களை மேயவிடமாட்டார்கள். பகையாக இருக்கும்போதுகூட மற்றவருடைய மாடுகள் தனது பயிர்களை மேய்ந்துவிட்டால் அடித்துவிரட்டுவார்கள் இருதரப்பாரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். சில நேரங்களில் மாடுகளுக்காக இவர்கள் அடித்துக்கொண்டு காயம் படுவார்கள். ஆடு மாடுகளை வதைக்க மாட்டார்கள் ஆடு மாடுகளை குறிப்பாக பசுக்களை தெய்வமாகக் கருதுவதால் அவைகளை துன்புறுத்தமாட்டார்கள்.

நகர வீதிகளில் மாடுகள் திரிவது போக்குவரத்துக்கு ஆபத்தானதுதான். சத்துவாச்சாரி நகராட்சி ஊழியர்கள் மாடுகளை கட்டி வைத்து பின்னர் விடுவித்துள்ளனர். முன்பெல்லாம் இவ்வாறு திரியும் மாடுகளை பட்டிகளில் அடைத்துவிடுவார்கள். அதற்கென்று பட்டிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். யாரும் மாடுகளைக் கொன்றதில்லை. தொடர்ச்சியான, விடாப்பிடியான முயற்சிகளால் மட்டுமே இதுபோன்ற தொல்லைகளை தடுக்கமுடியும்.

ஆனால் இங்கே கல்லூரி நிர்வாகம் பசுக்களை விஷம் வைத்துக் கொலை செய்திருக்கிறது. கொலை செய்கிற அளவுக்கு அப்படி என்ன குற்றம் செய்துவிட்டன இந்தப் பசுக்கள்? இது மழைக்காலம் ஆனதால் கல்லூரி வளாகத்தில் ஏராளமாக புற்கள் வளர்ந்திருக்கும். புற்களை நாடிச் செல்வது பசுக்களின் இயல்புதானே.  பாவம் இந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு இது அடுத்தவர் இடம் என்று தெரியுமா? வாயில்லா ஜீவன்களைக் கொலை செய்துள்ளார்கள் என்றால் எவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்? இக்கல் நெஞ்சக்காரர்கள் மனிதர்களைக்கூட கொல்லத் தயங்கமாட்டார்கள். 

சென்னைத் தெரு நாய்களுக்காக கண்ணீர் வடிக்கும் "புளூ கிராஸ்" காரர்களுக்கு இலையெல்லாம் மிருக வதையாகத் தெரியாது. ஏன் என்றால் கொலைகாரர்கள் மேட்டுக்குடிகளாயிற்றே.பணக்காரர்களை பகைத்துக் கொண்டால் "புளூ கிராஸ்"  காலியாகிவிடுமே!

இங்கே புதைக்கப்பட்டது பசுக்கள் மட்டுமல்ல இப்பசுக்களின் உரிமையாளர்களான விவசாயிகளின் வாழ்கையும்தான். நட்ட ஈடுகள் தீர்வாகாது. கொலைகாரர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சரியான நீதியாகும்.

ஊரான்.



Tuesday, 21 December 2010

" ஐயர்" பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?


அன்புள்ள வலைப்பூ வாசகர்களே!

25.11.2010 அன்று "வினவு" தளத்தில் வெளியான எனது படைப்பு இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது.

ஊரான்.

---------------------------------------------------------------------------------------------

தினமணி நாளேட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையன்று வெள்ளிமணி இணைப்பில் “காலம் உங்கள் கையில்” என்ற பகுதி வெளியாகிறது. நமது நாட்டில் திருமணமாகாமலும், நல்ல வேலை கிடைக்காமலும், தொழில் நலிவாலும், நோயினாலும் அல்லல் படுவோரின் துன்ப துயரங்களை வெள்ளி மணியில் பார்க்க முடியும். 'மக்கள் மகிழ்ச்சி' என்ற செய்தி இல்லாமல் கலைஞர் செய்தி இருக்காது. ஆனால் தினமணி வெள்ளி மணியைப் பார்த்தால் தெரியும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா இல்லை துன்ப துயரங்களோடு வாழ்கிறார்களா என்பது.

“எனது தங்கைக்கு 36 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 28 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“என்னுடைய திருமணத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை.  எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?”

“எனது மகன் எம்.சி.ஏ படித்துள்ளான். ...... மேலும் திருமணம் எப்போது நடக்கும்?”

“எனது மகன் திருமணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.”

“எனது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு 32 வயது ஆகிறது. அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும?”

