Showing posts with label அழகு. Show all posts
Showing posts with label அழகு. Show all posts

Sunday, 4 December 2011

மீண்டும் உச்சத்தில் மல்லிகைப் பூ!

"மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!" என்ற தலைப்பில் சென்ற ஆண்டு ஒரு இடுகையை வெளியிட்டேன். முதலில் வினவு தளத்தில் வெளியானது. அதன் பிறகு எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ! என்ற தலைப்பில் ஊரான் வலைப் பூவில் மீள் பதிவு செய்யப்பட்டது.

 ஒரு கிலோ மல்லைகைப் பூவின் நேற்றைய விலை ரூபாய் 1500, இன்றைய விலை ரூ 2000. அப்படியானால் ஒரு முழம் என்ன விலை இருக்கும்? எப்படி கணக்குப் போடுவது? ஒன்றும் விளங்கவில்லை. சரி, இந்த விலை விற்கிறதே அவ்வளவு சாசு கொடுத்து வாங்குவார்களா என ஒரு கணம் யோசித்தேன். பலரின் கூந்தலைப் பார்த்து திகைத்துப் போனேன். இன்று திருமண நாள் என்பதால் திருமணங்களும் புது மனை புகு விழாக்களும் அதிகமாக நடைபெற்றன. மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறதே என்பதற்காக யாரும் கூந்தலை காயப் போடவில்லை. கொண்டையில் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கத்தான் செய்தன. 

தலையில் சூடிய ஆறு மணி நேரத்திற்குள் வாடி வதங்கி குப்பைக்குச் செல்லும் மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறது. என்னக் கொடுமை சார் இது? 

ஒரு பொருளின் பயன்பாடு பற்றியோ அதன் அத்தியாவசியம் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. உற்பத்தியாளனுக்கும் விற்பனையாளனுக்கும் கை நிறை காசு சேர்ந்தால் சரி. அவன் ஜோலி முடிந்தது.

ஒன்றை நாம் செய்யும் போது அதுவே நம் வழக்கத்திற்கொன்றானதாக மாறிவிட்டால் அதை யாரும் சொல்லாமலேயே செய்வோம். அப்படித்தான் பூச் சூடிக் கொள்வதும். அழகுக்கும் பெண்மைத்தன்மைக்கும் பூ அவசியமானது என பெண்கள் மீது அவர்கள் அறியாமலேயே ஒரு கருத்தியல் திணிக்கப்பட்டுள்ளதால் பெண்ணானவள் பூ அவசியமாதா இல்லையா என்பதைப் பற்றி அறியாமலேயே ஒரு வக்கமான செயலாக பூச்சூடிக் கொள்வதை செய்து வருகிறாள். வழக்கமாகிவிட்ட ஒரு செயலை அதற்கான செலவு அதிகம் என்பதால் அவ்வளவு இலகுவில் அதை விட்டுவிடுவதில்லை. வேண்டுமானால் குறைத்துக் கொள்வார்களே ஒழிய வழக்கத்தைக் கைவிட மாட்டார்கள். 

குடிப்பழக்கம் ஒருவனின் வழக்கமான செயலாக மாறிவிட்டபிறகு ஒரு குவார்ட்டர் ஆயிரம் ரூபாய் என்பதற்காக குடிப்பதை விட்டுவிடுவானா என்ன? குவார்ட்டரை வேண்டுமானால் கட்டிங்காக குறைத்துக் கொள்வானே ஒழிய குடியை விட்டுவிட மாட்டான்.

Saturday, 2 July 2011

பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?

விஜய் தொலைக்காட்சியில் நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களை மையமாக வைத்து கோபிநாத்தின் “நீயா நானா?” நிகழ்ச்சி வாரம் தோறும் ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் இவர்கள்தான் இந்தியாவோ எனக் கேட்கத் தோன்றும் அளவுக்கு நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அன்றாட ஆசாபாசங்கள் அனைத்தையும் அக்கு வேறு ஆணிவேராக அலசி எடுத்து வருகிறார் கோபிநாத். மயிர் வரை நீண்டுவிட்ட இந்த மயிர்பிளக்கும் வாதம் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் எனத் தெரியவில்லை.

நிகழ்சியில் பங்கேற்போருக்கு பெரும்பாலும் தமிழில் பேச வராது. தங்களின் 'வளமான வாழ்க்கைக்கு' உதவாது என்பதால் தமிழை இரண்டாம் மொழியாகக்கூட படிக்க விரும்பாத இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தாய்த் தமிழையே வேண்டாம் என்பவர்கள் பெற்ற தாயை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களுக்காகத்தான் முதியோர் இல்லங்கள் திறந்து கிடக்கின்றனவே! இவர்களின் பிரச்சனைகள்தான் கோபிநாத்துக்கு மிகவும் பிடிக்கும் போலும்!

உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, வசிக்க இடமின்றி வாடும் பெரும்பான்மையான இந்திய உழைப்பாளிகளின் பிரச்சனையை அலசினால் அதை யார் பார்ப்பார்கள்? பசிக்காக அல்ல-ருசிக்காக உண்பவர்கள்;  தேவைக்காக அல்ல-பகட்டைக் காட்ட மானம் போனாலும் கவலையில்லை என 'பேஷனுக்காக' ஆடை அணிபவர்கள்;  வசிப்பதற்காக அல்ல-கனவுலகில் மிதப்பதற்காக வாழ்விடங்களைத் தேடுபவர்கள்; இவர்கள்தான் ”நீயா நானா!” நிகழ்ச்சியின் மாந்தர்கள்.

இவர்களை ஒன்று கூட்டி கால் நகம் முதல் உச்சஞ் தலை மயிர் வரை அலசி ஆராய்வதில் இவருக்கு நிகர் இவரே. இவர் இந்த வாரம் (26.06.2011) எடுத்துக்கொண்ட தலைப்பு "பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?"

இங்கே பெண் மனம் என்பது ஏழை எளிய பெண்களுக்கானதல்ல. இவர்களுக்கு ஏது அழகும் அறிவும் என ஒதுக்கிவிட்டாரோ! அதனால்தான் மருந்துக்குக்கூட ஏழை எளிய பெண்கள் யாரையும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை போலும்!

அறிவின் கர்வத்தில் உள்ளவர்கள் ஒரு அணியாகவும், அழகின் கர்வத்தில் இருப்பவர்கள் மற்றொரு அணியாகவும் அறிவையும் அழகையும் அலசி எடுத்தார்கள். அழகு முக்கியமல்ல என வாதாடியவர்கள் அறிவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட அழகுக்கே முக்கியத்துவம் கொடுத்து அலங்காரத்தோடு வந்திருந்தார்கள்.

இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய 'லேடீஸ் பேக்' இல்லாமல் வெளியே செல்லமாட்டார்கள். பிறகெதற்கு இந்த மயிர் பிளக்கும் வாதம்? நீயா நானாவின் 'ரேட்டிங்' ஏற வேண்டாமா? 


ஆண்களைக் கவரும் கவரிமான்

பொதுவாக அழகியல் குறித்த அடிப்படையான புரிதலுக்குப் பதிலாக, அழகு இரசிப்பதற்கானது, நுகர்வதற்கானது என்கிற கருத்தாக்கமே நிலவுகிறது. பெண்ணானவள் பிறரை குறிப்பாக ஆண்களைக் கவரும் கவரிமான் என்பதைத்தாண்டி இவர்களின் அழகியல் கண்ணோட்டம் செல்வதில்லை. வாடிக்கையாளர்களைக் கவர ஒரு விலைமாது செய்யும் அலங்காரத்திற்கும், ஒரு ஆண் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் தன்னை அழகுப்படுத்திக் கொள்ளும் அலங்காரத்திற்கும் சாரம்சத்தில் வேறுபாடு கிடையாது. அழகின் கர்வத்தில் இருந்த ஒரு சிலர் இதை பகிரங்கமாகவே பகிர்ந்து கொண்டார்கள். உணர்ந்தோ உணராமலோ பெண்கள் இத்தகைய மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே இன்றைய எதார்த்தம்.

பிறர் புகழ வேண்டும்,  பாராட்ட வேணடும் என்கிற ஏக்கமே இவர்களை இத்தகைய நிலைக்கு இட்டுச் செல்கிறது. இந்த ஏக்கம் (longing for opinion of others) மனதளவில் ஒரு நோயக்குறி என்பதை ஹோமியோபதி மருத்துவம் தெளிவுபடுத்துகிறது. உருவ அழகுக்கு முக்கியத்துவம் தரும் அனைவருக்குமே-ஆண்கள் உட்பட-இது பொருந்தும்.

சாமான்யப் பெண்கள் யாரும் அழகுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதைத்தான் “கிராமங்களில் யாரும் அழகைத் தூக்கி சுமப்பதில்லை.” என சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர் சந்திரா முன்வைத்தார்.

முழங்காலுக்கு மேல் புடவையைத் தூக்கிச் செருகி நாத்து நடும் பெண்கள்; வயல்களில் அவர்கள் நேர்த்தியாய் நட்டுள்ள நாத்துகள்; இங்கே அழகென இரசிப்பது அப்பெண்களின் உமைப்பால் உருவான நெல் வயல்களைத்தானே தவிர அவர்களின் முழங்கால்களை அல்ல. ஆனால் இதைக்கூட ஆபாசமாக்கி நாத்து நடும் பெண்களை அசிங்கப் படுத்துபவர்கள் திரைப்படக் கயவர்கள்.