“எனது மகனுக்கு 28 வயதாகிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதும் அமையவில்லை.”

“எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

இவை பல்வேறு வாசகர்களால் திருமணம் குறித்து மட்டுமே கேட்கப்பட்ட  கேள்விகள்.

“உங்கள் தங்கைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும்.... ஏழைகளுக்கு சிறிது தானம் செய்யவும்.”

“உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி கேங்திராதிபத்ய தோஷம் பெற்று பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடனும் அசுபக் கிரகத்துடனும் இணைந்திருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது.”

“உங்கள் மகளுக்கு.....அசுபக்கிரகச் சேர்க்கை பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.”

“உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தனாதிபதி அசுபருடன் சேர்க்கை பெற்று இருப்பது திருமண தாமதத்தை உண்டாக்குகிறது.”

“உங்கள் மகனுக்கு.....களத்ர ஸ்தனாதிபதி அசுபர் சேர்க்கை பெற்றுள்ளதால் ....”

“உங்கள் மகனுக்கு.....அதே சமயம் களத்ரஸ்தனாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திரப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் அசபக் கிரகங்கள் இணைந்திருப்பதாலும்....”

இப்படி திருமணம் ஆகாததற்கான காரணங்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் நவம்பர் 12, 2010 தினமணி வெள்ளிமணி 'காலம் உங்கள் கையில்' பகுதியில் பட்டியலிடுகிறார்.

மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, அன்னதானம் செய்வது, தோஷம் பார்ப்பது உள்ளிட்ட பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர்.

இவை ஒவ்வொரு வாரமும் தொடரும் சிந்துபாத் கதைகள்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டவைகளா? ஜோதிடர் சொல்வது போல பரிகாரத்தினால்தான் திருமணம் நடக்கிறதா?

படிப்பில்லை என்றால், வேலையில்லை என்றால், வேலையில் இருந்தாலும் தினக்கூலி-ஒப்பந்தக் கூலி என்றால், விவசாய வேலை என்றால், அரசு வேலை இல்லை-தனியார் துறையில்தான் வெலை என்றால், நிரந்தர வருவாய் இல்லை என்றால், சொந்த வீடில்லை-வாசலில்லை என்றால், சினிமாக் கதாநாயகர்கள் போல ”ஹான்ட்சம்மாய்” இல்லை என்றால் ஆண்களுக்கு திருமணம் ஆவது தள்ளிப்போகும்.மேற்கண்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் நிராகரிக்கப்படுகிறார்கள். குடி கூத்து-கூத்தி கும்மாளம் என்றாலும் அரசு வேலை சம்பளம்-கிம்பளம் என்றால் 'அட்ஜஸ்ட்' செய்துகொள்வார்கள்.

வரதட்சணை-சீர் கொடுக்க வசதியில்லை, சிவப்பாய் இல்லை-மொத்தத்தில் சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல அழகாய் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் பெண்களுக்கு திருணம் தள்ளிப் போகிறது. படிப்பில்லை, குடும்பப்பாங்காய் இல்லை, வாயாடி, 'அவ சரியல்லை', 'அவளோட அம்மா சரியில்லை', இவை எல்லாம் பெண்களை நிராகரிப்பதற்கான இரண்டாம் பட்சக் காரணங்கள்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, ஒரே பெண், சொத்து-பத்து ஏராளம்,   பெண்ணுக்கு அரசாங்க உத்யோகம்-நிறைய சம்பளம் என்றால் பார்ப்பதற்கு பெண் 'முன்ன பின்ன' இருந்தாலும் 'அட்ஜஸ்ட்' செய்து கொள்வார்கள்.

இவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அதுவும் இன்றைய உலக மயமாக்கல்-நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான காரணங்கள் அதிகரித்து வருகின்றன.

உண்மைக் காரணங்களை மூடி மறைத்து ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மக்களை மூழ்கடிப்பதில் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜோதிடர்களும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி அலையும் நபர்களோ வரன் தேடி வறண்டு போகிறார்கள்.

ஊரான்.

Thursday, 16 December 2010

நங்கைகளே! அழகை நகப்பூச்சில் தேடாதீர்கள்!

குழந்தைகளின் கை, கால் விரல் நகங்களுக்கு பல வண்ணப் பூச்சுப்பூசி (nail polish) அழகு பார்ப்பதுண்டு. ஆனால் இன்று இதுவே பெண்களிடம் அழகுக் கலை கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. பளபளக்கும் பல வண்ணங்களில் பல்வேறு நிறுவனங்களின் நகப்பூச்சுகள் சந்தையில் குவிந்துள்ளன. பெண்களின் அழகை அதிகப்படுத்த நகப்பூச்சுகள் அவசியம் என பலவாறாய் நம்பச் செய்து வணிகத்தைப் பெருக்கும் போட்டா போட்டி சந்தையில் நிலவுகிறது. அழகாய்த் தோன்றினால் தன்னம்பிக்கை பிறக்குமாம். அதற்காகத்தான் அழகுக் கலையே இன்று ஒரு படிப்பாக உருவெடுத்துள்ளது.

நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி வருவதால் பெண்களையும் போகப் பொருளாகப் பார்க்கும் சிந்தனைப்போக்கு ஆண்களிடையே அதிகரித்துள்ளது. ஆண்களின் போகப் பொருள்தான் பெண் என பறைசாற்றும் வகையில்தான் சில பெண்களின் அழகுணர்ச்சி அமைந்துள்ளது. கால் விரல் நுனியிலிருந்து உச்சஞ்தலை மயிர் விரை அலசி ஆராய்ந்த பிறகே பெண் அழகானவளா என முடிவு செய்யும் ஆண்களும் அதிகரித்துவிட்டனர். தான் அழகானவள் என்று ஆண்களிடம்  தனது அழகை நிலைநாட்ட முயல்வது மட்டுமல்ல உன்னைவிட நானே அழகு என்று பிற பெண்களோடு ஒப்பிட்டு தன்னை உலக அழகியாக கருதும் மனநிலைக்கும் சில பெண்கள் ஆளாகி உள்ளனர்.

நகம் நம் அகத்தின் முகம்பார்க்கும் கண்ணாடி என்பார்கள். ஒருவரின் நகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே அவரின் ஆரோக்கியத்தை அளவிட முடியும். 
  • வெள்ளை நிற நகம் (nails: white) 
  • நகத்தில் வெண்புள்ளிகள் (nails: white:spots)  
  • கருப்பு நிற நகம் (discoloration-blackness)
  • நீல நிற நகம் (nails: bluness)
  • சாம்பல் நிற நகம் (nails: gray)
  • சிவப்பு நிற நகம் (nails: red)
  • கருஞ்சிவப்பு நகம் (nails: red: black)
  • மஞ்சள் நிற நகம் (nails: yellow) 
  • ஊதா நிற நகம் (nails: purple)
  • வெளிறிய நீல நிறமான நகம் (nails: livid)
  • சொரசொரப்பான நகம் ((roughness: fingernails)
  • உலர்ந்த நகம் (dryness: fingers: nails: about) 
  • கடினத்தன்மையுள்ள நகம் (nails: hardness)
  • நகத்தில் வீக்கம் (inflammation-fingers-nails) 
  • நகத்தில் நமைச்சல் (itching:fingernails)
  • நகம் மரத்துப் போதல் (nails: numbness, tingling-fingers-nails)
  • நகத்தின் மென்மைத் தன்மை (soft nails)
  • தடித்த நகம் (thick-nails)
  • மெலிந்த நகம் (thin nails)
  • நகத்துக்கடியில் ரத்தக்கட்டு (nails: blood settled under nails)  
  • ஒளியிழந்த (nails: dark)
  • உணர்ச்சியற்ற நகம் (horny.fingernails)
  • எளிதில் உடையக்கூடிய நகம் (brittle nails)
இப்படி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். இந்த மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன? உடலியக்கச் செயல்பாட்டில் எற்படும் கோளாறுகளே நகத்தில் குறிகளாத் தோன்றுகின்றன. நகப்பூச்சு பூசி இவைகளை மறைத்துவிட்டால் நீங்கள் நோயுற்றிருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிய முடியும்?

உடலியக்கச் செயல்பாட்டில் கோளாறுகள் ஏற்பட்டால் முதலில் அவை நம் உடலின் வெளிப்பகுதியில், அதாவது நம் உடலின் முக்கியத்துவமற்ற பகுதிகளில் குறிகளாக வெளிப்படுகின்றன. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் உடலியக்கச் செயல்பாட்டுக் கோளாறுகள் முதலில் நகம், முடி, தோல் ஆகிய பகுதிகளில்தான் வெளிப்படும். இவற்றை அலட்சியப்படுத்தினாலோ, மூடி மறைத்தாலோ, மருத்துவம் பார்க்காமல் விட்டாலோ உள்ளுக்குள் ஏற்பட்ட கோளாறு மேலும் முற்றி அதற்கடுத்த முக்கிய உறுப்புகளை நோக்கி வளரும். இதுதான் உயிர்வாழ்தலின் உடலியக்க விதி. (survival mechanism). இதைத்தான் ஹோமியோபதி மருத்துவம் தெளிவு படுத்துகிறது.