ஒற்றை மயிருக்கு ஒப்பாரி வைக்கும் ஒய்யாரப் பெண்களே! கட்டு தூக்கியதால் ஒட்டுமொத்தக் கூந்தலும் ஒட்டிக் கொண்டு சிக்கெடுக்கும் விவசாயப் பெண்டிரை நீங்கள் கண்டதில்லையோ!

உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை உழைப்பே அவர்களுக்கு அழகு சேர்க்கிறது. உழைக்காதப் பெண்களுக்கோ அவர்களின் கூந்தல் மயிர் ஒன்று உதிர்ந்தாலே அழகும் சேர்ந்தே உதிர்கிறது.  

”அழகாய் இருக்க யாருக்குதான் ஆசை இல்லை?” என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.  நமது ஆக்கங்களும், சேவையும் பயனுள்ளதாய் இருந்தால் நாம்தான் இவ்வுளகில் அழகானவர்கள். உழைப்பால் உருவாகும் அழகு உலகம் உள்ளவரை போற்றப்படும். உருவத்தால் எழுப்பப்படும் புற அழகு முப்பதுகளிலேயே முடிந்துவிடும்.

இயற்கையான நமது உள்மனது எதை அழகு எனப் பார்க்கிறது? நேர்த்தியாக கட்டப்பட்ட கட்டடங்கள், சீனாவில் உள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம், தாஜ்மகால் உள்ளிட்ட ஏராளமான மனிதனின் படைப்புகளைக் கண்டு வியந்து அவற்றின் அழகை இரசிக்கிறோம். மனித உழைப்பே இத்தகைய அழகுக்கு காரணம் என்பதால்தான் நம்மை அறியாமலேயே “என்னமா அழகா கட்டியிருக்காம் பாரு!” என்கிறோம். நேர்த்தியான மனிதப் படைப்புகள் அனைத்தையும் பற்றி நாம் கொண்டுள்ள மதிப்பீடு இதுதான். இது இயல்பாய் எழுகிற மன உணர்வு. இங்கே நாம் அழகெனப் பார்ப்பது உழைப்பைத்தான்.

உருவத்தால் கவர்ச்சியாய்த் தோன்றாத பலர் அவர்களது சேவை மற்றும் சாதனைகளால் நமக்கு அழகானவர்களாய்த் தோன்றுகிறார்கள். சேவைக்கும் சாதனைகளுக்கும் அடிப்படையாய் இருப்பது உழைப்பு மட்டும்தான். இப்படி இயல்பாய் உழைப்பையே அழகெனப் பார்க்கும் நம் மனம் தோற்றப் பொலிவில் மயங்கலாமா?

கோபிநாத்துகளும் இதைப் புரிந்து கொண்டால் சரி!

தொடர்புடைய பதிவுகள்:
எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!

Thursday, 27 January 2011

எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்!
"வாங்க முடியாத உயரத்தில் மல்லிகை!"  என்ற தலைப்பில் இன்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. முன்பெல்லாம் எடைக்கு விற்கப்பட்ட மல்லிகை தற்போது நூறு பூக்கள் ரூ 35 முதல் ரூ40 வரை என எண்ணிக்கையில் விற்கப்படுகிறது. அதாவது ஒரு மொட்டு 40 பைசா. ஒரு கிலோ ஆயிரம் ரூபாயிலிருந்து இன்னும் விலை குறையவில்லை. எடைக்குப் பதிலாக தற்போது எண்ணிக்கையில் விற்கப்படுகிறது.

பூக்களின் 'அவசியம்' குறித்து "மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!" என்ற தலைப்பில் 30.12.2010 அன்று வினவு தளத்தில் எனது கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. தேவை கருதி அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

வினவுக்கு நன்றி!