நகப்பூச்சு போடும் பெண்களே! நீங்கள் உங்களை அழகுபடுத்திக்கொள்வதாகக் கருதி நகங்களில் மேல்பூச்சுப்பூசி நோய்களை மறைத்து உள்ளமுக்குகிறீர்கள். பின்னாலிலே வரும் பெரு நோய்க்கு வழி ஏற்படுத்துகிறீர்கள்.

ஊரான்.



  

Saturday, 11 December 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? ----- இறுதிப் பகுதி

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றிணைவதும், இனப்பெருக்கம் செய்வதும் உயிரினத்தின் இயற்கை நிகழ்வு (Natural phenomena). இதற்காக மனித இனம் ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஏற்பாடுதான் திருமணம். இந்த ஏற்பாட்டிற்கு எவை அவசியமானதோ அவற்றை மட்டும் செய்தால் போதுமானது. இதற்கு மேலும் செய்யக்கூடியவை பொருள் விரயத்தையும், காலவிரயத்தையும் மட்டுமே விட்டுச் செல்கின்றன. இந்தப் பொருள் விரயமே பின்னால் மிகப் பெரும் சுமையாக அமைந்துவிடுகிறது. 

குடும்ப வாழ்க்வைத் தொடங்கிய பிறகு நாம் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியமானது. உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைப் பெற்று பிள்ளை குட்டிகளுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் நலமாக வாழ்வதற்குத்தான் "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ" வாழ்த்துகிறார்கள் போலும். 

ஜாதகம் பார்ப்பதும், சடங்குகள் சப்பிரதாயங்களை கடைபிடிப்பதும் முக்கியமாக சுமங்கலி பாக்கியத்துக்காகவே செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் திருமணத்தன்றோ அல்லது அதற்கு அடுத்து மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவோ மணமகன் விபத்துக்குளாகியோ அல்லது வேறு காரணங்களாளோ மரணமடைவது நடந்து கொண்டுதானே இருக்கிறது. மணமகன் மரணமடைவான் என்பதை முன்கூட்டியே சொல்லாத காரணத்திற்காக, மரணத்தை மறைத்த குற்றத்திற்காக எந்தப் புரோகிதன் மீதும் யாரும் கிரிமினல் வழக்குத் தொடர்வதில்லை.  

அடிப்படைத் தேவைகளுக்காக நாம் அன்றாடம் உழைக்கிறோம். கட்டுப்படியாவதில்லை. நம்மை ஆளும் அரசுதான் நமது வாழ்வை தீர்மானிக்கும் மிக முக்கிய சக்தியாகும். சரியான அரசு இல்லை என்றால் மக்களின் வாழ்வு அதோ கதிதான் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அரசு தோன்றுவதற்கு முந்தைய ஆதிகால சமூக வாழ்க்கையில் இயற்கையைச் சார்ந்தே மனிதன் வாழ்ந்து வந்தான். அரசு பூதாகரமாக வளர்ந்துள்ள இன்றைய சமூகத்தில் அரசுக்கு வெளியே தனித்து யாரும் வாழ்ந்துவிட முடியாது.

எந்தத் தொழிலை நாம் தேர்வு செய்தாலும், அந்தத் தொழிலின் கொள்கைகளை வகுப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அரசுதான். இதற்கு ஏற்பதான் அத்தொழிலில் நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமைகிறது. போதுமான வாய்ப்பு வசதிகள் கிடைப்பவர்கள் ஓரளவு முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் திண்டாடுகிறார்கள். விவசாயம், நெசவு உள்ளிட்ட எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் போதிய வருவாய் இல்லை. படிக்க வசதியில்லை. படித்தாலும் வேலையில்லை. வேலை கிடைத்தாலும் போதிய ஊதியம் இல்லை. விக்கிற விலைவாசியில் எதைத்தான் வாங்க முடியும்?. நேற்று தாராபுரத்தில் கத்தரிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்றிருக்கிறது. இவைகள்தானே நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சனைகள். 

பிள்ளைப் பேறு அவரவர் உடலியற்கூறு மற்றும் மரபு ரீதியான காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது.  இன்று பொருள் ஈட்டும் நடவடிக்கையே மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவனை மலடாக்கி வருகிறது. பிறகு பிள்ளைப்பேறு மட்டும் எப்படி நல்லபடியாக அமையும்?