ஊரான்
----------------------------------------------------------------------------------------------
தொடர் மழையை காரணமாகச் சொல்லி வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு முருங்கைக்காயின் விலை பதினைந்து ரூபாய். முந்தானை முடிச்சு படமா ஓடுகிறது இந்த விலை விற்பதற்கு? சந்தையில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். சந்தையை ஒரு சுற்று சற்றிவிட்டு அப்பாடா என ஒரு பெருமூச்சுவிட்டபடி என்னிடம் வந்தார்.
“என்ன பை காலியா இருக்கு. எதுவும் வாங்கலியா?” என்றேன்.
“வெலயக் கேட்டா பயமா இருக்கு. நான் ஏதோ அப்பிடி இப்பிடி எதையாவது வாங்கிக்கிட்டு போயிடுவேன். ஆனா சாதாரண ஜனங்க,  அதுவும் மாசம் மூவாயிரம்,  நாலாயிரம் சம்பாதிக்கிறவங்க என்ன செய்வாங்க பாவம்?” என்றார்.
கை நிறைய சம்பளம் வாங்குபவரையே மிரள வைத்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.
விலைவாசி உயர்வு, உயிர்வாழும் உரிமையைப் பறித்துவருகிறது. இதே நிலை நீடித்தால், ஒன்று பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் அல்லது ஊட்டச்சத்துக் குறைவால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்படுவதும், தொடர் மரணமும் அன்றாட நிகழ்வாகிவிடும்.
மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரசித்திப் பெற்ற மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாயாம். சென்ற வாரம் மல்லி என்றால் இந்த வாரம் கனகாம்பரம். கனகாம்பரமும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயாம்.
சமீபத்திய தொடர் மழை காரணமாகவும், கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாகவும் விளைச்சல் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். நூறு கிலோ கிடைத்த ஒரு ஏக்கரில் இப்போது ஒரு கிலோதான் கிடைக்கிறதாம்.
விளைச்சல் குறைந்துவிட்டதே என விவசாயிகள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. நம்பி மல்லியைப் பயிர் செய்துவிட்டார்கள். விளைச்சல் இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
பூ பயிரிடும் விவசாயிகள் மட்டுமல்ல இத்தொழிலையே நம்பி வாழும் பூக்களைக் கொய்வோர்,  பூக்களைக் கொள்முதல் செய்வோர்,  பூக்களை மொத்தமாக வாங்கி உதிரியாக விற்பனை செய்வோர், பூக்களைக் கோர்த்து முழம்போட்டு விற்பனை செய்வோர் என ஒரு பெரும் கூட்டமே பூக்களின் விலை உயர்வால் பாதிக்கப்படுவர்.
விளைச்சல் குறைவாலும், விலை உயர்வாலும் நுகர்வோருக்கு பாதிப்பில்லாமலா? பூக்களின் விலை உயர்வைக் கண்டு அங்கலாய்த்தாலும், கொத்துக் கொத்தாகக் கொண்டையில் பூச்சூடிக்கொள்ளும் மகளிர் பூச்சூடாமல் நிறுத்திக் கொள்வார்களா? இன்று மல்லி முழம் ஐம்பது ரூபாய். ஐம்பது  ரூபாய் என்ன, நூறு ரூபாயானாலும் பெண்ணுக்கு அழகு பூச்சூடுவதுதானே! விடுவார்களா என்ன? பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தானே நமது மகளிர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் காலையிலும், வீட்டோடு இருக்கும் பெண்கள் மாலையிலும் பூச்சூடிக்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொண்டையில் சூடியப் பூக்கள் வாடி வதங்கி இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன. யாருக்காகப் பெண்கள் கொண்டையில் பூக்களை சுமக்கிறார்கள்?
கோயிலுக்கோ அல்லது திருமணத்திற்கோ பூச்சூடாமல் சென்றுவிட்டால் இச்சமூகம் சும்மா விடுவதில்லை. சமூகத்திற்குப் பயந்தே பெரும்பாலான பெண்கள் பூச்சூடிக்கொள்கிறார்கள். பெண்களைப் போகப் பொருளாக மாற்றுகின்ற வேலையைத்தான் பூக்கள் செய்கின்றன. பிறரைக் கவருவதற்காகத்தான் நாம் பூச்சூடுகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இதை ஒரு பண்பாடாகக் கருதி செய்து வருகிறார்கள். இன்று நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்களிடம் வளர்ந்து வரும் குட்டைக்கூந்தல் கலாச்சாரம் பூக்களை சற்றே ஓரம் கட்டி வருவது ஒருவித முன்னேற்றம்தான்.
நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு ஆகிய விசேட நாட்கள் என்றால் பூக்களுக்கு ஏக கிராக்கிதான்.
ஆட்டோக்களிலும், லாரிகளிலும், பேருந்துகளிலும், அலுவலகங்களிலும், வீட்டுப் பூசை அறைகளிலும், கோயில்களிலும் உறையும் கடவுள் சிலைகளுக்கும், படங்களுக்கும் பூ அபிஷேகம் செய்து, பூ மாலைகள் சூடுவதை கிலோ ஆயிரம் ரூபாய் என்பதற்காக பக்தர்கள் நிறுத்தவா போகிறார்கள்? அறியாமையும் இயலாமையும் குடி கொண்டிருக்கும் நம் மக்களிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான்.
எவ்வளவுதான் விலை ஏறினாலும் சந்தனக்கூடுகளிலும், பூச்சொறிதல்களிலும், பாடைகளிலும், மணமேடைகளிலும், தலைவர்களுக்காக வைக்கப்படும் அலங்கார வளைவுகளிலும்-மலர்ப்பாதைகளிலும்-வரவேற்பு மேடைகளிலும் கொட்டப்படும் பூக்கள் குறையவா போகிறது?
பிறந்த நாள் பொக்கேக்கள், பிரபல தலைவர்களின் சிலைகளுக்கும்-இறந்தவர்களின் உடலுக்கும்  மலர் மாலை-மலரஞ்சலி என மலர்களின் பயன்பாடோ விரிந்து செல்கிறது.
மேற்கண்டவைகள் அவசியமான அடிப்படைத் தேவைகள் இல்லை என்றாலும், மக்களிடையே நிலவும் அறியாமையின் காரணமாகவும் அற்ப பந்தாவுக்காகவும்தானே பூக்கள் இவ்வாறு கொட்டப்படுகின்றன.
நமது மண் வளமும், நீர் வளமும் நம் சொந்தங்களின் உழைப்பும் இது போன்ற அவசியமற்ற, அர்த்தமற்ற தேவைகளுக்காக வீணடிக்கப்பட வேண்டுமா?  மருந்துகளுக்காவும் உணவுக்காவும் பயன்படும் மலர்களை மட்டும் பயிர் செய்வது அவசியமானது. மற்ற தேவைகளுக்காக மலர்களை உற்பத்தி செய்வது அர்த்தமற்றது; அவசியமற்றது.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் காலத்திலிருந்து நமது விவசாயம் என்பது சுதேசித் தேவையை விடுத்து பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக மாற்றப்பட்டும் அந்த விதத்தில் அழிக்கப்பட்டும் வருகிறது. சுயதேவைக்காக இருந்த உணவுப் பயிர்களின் இடத்தில் பணப்பயிர்கள் ஆக்கிரமித்துவிட்டன. அதுவும் கூட விவசாயிகளை வாழவைப்பதாக இல்லை. பூக்களின் விலை உயர்வின் பின்னே உள்ள காரணம் இதுதான். மேலும் அழகு, நுகர்வு என்ற பெயரில் பூக்களை வைத்து மிகப்பெரிய நுகர்பொருள் சந்தை உருவாக்கப்பட்டிருக்கிறது.
அர்த்தமற்ற முறையில் இயற்கை வளமும், மனித வளமும் விரயமாக்கப்படுவதற்கு பூக்கள் ஒரு எடுப்பான உதாரணம். இந்தப் பொருளாதாப் பின்னணியோடு பெண்களை அழகு சாதனமாகவும், துய்த்தெறியும் பொருளாகவும் பார்க்கும் பண்பாட்டு காரணமும் இணைந்திருக்கிறது. அந்த வகையில் பூக்களின் மாய உலகிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும்.
____________________
- ஊரான்

____________________

Saturday, 15 January 2011

அறிவும் நாணயமுமே மனிதனுக்கு அழகு!

தலை மயிரைப் பாதுகாக்க தவியாய் தவிக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். தலை முடி என்று எழுதாமல் தலை மயிர் என்று நாகரிகமில்லாமல் எழுதுவதாக யாரும் தவராகக் கருதி விடாதீர்கள். சாதம் என்று சொன்னால் நாகரிகம். சோறு என்று சொன்னால் நாட்டுப்புறம். இப்படித்தானே நாம் பழகிப் போயிருக்கிறோம். அதனால்தான் மயிர் என்று படித்தவுடனே சற்றே நாம் நெளிகிறோம். கேசம் என்றோ, முடி என்றோ எழுதலாமே எனத் தோன்றுகிறதல்லவா?

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் hair  க்கு முதல் சொல்லாக மயிர் என்றுதான் பொருள் சொல்லப்பட்டுள்ளது. எனவே மயிர் என்று சொல்வது தமிழுக்குரிய மரியாதைதானேயொழிய அசிங்கம் அல்ல. 'மயிரைழையில் தப்பினேன்' என்றுதான் சொல்கிறோம். இங்கே மயிர் அசிங்கமாகப் பார்க்கப்படுவதில்லையே!

இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா இல்லையா போன்ற பல 'மயிர் பிளக்கும்' வாதங்களைக் கண்டவர்கள் நாம். நெஞ்சில் மயிர் அதிகமானால் அது ஆண்மைக்கு அடையாளம் என மார்தட்டும் காளைகளையும் பார்த்திருக்கிறோம். அதே மயிர் நரைத்துப்போனாலும் 'வயதானாலும் வாலிபம் குறையவில்லை' என வசீகரிக்கும் 'முது வாலிபர்களையும்' பார்த்து வருகிறோம்.

மயிரின் வனப்பு மரபுக் கூறுகளாலும், உணவு ஊட்டத்தாலும், செய்யும் தொழிலாலும், வாழும் புறச்சூழலாலுமே தீர்மானிக்படுகிறது. தலை மயிர்தான் நம் உடலில் அதிகமாக கவனிக்கப்படும் ஒரு பகுதி. தலை மயிரில் ஒரு குறை என்றால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடைந்துதான் போகிறார்கள். ஆம்! உடைந்துதான் போக வேண்டும். அந்த அளவுக்கு மயிர் நம் உடல் நலத்தோடு தொடர்புடையது.  நம் உடலியக்கத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது தலை மயிரில் குறிகளாக (symptoms) வெளிப்படும்.