உணவுப் பற்றாக்குறை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவது போன்ற பல்வேறு காரணங்களால் மனிதன் பலப்பல நோய்களுக்கு ஆளாகிறான். பிறகு எப்படி நலமோடு வாழமுடியும்?

வரதட்சணைக் கொடுமை, மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவுகளால் வரும் தொல்லைகள், ஆண் வாரிசு இல்லை என்றால் அதற்குக் காரணம் ஆண்தான் என்றாலும் அதற்காகப் பெண்ணையே குற்றவாளியாக்கும் இந்தச் சமூக மடமைத்தனம் என பெண்ணுக்குத்தான் எத்தனைக் கொடுமைகள். இவையும் இன்றைய சமுதாயத்தின் பொருள் உடைமை வெறியின் விளைவேயன்றி வேறல்ல. 

ஆக எல்லோரும் ஏதோ ஒரு வகையில் துன்பங்களோடும் துயரங்களோடும்தான் வாழ்ந்து வருகிறோம். அதற்குக் காரணம் தனிப்பட்ட நபர்களின் ஜாதகமா அல்லது அரசின் செயல்பாடுகளா? இத்துன்பங்களும் துயரங்களும் அரசின் நல்ல கொள்கைகளால், செயல்பாடுகளால், சிறந்த சமூக அமைப்பால் தீருமா? அல்லது நாம் கடைபிடிக்கும் சடங்குகள் சம்பிரதாயங்கள் இத்துன்பங்களைத் துரத்துமா?

முற்றும்

ஊரான்

Friday, 10 December 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? தொடர்.....4

ஜாதகப் பொருத்தங்களும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களும் திருப்தியளிக்கும் பட்சத்தில் திருமணம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்வதும் என்கிற சம்பிரதாய நடவடிக்கை. இதற்கு நாள், நேரம், கிழக்கே போவதா, தெற்கே போவதா, எந்த பக்கம் போகக் கூடாது என்பதையெல்லாம் உறுதி செய்து கொண்டுதான் செல்கின்றனர். போகும் போது கண்டிப்பாக பூனையோ, பொட்டிழந்த பெண்ணோ கண்ணில்கூட பட்டுவிடக் கூடாது. தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால் பயணம் ரத்து. 

போய் உட்கார்ந்த உடன் பஜ்ஜி, போண்டா என அனைத்தையும் ருசி பார்க்கலாம். ஆனால், கை மட்டும் நனைக்கக் கூடாதாம்! இது என்ன லாஜிக்கோ? செல்லும் போது மூன்று, ஐந்து அல்லது ஏழு பேர் என்கிற ஒற்றைப்படையில்தான் செல்ல வேண்டும். இரட்டைப்படையில் செல்லக்கூடாதாம். சென்றால் என்னவாகும் என்று யோசிக்கக்கூட யாருக்கும் தைரியம் கிடையாது.

அடுத்து படைபலத்தை கூட்டிக் கொண்டு கை நனைக்கச் செல்வது. இதற்கு குறிப்பாக பிற சாதியினர் ஒன்றிரண்டு பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய அருமை பெருமைகளை பறைசாற்றிக் கொள்ள முடியும். வசதி இருக்கிறதோ இல்லையோ இந்தப் படலத்திற்கு குறைந்த பட்சம் அம்பாசிடரில் தொடங்கி ஸ்கோர்பியோ வரை-சொந்த கார் இல்லை என்றால் வாடகைக்காவது வண்டி அமர்த்த வேண்டும். இல்லையென்றால், மரியாதை என்னத்துக்கு ஆவது? இது இரு வீட்டாருக்குமே பொருந்தும்.

செல்லும் போது வழியில் ஏதாவது ஒரு கோவிலில் கட்டாயம் தேங்காய் உடைத்தாக வேண்டும். தேங்காய் உடைக்கும் போது எசகு பிசகாக -கோணலாக உடைந்தாலோ, அழுகலாக இருந்தாலோ-எதாவது நடந்துவிட்டால், அதற்கு ஒரு NCR -'நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்'-போட்டுக் கொள்வார்கள்! 