இளவயது வழுக்கை (baldness), மயிர் கொட்டுதல் (hair falling) அதுவும் கொத்துக் கொத்தாக கையளவுக்குக் கொட்டுதல் (falling: handfuls, in), மயிர்ப்பிளவு (bristling), வெளிறிய மயிர் (gray, becomes), வறண்ட மயிர் (dryness), மயிர் உடைதல் (brittleness), பிசுபிசுப்பான மயிர் (greasy), சடைப்பிடிப்பு மயிர் (plica polonica),  ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் மயிர் (sticks together), சிக்கலுக்குல்லாகும் மயிர் (tangles easily), மெல்லிதான மயிர் (thin)  என மயிரில் ஏற்படும் இம்மாற்றங்கள் நாம் நோய்வாய்ப்பட்டுள்ளோம் என்பதைக் காட்டும் குறிகளே என ஹோமியோபதி மருத்துவம் உணர்த்துகிறது.

இவற்றிற்கு முறையாக மருத்துவம் பார்த்து சரிசெய்து கொண்டால் நம் மொத்த உடல் நலமும் பாதுகாக்கப்படும். மயிரும் அதற்குரிய பொலிவோடு மிளிரும். தலை மயிருக்கு வண்ணச் சாயம் பூசி மைனராக இருக்கத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள். என்னதான் நரையை மறைத்தாலும் வெளி உலகுக்கு வேண்டுமானால் மைனராக காட்சியளிக்கலாம். ஆனால் பேரப்பிள்ளைகள் "தாத்தா" என்றழைப்பதை தடுக்க முடியுமா? அப்படி அழைப்பதில்தான் ஒரு சுகம் இருக்கிறதே. பிறகேன் இந்த மைனர் வேஷம்? வண்ணச் சாயம் பூசும் பாட்டிகளும் இப்படித்தான. வீட்டில் வேண்டுமானால் "ஆயா" என்றழைக்கலாம். ஆனால் வெளியில் பிறர் மத்தியில் "ஆண்ட்டி" என்றுதான் அழைக்க வேண்டும்.

பொதுவாக மனைவிமாரைவிட கணவன்மார்களுக்கே முதலில் நரை ஏற்படுகிறது. மீசைதான் முதலில் நரைக்கும். கணவன் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் மனைவி விடுவதாயில்லை. "டை அடி, டை அடி" என நச்சரித்து, படாத பாடுபடுத்தி ஒரு வழியாக கணவன் மயிரை கருப்பாக்கி விடுகிறார்கள். இதற்காக இவர்கள் பிரில் கிரீமிலிருந்து மருதாணி வரை எதையும் விடுவதில்லை. "உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணு" என்கிற கதையாக பெரும்பாலான சமயங்களில் நம் தமிழர்கள் செவ்விந்தியர்களாக சிறிது காலம் காட்சியளிக்கிறார்கள். நரகலைத் தேய்த்தால் நரை போகும் என்றால் அதையும் விட மாட்டார்கள் போலும். எதைச் செய்தாவது தனது கணவனை இளைஞனாக்க வேண்டும். பிறர் கண்ணுக்கு தனது கணவன் கிழவனாக தோற்றமளித்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் சில மனைவிமார்கள். இது மனைவிமார்களின் மனநிலை.

உடல் நலிவால், ஏதோ ஒன்றிரண்டு மயிர் வெள்ளையாகிப் போனால் தன்னை ஏமாற்றி கிழவியை தலையில் கட்டிவிட்டார்கள் என கணவன்மார்களும்; கிழவனுக்குத் தன்னை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாகப் புலம்பும் மனைவிமார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். மயிருக்காக விவாகரத்து வரை செல்லும் அவலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வயோதிகர்களுக்கு வெள்ளை மயிர் ஒரு பிரச்சனை என்றால் வாலிபர்களுக்கோ 'ஹேர் ஸ்டைல்' ஒரு பிரச்சனை. இதற்காக சலூன்களைத் தேடி அலைகிறார்கள். இவர்களுக்காகத்தான் சலூன்களெல்லாம் இன்று 'பியூட்டி பார்லர்களாக' பெயர் மாற்றம் பெருகின்றன. ரஜினி ஸ்டைல், அஜித் ஸ்டைல், விஜய் ஸ்டைல், என சினிமாக்காரனைப் பார்த்து மயிரில் 'ஸ்டைல்' காட்டும் அவலத்திற்கு நம் இளைஞர்கள் ஆளாகி வருகிறார்கள்.