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்லும் போது பெண் வீட்டார் பெண்ணை அலங்காரம் செய்து அனைவர் முன்பும் நிறுத்துவார்கள். இதற்குத் தனி அழகுக்கலை நிபுணர்களை அழைத்து வந்து அழகு படுத்திக் காட்டுவதும் உண்டு. ஏற்கெனவே, முதல் படலத்திலேயே பெண்ணும் பையனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்ததினால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த அலங்காரமெல்லாம், பையன் வீட்டு படைபலத்திற்கு பெண்ணைப் பிடிக்க வேண்டுமே என்பதற்காக. 

விருந்து மற்ற பிற இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் முடிந்த பிறகு நிச்சயார்த்தம் தேதி தீர்மானிக்கப்படும். சுவரில் தொங்கும் ஒரு காலண்டரைப் பார்த்து தோராயமாக திருமணத்திற்கு ஒரு தேதியையும் தீர்மானித்துக் கொள்வார்கள். 

அடுத்து நிச்சயதார்த்தத்தை நடத்துவது யார்? திருமணத்தை நடத்துவது யார்? என்பது தீர்மானிக்கப்படும். சாதி வழக்கம், ஊர் வழக்கம் என்ற பெயரில் இவை தீர்மானிக்கட்பட்ட காலம் போய் திருமணத்தை பெண்வீட்டார் தலையில் கட்டுவதுதான் இன்றைய வழக்கம். இது ஒரு சம்பிரதாயமாகவும் மாறிவருகிறது.

நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிக்கை அடிப்பதும் உண்டும். மண்டபம், கார், ஊர்வலம் இவையெல்லாம் வசதியைப் பொருத்து அமையும். இதற்கும் பெரும் படை தேவைப்படும். சில நேரங்களில் பேருந்து வைப்பதும் உண்டு. பலத்தைக் காட்டவேண்டாமா? நிச்சயதார்த்தத்தை நடத்துபவர்கள் சாப்பாடு போடுவதற்கு திண்டாடவேண்டும். இதனைப் பார்த்து, இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு எப்படி என்று வாய் பிளக்க வேண்டும்.

அடுத்து ஐயரைக் கலந்து ஜாதக் பொருத்தப்படி திருமண நாள், நேரம் தீர்மானிப்பார்கள். இவர்கள் தீர்மானித்த நாளில் மண்டபம் தேடுவார்கள். வேண்டிய மண்டபம் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு தேதியில் மண்டபத்தை பதிவு செய்வார்கள். அந்தத் தேதி ஜாதகத்துக்குப் பொருந்தவில்லை என்றாலும், இன்னொரு NCR-'நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்'-போட்டுக் கொண்டு தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்வார்கள். மண்டபம் கிடைக்காமல் திண்டாடுவதற்குக் காரணம், பஞ்சாங்கப்படி முகூர்த்த நாள் மாதத்தில் ஒரு சில நாட்கள்தானே. பிறகு எப்படி ஒரே நாளில் பல திருமணங்களை, இருக்கின்ற ஒரு சில மண்டபங்களில் நடத்த முடியும்? மண்டபம் மட்டுமல்ல, புரோகிதரும் கிடைக்கமாட்டார். இது அந்தக் காலத்திலேயே வரும்படிக்காக பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் போலும்.

முன்பெல்லாம் வீட்டிலேயே திருமணம் நடக்கும். இட நெருக்கடி இருந்தாலும், உணவு பரிமாற இடப் பற்றாக்குறை இருந்தாலும் இருக்கிற இடத்தில் ஒருவழியாக சமாளித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம், கட்டாயம் கோவில் மண்டபமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். வசதியைப் பொருத்து தனிக் கல்யாண மண்டபம்.

அடுத்து பத்திரிக்கை அடிப்பது. இதற்கு ஐயரை 'கன்சல்ட்' பண்ண வேண்டும். பிறகு, முன் அட்டையை அலங்கரிக்கப் போவது குலதெய்வமா அல்லது ஐயா, திருமா, வைகோ, அம்மா, கலைஞர், தளபதி, மற்றும் சாதித்தலைவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பின் அட்டையை தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைக்கு பிறகு மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளி, சாதி சனம் என மொத்த ஊரையே பட்டியலிட வேண்டும். இதில் பெயருக்குப்  பின்னால் ஒரு பட்டம் கட்டாயம் இடம் பெறவேண்டும். படித்திருந்தால் படிப்பும், வேலையிலிருந்தால் வேலையும், இவை இரண்டும் இல்லாவிட்டால் சாதிப் பட்டம்-கவுண்டர், முதலியார், செட்டியார், நாயுடு எக்ஸ்செட்ரா., கோவணம் அளவே நிலமிருந்தாலும் நிலக்கிழார் பட்டம். இவற்றில் ஏதாவது மிஸ்ஸிங் என்றால் அவர் கல்யாணத்திலும் மிஸ்ஸிங்.

பத்திரிக்கை வீட்டுக்கு வந்தவுடன், அதன் நான்கு மூளைகளிலும் மஞ்சளில் முக்கியாகவேண்டும். இல்லையேல் மங்களம் இல்லாமல் போய்விடும்! பத்திரிக்கை கவருக்குள் நான்கு மஞ்சள் அரிசி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பத்திரிக்கை வைக்கும் போது, நெருங்கிய சொந்தம் என்றால், தட்டிலே புடவையோ, நகையோ வைத்து அழைக்க வேண்டும். சற்று தூரத்து உறவு என்றால் பத்திரிக்கையுடன் வெத்தலை பாக்கு போதும். நண்பர்கள் என்றால் வெறும் பத்திரிக்கை போதும், தட்டு கூடத் தேவையில்லை. தெரிந்தவர்- கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் இருந்தால், பத்திரிக்கையில் பெயர் எழுதக் கூடத் தேவையில்லை. பத்திரிக்கை வைக்கச் செல்லும் போது கையிலே குங்குமச் சிமிழ், கொஞ்சம் மல்லிகைப் பூ கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டுமல்லவா!

மணப் பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுக்க இருவீட்டாரும், அருகில் உள்ள பெருநகருக்குச் சென்றாக வேண்டும். வசதியைப் பொருத்து ஆயிரங்களில் தொடங்கி பல ஆயிரங்களில் முடிவதுண்டு. இதில் ஒரு நாளில் முடிக்காமல் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு மறுநாளும் பார்ப்பவர்கள் உண்டு. பொருத்தமான கலர் கிடைக்க வேண்டுமே? பட்டுப் புடவை இல்லாமல் கல்யாணம் ஏது, அதற்குத்தான் இவ்வளவு முக்கியத்துவம்.

சொந்த பந்தங்களுக்கு துணிமணி எடுக்க செலவு தனித்தனி. எடுத்த துணி சரியில்லை என்று ஒரு சொந்தம் ஆட்சேபித்தாலும் அதற்கு பிடித்தமாதிரி  இன்னொரு துணி எடுத்தாக வேண்டும். குறிப்பாக சேலை எடுப்பதில்தான் இந்தப் பிரச்சனை அதிகமாக வரும்.

தாலி வாங்குவது. அதற்கு உரிய கைராசி பொற்கொல்லரைத் தேடுவது; சாதியைப் பறைசாற்றும் முத்திரையைத் தீர்மானிப்பது என இது ஒரு தனிவேலை.

பந்தக்கால் நடுவது, நவதானியத்தை முளைவாரி விடுவது-எத்தனை சட்டி என்பதை சாதி தீர்மானிக்கும்-குல தெய்வத்தைக் கும்பிடுவது எல்லாம் அவரவர் குடும்பக் குழு மரபைப் பொருத்தது.

பசிக்கு சோறு போடுவதைவிட பகட்டைக் காட்டுவதற்காகவே பந்தி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு முதலில் மெனுவை, ஐயிட்டங்களைத் தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த மெனுவுக்கேற்ற சமையல்காரரைத் தேட வேண்டும். அவர் குஜராத்தில் இருந்தாலும் விடப்போவதில்லை. வந்தவர்கள் மெச்சவேண்டுமே. அதற்காகத்தான் இவ்வளவும்.

முன்பெல்லாம், சோறு, சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை அல்லது போண்டா, கொஞ்சம் பாயாசம் இவைதான் இயல்பான மெனு. யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் பூரி தோசை ஊத்தாப்பத்தில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை ஆயிரத்தெட்டு ஐயிட்டங்கள். இலையைப் பார்த்தவுடனே, சாப்பிடச் சென்றவர் மலைத்துப்போய் ஒரு சிலவற்றை சாப்பிட்டுவிட்டு மற்றதை வீணாக்குவது சகஜமாக நடக்கிறது. இங்கே வயிற்றுக்கு உணவு என்பதைவிட பந்தாவுக்காவே பந்தி நடக்கிறது.