சுக போகங்களைத் துறந்த சாமியார்களுக்கோ மயிர்தான் மூலதனம். மயிர் போனால் இவர்களின் தொழிலும் போச்சு. அதனால்தான் கிழச் சாமியார்கள்கூட தலை மயிருக்கு வண்ணச் சாயம் பூசி வெண்தாடிக் கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். ஒரு வேளை இதுதான் பெண்களை வசியம் செய்யும் மையோ!

அரசியல் வாதியிலிருந்து அட்வகேட் வரை இதற்கு மயங்காதவர்கள் உண்டோ! "கரு கரு" மயிரோடு பவணி வரும் இவ்விளம் முதியோர்கள் ஒரே ஒரு நாள் அசந்தாலும் சாயம் வெளுத்துவிடும். பல் துளக்க மறந்தாலும் மறக்கலாம். ஆனால் மயிருக்கு சாயமடிக்க மட்டும் மறந்து விடக்கூடாது. திரைப்பட நடிகைகள் முதல் அலுவலகப் பெண்கள் வரை மாதர்களையும் இந்தச் சாயம் விட்டு வைக்கவில்லை.

கூந்தல் மயிர் உரசலில் 12 வோல்ட் மின்சாரத்தின் சுகத்தைக் காணும் காளையர்கள் அதே மயிர் சாப்பாட்டில் இருந்துவிட்டால் 230 வோல்ட் மின்சாரத்தின் ஷாக்குக்குள்ளாகி தட்டை முகத்தில் வீசியெறிவதும் நடக்கத்தானே செய்கிறது. இங்கே கூந்தல்தான் வேறுபடுகிறது. மயிரென்னவோ அதேதான்.

வேண்டுதலுக்காக மயிர் வளர்ப்போரும் உண்டு. இந்த மயிரை வைத்து கோடிகளைச் சுருட்டுகிறான் ஏழுமலையான். பறி கொடுத்த பக்தனோ பட்டை நாமத்தோடு திரும்புகிறான். பயிர் நடுவது குறைந்து வருவது பற்றி கவலையில்லை. ஆனால் மயிர் நடுவது பற்றிய கவலையில் மூழ்கியிருக்கிறது ஒரு கூட்டம். இதற்கான ஆராய்ச்சிகள்கூட அதிகரித்துவிட்டனவாம். வயல்கள் காய்ந்தால் என்ன? இனி வழுக்கைகள் காயாதல்லவா!

இளமையில் முடி வளர்வதும், முதுமையில் நரைப்பதும், வழுக்கை விழுவதும் அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப நடைபெறும் ஒரு இயற்கை நிகழ்வே. ஒரு உயிரியல் நிகழ்வே. இதில் செயற்கையாய் செய்யப்படும் செயல்கள் யாவும் மனப்பிறழ்வின் விளைவுகளே.

இந்த மனப்பிறழ்வே நமது பலவீனம். இதுவே முதலாளிகளின் மூலதனம். வித விதமான கிரீம்கள், ஷாம்புகள், சோப்புகள், கேசவர்த்தினி தைலங்கள், வண்ணச்சாயங்கள் (dye) என மயிர் காக்கும் சரக்குகளால் கொழுக்கிறார்கள் முதலாளிகள். இந்தச் சரக்குகளின் பக்க விளைவுகளாலும் மயிரின் தன்மையை மறைத்ததாலும் பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள் மக்கள்.

நாம் அழகாய்த் தோன்றினால் அது நமக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று சொல்லலாம். அந்த வகையில் மயிரை அழகுபடுத்திக் கொள்வது சரிதானே என்று தோன்றலாம். தோற்றத்தில் அழகைத் தேடினால்,  அதற்கு எல்லை ஏது? ஒருவரைப் போல மற்றொருவர் இருப்பதில்லையே! இருக்கவும் முடியாது. ஆகவும் முடியாது. தோற்றப் பொலிவு ஒரு கானல் நீர்.

அறிவும் நாணயமுமே மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார். அதுவே சமூகத்திற்கும் அழகு சேர்க்கும்.

Thursday, 16 December 2010

நங்கைகளே! அழகை நகப்பூச்சில் தேடாதீர்கள்!

குழந்தைகளின் கை, கால் விரல் நகங்களுக்கு பல வண்ணப் பூச்சுப்பூசி (nail polish) அழகு பார்ப்பதுண்டு. ஆனால் இன்று இதுவே பெண்களிடம் அழகுக் கலை கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. பளபளக்கும் பல வண்ணங்களில் பல்வேறு நிறுவனங்களின் நகப்பூச்சுகள் சந்தையில் குவிந்துள்ளன. பெண்களின் அழகை அதிகப்படுத்த நகப்பூச்சுகள் அவசியம் என பலவாறாய் நம்பச் செய்து வணிகத்தைப் பெருக்கும் போட்டா போட்டி சந்தையில் நிலவுகிறது. அழகாய்த் தோன்றினால் தன்னம்பிக்கை பிறக்குமாம். அதற்காகத்தான் அழகுக் கலையே இன்று ஒரு படிப்பாக உருவெடுத்துள்ளது.

நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி வருவதால் பெண்களையும் போகப் பொருளாகப் பார்க்கும் சிந்தனைப்போக்கு ஆண்களிடையே அதிகரித்துள்ளது. ஆண்களின் போகப் பொருள்தான் பெண் என பறைசாற்றும் வகையில்தான் சில பெண்களின் அழகுணர்ச்சி அமைந்துள்ளது. கால் விரல் நுனியிலிருந்து உச்சஞ்தலை மயிர் விரை அலசி ஆராய்ந்த பிறகே பெண் அழகானவளா என முடிவு செய்யும் ஆண்களும் அதிகரித்துவிட்டனர். தான் அழகானவள் என்று ஆண்களிடம்  தனது அழகை நிலைநாட்ட முயல்வது மட்டுமல்ல உன்னைவிட நானே அழகு என்று பிற பெண்களோடு ஒப்பிட்டு தன்னை உலக அழகியாக கருதும் மனநிலைக்கும் சில பெண்கள் ஆளாகி உள்ளனர்.

நகம் நம் அகத்தின் முகம்பார்க்கும் கண்ணாடி என்பார்கள். ஒருவரின் நகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே அவரின் ஆரோக்கியத்தை அளவிட முடியும். 
  • வெள்ளை நிற நகம் (nails: white) 
  • நகத்தில் வெண்புள்ளிகள் (nails: white:spots)  
  • கருப்பு நிற நகம் (discoloration-blackness)
  • நீல நிற நகம் (nails: bluness)
  • சாம்பல் நிற நகம் (nails: gray)
  • சிவப்பு நிற நகம் (nails: red)
  • கருஞ்சிவப்பு நகம் (nails: red: black)
  • மஞ்சள் நிற நகம் (nails: yellow) 
  • ஊதா நிற நகம் (nails: purple)
  • வெளிறிய நீல நிறமான நகம் (nails: livid)
  • சொரசொரப்பான நகம் ((roughness: fingernails)
  • உலர்ந்த நகம் (dryness: fingers: nails: about) 
  • கடினத்தன்மையுள்ள நகம் (nails: hardness)
  • நகத்தில் வீக்கம் (inflammation-fingers-nails) 
  • நகத்தில் நமைச்சல் (itching:fingernails)
  • நகம் மரத்துப் போதல் (nails: numbness, tingling-fingers-nails)
  • நகத்தின் மென்மைத் தன்மை (soft nails)
  • தடித்த நகம் (thick-nails)
  • மெலிந்த நகம் (thin nails)
  • நகத்துக்கடியில் ரத்தக்கட்டு (nails: blood settled under nails)  
  • ஒளியிழந்த (nails: dark)
  • உணர்ச்சியற்ற நகம் (horny.fingernails)
  • எளிதில் உடையக்கூடிய நகம் (brittle nails)
இப்படி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். இந்த மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றன? உடலியக்கச் செயல்பாட்டில் எற்படும் கோளாறுகளே நகத்தில் குறிகளாத் தோன்றுகின்றன. நகப்பூச்சு பூசி இவைகளை மறைத்துவிட்டால் நீங்கள் நோயுற்றிருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிய முடியும்?

உடலியக்கச் செயல்பாட்டில் கோளாறுகள் ஏற்பட்டால் முதலில் அவை நம் உடலின் வெளிப்பகுதியில், அதாவது நம் உடலின் முக்கியத்துவமற்ற பகுதிகளில் குறிகளாக வெளிப்படுகின்றன. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் உடலியக்கச் செயல்பாட்டுக் கோளாறுகள் முதலில் நகம், முடி, தோல் ஆகிய பகுதிகளில்தான் வெளிப்படும். இவற்றை அலட்சியப்படுத்தினாலோ, மூடி மறைத்தாலோ, மருத்துவம் பார்க்காமல் விட்டாலோ உள்ளுக்குள் ஏற்பட்ட கோளாறு மேலும் முற்றி அதற்கடுத்த முக்கிய உறுப்புகளை நோக்கி வளரும். இதுதான் உயிர்வாழ்தலின் உடலியக்க விதி. (survival mechanism). இதைத்தான் ஹோமியோபதி மருத்துவம் தெளிவு படுத்துகிறது.

நகப்பூச்சு போடும் பெண்களே! நீங்கள் உங்களை அழகுபடுத்திக்கொள்வதாகக் கருதி நகங்களில் மேல்பூச்சுப்பூசி நோய்களை மறைத்து உள்ளமுக்குகிறீர்கள். பின்னாலிலே வரும் பெரு நோய்க்கு வழி ஏற்படுத்துகிறீர்கள்.

ஊரான்.