முதல் நாள் மாலை வரவேற்பு; கல்யாண மண்டப அலங்காரம்; பிரம்மாண்டமான மணமேடை. பளபளக்கும் வண்ண வண்ண டிஜிட்டல் பேனர்கள் இதில் மணமக்கள் மட்டுமல்ல மணமக்களின் பெற்றோர்களும் மின்ன வேண்டும். மண்டபத்திற்கு போகின்ற பாதையில் இருபுறமும் துணிச்சீலைகள் கட்டுவது; மண்டபத்தை முழுவதற்கும் சீரியல் லைட்டுகள் அமைப்பது-பக்கத்தில் மரங்கள் இருந்துவிட்டால் அவையும் வண்ண விளக்குகளால் பூத்து குலுங்கும். புற்களையும் தழைகளையும் அள்ளி தெளித்து முடிந்தால் வெண்புறாக்களை மேடையில் மேயவிட்டு வாய்ப்பிருந்தால் கூடுதலாக சில ஜீவராசிகளையும் உயிரோடு மேடையிலேற்றி பிரமிக்க வைக்கிறார்கள். 

இன்னொரு பக்கம் சைடு மேடையிலே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட்டு கச்சேரி நடத்தி அனைவரையும் பிரமிக்க வைக்கிறார்கள். நீண்ட நாட்கள் சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு 
வருவார்கள். இவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூட இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இடம் கொடுப்பதில்லை. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்தக் காட்டுக்கத்தல் கௌரவமானதுதான். ஆனால், மனம் விட்டு பேசுபவர்கள்கூட இந்தக் கத்தலுக்கு மேல் அதிகமாக கத்திப் பேசித் தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

மணமேடையில் மணமக்களுக்கு பின்னால் யார் நிற்பது என்பது இரு வீட்டாரின் வல்லமையைப் பொருத்தது. 

மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி என்றால், நண்பர்கள், உறவினர்கள் சிலர் முதல்நாள் இரவு விடியவிடிய ரூம் போட்டு தண்ணியடிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. இது இல்லையென்றால், திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி இருக்காது.

காலை நான்கு மணியிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கும். ஐயர் தீர்மானித்த வகையில் அவருக்கு அடுத்த திருமண நிகழ்ச்சி இருந்தால் அவசரமாகவும், இல்லையென்றால் மெதுவாகவும் மந்திரம் ஓதி சம்பிரதாயப்படி திருமணத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு இருக்கும் சம்பிரதாயங்கள் பலப்பல. ஊருக்கு ஊர், சாதிக்கு சாதி இச்சம்பிரதாயங்களும் சடங்குகளும் மாறுபடும்.

மொய்யில்லாமல் கல்யாணமா? மாமன் வைக்கும் மொய்யில் தொடங்கி நண்பர்கள் வைக்கும் மொய் வரை, நகையில் தொடங்கி பண்ட பாத்திரங்களில் தனது பெயரைப் பொதித்து, ரூபாய் நோட்டுகளை கவரிலே திணித்து-கவர் கிடைக்காமல் திண்டாடுவதும் தனது பெயரை எழுதத் தெரியாமால் திண்டாடுவதும் தனிக்கதை. ஏற்கெனவே எழுதின மொய்யை திரும்பப் பெறுவதில் கல்யாணக்காரனின் ‘அக்கரையும்’, மொய்யை வாங்கியவன் திரும்பத் தனது கடனைச் செலுத்தும் ‘கண்ணியமு’ம் இங்கே ஒன்றுபடுகிறது. இனி நமக்கு வருமா என்ற கவலையுடன் மொய் எழுதுபவர்களும் உண்டு. உயரிய மனித உறவை வெறும் பண உறவாக சிறுமைப் படுத்தும் இதை பழங்காலந்தொட்டே செய்து வருவதற்காக யாரும் வெட்கப்பட்டதில்லை! இதற்கு தலைமுறை தலைமுறையாக தனி நோட்டை பராமரிப்பது, தொல்லியல் ஆய்வுக்குரியது.

இந்து மதம் சார்ந்த திருமணம் குறித்தே இங்கு கருத்துக்களை முன் வைத்துள்ளேன். இசுலாமிய, கிருத்துவ மதத் திருமணங்களில் சில மாறுபட்டும் சில கூடுதலாகவும் சில குறைவாகவும் அமையக் கூடும். 

மணவீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்து வகையான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடித்து அனைவரையும் மகிழ்வித்துத்தான் பெரும்பாலான திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

திருமணத்திற்குப் பிறகு, தங்களது வாழ்வில் மணமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு திருமணத்தில் கடைபிடிக்கப்படும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்ன பிற நடவடிக்கைகளும் இவர்களுக்கு உதவுகிறதா என்பதே நம்முடைய கேள்வி. 

தொடரும்

ஊரான்